ஆதாம் உட்பட கெட்டவரின் கதி
- விவரங்கள்
- பிரிவு: நரக புராணம்
கருப்பொருள் வசனம்: "அவர்களை நான் கல்லறையின் (ஷியோலின்) வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்" (ஓசியா 13:14)
1) தமிழ் பைபிளில் "நரகம்" என மொழிபெயர்க்கப்பட்டுள்ள - "ஷியோல்/ஹேடீஸ்", "கெஹன்னா", "டார்டரூ" - என்ற பல்வேறு வார்த்தைகளின் மெய்யான அர்த்தத்தை ஆராய்ந்தோம். கிறிஸ்தவத்திற்குள் நரக அக்கினியும் நித்திய வேதனையும் பற்றின நம்பிக்கைகள் எவ்வாறு ஊடுருவின என்ற வரலாற்றையும் பார்த்தோம். அப்படியெனில், மரித்தவர்கள் தற்போது எங்கேதான் உள்ளனர்? அவர்கள் மறுபடியும் உயிர்பெற வாய்ப்பு உண்டா?
முதல் மனிதனான ஆதாம் ஏதேன் தோட்டத்தில் கீழ்ப்படியாமல் வீழ்ச்சியடைந்தபோது அவன் வம்சாவழி வந்த நமது ஆத்துமாக்கள் அனைத்தும் "ஷியோல்/ஹேடீஸ்" என்றொரு பாதாளத்திற்கு கண்டனம் செய்யப்பட்டன. அதுதான் கல்லறை.
- ஆனாலும் நம் எல்லோருக்கும் எதிர்கால நம்பிக்கை உண்டு! (ஷியோல் என்னும்) கல்லறையின் பிடியிலிருந்து நம்மை மீட்கும் பொருள் (ransom) கொடுத்து மீட்டு விடுவிப்பேன் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்தார் (ஓசியா 13:14). அவர் இயேசுவை ஆதாமிற்குப் பதிலாக மரிப்பதற்கு அனுப்பிவைத்தார் (யோவான் 3:16).
- ஆதாமிற்குரிய மீட்பின் கிரயத்தை (விலையை) இயேசு கொடுத்து ஆதாமின் வம்சம் அனைவரையும் (எல்லா மனிதரையும்) உயிர்த்தெழ வைப்பதற்கான வழியை ஏற்படுத்தினார் (ரோமர் 5:12,18).
- ஆம், இயேசுவே அனைவருக்குமாகக் கொடுக்கப்பட்ட மீட்கும் பொருள் (1தீமோத்தேயு 2:6). "ஆதாமிற்குள் எல்லாரும் மரிக்கிறது போல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்" (1கொரி 15:22).
- தேவன் மூன்றாம் நாளிலே இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பி (அப்போஸ்தலர் 13:30), அவரை அனைவருக்கும் மேலாக ஆண்டவராக (எஜமானாக) நியமித்தார் (லூக்கா 22:29, ஏசாயா 9:6).
2) "திரும்பவும் வருவேன்!" என்று வாக்குறுதி அளித்து இயேசு பரத்திற்கு ஏறினார் அல்லவா? தனது இராஜ்யத்தை நிறுவ வருவேன் என்றாரே? இராஜ்யத்தில் நடக்கவிருப்பதுதான் என்ன?
- இயேசு திரும்ப வருகையில், அனைவரும் பிரேதக் குழிகளிலிருந்து எழும்பி வருவார்கள் (யோவான் 5:28). அவரது விசுவாசிகளென சந்தேகமற நிரூபிக்கப்பட்டவர்கள் (மெய்யான திருச்சபையார்) ஒரு சிறப்பான பரலோக மீட்பை பெற்றுக்கொள்வார்கள் (வெளி 2:26, 1தீமோ 4:10). அவர்களை தவிர மற்ற மனுக்குலத்தோர் ஒரு "நியாயத்தீர்ப்பு சோதனை"க்கென பூமியில் உயிர்த்தெழுவார்கள் (யோவான் 5:29 வசனத்தில் "krisis" என்ற மூல பைபிளின் கிரேக்க பதம் 'ஆக்கினை' என்று தமிழ் வேதாகமங்களில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது; ஆனால் உண்மையில் அதன் பொருள் நியாயத்தீர்ப்பு சோதனை என்பதே). ஆம், நியாயத்தீர்ப்பு நிச்சயம் ஒரு சோதனையை உள்ளடக்கியது.
- இயேசுவும் மகிமைப்படுத்தப்பட்ட அவரது திருச்சபையும் ஆயிர வருடம் பூமியில் அரசாட்சி புரிய, அந்த இராஜ்ய நல்லாட்சியின் கீழ் நீதி கற்றுக்கொள்வதற்கு உயிர்த்தெழுந்த உலகத்தார்க்கு நியாயமானதொரு வாய்ப்பு கிடைக்கும் (ஏசாயா 26:9). இன்று மக்களை ஏமாற்றுவது போல எவரையும் ஏமாற்றாதபடி சாத்தான் அன்று கட்டிவைக்கப்படுவான் (வெளி 20:2). "உமது இராஜ்யம் வருவதாக, உமது சித்தம் பரலோகத்திலே செய்யப்படுவது போல பூமிலேயும் செய்யப்படுவதாக," என்று காலகாலமாக கிறிஸ்தவர்கள் ஜெபித்து வேண்டும் இராஜ்யம் இதுவே (மத்தேயு 6:10)!
குறிப்பு: வெளி 20:5 வசனத்தில் "மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை," என்று கூறும் பகுதியானது பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகளில் இல்லை; ஆம், அது பிற்காலங்களிலே பைபிளில் செருகப்பட்ட போலியான வாக்கியம். வேத வசனம் அல்ல! ஆகவேதான், (என்.ஐ.வி NIV பைபிள் போன்ற) மதிப்பிற்குரிய ஆங்கில திருமறை பதிப்புகளில் அது அடைப்புக்குறிகளுக்குள் போடப்பட்டு மூல பைபிள் வசனம் அல்ல என்று அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
3) கிறிஸ்துவின் இராஜ்யத்தில் உயிர்த்தெழுந்து, ஆயிர வருடங்கள் சத்தியத்தையும், அறிவையும் கற்றுக்கொண்ட பின்னும் கீழ்ப்படியாமல் கலகம் பண்ணுகிறவர்களின் கதி என்னாகும்?
ஆயிர வருட அரசாட்சியின் இறுதியிலே, சாத்தான் "கொஞ்சக்கால"த்திற்கு மனுக்குலத்தைச் சோதிப்பதற்காக விடுவிக்கப்படுவான். அவன் வழி திரும்புகிறவர்கள் "கெஹன்னா" என்ற அக்கினிக்கடல் அடையாளப்படுத்தும் நிர்மூலமான அழிவுக்கு ஆளாகும் தண்டனையைப் பெறுவார்கள் - அதாவது இரண்டாம் மரணத்தை அடைவார்கள் (வெளி 20:3, 9; 21:8).
- ஆம், இயேசுவின் சொற்கேளாத ஆத்துமாக்கள் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவார்கள் (அப்போஸ்தலர் 3:23). சாத்தானும் கொல்லப்படுவான் (வெளி 20:10).
- ஆனால், இயேசுவின் சொற்கேட்டு நடப்போர் பூமியிலே என்றென்றும் சமாதானமாக வாழும் பாக்கியம் பெறுவார்கள்.
மேலும் படிக்க: என்ன ஒரு கட்டுக்கதை!