மரண தண்டனை
- விவரங்கள்
- பிரிவு: மெய்யாகவே நல்ல செய்தி
கருப்பொருள் வசனம் – "மனுஷன் செத்தபின் பிழைப்பானோ?" யோபு 14:14.
1) மனுக்குலத்தின் அதிபயங்கரமான பிரச்சனை என்ன?
மரணம்! ஒவ்வொரு நாளும் 1,50,000 நபர்கள் மரணமடைகின்றனர். அதில் மூன்றில் இரண்டு பங்கினர் வயது மூப்பு காரணமாக மரிக்கின்றனர். மீதிப்பேர் நோய், விபத்து, தற்கொலை, பேரிடர், போர் காரணமாக மரணத்தைச் சந்திக்கின்றனர் (ஆதாரம்: விக்கிபீடியா).
2) ஆயினும், இது இயற்கை நியதி தானே? மிருகங்கள் மடிந்து போவதில்லையா, என்ன?
சரிதான். ஆனால், மனிதன் தனிச்சிறப்பானவன். தேவ சாயலாக படைக்கப்பட்டவன் ஆயிற்றே! என்றென்றும் வாழ்ந்திருந்து பூமியை ஆளுகை செய்யவென மனுக்குலம் படைக்கப்பட்டது (ஆதி 1:26-28). மரணம், மனிதனின் மனோவியல்புக்குப் புறம்பானது (பிரசங்கி 3:11). மரணத்தை எதிர்கொள்வது மனிதஜீவிகளுக்கு மிகவும் கடினமானதொரு விஷயம். அன்பிற்குரிய ஒருவரின் மரணம் மன அதிர்ச்சியை தருகிறது. அந்த வலி நம்மை விட்டு நீங்குவதே இல்லை. அவரை காணாது வருந்துகிறோம்; மீண்டும் காணத்துடிக்கிறோம்.
3) மரணம் நமக்கு இயற்கை இல்லையெனில், மனிதர்கள் மரித்துப்போவதேன்?
முதல் மனிதன் ஆதாமை கடவுள் எச்சரித்தார்: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்க வேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்.” (ஆதியாகமம் 2:16-17).
விழுந்துபோன அயோக்கிய தூதனான சாத்தான் முதல் மனுஷியான ஏவாளை வஞ்சித்தான்: "நீங்கள் சாகவே சாவதில்லை", என்று அவளிடம் சொல்லி, கடவுளின் எச்சரிக்கையை ஒதுக்கி தள்ளுமாறு கூறினான். விலக்கப்பட்ட விருட்சத்தின் கனியை ஏவாள் கொடுக்க ஆதாம் உண்டான். தன்னைப் படைத்த நல்மனதுள்ள கடவுளின் ஒரே கட்டளையை மீறினான்; மரணதண்டனைக்கு ஆளானான்.
4) ஒரு கனியைப் புசித்ததற்கு இப்படி ஒரு தண்டனையா? மேலும் ஆதாமின் தவறுக்காக நாமும் ஏன் மரிக்க வேண்டும்?
- மனிதன் கீழ்படிவானா, இல்லையா என்பதைக்குறித்த ஒரு எளிய சோதனையே அது. ஒரே தலைமுறைக்குள் ஒருவரை ஒருவர் கொலை செய்யும் அளவிற்கு மனுக்குலம் அதிவிரைவில் தாழ்ந்து போனதால், அது போதுமான ஒரு சோதனையாகவே உறுதியாயிற்று. ஆம், ஆதாமின் புதல்வன் தனது சொந்த சகோதரனை கொன்று போட்டான் (ஆதி 4:8). கடவுளின் சட்டத்திற்கு கீழ்ப்படிவது மனிதர்கள் ஒருவரை ஒருவர் புண்படுத்திக்கொள்வதையும், தம்மைத்தாமே காயப்படுத்திக்கொள்வதையும் தடுக்கும் (யோபு 35:5-8, மத்தேயு 22:39). இன்று கீழ்ப்படியாமையின் விளைவுகளைக் காண தொலைக்காட்சிச் செய்திகளைக் கண்டாலே போதும்.
- “இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும் எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது போலவும் இதுவுமாயிற்று. ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானது.” (ரோமர் 5:12, 18).
ஆம், நாமனைவரும் பாவத்தையும், மரணத்தையும் ஆதாமிடமிருந்து வம்சாவழியாகச் சுதந்தரித்துள்ளோம். பாவமும், மரணமும் நமது மரபணுக்களிலேயே உள்ளன. பூமியில் பிறக்கும் எந்தவொரு குழந்தையும் மரண தண்டனைக்குட்பட்டிருக்கிறது. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறோம் (1கொரி 15:22).
5) ஒருவன் மரிக்கும்போது என்ன நேருகிறது?
மரணம் ஒரு உணர்விலா நித்திரை நிலை என்பதாக வேதாகமம் விளக்குகிறது. மரிப்பவன், நித்திரையில் ஆழ்கிறான். ஆபிரகாம் மரித்தபோது அவனது “ ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்” (ஆதி 25:8). ஆபிரகாமின் ஜனத்தார் விசுவாசிகள் அல்ல; ஆனால் விசுவாசியான ஆபிரகாம் அவர்களோடேதான் நித்திரையில் ஆழ்ந்தான். தாவீதரசனும் அவனது பிதாக்களோடே நித்திரையடைந்ததாக வேதாகமம் கூறுகிறது (1இராஜாக்கள் 2:10). சாலொமோனும் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தான் (1இராஜா 11:43). ஸ்தேவான் கொல்லப்பட்டபோது அவனும் நித்திரை அடைந்தானென்று வேதாகமம் கூறுகிறது (அப் 7:60). வேதாகமம் முழுவதிலும் மரணம் என்பது நித்திரைக்குள் பிரவேசிப்பதாகவே சொல்லப்பட்டுள்ளது - 1இராஜா 14:31, 1தெச 4:14, 1கொரி 15:6, மேலும் பல.
6) மரணத்தைப்பற்றி இயேசு என்ன சொன்னார்?
மரித்த லாசருவைப் பற்றி “நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான்” (யோவான்11:11) என்று இயேசு குறிப்பிட்டார். மரண நித்திரையிலிருந்து லாசருவை இயேசு எழுப்பியபோது “மரித்தவன் வெளியே வந்தான்” (யோவான் 11:44) என்று வேதாகமம் கூறுகிறது. நரகத்திலிருந்தோ அல்லது மோட்சத்திலிருந்தோ லாசரு திரும்பி வந்தான் என்று சொல்லவில்லை. மரண நித்திரையிலிருந்தவன் விழித்தெழுந்து வந்தான் என்றே கூறுகிறது.
7) மரணமென்பது எவ்வகையானதொரு நித்திரை?
மரணம் ஒரு “உணர்விலா நித்திரை நிலை” என்று வேதாகமம் தெளிவுபடுத்துகிறது. மரித்தோருக்கு எதைக் குறித்த விழிப்புணர்வும் இல்லையென வேதாகமம் கூறுகிறது.
“மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்” (பிரசங்கி 9:5). மரிக்கும்போது மனிதனின் “சுவாசம் பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்” (சங்கீதம் 146:4) என்று வேதாகமத்திலே வாசிக்கிறோம். மரித்தோருக்கு சுயநினைவோ, சிந்தனைகளோ இருப்பதில்லை. மனமும், உடலும் அழிந்துபோகின்றன. மரித்தோர் உயிர் வாழ்வதை நிறுத்திவிடுகிறார்கள்.
8) மரண நிலை பற்றி வேதாகமம் கூறுவதை அறிவியல் ஏற்றுக்கொள்கிறதா ?
“வாழும் ஒரு உயிரியை நிலைத்து நீடிக்க வைக்கும் உயிர்ச்செயல்பாடுகள் யாவும் நிரந்தரமாக நின்றுபோவதே மரணம்” -- விக்கிபீடியா.
“இன்றியமையாச் செயல்பாடுகள் யாவும் நின்று போவது மரணம்: வாழ்வின் முடிவு அது” --- வெப்ஸ்டர்ஸ் அகராதி.
ஆத்துமாவுக்கும், ஆவிக்கும் என்ன நேருகின்றது?
9) உயிர் வாழ்வின் முடிவு மரணமெனில், ஆத்துமாவுக்கு என்ன நேருகிறது?
ஆத்துமாவுக்கு அழிவில்லை, அது தொடர்ந்து ஏதாவது ஒரு வடிவில் நீடிக்கும் என்பது கிறிஸ்தவ சமயம் தோன்றுவதற்குப் பல காலம் முன்னரே இருந்து வந்த பொதுவானதொரு புறமத நம்பிக்கையாகும். கிரேக்க ரோமானிய தத்துவ ஞானிகள் ஆத்துமாவைக் குறித்து ஊகமாகச் சிந்தித்தனர். பண்டைய பாபிலோனியர், எகிப்தியர், பெர்சியர், சீனர் ஆகியோரிடம்கூட அதுபோன்ற சிந்தனை இருந்தது. ஆனால் யூதர்களுக்கு ஆத்துமாவைக்குறித்த அத்ததையதொரு கருத்தாக்கத்தில் நம்பிக்கையில்லை. ஏனெனில், வேதாகமம் அதை ஆதரிக்கவில்லை. வேதாகமத்தில் “அழிவிலா ஆத்துமா” என்று எதுவுமில்லை.
10) வேதாகமத்தின்படி ஆத்துமா என்பது என்ன?
“தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனிதன் ஜீவாத்துமாவானான்” (ஆதியாகமம் 2:7).
ஆதாம் ஒரு ஜீவாத்துமாவானான் என்று வேதாகமம் கூறுகிறது. ஒரு ஆத்துமாவை உடையவனாக ஆதாம் இருக்கவில்லை; அவனே அந்த ஆத்துமாவாக இருந்தான். ஆத்துமா என்று எந்தவொரு பொருளும் மனிதர்களுக்குள்ளே வாழ்ந்திருக்கவில்லை. பரிசுத்த வேதாகமத்தின் கூற்றுப்படி மனிதர்கள்தாம் ஆத்துமாக்கள், பிரபல பேரிடர் சமிக்ஞை “எமது ஆத்துமாவைக் காப்பாற்றுங்கள் ” (Save Our Souls - SOS) என்பதற்கு எம்மைக் காப்பாற்றுங்கள் என்றே பொருள். “எமக்குள்ளே வாழும் ஏதோ ஒன்றினைக் காப்பாற்றுங்கள்” என்று அர்த்தமல்ல.
11) ஆத்துமா மரித்துப் போகக்கூடுமா?
“பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்” (எசேக்கியல் 18:20).
பாவம் செய்கிற ஆத்துமா சாகவே சாகும் என்றே வேதாகமம் உறுதி செய்கிறது. நாம் முன்னர் கண்டதுபோல, ஆதாமாகிய ஆத்துமாவே பாவம் செய்தான். ஆகவே, மரித்துப்போனான். அதாவது, ஆதாம் என்றழைக்கப்பட்ட ஆத்துமா மரித்தது. ஆதாமைப்போல, நாமும் வாழும் ஆத்துமாக்களே. நாமும் மரிப்போம்.
12) மரணத்திற்குப்பின் ‘ஆவி’ வாழுமா?
“மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் திரும்புகிறது” (பிரசங்கி 12:7).
இந்த வேதாகமப் பகுதியில் காணும் ‘ஆவி ’ என்னும் சொல்லைத் தவறாகப் புரிந்து கொள்வதால், இதில் கூறப்பட்டுள்ள எளிய சத்தியம் குழப்பத்திற்கு ஆளாகிறது. மனிதனுக்குள்ளே வாழ்கிற ஒரு ஆவியைப் பற்றி இங்கே குறிப்பிடுவதாக மக்கள் எண்ணுகின்றனர். ஆனால் உண்மையில் அது வாழ்வின் சக்தியான ‘சுவாசம்‘ (மூச்சு) என்பதைக் குறிக்கிற எபிரேயச் சொல்லின் மொழியாக்கமே; தனி நபரைக் குறிக்கிற சொல் அல்ல. நவீன மொழியாக்கங்கள் சற்று நல்லவிதமாக இப்பதத்தை மொழிபெயர்த்துள்ளன:
“மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி சுவாசமானது தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் திரும்புகிறது” (பிரசங்கி 12:7).
இது முற்றிலும் அர்த்தமுள்ளதாகத் தோன்றுகிறது. ஆதியாகமத்திற்கும் இசைவானதாக உள்ளது - “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்” (ஆதி 2:7).
ஜாண் கோல்டிங்கே (டேவிட் ஆலன் உறப்பர்டு, பழைய ஏற்பாடு பேராசிரியர்) எழுதுகிறார்: “மனித ஜீவியின் வாழ்வு நேரடியாகக் கடவுளிடமிருந்து வந்தது; ஒருவர் மரிக்கையில், சுவாசம் (சங்கீதம் 104:29) அல்லது வாழ்வு (ஆதி 35:18) காணாமற் போகிறது , கடவுளிடம் திரும்புகிறது என்பதும் தெளிவாகத் தெரிகிறது.”
வேதாகமம் இதை உறுதி செய்கிறது: “நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள அவைகள் மாண்டு தங்கள் மண்ணுக்குத் திரும்பும்” (சங்கீதம்104: 29).
ஆகவே, மரிக்கிறபோது நாம் (நமது) சுவாசத்தை விட்டுவிட்டு மண்ணுக்குத் திரும்புகிறோம். ஆதியாகமத்தில் மனிதன் மீது விழுந்த சாபத்துடன் இது ஒத்துப்போகிறது. “நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்” (ஆதியாகமம் 3:19).
13) அழிவில்லா ஆத்துமாவைப்பற்றி வேதாகமம் ஏதும் கூறாதபோது, இன்றைய கிறிஸ்தவர்கள் எங்ஙனம் அதன் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்?
ஏவாளை ஏமாற்ற சாத்தான் பயன்படுத்திய முதல் பொய்யான “நீங்கள் சாகவே சாவதில்லை” (ஆதியாகமம் 3:4) என்பது இன்னமும் தொடர்கிறது. பல்வேறு வடிவங்களில் அது நீடிக்கிறது! அதாவது, மனிதர்கள் மரிக்கும்போது உண்மையில் அவர்கள் சாவதில்லை என்றும், உடல்தான் மரிக்கிறதே ஒழிய அவர்கள் ஆத்துமா அல்லது ஆவி என்றென்றும் வாழுமென்றும், அது மோட்சத்திற்கோ அல்லது நரகத்திற்கோ செல்லுமென்றும் சாத்தான் ஏமாற்றுகிறான். ஆனால், நாம் மேலே கண்டறிந்தபடி வேதாகமம் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதுவரை நாம் கற்றுக்கொண்டதென்ன?
‘ஆதாமிலே, அனைவரும் மரிக்கிறார்கள்‘.
ஆம், ஆதாம் வீழ்ந்ததால், (ஆதாமின் இனமான) நாம் அனைவரும் மரிக்கிறோம். நமது ஆத்துமாக்கள் மரிக்கின்றன. நமது சுவாசம் (ஆவி) நம்மைவிட்டுப் போய்விடுகிறது; நாம் மண்ணுக்குத் திரும்புகிறோம். நாம் உணர்விழந்துவிடுகிறோம்; நமது யோசனைகள் அழிந்துபோகின்றன; நாம் இல்லாது போய்விடுகிறோம். பரவலாக மக்களிடம் காணப்படும் நம்பிக்கையைப் போல, நரகத்திற்கோ அல்லது மோட்சத்திற்கோ நாம் போவதில்லை.
மரணத்திற்குப் பின்னான வாழ்வில் மனுக்குலத்திற்கு நிச்சயமாகவே நம்பிக்கை காணப்படுகிறது. என்றாலும், உடலே மரிக்கிறது, மனிதர்கள் உண்மையில் மரிப்பதில்லை என்ற தவறான கருத்தின் அடிப்படையில் அமைந்ததல்ல அந்த நம்பிக்கை. மரணம் மெய்யானதே. மரித்தவர்களைக் கடவுள் மீண்டும் உயிர்பெறச் செய்வார் என்று கிறிஸ்துவில் வெளிப்பட்ட நற்செய்தியின் அடிப்படையில்தான் மனுக்குலத்தின் நம்பிக்கை அமைந்துள்ளது.
யோபு “மரிக்கும்போது, மனிதன் உண்மையிலேயே மரிக்கிறானா?” என்று கேட்கவில்லை.
அவர் கேட்டது: “மனுஷன் செத்தபின் பிழைப்பானோ? ” (யோபு 14:14).
சரியான கேள்வியைக் கேட்க அறிந்திருந்தார் என்று சொல்ல வேண்டும். கடவுள் மீண்டும் உயிர்ப்பித்தாலொழிய மரிக்கும் மனிதர்கள் என்றென்றும் இல்லாது போனவர்களே என்பது யோபுவுக்குத் தெரியும்.