பரிசுத்த ஆவி
- விவரங்கள்
- பிரிவு: எவரை வணங்குகிறோம்?
1) நாம் சர்வ வல்ல தேவன் (கடவுள்) பற்றியும், இயேசு கிறிஸ்து பற்றியும் படித்தோம், மேலும் சரிசமானத்துவம் மற்றும் அநாதித்தன்மை குறித்த கேள்விகளையும் ஆராய்ந்தோம். இப்போது பரிசுத்த ஆவியைப் பற்றி படிக்கலாம். முதலில், ஆவி என்றால் என்ன?
'ஆவி'க்கான விவிலிய மூல வார்த்தைகள் என்னவென்று நாம் பார்க்கும் பொழுது (எபிரேயம்: ரூவாக்ஹ் Ruwach / கிரேக்கம்: ந்யூமா Pneuma), அவ்வார்த்தைகள் வெறும் 'சுவாசம்' (breath) எனும் பொருள்படுபவையாக உள்ளன. அதாவது அது எல்லோரிடமும் பொதுவாக இருக்கும் உயிர் சக்தி தானே ஒழிய, ஒவ்வொருவர்க்கும் தனித்தன்மை வாய்ந்த விசயம் கிடையாது. அதற்கு ஒரு நல்ல உதாரணம் மின்சாரம். எப்படி மின்சாரம் தொலைக்காட்சி பெட்டிக்கு சக்தி கொடுத்து அதனை உயிர்ப்பிக்கிறதோ, அதேபோல தான் ஆவி (சுவாசம்) நம் உடல்களுக்கு சக்தி அளிக்கிறது. உடல்கள் இல்லாமல் தனியே ஆவி (மூச்சு/சுவாசம்) மட்டும் இருக்க முடியாது.
பூமிக்குரிய உயிரினங்கள் = ஆவி (சுவாசம்) + மாம்ச உடல்கள்;
பரலோக உயிரினங்கள் = ஆவி (சுவாசம்) + ஆவிக்குரிய உடல்கள் (1கொரி 15:40).
வேதாகமத்தில் 'ஆவி' என்ற வார்த்தை நபர்களின் ‘தாக்கம்’ (influence) மற்றும் ‘பெலன்’ / ‘வல்லமை’யை (power) குறிக்கவும் பயன்படுத்தப்படுவதை நாம் காண்கிறோம். எடுத்துக்காட்டுகள் சில:
- எலியாவின் ஆவி = எலியாவின் பெலன் / வல்லமை: எரிகோவில் பார்த்துக்கொண்டு நின்ற தீர்க்கதரிசிகளின் புத்திரர் அவனைக் கண்டவுடனே, எலியாவின் ஆவி எலிசாவின்மேல் இருக்கிறது என்றனர்' (2இராஜாக்கள் 2:15)
- உலகத்தின் ஆவி = உலகத்தின் தாக்கம் / வல்லமை: நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம். (1கொரிந்தியர் 2:12)
- கனநித்திரையின் ஆவி = கனநித்திரையின் தாக்கம்: கனநித்திரையின் ஆவியையும், காணாதிருக்கிற கண்களையும், கேளாதிருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் (ரோமர் 11:8)
2) அப்படியென்றால் 'பரிசுத்த ஆவி' என்றால் என்ன?
வேத வசனங்கள் தேவனின் ஆவி தான் பரிசுத்த ஆவி என நமக்கு அறிவிக்கின்றன - 'தமது பரிசுத்த ஆவியை நமக்குத் தந்தருளின தேவன்' (1தெச 4:8), நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவி’ (எபேசியர் 4:30).
சரி, தேவனின் ஆவி ஏன் பரிசுத்தமாக அழைக்கப்படுகிறது?
'சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள், தேவரீர் ஒருவரே பரிசுத்தர் " (வெளி 15:3-4). ஆம், யாவே தேவன் ஒருவர் மட்டுமே பரிசுத்தர். அவரைச் சேவிப்பதன் மூலம் நிச்சயமாக நாமும் அவருடைய பரிசுத்தத்தில் பங்குகொள்ளலாம், ஆனால் யாவே தேவன் மட்டுமே பரிசுத்தத்தின் ஒரே மூல ஆதாரமானவர். அதனால்தான் தேவனின் ஆவி பரிசுத்த ஆவி என அழைக்கப்படுகிறது.
3) வேதாகமத்தின்படி 'பரிசுத்த ஆவி' என்பது 'தேவனின் ஆவி' என்றால், அவ்வேதக்கூற்று நமக்கு என்ன வெளிப்படுத்துகிறது?
தேவனும் (யாவேயும்), அவரது ஆவியும் இரண்டு தனி நபர்களாக இருக்க முடியாது. எப்படி எலியாவும் எலியாவின் ஆவியும் இரண்டு வெவ்வேறு நபர்கள் அல்லவோ, அதே போல தேவனும் தேவனின் ஆவியும் இரண்டு பேர் அல்ல. 'தேவனின் ஆவி' (பரிசுத்த ஆவி) என்பது 'தேவனின் தாக்கம்/வல்லமை' ஆகத்தான் இருக்க வேண்டும்.
இயேசுவின் ஆவி கூட உண்டு - 'உங்கள் வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும்' (பிலி 1:19). இயேசுவின் ஆவி இயேசுவிற்கு அப்பாற்பட்ட தனி நபராக இருக்க முடியுமா? இல்லை. மாறாக 'இயேசுவின் ஆவி' என்பது 'இயேசுவின் வல்லமை'யை குறிக்கிறது.
உண்மையில், இயேசுவே 'பரிசுத்த ஆவி' என்றால் என்னவென நேரடியாக அறிவிக்கிறார் - 'என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் (வல்லமையால் / power) தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள்' (லூக்கா 24:49).
சீடர்கள் பெந்தெகொஸ்தே நாளில் உன்னதத்திலிருந்து பெற்ற பெலன் என்ன?
பரிசுத்த ஆவி! ஆம், ‘பரிசுத்த ஆவி’தான் உன்னதத்திலிருந்து வரும் பெலன் / வல்லமை – ‘சர்வ வல்ல தேவனின் வல்லமை’!
குறிப்பு: 'பரிசுத்த ஆவியானவர்' என்று எங்குமே மூல கிரேக்க வேதாகமத்தில் இல்லை. 'பரிசுத்த ஆவி' என்று தான் உள்ளது. அதுதான் சரியான பொழிபெயர்ப்பு.
4) கடைசி பஸ்காவின்போது இயேசு ஆற்றிய சொற்பொழிவில், அவர் பரிசுத்த ஆவியை 'தேற்றரவாளன் / பரிந்துபேசுபவன்' என்று அழைத்தார் அல்லவா?
யோவான் 14-16 அதிகாரங்களில் உள்ள அந்த சொற்பொழிவில் இயேசு நான்கு முறை அவ்வாறு கூறுவதை நாம் காண்கிறோம். பரிசுத்த ஆவியைக் குறித்து தேற்றரவாளன் / பரிந்துபேசுபவன் என்று பேசியபின், இயேசு, 'நான் உவமைகளாய் உங்களுடனே பேசிக்கொண்டிருக்கிறேன்,' என்கிறார் (யோவான் 16:25). அந்த சொற்பொழிவில் அவர் அதிகமான அடையாள அர்த்தமுள்ள மொழிநடையை பயன்படுத்துவதை நாம் காண்கிறோம். ஏனெனில் அவர் தன்னைத்தானே ‘மெய்யான திராட்சச்செடியாகவும்’, சீடர்களை ‘கொடிகளாகவும்’ அழைக்கிறார். இந்த சொற்பொழிவு ஒரு நேரடிப் பேச்சு அல்ல. மாறாக, அடையாளப்பூர்வமான ஓர் பேச்சாக இருந்தது. அவருடைய சீடர்களுக்கு அது தெரிந்து இருந்தது.
சீடர்களை தேற்றி வழிநடத்தும் தேவனின் வல்லமையாக பரிசுத்த ஆவியின் பங்கை சித்தரிக்கும்படி 'தேற்றரவாளன் / பரிந்துபேசுபவன்' என்ற பதங்களை இயேசு பயன்படுத்துவதை நாம் காண்கிறோம். ஒரு கட்டத்தில், உண்மையில் பரிசுத்த ஆவி என்னவென்று இயேசு தெளிவுபடுத்துகிறார் - 'பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சிகொடுப்பார்' (யோவான் 15:26).
இங்கே அவர் பரிசுத்த ஆவி 'பிதாவிடம் இருந்து புறப்படுகிறவர்' என்று கூறுகிறார். ஆக அது பிதாவின் வல்லமை என அர்த்தப்படுகிறது. அவர் அதனை 'சத்திய ஆவி' எனவும் அழைக்கிறார் - அதன் அர்த்தம் சத்தியத்தின் தாக்கம் / வல்லமையே ஒழிய 'சத்தியம்' என்ற பெயர் கொண்ட ஒரு நபர் அல்ல.
பரிசுத்த ஆவி ஒரு நபர் அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது. மாய்மாலமான ஆன்மீக தத்துவங்கள் கிறிஸ்தவத்திற்குள் நுழைய ஆரம்பித்த இருண்ட காலங்கள் வரை யாரும் அவ்வாறு கருதவும் இல்லை (வரலாற்றுப் பின்னணியை பின்னர் படிப்போம்).
5) பரிசுத்த ஆவி ஒரு நபர் இல்லையென்றால், யோவான் வசனங்கள் ஏன் ஆவியை குறிக்க 'அவர்' மற்றும் 'அவரை' என்ற சொற்களை பயன்படுத்துகின்றன?
'சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்' (யோவான் 16:13). 'நான் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்' (யோவான் 16:7) - 'அவர்' மற்றும் 'அவரை' என்ற பிரதிப்பெயர் வார்த்தைகள் (pronouns) பரிசுத்த ஆவியை ஒரு நபர் போல் ஒலிக்க வைக்கின்றன.
இந்த தோற்றப்பாடு (புதிய ஏற்பாட்டின் மொழியான) கிரேக்க மொழியை கற்றுக்கொள்ள முயலும் தமிழர்களுக்கு ஆச்சரியமளிக்கும் ஒரு விசயம் என்று நாம் காண்கிறோம். மற்ற இந்திய-ஐரோப்பிய மொழிகள் (ஹிந்தி, ஸ்பானிஷ், பிரஞ்சு) போல, கிரேக்க மொழி ஒவ்வொரு பெயர்ச்சொல்லுக்கும் ஓர் இலக்கண பாலினம் (grammatical gender) கொண்டுள்ளது. ஆம், யாரேனும் ஹிந்தி மொழி கற்றுக்கொண்டால் கூட இதே விசயத்தை காண்பர். கிரேக்க, ஹிந்தி மொழிகளில் உயிரற்ற பொருட்கள் மற்றும் அருவமான கருத்துக்கள் கூட ஆண்பால் / பெண்பால் கொண்டு இருக்க முடியும்.
உதாரணம்: சுவர் ஆண்பாலாகவும், கதவு பெண்பாலாகவும் இருக்கலாம்.
'அது ஒரு சுவர்' என்று சொல்லாமல் 'அவர் ஒரு சுவர்' என்பர்; 'அது ஒரு கதவு. அதை திறந்தார்' என்று சொல்லாமல் 'அவள் ஒரு கதவு. அவளை திறந்தார்' என்பர்.
தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகள் பேசும் தமிழர்கள் ஆண்பாலை ஆண் நபர்களுடனும், பெண்பாலை பெண் நபர்களுடனும் தொடர்புபடுத்துகின்றனர் ('இயற்கை-பாலினம்' natural gender). ஆனால் ஹிந்தி, கிரேக்கம் போன்ற மொழிகள் பேசும் பேச்சாளர்கள் அவ்வாறு செய்வதில்லை. அவர்களுக்கு பாலினம் என்பது எல்லா பெயர்ச்சொற்களுக்கும், உரிச்சொற்களுக்கும் இயற்கையாய் அமையப்பெற்ற விசயமாகும் ('இலக்கண-பாலினம்' grammatical gender). யோவான் 16-இல் இயற்கை-பாலினமற்ற ஆவி(வல்லமை)-யின் இலக்கண-பாலினம் கிரேக்க ஆண்பால் வினைச்சொற்களால் வழங்கப்பட்டுள்ளது. எனவே அதனை 'இலக்கண-பாலினம'ற்ற மொழியான தமிழில் 'பரிசுத்த ஆவி உங்களை வழிநடத்தும்' என்று தான் மொழிபெயர்க்க வேண்டும்.
இது முற்றிலும் இலக்கணத்துக்குரிய விசயம் தானே ஒழிய, நபருக்குரிய விசயம் அல்ல. மேலும் நாம் முன்னர் பார்த்த வண்ணம், 'பரிசுத்த ஆவியானவர்' என்று எங்குமே மூல கிரேக்க வேதாகமத்தில் இல்லை. 'பரிசுத்த ஆவி' என்று தான் உள்ளது. அதுதான் சரியான பொழிபெயர்ப்பு.
6) பரிசுத்த ஆவி ஒரு நபர் அல்ல, அது உண்மையில் 'தேவனின் வல்லமை' என்பதற்கு இன்னும் கூடுதலான வேத ஆதாரங்கள் உள்ளனவா?
- பரிசுத்த ஆவி மக்கள் மீது வரமாக ஆக பொழிந்தருளப்பட்டு, ஊற்றப்படுகிறது (அப்போஸ்தலர் 2:17,33; 10:44-46; யோவேல் 2:28; சகரியா 12:10). ஒரு நபர் பொழியப்பட முடியுமா? ஒரு நபரை ஊற்றமுடியுமா? - முடியாது. ஆனால் ஒரு 'வல்லமை'யை 'வரம்' ஆக ஊற்ற முடியுமா? நிச்சயமாக.
- வேதாகமத்தில் எங்கும் யாரும் பரிசுத்த ஆவியை வழிபடுவதை நாம் காண்பதில்லை. அப்போஸ்தலர்கள் தாங்கள் எழுதும் நிருபங்களின் தொடக்கத்தில், இரு நபர்களை மட்டுமே - தேவன் (பிதா) மற்றும் இயேசுவை மட்டுமே - வாழ்த்துகிறார்கள். பரிசுத்த ஆவிக்கு அதுபோன்ற தனிநபருக்குரிய முறையை அவர்கள் செய்வதில்லை.
- தேவனின் பரிசுத்த ஆவியை வேதாகமம் பல்வேறு இடங்களில் சத்திய ஆவி, விசுவாச ஆவி, ஞான ஆவி, கிருபையின் ஆவி, மகிமையின் ஆவி என்று விவரிக்கிறது. சுவாரஸ்யமாக, வேதவாக்கியங்கள், பொறாமையின் ஆவி, ஆக்கினையின் ஆவி, தீமையின் ஆவி, வேசித்தனத்தின் ஆவி, நோயின் ஆவி, பிணைப்படுதலின் ஆவி, நித்திரையின் ஆவி, பயத்தின் ஆவி, மற்றும் பிழையின் ஆவி என்ற எதிர்மறையான ஆவி பற்றியும் பேசுகின்றன. இவை எல்லாம் நபர்கள் என்று நாம் நினைக்கிறோமா என்ன?
- இறுதியாக, நமக்கு ஒரு நபரின் உதவி தேவைப்பட்டால் நாம் யாரை கேட்க வேண்டும்? - அந்த நபரைத்தானே? பரிசுத்த ஆவி ஒரு நபராக இருந்தால், அதன் உதவியை நாட யாரை கேட்க வேண்டும்? - பரிசுத்த ஆவியைத்தானே? ஆனால், இயேசு என்ன செய்யச் சொல்கிறார் என்பதைக் கவனியுங்கள் - 'பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா' (லூக்கா 11:13). ஆம், பரிசுத்த ஆவியைப் பெற, நாம் பிதாவிடம் வேண்டிக்கொள்ள வேண்டும், அதாவது, யாவே தேவனிடம் வேண்ட வேண்டும். இதன்மூலம் பரிசுத்த ஆவி யாவே தேவனின் வல்லமை என்பதும் அது ஒரு நபர் அல்ல என்பதும் குழப்பத்திற்கு இடமின்றி உறுதிப்படுகிறது.
சுருக்கமாக கூறவேண்டுமெனில், பரிசுத்த ஆவி ஒரு தேவன் என்று சொல்லும் எந்த வேத வசனங்களையும் நாம் காணவில்லை. 'பரிசுத்த ஆவியாகிய தேவன்' என்று திரித்துவ கோட்பாடு பயன்படுத்தும் சொற்றொடரும் வேதத்தில் எங்கும் இல்லை. அது ஒரு நபர் என்று எந்த வசனமும் கூறவில்லை. மாறாக, அது தேவனின் சக்திவாய்ந்த வல்லமையாக வேதம் முழுவதிலும் சித்தரிக்கப்படுகிறது. தேவன் அவ்வல்லமை கொண்டு பிரபஞ்சத்தை படைத்தார். அதனை இயேசுவுக்குக் கொடுத்தார். அதனை விசுவாசிகளுக்கும் கொடுக்கிறார். மேலும் அது நமக்கு மிகவும் முக்கியம் - 'ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவி அவர்மேல் தங்கியிருப்பார்' (ஏசா 11:2).