யோவான் 1:1 - வார்த்தையும் தேவனும்

 கருப்பொருள் வசனம் – ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனுடன் இருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது (யோவான் 1:1)

1) நாம் சர்வ வல்ல தேவன் (கடவுள்) பற்றியும், இயேசு கிறிஸ்து பற்றியும் படித்தோம், மேலும் சரிசமானத்துவம் மற்றும் அநாதித்தன்மை குறித்த கேள்விகளையும் ஆராய்ந்தோம். பரிசுத்த ஆவி பற்றியும் கற்றுக்கொண்டோம். இப்போது பொதுவாக திரித்துத்தை ஆதரிப்பதற்கு மேற்கோள் காட்டப்படும் சில வசனங்களை நாம் பார்க்கலாம். திரித்துவ தெய்வத்தை பிரசங்கிப்பவர்கள் முன்பெல்லாம் பெரும்பாலும் 1யோவான் 5:7-8-ல் ஒரு பகுதியை மேற்கோள் காட்டுவதுண்டு - 'பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; ...இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.' ஆனால் இப்போதெல்லாம் இதனை மேற்கோள் காட்டுவதை திரித்துவ ஆதரவாளர்கள் நிறுத்திவிட்டார்கள். ஏன்?

  • இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் இந்த வசனப்பகுதி மூல (original) கிரேக்க வேதாகமத்தில் இல்லை என்பது இன்று எல்லோர்க்கும் தெரிந்த விசயம். அதனால்தான் அதனை மேற்கோள் காட்டுவதை அவர்கள் நிறுத்திவிட்டார்கள்.
  • யோவான் இறந்து பல நூற்றாண்டுகள் கழித்து ஒரு எழுத்தரால் (scribe) இது போலித்தனமாக சேர்க்கப்பட்டது. ஆங்கிலத்தில் நவீன கண்ணிய மொழிபெயர்ப்புகள் (NIV, NASB, NRSV போன்றவை) அப்பகுதியை சேர்ப்பதில்லை. சில தமிழ் மொழிபெயர்ப்புகள் அப்பகுதியை அடைப்புக்குறிக்குள் போட்டு அதன் அசலற்ற போலித்தன்மையை சுட்டிக்காட்டுகின்றன.
    NIV வேதாகமப்பதிப்பு ஒரு அடிக்குறிப்பைக் கொண்டுள்ளது - "பதினான்காம் நூற்றாண்டிற்கு முன்னர் உள்ள கிரேக்க கையெழுத்துப் பிரதிகளில் இது காணப்படவில்லை".

ஆம், இயேசு பூமியில் வாழ்ந்து 1400 வருடங்களுக்குப் பிறகு, யாரோ ஒருவர் வேதாகமத்தில் திரித்துவ தெய்வத்தை சேர்க்க முயன்றார், ஆனால் பின்னர் பிடிபட்டார்.

2) யோவான் 1:1 வசனத்தை பயன்படுத்தி 'திரித்துவத்தை' நிரூபிக்க முடியுமா?
1யோவான் 5:7-8-இன் போலிப்பகுதி அடையாளம் காட்டப்பட்டு திருத்தப்பட்டது முதல், திரித்துவ ஆதரவாளர்கள் இப்போதெல்லாம் மக்கள் கவனத்தை யோவான் 1:1 பக்கம் திருப்ப முயல்கின்றனர். ஆனால் அதில் ஒரு வெளிப்படையான பிரச்சனை!
யோவான் 1:1 ஒரு திரித்துவ தெய்வத்தை கற்பிக்கவில்லை, ஏனெனில் அது பரிசுத்த ஆவி பற்றி குறிப்பிடவே இல்லை.
இரு நபர்களுடன் மட்டும் ஒரு 'திரித்துவம்' இருக்க முடியுமா?
சாத்தியம் இல்லை.

3) ஆனால் யோவான் 1:1 'வார்த்தை தேவனாயிருந்தது' என்று சொல்கிறது அல்லவா? யோவான் சொல்லவந்த அர்த்தம்தான் என்ன?
கிரேக்கத்தைப் பற்றி சுவாரஸ்யமான ஒரு விசயத்தை நாம் முதலில் படிக்கலாம்.

  • நம்மில் பெரும்பாலானோர்க்கு தெரிந்திருக்கும் தமிழ் மொழியில் சுட்டுவார்த்தைகளே (articles) இல்லை. ஆங்கிலத்தில் உள்ளது போல வரையறு சுட்டுவார்த்தையும் (definite article - 'the') தமிழில் இல்லை, வரையறா சுட்டுவார்த்தைகளும் (indefinite articles - 'a', 'an') தமிழில் இல்லை. வரையறு சுட்டை குறிக்க சூழலையும் (context), வரையறா சுட்டை குறிக்க 'ஒரு' என்ற சொல்லையும் தமிழர்களாகிய நாம் பயன்படுத்துவது வழக்கம்.
  • கிரேக்க மொழியிலோ வரையறு சுட்டுவார்த்தை ('the') உண்டு, ஆனால் வரையறா சுட்டு வார்த்தைகள் ('a', 'an') இல்லை.
    'நான் ஒரு மரம் கண்டேன்' ('I saw a tree') என்று கிரேக்க மொழியில் நீங்கள் சொல்ல விரும்பினால், 'நான் மரம் கண்டேன்' ('I saw tree') என்றுதான் சொல்வீர்கள், 'ஒரு மரம்' என்று கிரேக்கருக்கு அது தானாகப் புரியும். எனவே கிரேக்கத்தை தமிழில் மொழிபெயர்க்கும்பொழுது தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் வழக்கமாக 'ஒரு' என்ற சொல்லை சேர்ப்பர்.

யோவான் 1:1-ன் கிரேக்க மொழிபெயர்ப்பு இவ்வாறு உள்ளது:
   'ஆதியிலே லோகாஸ் இருந்தது, அந்த லோகாஸ் ‘(வரையறு சுட்டு) the தியோஸ்’ உடனிருந்தது, அந்த லோகாஸ் [ஒரு a] தியோஸ் ஆயிருந்தது.'

  • நாம் ‘தியோஸ்’ வார்த்தை பற்றி முன்னர் படித்தோம் - அது வல்லமை வாய்ந்த எந்த ஒரு தேவனையும் குறிக்கக்கூடிய கிரேக்க வார்த்தை. மேலும், 'லோகாஸ்' என்றால் ‘வார்த்தையானவர்' - அதாவது இயேசுவைக் குறிக்கும்.
  • யோவான் வசனத்தின் முதல் பகுதியில் தியோஸ் (தேவன்) வார்த்தையை வரையறு சுட்டுவார்த்தையுடன் (the) பயன்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது –
       'லோகாஸ் ‘the தியோஸ்’ உடனிருந்தது,
    ஆனால் இரண்டாம் பகுதியில் உள்ள தியோஸை வேண்டுமென்றே வரையறு சுட்டு இல்லாமல் வெறுமனே விட்டுவிடுகிறார் –
       'அந்த லோகாஸ் [ஒரு a] தியோஸ் ஆயிருந்தது'.
  • பொதுவாக மூல வேதாகமத்தில் வரையறு சுட்டு ‘the தியோஸ் வார்த்தையானது சர்வ வல்ல தேவனை (கடவுளை) குறிக்கும்.
  • வெறும் [ஒரு a] தியோஸ் வார்த்தை எந்தவொரு வல்லமை வாய்ந்த தேவனையும் குறிக்கக்கூடும்.

அதனால் யோவான் 1:1-ன் சரியான மொழிபெயர்ப்பு கீழ்கண்டவாறு இருக்கிறது:
    'ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை சர்வ வல்ல தேவனுடன் (கடவுளுடன்) இருந்தது, அந்த வார்த்தை ஒரு தேவனாயிருந்தது.'
ஆமாம், வார்த்தை (இயேசு) ஆதியிலே சர்வ வல்ல தேவனுடன் (கடவுளுடன்) இருந்தார், மேலும் அவரே ஒரு தேவனாக - வல்லமை வாய்ந்தவராக இருந்தார். இதை இவ்வாறும் விளக்கலாம்:
     'ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை சர்வவல்லவருடன் இருந்தது; அந்த வார்த்தை வல்லவராயிருந்தது.'
1
யோவான் 1:2 இதை உறுதிப்படுத்துகிறது. யோவான் 1:1 வசனம் எழுதிய அதே யோவான் அதே சமயத்தில் இந்த வசனத்தையும் எழுதினார்
     யோவான் 1:1 வார்த்தை 'தேவனுடன்' இருந்தது என கூறுகிறது.
   1யோவான் 1:2 வார்த்தை 'பிதாவுடன்' இருந்தது என கூறுகிறது.
பிதாவையே யோவான் கடவுள் (சர்வ வல்ல தேவன்) எனக் கருதினார் என்பதை இது தெளிவாக காட்டுகிறது.

4) வேறு எந்த வசனங்களும் இந்த பயன்முறையை மேலும் தெளிவுபடுத்துகின்றனவா?
நீடிக்கும் எந்த சந்தேகத்தையும் அகற்ற உதவுவது போலவே, யோவான் 14:1-இல் இயேசுவே அதே சொல்லியலை பயன்படுத்துகிறார்:
     'வரையறு சுட்டு the தியோஸ் [கடவுள்] இடத்தில் விசுவாசமாயிருங்கள், என் [இயேசு] இடத்திலும் விசுவாசமாயிருங்கள்' என்றார்.
அவர் தன் சீடர்களை வரையறு சுட்டு the தியோஸ் [கடவுள்] இடத்திலும், மற்றும் தன்னிடத்திலும் விசுவாசம் வைக்கும்படி கேட்கிறார். இதிலிருந்தே அவர் சர்வ வல்ல தேவன் (கடவுள்) அல்ல, மாறாக வேறொருவர் என்பது தெளிவாக தெரிகிறது அல்லவா?
மேலும், யோவான் கூறுகிறார்,
     'தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான தேவகுமாரனே அவரை வெளிப்படுத்தினார்.' (யோவான் 1:18)
யோவான் இரண்டு தேவர்களை பற்றி பேசுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது: 1) சர்வவல்ல தேவனான கடவுள் - அதாவது ஒருவனும் காணக்கூடாத பிதா, மற்றும் 2) தேவகுமாரன் - அவரும் வல்லமை வாய்ந்தவர், அதாவது 'ஒரு தேவன்'.
யோவான் 1:1-ஐப் போலவே, யோவான் 1:18 வசனமும் இரண்டு வல்லமை வாய்ந்த நபர்களை வேறுபடுத்துகிறது - சர்வவல்ல தேவன் (கடவுள்) மற்றும் வல்லமை வாய்ந்த குமாரன் (வார்த்தையானவர்).

மேலும் படிக்க: வினோதமான வழக்குகள் - பதினாலுத்துவம், நான் இருக்கிறேன்..