நரகத்தின் கட்டுக்கதை!
- விவரங்கள்
- பிரிவு: நரக புராணம்
கருப்பொருள் வசனம்: "தேவன் அன்பாகவே இருக்கிறார்... பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும்; ஏனெனில் பயமானது வேதனையுள்ளது" (1யோவான் 4:16, 18)
1) தமிழ் பைபிளில் "நரகம்" என மொழிபெயர்க்கப்பட்டுள்ள - "ஷியோல்/ஹேடீஸ்", "கெஹன்னா", "டார்டரூ" - என்ற பல்வேறு வார்த்தைகளின் மெய்யான அர்த்தத்தை ஆராய்ந்தோம். கிறிஸ்தவத்திற்குள் நரக அக்கினியும் நித்திய வேதனையும் பற்றின நம்பிக்கைகள் எவ்வாறு ஊடுருவின என்ற வரலாற்றையும் பார்த்தோம். ஆதாமிற்காக இயேசு கொடுத்த மீட்பின் கிரயம் பற்றியும், பூமியையும் மனுக்குலத்தையும் மறுசீரமைப்பு செய்து புதுப்பிக்க வரவிருக்கிற இயேசுவின் இராஜ்யத்தைக் குறித்தும் திருமறை சொல்வதென்ன என்பதைக் கண்டறிந்தோம். ஆனாலும் சிலர், "நித்திய நரக வேதனை என்பது பைபிளில் இல்லாமல் இருக்கலாம்; எனினும் உலக மக்களை தேவனுக்கு கீழ்ப்படிய வைப்பதற்காக அவர்களை பயமுறுத்தும் அச்சுறுத்தலாக எரிநரகத்தைப் பயன்படுத்துவது பரவாயில்லை, தானே?" என்று கேட்கலாம். அது சரிதானா?
- இல்லை, அது சரி அல்ல. அப்படிப்பட்டவர்களை குறித்து ஏமாற்றம் அடைந்த தேவன் கூறுகிறார்:
"அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது" (ஏசாயா 29:13).
மிரட்சியாலும், அச்சுறுத்தல்களாலும் தனக்கு கீழ்ப்படிகிற இதயங்களை அவர் நாடவில்லை. மாறாக, தன்மேலும் தனது நீதியின்மேலும் கொண்ட அன்பாலே உந்தப்பட்டு மனமுவந்து கீழ்ப்படிகிற இதயத்தையே அவர் விரும்புகிறார். - மேலும், சித்திரவதை பற்றிய எண்ணமே தேவனுக்கு அருவருப்பானது. ஒருக்காலத்தில் இஸ்ரவேலர்கள் போலி தேவன் பாகாலை வழிபட்ட புறஜாதியாரின் முறைகளை பின்பற்றி பலிபீடங்களைக் கட்டி, தங்கள் பிள்ளைகளை தகனபலிகளாக அக்கினியில் உயிரோடு எரித்தார்கள். அப்போது கோபம் கொண்ட தேவன், அப்படியொரு (மக்களை உயிரோடு எரிக்கும்) எண்ணம் ஒருபோதும் "என் இருதயத்தில் தோன்றினதில்லையே!" என்று வேதனைப்படுகிறார் (எரேமியா 19:5).
தனது நியாயப்பிரமாணத்திலே தேவன் சித்திரவதை முறைகளை அனுமதிக்கவில்லை. - அப்போஸ்தலர் யோவானும் இதை உறுதிப்படுத்துகிறார்: "தேவன் அன்பாகவே இருக்கிறார்... பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும்; ஏனெனில் பயமானது வேதனையுள்ளது" (1யோவான் 4:16,18).
2) மக்களை நித்திய வேதனைக்கு தள்ள விரும்புவது நமது அன்பான தேவனுக்கு உகந்த காரியமா?
- நமக்கு மிகவும் கொடிய எதிரியான ஒருவராக இருக்கட்டும்; அவரது கையைப் பிடித்து, எரியும் ஜுவாலையிலே வைத்திட நம்மில் யாருக்கேனும் மனம் வருமா? இல்லை. அது மிருகத்தனமானது. மனிதாபிமானமான இரக்கம் நமக்கு உண்டு.
அன்பே உருவான நம் தேவனுக்கு தமக்கு கீழ்ப்படியாத படைப்புகளின் மீது அப்படியொரு இரக்கம் இருக்காதா, என்ன? அப்படியிராமல், அவர்களது 60-80 ஆண்டுகால குறுகிய வாழ்க்கையில் செய்த பாவங்களுக்காக அவர்களை அவர் நித்திய நித்தியமாக வாதிப்பாரா, என்ன?
எரேமியா உரைக்கிறார்:
"நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை" (புலம்பல் 3:22).
நம் எதிரிகளிடமும் நாம் அன்பு செலுத்த வேண்டுமென்று கட்டளையிடுகிற தேவன் அவர்களை நித்தியமாக எரிப்பதற்கு விரும்புவாரா, என்ன? - தேவனின் கிருபைகள் மனித மனத்திற்கு எட்டாத அளவு மிக மிக மேம்பட்டவை. மனுக்குலத்திற்காக அவர் வகுத்த மகிமையான மீட்பின் திட்டம் ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரை ஒத்திசைவுடன் விவரிக்கப்பட்டுள்ளது!
ஆம், "கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படி, முன்னே குறிக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தின்போது, மனிதரின் பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படும். உலகத் தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறும் மகா மறுசீரமைப்பின் காலம் [இராஜ்யம்] வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக் கொள்ளவேண்டும்" (அப்போஸ்தலர் 3:19-21).
பின்னிணைப்பு: அசல் "நரகங்கள்" - ஒரு கண்ணோட்டம்
மேலுமான ஆராய்ச்சிக்குரிய கேள்வி
நரக வேதனையைப் போல, வேதாகமத்தில் இல்லாத "இருண்ட கால" (Dark Age) கோட்பாடுகள் வேறேதும் கிறிஸ்தவத்திற்குள் புகுந்துள்ளனவா? - மேலும் படிக்க.