வினோதமான வழக்குகள் - பதினாலுத்துவம், நான் இருக்கிறேன்..
- விவரங்கள்
- பிரிவு: எவரை வணங்குகிறோம்?
1) நாம் சர்வ வல்ல தேவன் (கடவுள்) பற்றியும், இயேசு கிறிஸ்து பற்றியும் படித்தோம், மேலும் சரிசமானத்துவம் மற்றும் அநாதித்தன்மை குறித்த கேள்விகளையும் ஆராய்ந்தோம். பரிசுத்த ஆவி பற்றியும் கற்றுக்கொண்டோம். யோவான் 1:1-ன் நேரடியான முரணற்ற அர்த்தத்தையும் நாம் கண்டோம். இப்போது திரித்துவவாதிகளால் மேற்கோள் காட்டப்படும் வேறு சில வசனங்களை படிப்போம். உதாரணமாக, யோவான் 14:9 மற்றும் 10:30 - இந்த வசனங்களின் அர்த்தம் என்ன?
-
யோவான் 14:9 - 'என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்'.
சில நேரங்களில் இது இயேசுதான் பிதா என்று சொல்ல முயலும் (திரித்துவ கோட்பாட்டிலிருந்துகூட மாறுபடும்) ஒரு அதிதீவிர தத்துவத்தை ஆதரிக்க பயன்படுகிறது. ஆனால் இந்த கூற்றின் மூலம் இயேசு என்னதான் சொல்ல முயன்றார்? உண்மையில் அவர் இதை சொன்னபிறகு, தன்னில் பிதாவை எப்படி மக்கள் காண்கின்றனர் என்பதை அவர் தொடர்ந்து விளக்குகிறார் - இயேசு அவர்களிடம் பேசிய பிதாவின் வசனங்களின் மூலமும், பிதாவின் வல்லமையினால் செய்த கிரியைகளின் மூலமுமே தன்னில் அவர்கள் பிதாவைக் காண்பதாக எடுத்துரைக்கிறார் (14:10-11). ஆம், மக்கள் அவரது செய்தியைக் கேட்பதினாலும், பிதாவின் வல்லமையால் அவர் செய்யும் கிரியைகளைப் பார்ப்பதினாலும், அவரில் பிதாவைக் கண்டார்கள்.
-
யோவான் 10:30 - 'நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.'
இயேசு இதைச் சொன்னபோது, அதைக் கேட்ட சில யூதர்கள் அவர் தன்னை கடவுளென கூறுகிறார் என நினைத்தனர். ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால், இயேசு சற்றுமுன் தான், 'அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்', என சொல்லியிருந்தார் (10:29).
அவர்களுடைய குற்றச்சாட்டுகளுக்குப்பின், அவர் சங்கீதம் 82:6-ஐ அவர்களுக்கு நினைவூட்டி, "'தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன்,' என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க, பிதாவினால் உலகத்தில் அனுப்பப்பட்டு இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?'' என்று கேட்கிறார் (10:34-36).
யாரேனும் இயேசுவை கடவுள் என்று சொல்ல யோவான் 10:30-ஐ பயன்படுத்த முயன்றால், அவர்கள் அன்று யூதர்கள் செய்த அதே தவறை செய்கிறார்கள். தான் கடவுளுடைய மகன் என்றும், அவர்கள்கூட கடவுளின் குமாரர்களாய் கடவுளோடு ஒன்றாயிருக்கும் தேவர்கள் (வல்லமை வாய்ந்தவர்கள்) ஆகமுடியும் என்றும் இயேசு கூறிய விளக்கத்தை புறக்கணிக்கிறார்கள்.
இயேசு தான் கடவுளில் ஒன்றாயிருப்பதை, தம்மைப் போலவே தன் சீடர்களும் கடவுளில் ஒன்றாயிருக்க இருக்க வேண்டுமென்று ஜெபிக்கின்ற இடத்திலும் குறிப்பிடுகிறார். அப்படியெனில் பன்னிரு சீடர்கள் ஒவ்வொருவரும், பிதா, இயேசுவுடன் சேர்த்து ஓர் 'பதினாலுத்துவ தெய்வத்தில்' ஒரு பகுதியாக இருப்பதாக யாரும் கூறமுடியுமா, என்ன?
"பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு.. அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்."(யோவான் 17:11,21).
ஆகவே, 'ஒன்றாயிருப்பது' என்பது ஒரே விதமான சிந்தனை, நோக்கம் மற்றும் கிரியைகளுடன் இருப்பது தான் என்பது தெளிவாகிறது.
2) மத்தேயு 28:19 வசனம் 'பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம்' கொடுப்பதைப் பற்றி பேசுகிறதே. அதன் அர்த்தம் என்ன?
எல்லோருக்கும் ஒரே நாமம் எனவும், அதனால் எல்லாருமே ஒருவர் எனவும் சில திரித்துவவாதிகள் வாதிடுவது உண்டு. ஆனால் அவ்வாதத்தில் ஒரு பிரச்சனை என்னவென்றால், 'மூன்று நபர்களும் குழப்பப்படக்கூடாது' என்கிற திரித்துவக் கோட்பாட்டிற்கே அது முரண்படுகிறது. மூன்று பேரையும் ஒரே பெயரில் அழைப்பது கண்டிப்பாக மூன்று நபர்களையும் குழப்புவதே ஆகும்.
இதற்கு ஒரு மேலான விளக்கம் உள்ளது. யூத கலாச்சாரம் (மற்றும் பிற பழங்கால கலாச்சாரங்கள்) பற்றி படிக்கும் எவரும், பழங்காலங்களில் 'அவர் நாமத்தில்' என்ற சொற்றொடர் 'அவரது அதிகாரத்தில்' என்ற பொருள்படும் என அறிவார்கள். உதாரணத்திற்கு, 'இராஜ இராஜ சோழன் பெயரில் ஆணை' என்றால் 'இராஜ இராஜ சோழனுடைய அதிகாரத்தால் ஆணை' என்றுதான் பொருள்.
அதே பொருள்தான் மத்தேயு 28:19 வசனத்திலும்! - 'பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் அதிகாரத்தால் ஞானஸ்நானம்' என்பதுதான் அதன் சரியான பொருள்.
3) 'ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் (I AM)' என்று யோவான் 8:58-இல் இயேசு கூறுகிறார். அதன் அர்த்தம் என்ன?
சிலர் இயேசு 'நான் இருக்கிறேன்' என்ற நிகழ்கால கூற்றை பயன்படுத்துவது யாத்திராகமம் 3:14-இல் காணப்படும் கடவுளின் பெயரை குறிப்பிடுவதாகவும், அதனால்தான் சில யூதர்கள் அவரைக் கல்லெறிய முயன்றனர் எனவும் வாதிடுகின்றனர் (8:59).
ஆனால் கிரேக்கத்தில் உள்ள யோவான் 8:58 வசனத்தையும், எபிரெய மொழியில் உள்ள யாத்திராகமம் 3:14 வசனத்தையும் நாம் படிக்கும்போது இரண்டிற்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை என்று நாம் காண்கிறோம்.
- எபிரேய அறிஞர்கள் யாத்திராகமம் 3:14 வசனத்தை சரியாக மொழிபெயர்க்க வேண்டுமெனில் 'நான் இருப்பவராகவே இருப்பேன் (I WILL BE WHAT I WILL BE)' என்றுதான் பதியவேண்டும் என்கின்றனர் (பார்க்கவும் NIV வேதாகம பதிப்பில் அடிக்குறிப்பு).
- மேலும் யோவான் 8:58 வசனத்தில் ஒரு சிறப்பு கிரேக்க நிகழ்கால வினைவடிவம் (special Greek present tense) பயன்படுத்தப்பட்டு உள்ளது: "'நான் இருந்திருக்கிறேன் (I HAVE BEEN) - கடந்தகால செயல் இன்னும் தற்போதும் தொடரும்போது பயன்படுத்தப்படும் வினைவடிவம், நிகழ்காலத்திற்கு சொல்லழுத்தம் கொண்டது ... இந்த பயன்பாட்டை வழக்கமாக நிகழ்கால வினைமுற்று வாக்கியமாக (present perfect tense) மொழிபெயர்க்க வேண்டும்." (ஆதாரம்: வால்லஸ், 'அடிப்படைகளுக்கு மேலான கிரேக்க இலக்கணம்' Greek Grammar Beyond the Basics).
எனவே, யோவான் 8:58-இன் சரியான வினைவடிவம், 'ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருந்திருக்கிறேன்' ஆகும். லூக்கா 13:7, 15:29, 1யோவான் 3:8, அப்போஸ்தலர் 27:33 போன்ற வசனங்களில் அத்தகைய வினைவடிவ மொழிபெயர்ப்பு சரியாக செய்யப்பட்டிருப்பதை காணலாம். இயேசு ஆபிரகாமுக்கு முன்னமே தான் இருந்தேன் என்றும், அதனால் தான் அவனை கண்டேன் என்பதையும்தான் விளக்குகிறார். (8:57).
சில யூதர்கள் அவரைக் கல்லெறிய முயன்றது ஒரு திடீர் எதிர்விளைவு அல்ல, அவர்கள் ஏற்கனவே அவரைக் கொல்ல வகைதேடுவதாக இயேசு குறிப்பிடுகிறார் (8:37,40).
4) கிங் ஜேம்ஸ் ஆங்கில பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள Godhead வார்த்தையின் சரியான (அப்போஸ்தலர் 17:29, ரோமர் 1:20, கொலோசெயர் 2:9) அர்த்தம் என்ன?
இன்று இந்த கிங் ஜேம்ஸ் வார்த்தை பல-தலை கடவுள் படங்களை சிலர் மனதில் வரைகிறது. ஆனால் 'head ' என்கிற மத்திய ஆங்கில பின்னொட்டு (Middle English suffix) என்பது 'hood' (தன்மை) என்ற அர்த்தத்தில் இடைக்காலத்தில் (Middle Ages) பயன்படுத்தப்பட்டது (எடுத்துக்காட்டு: maidenhead). அதனால் அதன் சரியான ஆங்கில வார்த்தை Godhood தான்.
அதன் கிரேக்க மூல வார்த்தையும் தெய்வம்/தெய்வத்தன்மை என்றுதான் அர்த்தப்படுத்துகிறது.
எனவே கண்ணியமான ஆங்கில மொழிபெயர்ப்புகளில் Godhead வார்த்தை காணப்படவில்லை (NIV / NASB போன்றவை). பெரும்பாலான தமிழ் வேதாகமங்களும் இவ்வார்த்தையை ‘தெய்வம்’ அல்லது ‘தெய்வத்தன்மை’ என சரியாகவே மொழிபெயர்க்கின்றன.