கிறிஸ்துவின் திருச்சபை
- விவரங்கள்
- பிரிவு: திருச்சபை: பரம அழைப்பு
கருப்பொருள் வசனம் – ‘போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசு கிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.’ 1கொரிந்தியர் 3:11.
1) கிறிஸ்துவின் சரீரம் என கருதப்படும் மெய் திருச்சபையில் ஒருவர் அங்கமாய் இருக்கிறாரா என்பதை நாம் எப்படி அறிந்துகொள்ள முடியும்?
தேவனின் இராஜ்ய நற்செய்தியின் வேதப்பூர்வமான அடிப்படைக் கோட்பாடுகளை புரிந்து கொண்டு கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்றுவதற்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர்களே கிறிஸ்துவின் மெய் திருச்சபையின் அங்கமாவார்கள்.
2) வேதாகமம் மிகப்பெரியது. அதில் கிறிஸ்துவின் நற்செய்தியின் இன்றியமையாத அஸ்திபார கோட்பாடுகளை நாம் உண்மையில் அடையாளம் கண்டுகொள்ள முடியுமா?
உண்மையைச் சொல்லப்போனால், அப்போஸ்தலனாகிய பவுல் அவற்றை நமக்காக மிகத்தெளிவாக எழுதி வைத்துவிட்டார் -
“கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய அடிப்படை உபதேச கோட்பாடுகள்... செத்த கிரியைகளிலிருந்து மனந்திரும்புதலும் தேவன்பேரில் வைக்கும் விசுவாசமும், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசமும் கைகளை வைக்குதலும், மரித்தோரின் உயிர்த்தெழுதலும் நியாயத்தீர்ப்பும் என்பவைகளாகிய அஸ்திபாரம்.." எபிரெயர் 6:1-2.
மெய் கிறிஸ்தவத்தின் மகத்தான அஸ்திபாரங்கள்
-
செத்த கிரியைகளிலிருந்து மனந்திரும்புதலும், தேவன்பேரில் வைக்கும் விசுவாசமும் – நாம் பாவிகளாய் பிறந்தவர்கள் என்பதையும், எனவே நம் சுய முயற்சிகளால் நம்மை நாமே நியாயப்படுத்திக்கொள்ள இயலாது என்பதையும் ஒப்புக்கொண்டு, அத்தகு சுயமுயற்சிகளில் இருந்து மனந்திரும்பி, சர்வ வல்ல ஒரே மெய்த்தேவன் ஆகிய "யாவே" (Yahweh) தேவன்பேரிலும் அவரது ஒரேபேறான குமாரன் இயேசு கிறிஸ்துவின்பேரிலும் விசுவாசம் வைக்கவேண்டும். தேவன் தனது குமாரன் மூலமாக மரணத்திலிருந்து இரட்சிப்பை இலவசமாக அளிக்கிறார்.
சாதகமற்ற சூழ்நிலைகள் மத்தியிலும் விசுவாச கிரியைகள் செய்வதன் மூலம் நாம் கொண்ட விசுவாசத்தை நிரூபிக்க வைராக்கியம் கொண்டிருக்க வேண்டும்.
-
ஸ்நானங்களுக்கடுத்த உபதேசமும், கைகளை வைக்குதலும் – இந்த மாம்ச உலகிற்கு மரித்து, பரம அழைப்பின் ஓட்டம் ஓடும் பொருட்டு கிறிஸ்துவிற்காகவும் அவரது நற்செய்திக்காகவும் வாழ நம் வாழ்வை அர்ப்பணம் செய்வதுதான் ஞானஸ்நானம் என்று புரிந்துகொள்ள வேண்டும்.
தேவனைப் பற்றின ஆழமான காரியங்களை புரிந்துகொள்ளவும், அவரது நற்செய்தியை அச்சமின்றி உலகிற்கு பிரசங்கிக்கவும் நமக்கு உதவும் பொருட்டு தேவனிடத்திலிருந்து இயேசு கிறிஸ்து நமக்கென்று அனுப்பின பரிசுத்த ஆவியின் அபிஷேகம் மீது நம்பிக்கை கொள்ளவேண்டும் (இந்த அபிஷேகம் பவுல் காலத்தில் கைகளை வைக்குதல் மூலம் நடந்தது). பரிசுத்த ஆவி ஒரு நபர் அல்ல என்பதையும், அது தேவனின் வல்லமை என்றும் உணர்ந்துகொள்ள வேண்டும். மேலும் ஆவியின் அதிசய வரங்கள் (அந்நியபாஷை போன்றவை) ஆரம்பகால ஆதித்திருச்சபைக்கு மட்டுமே கொடுக்கப்பட்டன என்பதையும் அவ்வரங்கள் அதற்குப்பின் நின்றுபோய்விட்டன என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும்.
-
மரித்தோரின் உயிர்த்தெழுதலும், நியாயத்தீர்ப்பும் – ஆதாமினால் மரணத்திற்கு செல்லும் அனைவரும், அதாவது அனைத்து மனுக்குலமும் (விசுவாசிகள் மட்டுமல்லாமல் அவிசுவாசிகளும்கூட) இயேசு கிறிஸ்து ஆதாமிற்காக சிலுவையில் செலுத்திய மீட்கும் பொருளின் (கிரயத்தின்) காரணத்தினால் மரணத்திலிருந்து உயிர்த்தெழவிருக்கிறார்கள் என்று விசுவாசிக்க வேண்டும்.
நியாயத்தீர்ப்பு என்பது ஒரு கற்பிப்பு/சோதனைக்காலம் உள்ளடக்கியது, அதாவது பூமியில் வரவிருக்கும் தேவனுடைய இராஜ்யத்தில் கிறிஸ்துவும் உயிர்த்தெழுந்த அவரது திருச்சபையும் ஆட்சி புரிய, பூமியில் உயிர்த்தெழவிருக்கும் அவிசுவாசிகள் (சாத்தான் கட்டிவைக்கப்பட்ட) சாதகமான சூழ்நிலையில் நீதி கற்றுக்கொள்ளும் நியாயமான வாய்ப்பு பெறுவார்கள் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். அவ்வாய்ப்பின் போதும் தங்களின் தீய வழியைவிட்டு மாற மறுப்பவர்களை இறுதியில் தேவன் இயேசுவின் மூலம் நீதியுடன் நியாயந்தீர்த்து இரண்டாம் மரணத்திற்கு அனுப்புவார் என்றும் அறிந்துகொள்ளவேண்டும்.
நரகவதை, நித்திய உபத்திரவம் போன்ற தவறான கோட்பாடுகள், கடவுளின் திட்டத்தில் இல்லை என்றும் உணர்ந்துகொள்ளவேண்டும்.
3) மேலே கண்ட அஸ்திபாரக் கோட்பாடுகள் ஏதேனும் ஒன்றில் ஒருவர் கருத்து வேறுபட்டால், கிறிஸ்துவின் மெய் திருச்சபையில் அவர் அங்கமாக இருப்பது சாத்தியம் ஆகுமா?
கிறிஸ்துவின் இந்த அடிப்படை கோட்பாடுகளை சரியாகப் புரிந்துகொண்டு அவற்றின்மேல் விசுவாசம் வைக்காதவர்கள் எவரும் நிச்சயம் மெய்யான கிறிஸ்தவர்களாக இருப்பது சாத்தியப்படாது.
“போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.” 1கொரிந்தியர் 3:11.
அப்போஸ்தலர் பவுல், "உங்கள் மனதும் கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன். எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால்.." என்று நம்மை எச்சரிக்கிறார். 2கொரிந்தியர் 11:3-4.
ஆம், யார் வேண்டுமானாலும் தாங்கள் "இயேசு கிறிஸ்துவை" பின்பற்றுவதாக சொல்லிக்கொள்ளலாம். ஆனால் நாம் கேட்கவேண்டிய கேள்வி – அவர்கள் வேதாகமம் கற்பிக்கும் உண்மையான இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறார்களா, இல்லையா? - என்பதே!
அதுபோன்ற கிறிஸ்துவின் உண்மையான சகோதர, சகோதரிகளோடு கூட மட்டுமே நாம் பரம அழைப்பின் சுவிசேஷ ஓட்டத்தை ஓட வேண்டும்.