வாக்குத்தத்த வியாபாரிகள்
- விவரங்கள்
- பிரிவு: பரவலான வஞ்சனை
கருப்பொருள் வசனம்: "ஐசுவரியவான் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்," என்றார். மத்தேயு 19:24.
1) ஆசீர்வாத நற்செய்தி என்றால் என்ன?
கிறிஸ்தவர்கள் உலகப்பிரகாரமான காரியங்களில் வெற்றி அடைவதும், செல்வ செழிப்பான ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவிப்பதுமே கடவுளின் சித்தம் என்று எடுத்துரைக்கும் நவீன இறையியல்தான் ஆசீர்வாத நற்செய்தி கோட்பாடு. தேவன் விசுவாசிகளுக்கு நோய்நொடியற்ற சொகுசான வாழ்வை வெகுமதியாக அளிக்கிறார் என்று இந்த கோட்பாடு கூறுகிறது. இதை பின்பற்றும் சபைத்தலைவர்கள் வழக்கமாக மக்களை விதவிதமான பொருத்தனைகள் செய்வதிலும், வேதவசனங்களை வாய்மொழியால் மறுபடி மறுபடி மந்திரம்போல ஓதவைப்பதிலும், சபைக்கு தங்கள் மாதாந்திர வருவாயில் பத்தில் ஒரு பங்கு பங்களிக்க வைப்பதிலும் ஊக்கப்படுத்துவார்கள்.
2) இந்த "ஆரோக்கிய செல்வசெழிப்பு சுவிசேஷம்" எப்போது எப்படி தொடங்கியது?
- இது 19-ஆம் நூற்றாண்டில் புதிய சிந்தனை (New Thought) இயக்கத்துடன் ('ஆரோக்கியமான வாழ்விற்கு ஆரோக்கியமான சிந்தனை') தொடங்கியது.
- பின்னர் 1940-களிலும் 50-களிலும் (இரண்டாம் உலகப்போருக்குப்பின்) சுகமளிக்கும் மறுமலர்ச்சி (Healing Revival) இயக்கம் குணம்பெறுவதற்கான நம்பிக்கையை புதுப்பித்தது.
- இதைத் தொடர்ந்து விசுவாச வார்த்தைகள் (Word of Faith) இயக்கம் என்ற பெயரில், தகுந்த விசுவாச அறிக்கைகள் செய்தால், உடல் மற்றும் மனரீதியான ஆன்மீக சுகமளிப்பும், பொருளாதார செழிப்பும் அடையமுடியும் என்று பிரசங்கிக்கப்பட்டது.
- 1980-களில், தொலைக்காட்சி சுவிசேஷகர்கள் பலவிதமான வெற்றி வாக்குத்தத்தங்களுடன் இலட்சக்கணக்கான வீடுகளை அடைந்தனர். அவர்களின் வளர்ச்சியும் புகழும், பெந்தெகொஸ்தே சபைகளின் கவனத்தை ஈர்த்தது. அதனால் அச்சபைகள் இந்த கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு பிரிவுசாரா பிரம்மாண்ட சபைகளை (மெகா-சர்ச்களை) அமைக்க ஆரம்பித்தன.
3) இந்த கோட்பாட்டின் ஆதரவாளர்கள் எந்த வேதவசனங்களை மேற்கோள் காட்டுவது வழக்கம்?
அவர்கள் பயன்படுத்தும் முக்கிய வசனம் மல்கியா 3:10 - "என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள். அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற் போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள்," என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் – தசமபாகம் என்பது மோசேயின் நியாயப்பிரமாணத்தின் ஓர் அங்கமாக இருந்தது (லேவியராகமம் 27:30-33). இஸ்ரவேலர் தங்கள் அனைத்து சம்பாத்தியங்களிலிருந்தும் ஆலயத்திற்காக பத்தில் ஒருபங்கை கொண்டுவந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளவேண்டுமென்று நியாயப்பிரமாணம் சொன்னது. ஆனால் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு (பழைய ஏற்பாடான) நியாயப்பிரமாணத்திற்கு பதிலாக (புதிய ஏற்பாடான) புதிய உடன்படிக்கை நிறுவப்பட்டது. எனவே மல்கியா வசனத்தில் உள்ள ஆசீர்வாதம் கிறிஸ்தவர்களுக்கு பொருத்தமானதல்ல. யாரேனும் ஒருவர் இன்னமும் தசமபாகம் அளித்து ஆசீர்வாதங்களை எதிர்பார்த்துக்கொண்டு இருந்தால், அவர்கள் கிறிஸ்துவை மறந்துவிட்டு, நியாயப்பிரமாணத்தின் 613 கட்டளைகளையும் பின்பற்றியாக வேண்டும். அது மனித சக்திக்கு சாத்தியமற்றது என வேதாகமமே அறிவிக்கிறது (ரோமர் 3:20).
4) ஆசீர்வாத இறையியலை ஆதரிப்பதற்கு வேறு எந்த வசனங்களாவது பயன்படுத்தப்படுகின்றனவா?
- ஆசீர்வாத இறையியலாளர்கள், தாலந்துகளின் உவமைக்கதையை (மத்தேயு 25:14-30) பயன்படுத்தி "பத்துலிருந்து நூறு மடங்கு முதலீட்டின் மீதான வருவாய் (ROI) கிடைக்கும்!" என்று தங்கள் சபை மக்களுக்கு ஆசைகாட்டி அவர்களது பணத்தை சபைக்கு காணிக்கையாக கொடுக்கவைக்க முயல்கின்றனர். ஆனால் உவமைக்கதைகளோ நிஜவிசயங்களை விளக்கும் பொருட்டு அவற்றிலிருந்து மிகவும் வித்தியாசப்பட்ட உருவக விசயங்களை பயன்படுத்தும் உருவகக்கதைகள் ஆகும். இந்த தாலந்துகளின் உவமைக்கதையானது, வரவிருக்கும் தேவனின் இராஜ்யத்தை உலகிற்கு அறிவிப்பதற்காக சபையார் இவ்வாழ்வில் செய்யும் வேலைகளுக்காக கிறிஸ்துவின் வருகையின்போது வினியோகிக்கப்பட உள்ள வெகுமதிகளை குறிக்கிறது.
- மேலும் ‘என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்’ (பிலிப்பியர் 4:19) என்ற வசனத்தையும் ஆசீர்வாத இறையியலாளர்கள் உபயோகிக்கிறார்கள். ஆனால் அவ்வசனமோ தேவனுடைய இராஜ்யத்தைப் பிரசங்கிக்கத் தேவையான ஆவிக்குரிய அத்தியாவசியங்களையே குறிக்கிறது.
5) ஆசீர்வாத நற்செய்தி இயக்கத்தின் தலைவர்கள் இத்தகைய நிலைப்பாடுகளை எடுப்பதற்கு தூண்டியது எது?
உலகப்பிரகாரமான தலைமை நிர்வாகநிலைகளை எடுத்துக்கொள்வதன் மூலம் கிறிஸ்தவர்கள் உலகில் சமாதானத்தையும் செழிப்பையும் கொணர முடியும் என்று அந்த தலைவர்களில் பலர் உறுதியாக உணர்ந்தனர். அதுமட்டுமல்லாமல், அவர்களில் சிலர் கிறிஸ்தவர்களை பாடுகள் சகிப்பதற்கு உற்சாகப்படுத்திய ரோமர் 8:17 போன்ற வேதவசனங்களுக்கு தேவையற்ற முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக நினைத்தார்கள்: ‘நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே, தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன்சுதந்தரருமாமே, கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.' ரோமர் 8:17.
இத்தகைய வசனங்கள் பலவற்றை புறக்கணித்துவிட்டு, பின்வரும் எடுத்துக்காட்டுகள் போன்ற சில வசனங்களை சூழலுக்கு அப்பாற்பட்டு (out of context) பயன்படுத்த அவர்கள் விரும்பினர்: ‘நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். யோவான் 10:10. ‘பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.' 3யோவான் 1:2.
6) செல்வம், வளமை பற்றி இயேசு என்ன சொன்னார்?
"ஐசுவரியவான் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்," என்றார். மத்தேயு 19:24. காரணம் ஏதும் இல்லாமலா, அவர் இப்படி ஒரு கூற்றை சொல்லியிருக்கவேண்டும்?
இயேசு தம்முடைய சொந்த வாழ்க்கையில் பூமியில் எந்தவொரு செல்வத்தையும் தேடவில்லை. மாறாக, அவர், "நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுசகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை," என்கிறார். லூக்கா 9:58.
பொருளுடைமைத்துவத்தை தழுவுவதற்கு அவர் நம்மை ஒருபோதும் ஊக்கப்படுத்தவில்லை. மாறாக அவர் நம்மை, "பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல," என்று எச்சரித்தார். லூக்கா 12:15. மேலும், ‘பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம், இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும், இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்," என்று நமக்கு அறிவுரை கூறுகிறார். மத்தேயு 6:19.
7) பவுலின் அறிவுரைகள் இயேசு கூறிய புத்திமதியில் இருந்து மாறுபட்டு இருந்தனவா?
நிச்சயம் இல்லை. "தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களாயிருக்கிற மனுஷர்களிடம்" இருந்து விலகி இருக்கவேண்டுமாறு பவுல் தீமோத்தேயுவை எச்சரித்தார். 1தீமோத்தேயு 6:5.
மேலும் அவர், "ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்," என்று சாடினார். 1தீமோத்தேயு 6:9-11.
பவுல் இவ்வாறு தெளிவாக கற்றுக்கொடுத்திருக்கும்போதிலும், ஆசீர்வாத சுவிசேஷம் மக்களை எவ்வளவு தூரம் குருடாக்கியிருக்கிறது என்பதை காணும்போது வியப்பாக உள்ளது.
8) "நீங்கள் பணஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்," என்று பவுல் ஏன் நம்மை அறிவுறுத்துகிறார்?
ஏன் என்று அவரே தொடர்ந்து கூறுகிறார் – ஏனெனில் "'நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை,' என்று தேவன் சொல்லியிருக்கிறாரே." எபிரேயர் 13:5. ஆம், உண்மைதான். "தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது," (மத்தேயு 6:24) என்று கிறிஸ்து நம்மிடம் சொன்னதன் எச்சரிக்கையை ஆசீர்வாத நற்செய்தி கூட்டத்தார்கள் மறந்துபோய்விட்டார்கள்.