நரகம் - ஒரு வரலாறு

 கருப்பொருள் வசனம்: "நான் போனபின்பு மந்தையை தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களை தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்" (அப்போஸ்தலர் 20:29-30)

1) "நரகம்" என தமிழ் பைபிளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள "ஷியோல்/ஹேடீஸ்", "கெஹன்னா", "டார்டரூ" ஆகிய பல்வேறு வார்த்தைகளின் மெய்யான அர்த்தத்தை ஆராய்ந்தோம். இப்படியிருக்க, நரக அக்கினியும், நித்திய வேதனையும் பற்றின கோட்பாடுகள் எவ்வாறு கிறிஸ்தவத்துக்குள் ஊடுருவின?
நாம் கேட்கவேண்டிய முதற்கேள்வி - மரணத்தைக் குறித்தும், அதற்குப்பின்வரும் மறுமையை குறித்தும், யூதமல்லாத பண்டைய புறஜாதி சமயங்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் யாவை?

  • அக்கினிமயமான பாதாளம் குறித்த புறஜாதி நம்பிக்கைகள் எகிப்திய நிம்ரோது காலத்திலேயே தோன்றியவை. கிறிஸ்துவுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே, பார்சி சமயத்தை நிறுவின சரத்துஸ்தர் (Zoroaster) பாரசீகர்களுக்கு, மனிதர்களது செயல்களை வரவு (நன்மை), செலவுகளாக (தீமைகள்) பதிவு செய்யும் பூமியடியிலே இருண்ட பகுதிகளில் வாழும் ஓர் "கள்ள தேவன்" (Lord of Lies) பற்றி போதித்துள்ளார். மரணத்திற்குப்பின் ஆத்துமாக்கள் நியாயத்தீர்ப்புக்கு செல்லும் எனவும், தீயதாக நியாயந்தீர்க்கப்பட்டால், வேதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் போதனை செய்யப்பட்டது.
  • கிறிஸ்துவின் காலத்திற்கு பின்னர் கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்குள், திருச்சபையானது கிறிஸ்துவின் சீடர்களது அசல் போதனைகளுடன் புறஜாதியாரின் கோட்பாடுகள் கலப்பதற்கு அனுமதிக்க ஆரம்பித்தது. இதனால் பல திருமறை போதனைகள் கலப்படமாயின.

2) புறஜாதியாரது நம்பிக்கைகள் கிறிஸ்தவத்திற்குள் புகுவதற்கு திருச்சபை ஸ்தாபனம் அனுமதித்தது ஏன்?

  • புறஜாதியாரை எளிதாக கிறிஸ்தவத்திற்கு மதமாற்றம் செய்வதற்காக திருச்சபை இந்தக் கோட்பாடுகளை தத்தெடுத்துக்கொண்டது. அடையாளப்பூர்வ வசனங்களுடன் பார்சிய மத அர்த்தங்கள் சம்பந்தப்படுத்தப்பட ஆரம்பித்தன. இதுபோன்ற திரிப்புகள் (விசுவாச துரோகம்) நிகழும் என அப்போஸ்தலர் பவுல் தீர்க்கதரிசனமாக சொல்லியிருக்கிறார் (அப்போஸ்தலர் 20:29-30, 1தீமோத்தேயு 4:1).
  • கி.பி. 4-ஆம் நூற்றாண்டிற்குள் இது சபை சித்தாந்தமாக உருமாறி ஒரு பிரமாணமாக பொறிக்கப்பட்டது. கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (Catholic Encyclopedia) பின்வருமாறு பதிவு செய்கிறது:
    • "திருச்சபை (கி.பி. 4-ஆம் நூற்றாண்டின்) அதனாசி பிரமாணத்தில் (Athanasian Creed) நம்பிக்கை வைத்துள்ளது: நன்மை செய்தவர்கள் நித்திய வாழ்விற்கும், தீமை செய்தவர்கள் நித்திய அக்கினிக்கும் செல்வார்கள்... திருச்சபையானது நரகத்தின் நித்திய வேதனையை சந்தேகமறப் போதிக்கிறது; இது எவரும் மறுக்கவோ கேள்வி கேட்கவோ இயலாத ஒரு மெய்யான நம்பிக்கை என்கிறது; அங்ஙனம் கேட்டால் அவர் பகிரங்கமான மத பேதம் புரிகிறார் என்கிறது."

3) வேதாகமம் சாராத இந்த நரக கோட்பாடு பல ஆண்டுகளாக தாக்குப்பிடித்ததன் காரணம்தான் என்ன?
நித்திய நரக அக்கினியில் எரிவதைக் குறித்த பயமானது 1600 ஆண்டுகளுக்கும் மேலாக கிறிஸ்தவ சபைகளுக்கு செல்கிறவர்களை ஒருவகையான திகிலில் மிரட்டி வைத்துள்ளது. இருண்ட காலங்களின் (Dark Ages) ஊடாக பல நூற்றாண்டுகளாக, மதத்தின் பெயரால் அனைத்து வகையான ஒடுக்குமுறைகளும் சித்திரவதைகளும் சாமானிய மனிதனைப் பயமுறுத்தி அவனை ஒரு 'விசுவாசி'யாக ஆக்க பயன்படுத்தப்பட்டுள்ளன.
எது கூடுதல் சக்தி வாய்ந்தது? மரணத்தின் மூலம் இல்லாமற் போவதைக் குறித்த பயமா? அல்லது நித்திய வேதனை குறித்த பயமா?
பேராசிரியர் ஹெரால்டு O.J. பிரெவுன் (டிரினிடி எவேஞ்சலிக்கல் டிவினிடி ஸ்கூல்) எழுதுகிறார்:
"(பாவத்திற்கான தண்டையாக அழிவை சந்திப்பது என்ற) நிர்மூல கோட்பாடு (Annihilationism) என்பது சுவிசேஷம் பிரசங்கிப்பதன் அழுத்தத்தை குறைத்துவிடுகிறது.
மனந்திரும்பாதவர்களிடம் அவர்களுக்கு ஏற்படக்கூடிய மிக மோசமான விளைவு அழிவே என்று சொன்னால் பாவத்தில் நீடிப்பது அவ்வளவு அபாயகரமானதில்லையென்பது போல் தோன்றிவிடுகிறது".

4) நரகத்திற்கான ஆங்கில வார்த்தை "Hell" முதன்முதலில் எதனை அர்த்தப்படுத்தியது?
"நரகம்" ("Hell") என்ற ஆங்கிலச்சொல் முதன்முதலில் வெறுமனே "மறைப்பது", "ஒளித்துவைப்பது", "மூடுவது" என்ற அர்த்தங்களைக் கொண்டதாய் இருந்தது. பண்டைய ஆங்கில இலக்கிய படைப்புகளில்:

  • "the helling of potatoes" - "உருளைக்கிழங்கை நரகப்படுத்துவது" - உருளைக்கிழங்கை குழிகளில் ஒளித்துவைப்பதை இந்த வாசகம் குறித்தது.
  • "the helling of a house" - "வீட்டினை நரகப்படுத்துவது" - வீட்டினை மூடுவது அதாவது கூரை போடுவது என்பதே இதன் அர்த்தம்.

ஆகவே, இது கல்லறையைக் குறிப்பதற்கு ஒரு பொருத்தமான வார்த்தைதான் - அங்கே, மரித்தவர்கள் மறைத்து வைக்கப்படுகிறார்கள், அல்லவா? ஆனால், புறஜாதியாரது கோட்பாடுகளை திருச்சபை கலக்க ஆரம்பித்ததும், இந்த நரக "Hell" வார்த்தை பார்சி சமய நிறுவனரான சரத்துஸ்தர் போதித்த வேதனைக்குரிய பாதாள உலகத்துடன் இணைத்துப் பார்க்கப்பட ஆரம்பித்து, இறுதியில் மறுவிளக்கத்திற்கு ஆளாகிப் போயிற்று.

மேலும் படிக்க: ஆதாம் உட்பட கெட்டவரின் கதி