மனந்திரும்புதல் - எதிலிருந்து?
- விவரங்கள்
- பிரிவு: திருச்சபை: பரம அழைப்பு
கருப்பொருள் வசனம்: 'நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?' (ரோமர் 7:24)
1) தந்தை ஆதாமிற்கு (நமக்கும் கூட) ஏதேன் தோட்டத்தில் என்ன நடந்தது?
சுயாதீனம் கொண்ட ஜீவியாக தோஷமின்றி ஆதாம் படைக்கப்பட்டான் (சங்கீதம் 115:3, ஆதியாகமம் 1:27). அவன் சிருஷ்டிகரின் பார்வையில் உயிர் வாழ்வதற்கு நியாயப்பட்டவனாக (நீதிமானாக) இருந்தான் (ஆதி 1:28). அவன் தொடர்ந்து கீழ்ப்படிந்திருந்தால் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருந்திருப்பான். ஆனால் கடவுளுக்குக் கீழ்ப்படிய தவறினான் (பாவம் செய்தான்), அதனால் உயிர்வாழ்தற்குரிய நியாயத்தை இழந்து போனான் (ஆதி 2:16-17; 3:1-6).
ஆதாமின் சந்ததியாராக, நாம் எல்லோரும் அவனது மரபணு மூலம் பாவத்தைச் சுதந்தரித்துக் கொள்வதால், அவனுடன் சேர்ந்து நியாயமற்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் (ரோமர் 5:12,18, சங்கீதம் 51:5).
2) நியாயமற்ற நிலை என்றால் என்ன அர்த்தம்?
மரணம்! உயிர்வாழ நியாயம்/உரிமை இல்லை. உண்மையில், பாவத்தின் சம்பளம் மரணம் (ரோமர் 6:23, 1கொரி 15:22). நாம் மீண்டும் உயிரோடு மீட்கப்பட வேண்டுமென்றால், நம் தற்போதைய நியாயமில்லாத வீழ்ந்துபோன நிலையிலிருந்து எடுக்கப்பட்டு திரும்பவும் நியாயப்படுத்தப்பட வேண்டும்.
நியாயப்பிரமாணத்தின் கிரியைகள் = பாவத்திற்கு எதிரான கிரியைகள்
3) பழைய ஏற்பாட்டு காலத்தில், தேவன் இஸ்ரவேலருக்கு நியாயப்பிரமாண உடன்படிக்கை என்ற விதிமுறைகளின் தொகுப்பை கொடுத்தார். அந்த உடன்படிக்கையின் ஒப்பந்தம்தான் (deal) என்ன?
பவுல் அந்த ஒப்பந்தத்தை விளக்குகிறார் - "நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியதல்ல; அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான்." கலாத்தியர் 3:12.
ஆம், ஒரு நபர் நியாயப்பிரமாண உடன்படிக்கையை முழுமையாக பின்பற்றியிருந்தால், அவர் என்றென்றும் சாகாமல் பிழைத்திருந்திருப்பார்.
நியாயப்பிரமாணத்திற்கு கீழ்படிவது, மனிதனை வீழ்ந்த நிலையிலிருந்து நியாயப்படுத்தப்பட்ட நிலைக்கு உயர்த்தியிருக்கும்.
4) நியாயப்பிரமாணம் என்பது என்ன?
நியாயப்பிரமாணம் என்பது யூத பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகள் என பலர் நினைக்கிறார்கள். ஆனால் பவுல் என்ன சொல்கிறார் என்பதை நாம் பார்க்கலாம் - "ஆகையால் என்ன சொல்லுவோம்? பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே." ரோமர் 7:7.
ஆம், நியாயப்பிரமாணம்தான் மனுக்குலத்திற்கு பாவம் என்றால் என்னவென்று வரையறுத்து விளக்கியது என்று பவுல் கூறுகிறார்.
5) இப்படியிருக்க, பாவம் என்றால் என்ன?
நியாயப்பிரமாணம் தவறு என்றுரைக்கும் எல்லா விசயங்களுமேதான் பாவம். நியாயப்பிரமாணத்திலுள்ள கட்டளைகளில் ஒன்றை மீறுவதே அடிப்படையில் பாவம்.
பரவலாக இருக்கும் கருத்துக்கு மாறாக, நியாயப்பிரமாணத்தில் பத்து கட்டளைகள் மட்டும் இல்லை. அது உண்மையில் 613 கட்டளைகளை கொண்டுள்ளது. எனவே பாவம் என்பது கொலை, விபச்சாரம் போன்றவை மட்டும் அல்ல. வேதகாமப்படி, நியாயப்பிரமாணத்தின் 613 கட்டளைகளில் எதனை உடைத்தாலும் பாவம்தான்.
6) ஆனபடியால், நியாயப்பிரமாணத்தின் கிரியைகள் என்றால் அடிப்படையில் என்ன?
பாவத்திற்கு எதிரான வேலைகள்தான் நியாயப்பிரமாணத்தின் கிரியைகள். ஒருவன் 613 கட்டளைகள் எல்லாவற்றையும் பின்பற்றியிருந்தால், அவன் பாவமற்றவனாகி, நியாயப்படுத்தப்படுவான்.
இவ்விதமாக, பாவத்திற்கு எதிராகப் போராடும் செயல்களை செய்வதன் மூலம் தங்களை நியாயப்படுத்திக்கொள்ள மனுக்குலத்திற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது.
நமக்கென சுயநீதி இல்லாமை
7) பாவத்திற்கு எதிராக போராடி (அதாவது நியாயப்பிரமாணத்தை கடைப்பிடித்து) நாம் நியாயப்பட்ட நீதியுள்ள நிலையை அடைய முடியுமா?
பவுல் பதிலளிக்கிறார்: 'யூதர் கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்களென்பதை முன்பு திருஷ்டாந்தப்படுத்தினோமே..
இப்படியிருக்க, எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியையினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை; மாறாக, நம் பாவத்தை உணர்கிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறது.' ரோமர் 3: 9,20.
... இது அதிர்ச்சியூட்டும் விசயம்! ஆம், பாவத்திற்கு எதிராக வேலைசெய்து நீதியுள்ளவனாக மாறுவது மனித சக்திக்கு சாத்தியமற்றது என்று பவுல் உறுதியாக அறிவிக்கிறார்.
ஆனால் ... ஏன் அப்படி?
அவர் ஏன் என விளக்குகிறார் - 'நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது, நானோ பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டு, மாம்சத்துக்குரியவனாயிருக்கிறேன். எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன். இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாயிருக்க, நியாயப்பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்ளுகிறேனே. ஆதலால் நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்;
நன்மைசெய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன்.
உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன். ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது. நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?' ரோமர் 7:14-24.
- உண்மையில், இதுதான் விழுந்துபோன மனுக்குலத்தின் நிலை. நாம் வீழ்ந்துபோன ஆதாமின் மாம்சத்தில் இருக்கிறோம். கர்த்தர், "மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது," என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார். ஆதியாகமம் 8:21-22.
- ஆகையால் நாம் சுயமாக நீதியை அடைந்துவிட முடியாது.
- நாம் சரியானதை செய்ய விரும்புகிறோம், ஆனால் நம்முடைய வீழ்ந்துபோன மாம்சம், நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படியாதபடி நம்மை தடுக்கிறது. எனவே, நம்மில் யாராலும் முழு நியாயப்பிரமாணத்தையும் (அதன் 613 கட்டளைகளையும்) கடைப்பிடிக்க முடியாது. அதாவது, நம்மில் யாராலும் பாவமில்லாதவராக மாற இயலாது.
8) நாம் ஒருவேளை 613 கட்டளைகளில் ஒரே ஒன்றில் மட்டும் தவறினால் (612 கடைப்பிடித்தேன்!) - நாம் நியாயப்படுத்தப்படுவோமா? நீதிமான் என்று கருதப்படுவோமா?
யாக்கோபு விளக்குகிறார் - 'எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.
ஏனென்றால், விபசாரஞ்செய்யாதிருப்பாயாக என்று சொன்னவர் கொலைசெய்யாதிருப்பாயாக என்றும் சொன்னார்; ஆதலால், நீ விபசாரஞ்செய்யாமலிருந்தும் கொலைசெய்தாயானால் நியாயப்பிரமாணத்தை மீறினவனாவாய்.' (யாக்கோபு 2:10-11).
ஆம், நாம் 613 கட்டளைகளில் 612-ஐ கடைப்பிடித்திருந்தாலும், ஒரே ஒரு கட்டளையை உடைத்துவிட்டால்கூட, முழு நியாயப்பிரமாணத்தையும் முறித்த குற்றவாளியாக கருதப்படுவோம்.
நியாயப்பிரமாணத்தில் உள்ள கட்டளைகளின் சில உதாரணங்களை நாம் பார்க்கலாம்.
"என் கட்டளைகளைக் கைக்கொள்வீர்களாக; உன் மிருக ஜீவன்களை வேறுஜாதியோடே பொலியவிடாயாக; உன் வயலிலே வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து விதையாயாக;
இரண்டுவகை நூல் கலந்த வஸ்திரத்தை உடுத்தாதிருப்பாயாக." லேவியராகமம் 19:19.
ஆம், பாலியஸ்டர் காட்டன் (polyester cotton) சட்டை அணிந்தால் பாவம்!
மட்டுமின்றி ஒரே ஒரு கட்டளையை உடைத்துவிட்டாலும், முழு நியாயப்பிரமாணத்தையும் உடைத்ததற்கு சமானம். அத்தகைய நபர் நியாயமற்ற/நீதியற்ற நிலையில் நிலைத்திருப்பார்.
9) அப்படியானால், பவுலும் யாக்கோபும் கற்றுக்கொடுக்கும் கூற்றுப்படி, நியாயப்பிரமாண உடன்படிக்கையின் (பழைய ஏற்பாட்டின்) காலம் நமக்கு என்ன கற்பித்தது?
வீழ்ந்துபோன மாம்சத்தில் இருக்கும் காரணத்தால், நாம் நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிப்பது இயலாத காரியம் என்பதை, அதாவது நாம் பாவத்திற்கு எதிராக போராடி ஜெயித்து நம்மை நியாயப்படுத்திக்கொள்ள முடியாது என்பதைத்தான் நமக்கு பழைய ஏற்பாட்டின் காலம் காட்டினது.
மனிதர்கள் தங்களை நியாயப்படுத்திக்கொள்ள எடுக்கும் அனைத்து முயற்சிகளும் பயனற்றவையாகவே இருக்கும் என்று சுட்டிக்காட்டவே நியாயப்பிரமாணம் வழங்கப்பட்டது.
'நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும் சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்.' ரோமர் 3:19.
பவுல் நம்முடைய நிலையை சுருக்கமாக கூறுகிறார் - "நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?" ரோமர் 7:24. ஆம், நம் எல்லோரையும் மீட்க நமக்கு ஒரு இரட்சகன் வரவேண்டியதன் அவசியத்தை நியாயப்பிரமாணம் வெளிப்படுத்தியது.
கடவுள் நியாயப்பிரமாணத்தினை கொடாமல், நேரடியாக ஒரு இரட்சகரை அனுப்பியிருந்தால் என்ன நடந்திருக்கும் என கற்பனை செய்து பாருங்கள் ... நம்மில் சிலர், "எனக்கெதற்கு ஒரு மீட்பர்? நானே அதைச் செய்திருக்க முடியும்! என்னை நானே நியாயப்படுத்தியிருக்க முடியும்!" என்று சொல்லியிருக்கலாம். ஆனால், எந்த மனிதனாலும் தன்னை நியாயப்படுத்த முடியாது என்பதை நியாயப்பிரமாணம் திட்டவட்டமாக நிரூபித்ததால் இப்போது யாரும் அவ்வாறு கேள்வி எழுப்ப முடியாது. ஒரு இரட்சகரின் அவசியம் நியாயப்பிரமாணத்தால் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
10) நாம் என்ன செய்ய வேண்டும்?
மனந்திரும்புதல் (கிரேக்க மெட்டனோயியா metanoia: மனதை மாற்றுவது) தான் நாம் முதலில் செய்யவேண்டிய விசயம். நாம் பிறக்கும்போதே பாவியாக பிறந்தவர் என்பதை ஒப்புக்கொண்டு, நம்முடைய சொந்த முயற்சிகளால் நம்மை நியாயப்படுத்தும் முயற்சிகளில் வைக்கும் நம்பிக்கையை மாற்றி அதற்கு மாறாக ஒரு இரட்சகரை நோக்கி நம் "மனதைத் திருப்ப" வேண்டும்.
நாம் நோக்கி திரும்ப வேண்டிய இந்த இரட்சகர் யார்? பவுல் பதிலளிக்கிறார்: 'நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் என்னைக் காப்பாற்றும் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.' ரோமர் 7:25. ஆம், நம் மீட்பிற்காக தேவன் அனுப்பிய கிறிஸ்து இயேசுவை நோக்கி நாம் திரும்ப வேண்டும்.