ஆன்மீகம்: எல்லாம் மனதில் மட்டும்தானோ?
- விவரங்கள்
- பிரிவு: இராஜ்யம் குறித்த திருச்சபை நம்பிக்கைகள்
கருப்பொருள் வசனம்: "இதுமுதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் இராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள் வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்," என்றார். (மத்தேயு 26:29)
இயேசு தனது ஊழியத்தின்போது பிரச்சாரம் செய்த முக்கிய செய்தியானது பூமியில் நிறுவப்படவிருக்கும் பரலோகத்தின் இராஜ்யம் (ஆதாவது பரலோகத்திலிருந்து ஆளப்படுகிற இராஜ்யம்) என்று நாம் காண்கிறோம். மேலும், அந்த இராஜ்யம் பற்றின இறையியல் நம்பிக்கைகள் காலப்போக்கில் எங்ஙனம் மாறிவிட்டன என்பதை திருச்சபை வரலாறு நமக்கு காண்பிக்கிறது. இராஜ்யத்தைப் பற்றி தற்போது நிலவும் மூன்று பிரதான கோட்பாடுகளில் நவீனத்துவமும், அடிப்படைவாதமுமாகிய இரண்டிற்கும் வேதவசன ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கண்டோம். மூன்றாவது கோட்பாடான ஆன்மீகவாதத்திற்கு ஏதாவது வேதபூர்வ சான்றுகள் உள்ளனவா என்று இப்போது பார்க்கலாம்.
1) சிலர் யோவான் 18:36 வசனத்தை மேற்கோள் காட்டி இராஜ்யம் என்பது ஓர் ஆன்மீக காரியமாக மட்டுமே இருக்கிறது என்று கூறுகிறார்கள். இந்த பார்வை சரியா?
யோவான் 18:36 - ”என் இராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் இராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே”. இந்த வசனத்தில் 'உலகம்' என்பது கிரேக்க மொழியில் 'காஸ்மோஸ்' kosmos (உலக ஒழுங்கு/ஏற்பாடு) என்பதாகும். இயேசு தம்முடைய இராஜ்யம் இந்த உலக ஒழுங்கில் வராது எனக் குறிப்பிடுகிறார், ஏனெனில் கிறிஸ்துவின் இராஜ்யம் பூமியில் நிறுவப்படவேண்டும் என்றால் இந்த உலக ஏற்பாடு அழிக்கப்பட வேண்டும்.
2) 'தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே' என்று லூக்கா 17:21 சொல்கிறது என்ன?
லூக்கா 17:20-21: தேவனுடைய இராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக, "தேவனுடைய இராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது, இதோ, தேவனுடைய இராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே," என்றார்.
இந்த வசனத்தின் அடிப்படையில் சிலர் இராஜ்யம் என்பது விசுவாசிகளின் உள்ளத்தை ஆக்கிரமிக்கும் மாற்றத்தின் தாக்கம் மட்டுமே, அதாவது ஒருவகையான மாய ஆன்மீக இராஜ்யமே என்கிறார்கள். ஆனால் இதில் ஒரு பிரச்சனை என்னவென்றால் வேதாகமம் முழுவதும் இராஜ்யம் என்பது பூமியில் நிறுவப்படும் உண்மையான இராஜ்யமாக வரையறுக்கப்படுவதுதான்.
3) அப்படியென்றால் லூக்கா 17:21 வசனத்தை வேதத்தின் மற்ற பகுதிகளுக்கு ஒத்திசைவாக அர்த்தம்கொள்ள முடியுமா?
நிச்சயமாக முடியும் . இந்த வசனத்தில் ‘உங்களுக்குள்’ (within you) என்பது கிரேக்க மொழியில் ‘எண்டோஸ்’ (entos) என்ற மூலவார்த்தையின் மொழியாக்கம் ஆகும். இந்த கிரேக்க வார்த்தையை ‘உன் மத்தியில்’ அல்லது ‘உன் நடுவில்’ என்றும் மொழிப்பெயர்க்கலாம். இந்த வசனத்தின் சூழலில் (context) ‘உங்கள் மத்தியில்’ அல்லது ‘உங்கள் நடுவில்’ என்பதே அவ்வார்த்தையின் மிகப்பொருத்தமான மொழிபெயர்ப்பாகும். ஏனெனில் வேதாகமம் வேறு எங்கேயும் ஒரு மாய (மனதின்) ஆன்மீக இராஜ்யத்தை ஆதரிக்கவில்லை.
அதுவும் இந்த வசனத்தில் இயேசு பரிசேயரிடம் பேசிக்கொண்டிருக்கிறார் (லூக்கா 17:20). ‘உங்களுக்குள்’ என்று மொழிபெயர்த்து இருப்பது சரி என்று ஒரு பேச்சுக்கு நாம் எடுத்துக்கொண்டாலும், இயேசு ‘இராஜ்யம்’ பரிசேயருக்குள் இருக்கிறது' என்கிறாரா, என்ன? மாறாக இயேசு பரிசேயர்களை "கபடதாரிகள்" என்றும் "விரியன் பாம்பு குட்டிகளே" என்றும் அழைத்து அவர்களுக்குள் "பேராசையும், துன்மார்க்கமும்" நிறைந்திருந்தது என்று சொல்லவில்லையா, என்ன?
அதனால்தான் மதிப்பிற்குரிய மொழிபெயர்ப்புகள் இவ்வசனத்தை இங்ஙனம் மொழியாக்கம் செய்கின்றன -
- "தேவனுடைய இராஜ்யம் உங்கள் நடுவில் (in the midst of you) இருக்கிறதே," என்றார். (RSV ஆங்கில வேதாகமம்)
- "தேவனுடைய இராஜ்யம் உங்கள் மத்தியில் (among you) இருக்கிறதே," என்றார். (NLT ஆங்கில வேதாகமம்)
4) ஆனால் இராஜ்யம் என்பது எதிர்காலத்தில் நிறுவப்படவிருக்கிறது அல்லவா? எப்படி அது அவர்கள் மத்தியில் அப்போதே இருக்க முடியும்?
மீண்டும் லூக்கா 17:20-21 படிப்போம் - தேவனுடைய இராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக, "தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது, இதோ, தேவனுடைய இராஜ்யம் உங்கள் மத்தியில் இருக்கிறதே," என்றார்.
இதில் முதலில் நமக்கு தென்படும் விசயம் என்னவென்றால் இயேசு இராஜ்யம் வருவதை எதிர்காலத்தில் நிகழுவிருக்கும் சம்பவமாக சித்தரிக்கிறார் என்பதே. ஆங்கில எம்ப்ஹாடிக் டயஃலாட் (Emphatic Diaglott) பைபிள் வசனம் 21-ஐ இவ்வாறு மொழிபெயர்க்கிறது - ‘கடவுளின் மாட்சிமை பொருந்திய அரசர் உங்கள் மத்தியில் இருக்கிறார்.' அதாவது தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட இராஜாவான இயேசு அப்போது பரிசேயர்கள் மத்தியில் இருந்தார். எனவே இராஜ்யம் என்பது நிகழ்காலத்தில் இராஜ்யத்தின் இராஜாவாகிய இயேசுவை குறிக்கிறது. இயேசுவுடன் சேர்ந்து இராஜாக்களாக பூமியின் குடிகளை ஆள்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு அவரை உண்மையாய் பின்பற்றும் இன்றைய கிறிஸ்தவர்களுக்கும் இந்த வகையான பயன்பாடு பயன்படுத்தப்படுகிறது. அவர் மெய்யாகவே இராஜாக்களின் இராஜா.
தேவனுடைய இராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது. (ரோமர் 14:17).
இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய இராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதா. (கொலோசெயர் 1:13)
இன்றைய விசுவாசிகள் (கிறிஸ்துவின் சரீரமாகிய திருச்சபை) வரவிருக்கும் இராஜ்யத்தை ஆளுவதற்கு தலையாகிய இயேசுவோடு இணைவார்கள். இயேசு அவர்களுக்கு வாக்களிக்கிறபடி - "ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, தேசங்கள்மேல் அதிகாரம் கொடுப்பேன்." (வெளி 2:26)
5) இதற்கு மேலும் நேரடியான விளக்கம் உள்ளதா?
உண்டு. கிறிஸ்துவின் இராஜ்யம் வருவதைக் குறிக்க எந்தவித அடையாள அறிகுறிகளும் இருக்காது என இயேசு கூறுவதை கேட்கும் சிலர் அதன் வருகையை அனுமானிப்பதில் குழப்பம் ஏற்படுமோவென்று நினைக்கலாம். அவர் அத்தகு அனுமானத்தை நிராகரிக்க விரும்புகிறார்.
அவர் சொல்லவந்தது இதுதான் – இராஜ்யத்தின் வருகையை குறிக்க உங்களுக்கு எந்தவித அடையாள அறிகுறிகளும் தேவையில்லை. ஏனெனில் அவர் கணிக்கும் எதிர்காலத்தில்: "மக்கள் ‘இதோ, இங்கே என்றும், அங்கே என்றும்’ சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது!" மாறாக மக்கள் என்ன சொல்வார்கள் என்று அவர் முன்னறிவிக்கிறார் - “இதோ, தேவனின் இராஜ்யம் உங்கள் மத்தியில் இருக்கிறதே!" என்பார்கள்.
வசனத்தில் ‘இதோ’ என்று இருமுறை வருவதை கவனியுங்கள். முதல் 'இதோ' மக்கள் எதிர்காலத்தில் என்ன சொல்ல மாட்டார்கள் என்பதை குறிக்கிறது – அதாவது, இராஜ்யம் வந்துவிட்டதா, இல்லையா என்பதில் எந்த குழப்பமும் அவர்களுக்கு இருக்காது.
இரண்டாவது 'இதோ' மக்கள் எதிர்காலத்தில் என்ன சொல்வார்கள் என்பதை குறிக்கிறது. வசனத்தை இவ்வாறு மொழியாக்கம் செய்யலாம்:
"தேவனுடைய இராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது. இதோ, இங்கே என்றும், அங்கே என்றும் சொல்லமாட்டார்கள். [மாறாக] இதோ, தேவனுடைய இராஜ்யம் உங்கள் மத்தியில் இருக்கிறதே [என்று சொல்வார்கள்]," என்றார்."
தேவனின் இராஜ்யத்தின் வருகை என்பது இந்த உலக ஏற்பாட்டின் அழிவுடனும், மரித்தோரின் உயிர்த்தெழுதலுடனும் வரவிருக்கும் ஓர் பிரம்மாண்ட வியத்தகு நிகழ்வு ஆகும். ஆக, இயேசு சொல்ல வந்த கருத்து இதுதான்:
‘எந்த அடையாளமும் தேவையில்லை. எந்த குழப்பமும் இருக்காது! அது வந்ததும் நீங்களே தெரிந்துகொள்வீர்கள்!'
அதன் வருகையானது அரசுரிமை கொண்ட ஓர் அரசனின் வருகையுடன் ஆரம்பிக்க உள்ளது!