சரிசமானத்துவ கேள்வி
- விவரங்கள்
- பிரிவு: எவரை வணங்குகிறோம்?
கருப்பொருள் வசனம்: 'பிதா என்னைவிட பெரியவராயிருக்கிறார்.' (யோவான் 14:28)
1) சர்வ வல்ல தேவன் (கடவுள்) பற்றியும் மற்றும் இயேசு பற்றியும் நாம் படித்தோம். ஆனால், அதநாசியின் பிரமாணம் (Athanasian Creed) கூறும் "சரிசமானத்துவ" திரித்துவ கோட்பாட்டை ஆதரிக்க திரித்துவக் குழுக்கள் யோவான் 5:18-ஐ மேற்கோள் காட்டுவது வழக்கம். அந்த வசனம் என்ன தான் சொல்கிறது?
இயேசு அவர்களை நோக்கி, "என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார். நானும் கிரியைசெய்துவருகிறேன்," என்றார். அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள் (யோவான் 5:17-18).
இந்த வசனத்தில் பரிசுத்த ஆவி பற்றி எந்தவிதமான குறிப்பும் இல்லை. எனினும் சிலர் அந்த ஓட்டையை மறந்து, “சரிசமானத்துவ” திரித்துவத்தை ஆதரிக்க இந்த வசனத்தை மேற்கோள் காட்டுவது உண்டு.
எனினும், இயேசு தன்னை தேவனுக்கு சமமாக்கினாரா என்பதை நாம் ஆராய்வோம்:
- இந்த சம்பவத்தை நாம் வாசிக்கும்போது, எங்கும் இயேசு தான் தேவனுக்கு சமம் என கூறவில்லை என்பதை காண்கிறோம்.
- அவர் தேவனை தம் பிதா என அழைத்தபோது, அதைக்கேட்ட யூதர்கள் சிலர் அவர் தன்னை தேவனுடன் சமப்படுத்துகிறார் என அனுமானித்துக்கொண்டனர் என்று தான் யோவான் பதிவு செய்கிறார்.
இதை சில வேதாகமங்கள் (எடுத்துக்காட்டு: NCV) தெளிவாக மொழிபெயர்க்கின்றன:
இயேசு அவர்களை (யூதர்களை) நோக்கி, "என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார். நானும் கிரியைசெய்துவருகிறேன்," என்றார். அதனால் அவர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள். அவர்கள், "இயேசு ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கிக்கொள்கிறார்," என்றார்கள். (யோவான் 5:17-18). - யாராவது இந்த வசனத்தை இயேசுவே தேவனுக்கு சமமானவர் என்று சொல்ல உபயோகித்தால், அவர்கள் அந்தச் சமயத்தில் இயேசுவை சுற்றியிருந்த யூதர்கள் செய்த அதே தவறை செய்கிறார்கள். யூதர்களின் தவறான அனுமானிப்பிற்கு இயேசு கூறின பதிலை அவர்கள் முற்றிலும் கவனிக்க மறுக்கிறார்கள்:
அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார். (யோவான் 5:19).
ஆம், அவர்களுடைய அனுமானம் தவறு என்று இயேசு அவர்களிடம் தெளிவாகக் கூறினார்.
அக்காலத்தில் யூதரில் பலர் குமாரத்துவத்தை புரிந்துகொள்ளவில்லை. பிற இடங்களிலும் இயேசு அதை அவர்களிடம் விளக்குகிறார் (யோவான் 10:34-36).
2) தான் தேவனுக்கு இணை என்று இயேசு ஒருபோதும் சொல்லவில்லை என்றால், தேவனோடு அவருக்கு இருந்த உறவின் தன்மை பற்றி அவர் என்ன சொன்னார்?
வேதவசனங்களில் எல்லா இடங்களிலும், இயேசு தான் தேவனுக்கு அடிபணிந்தவர் எனவே கூறுகிறார். சில உதாரணங்கள்:
- இயேசு, "நீ என்னை நல்லவனென்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே," என்றார் (லூக்கா 18:19)
- 'பிதா என்னைவிட பெரியவராயிருக்கிறார்.' (யோவான் 14:28)
இயேசு பிதாவாகிய தேவனை (கடவுளை) தம் சொந்த தேவனாக அறிக்கையிட்டு, அவருக்கு வழிபாடு, தொழுகை, ஆராதனை மற்றும் நன்றி செலுத்துகிறார்.
- அந்தச் சமயத்தில் இயேசு, "பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்," என்றார் (மத்தேயு 11:25)
- இயேசு, "என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்று சத்தமிட்டுக் கூப்பிட்டார் (மத்தேயு 27:46)
- இயேசு, "நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன்," என்றார். (யோவான் 20:17)
அப்போஸ்தலர்கள் பவுலும், யோவானும் அதனையே உறுதி செய்கின்றனர் -
- நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் (எபேசியர் 1:17)
- 'கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறார்' (1 கொரிந்தியர் 11:3)
- ... [இயேசு] தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை இராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினார் (வெளி 1:6)
3) தேவன் இயேசுவை மகிமைப்படுத்தியபோது, அவர் தேவனுக்கு (கடவுளுக்கு) சமமானவராக மாறவில்லையா?
நாம் வேதவாக்கியங்களைப் படிக்கையில், உண்மையிலேயே இயேசு எல்லாவற்றிற்கும் மேலாக தேவனால் உயர்த்தப்பட்டார் என்று நாம் காண்கிறோம், ஆனால் அவர் இன்னும் தேவனின் அன்பான கீழ்ப்படிதலுள்ள குமாரனாக இருப்பதை பார்க்கிறோம்.
தனது மகிமை, மரியாதை மற்றும் பட்டங்கள் எதையுமே அவர் தானாக சூட்டிக்கொள்வது இல்லை. மாறாக, தம்முடைய பிதாவின் கைகளில் இருந்தே அவைகளை அவர் பெற்றுக்கொள்கிறார்:
- ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை. அந்தப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை; "நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன்," என்று அவரோடே சொன்னவரே அவரை உயர்த்தினார்."(எபிரெயர் 5:4-5).
- இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் (சர்வ வல்ல தேவன்) இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார். சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரீகமும் கொடுக்கப்பட்டது; (தானியேல் 7:13-14)
உண்மையில், இயேசு தான் பிதாவின் கட்டளையைத்தான் எப்போதும் செய்வேன் என்பதை உலகத்தார் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தம் சீடர்களிடம் கூறினார் (யோவான் 14:31). ஆமாம், கடவுளால் நியமிக்கப்பட்ட இராஜா, தம் பிதா கட்டளையிடுகிற காரியங்களைத்தான் தாம் செய்வேன் என்பதை தம் குடிமக்கள் (உலகத்தார்) கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்!
பவுல் இதனை விளக்குகிறார்:
சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் (இயேசுவுக்கு) கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும் போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் (தேவன்) கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார். (1 கொரிந்தியர் 15: 27-28).