ஷியோல்/ஹேடீஸ் - மொழிபெயர்ப்பாளர்கள் மோசடி

 கருப்பொருள் வசனம்: "நீர் என்னை ஷியோலில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும் " (யோபு 14:12-13)

1) பைபிளின் பழைய ஏற்பாட்டில் “நரகம்” என்பது உண்மையில் யாது?
தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பாளர்கள் மூல வேதாகமத்தில் 65 இடங்களில் காணப்படும் "ஷியோல்" என்னும் ஒரே எபிரேய வார்த்தையை தமிழ் வேதாகமத்தில்..

  • பாதாளம் என்றும் (59 தடவை), படுகுழி/ஆழம் என்றும் (2 தடவை),
  • நரகம் என்றும் (4 தடவை)

...மொழிபெயர்த்துள்ளனர்.

கிங் ஜேம்ஸ் (KJV) ஆங்கில பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் இந்த "ஷியோல்" எபிரேய வார்த்தையை ஆங்கில பைபிளில்..

  • கல்லறை (grave) என்றும் (31 தடவை), படுகுழி என்றும் (3 தடவை),
  • நரகம் என்றும் (31 தடவை)

...மொழிபெயர்த்துள்ளனர்.

நல்லவர்கள் இறந்தபோது இந்த "ஷியோல்" இளைப்பாறும் இடத்தை "பாதாளம்/கல்லறை/குழி" என்று மொழிபெயர்த்தவர்கள், கெட்டவர்கள் இறந்தபோது அதே மூல வார்த்தையை "நரகம்" என்று மொழியாக்கம் செய்துள்ளனர்.

2) சில உதாரணங்களைப் பார்ப்போமா?

  • "நீர் என்னை பாதாளத்தில் ["ஷியோலில்"] ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும்" (யோபு 14:12-13). இங்கே நீதிமானான யோபு தன் வேதனையிலிருந்து தப்பித்து உயிர்த்தெழுதலின் நாள் வரையிலே நித்திரை செய்து காத்திருக்க "ஷியோலில்" தன்னை ஒளித்து வைக்கவேண்டுமென தேவனிடம் வேண்டுகிறான். நரகத்திற்கு தன்னை அனுப்பிவைக்குமாறு ஒருவன் கடவுளிடம் வேண்டுதல் செய்வது விபரீதமாக இருக்குமே! எனவே மொழிபெயர்ப்பாளர்கள் பாதாளம், படுகுழி போன்ற பதங்களை பயன்படுத்தியுள்ளனர்.
  • ஆனால் சங்கீதம் 9:17-ஆம் வசனத்திலே அதே மொழிபெயர்ப்பாளர்கள் அதே "ஷியோல்" வார்த்தையை "நரகம்" என்று மொழிபெயர்த்துள்ளனர். ஏனெனில், இங்கே அதே வார்த்தை துன்மார்க்கர் செல்லும் இடமாக பயன்படுத்தப்பட்டுள்ளது - "துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே ["ஷியோலிலே"] தள்ளப்படுவார்கள்."

அறிஞர்கள் இதை மொழிபெயர்ப்பாளர்கள் செய்த பெரும் மோசடியாக கருதுகின்றனர். எல்லா இடங்களிலும் "பாதாளம்/கல்லறை/சவக்குழி" என்பதே சரியான வார்த்தையாக இருக்கும். எபிரேய மொழி வல்லுநர் எவரைக் கேட்டாலும் "ஷியோல்" என்றால் "சவக்குழி" என உறுதி செய்வார்கள்.

3) அப்படியெனில் "ஷியோல்" எப்படிப்பட்டதொரு இடம்?
வேதாகமம் உண்மையில் "ஷியோல்" எப்படிப்பட்ட இடம் என்பதை விவரிக்கிறது! சித்திரவதைக்கான இடமாக அல்ல, மாறாக அதற்கு முற்றிலும் மாறுபட்டதாக வர்ணிக்கிறது:

  • "ஷியோல்" அக்கினி பற்றி எரிகிற ஒரு இடமல்ல. காரிருளும் அந்தகாரமுமான நிலையாகும் (யோபு 10:21).
  • வேதனையும், துன்பமும் நிறைந்த இடமல்ல அது. அந்த சொல் காணப்படும் ஒவ்வொரு சூழலும் (context) அதனை ஒரு மௌன நிலையாகவோ, நிசப்தத்தின் இடமாகவோ தான் விவரிக்கிறது (சங்கீதம் 115:17; 88:11-12).
  • ஆம், "நீ போகிற பாதாளத்திலே ["ஷியோலிலே" - கல்லறையிலே] செய்கையும் ,வித்தையும்,அறிவும்,ஞானமும் இல்லையே" (பிரசங்கி 9:10).

4) பைபிளின் புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. நரகம் பற்றி புதிய ஏற்பாட்டு புத்தகங்கள் கூறுவது என்ன? "ஷியோல்" என்னும் பதத்திற்கு கிரேக்க வார்த்தை என்ன?
பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பு எபிரேய "ஷியோல்" என்பதை "ஹேடீஸ்" என்று குறிப்பிடுகிறது. புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்கள் அதை உறுதி செய்கிறார்கள். உதாரணமாக..

  • புதிய ஏற்பாட்டு அப்போஸ்தலர் 2:27: 'என் ஆத்துமாவைப் பாதாளத்தில் ["ஹேடீஸில்"] விடீர்.'
  • இது மேற்கோள் காட்டுவது பழைய ஏற்பாட்டு சங்கீதம் 16:10: "என் ஆத்துமாவைப் பாதாளத்தில் ["ஷியோலில்"] விடீர்."

புதிய ஏற்பாட்டில் 10 இடங்களில் "ஹேடீஸ்" வார்த்தை காணப்படுகிறது. தமிழ் வேதாகமங்களில் எல்லா இடங்களிலுமே அதனை கல்லறை என்ற பொருள்படும் "பாதாளம்" என்று மொழிபெயர்த்துள்ளனர். ஆனால், கிங் ஜேம்ஸ் (KJV) போன்ற சில ஆங்கில பைபிள்களிலோ அதே வார்த்தையை நரகம் (Hell) என்று தவறாக மொழிபெயர்த்துள்ளனர்.

5) இந்த மொழிபெயர்ப்பாளர்கள் ஏன் பட்சபாதத்திற்கு ஆளாகி ஒரே வார்த்தையை பல்வேறு பதங்களில் தவறாக மொழிபெயர்த்துள்ளனர்?
வேதாகமத்தின் பிரபலமான மொழிபெயர்ப்புகளில் ஒன்றான ஆங்கில கிங் ஜேம்ஸ் (KJV) பதிப்பு கி.பி 1611-இல் வெளியிடப்பட்டது. ஆனால் அதற்குள், இருண்ட காலம் (Dark Ages) என்றழைக்கப்பட்ட வரலாற்று கட்டத்தில் புறமத நரக கோட்பாடுகள் கிறிஸ்தவத்திற்குள் நுழைந்து நிலைகொண்டுவிட்டன. மொழிபெயர்ப்பாளர்களும் அவற்றை நம்பினர் (அந்த வரலாறு குறித்து பின்னர் மேலும் காண்போம்).

இந்த பாரபட்சமான மனப்பாங்கே அவர்களை தவறாக மொழிபெயர்க்க வைத்தது. அவர்களது அறிஞர் மூளைகள் "ஷியோல்", "ஹேடீஸ்" என்ற பதங்கள் கல்லறையையே குறிக்கின்றன என்று அறிந்திருந்தாலும், தங்கள் மனம்போன போக்கில் பிழையாக நரகமென மொழிபெயர்த்தனர்.

மொழிபெயர்ப்பாளர்களது நேர்மை, நாணய அளவைப் பொறுத்து இந்த பட்சபாதம் பிற மொழிபெயர்ப்புகளையும் பல்வேறு அளவுகளில் பாதித்தது. YLT, வேமௌத் (Weymouth), ரோதர்ஹேம் (Rotherham’s) போன்ற புகழ்பெற்ற ஆங்கில மொழிபெயர்ப்புகள் இத்தகைய பட்சபாதத்தை முற்றிலும் தவிர்த்தன. அந்த பைபிள் மொழிபெயர்ப்புகளில் ஒருமுறை கூட "நரகம்" என்ற வார்த்தை வருவதில்லை.

மேலும் படிக்க: கெஹன்னா - அக்கினிக்கடல்