பாபிலோனின் குமாரத்திகள்
- விவரங்கள்
- பிரிவு: பரவலான வஞ்சனை
கருப்பொருள் வசனம்: 'அந்த ஸ்திரீ பொன்னினாலும் இரத்தினங்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளால் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள். மேலும், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.' வெளி 17:4-5.
1) மெய் திருச்சபையானது எப்பொழுதுமே வனாந்தரத்தில் (சமூகத்திலிருந்து ஓரம் கட்டப்பட்ட பிரபலமாகாத நிலையில்) இருந்து வந்திருந்ததுதான் உண்மை என்றால், சீர்திருத்த (Reformation) சகாப்தத்தின் பிரபலமான புராட்டஸ்டன்ட் சீர்திருத்த திருச்சபைகள் எப்படிப்பட்டவை? அவை நல்ல சபைகள் இல்லையா?
சீர்திருத்த இயக்கத்தின் தலைவர்கள் அந்திக்கிறிஸ்துவைத் துல்லியமாக அடையாளம் காட்டுவதில் சரியாக செயல்பட்டார்கள். அவர்கள் போப்பாண்டத்துவம் கற்பித்த வேதாமத்திற்கு முரணான போதனைகள் பலவற்றை அம்பலப்படுத்தினர்.
- ஆனால் சீர்திருத்த காலம் வருவதற்குள் பல நூற்றாண்டுகளாக சித்தாந்தங்களின் புரட்டல் கிறிஸ்தவத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தது. அதனால் சீர்திருத்த தலைவர்கள் அதிமுக்கியமான அடிப்படை கோட்பாடுகளில் இருந்த பிழைகளை சரி செய்ய தவறிப்போனார்கள். அவர்கள் நித்திய நரக வேதனையை பிரசங்கிப்பதிலும், ஒரு திரித்துவத்தை வணங்குவதிலும் தொடர்ந்தார்கள்.
- மேலும், சீர்திருத்தத்தின்போது கத்தோலிக்க திருச்சபையிலிருந்து பிரிந்து வெளிவந்த இந்த சபைகளில் பெரும்பாலானவை கடைசியில் கத்தோலிக்க சபையை போலவே நடந்துகொண்டன.
- அவர்கள் தங்களை உலகப் பேரரசுகளுடன் இணைத்துக்கொள்ள தொடங்கினர். அவர்கள் அதிகாரப்பசி கொண்டிருந்தனர்.
- இது கத்தோலிக்க திருச்சபையை ஆதரித்த அரசர்களுக்கும், புராட்டஸ்டன்ட் சீர்திருத்த சபைகளுக்கு ஆதரவு கொடுத்த ஆட்சியாளர்களுக்கும் இடையே பிளவுகளை ஏற்படுத்தியது. போர்களும், படுகொலைகள் பின்தொடர்ந்தன.
- இந்த போர்களை புனிதப்போர்கள் என்று நம்பிக்கொண்டு, அவர்கள் கடவுளுக்காக செய்யும் விசுவாசக்கிரியைகள் என்ற பெயரில் கொடூரமான வன்முறையைக் கையாண்டனர்.
2) வேதாகமம் இந்த நடத்தையை முன்னறிவித்ததா?
இந்த காலகட்டத்தின் திருச்சபையை முன்னறிவிக்கும்போது, இயேசு கூறுகிறார் - 'உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்' வெளி 3:1. இது சீர்திருத்த இயக்கத்தை துல்லியமாக விளக்கும் கூற்றாகும்.
- சீர்திருத்த தலைவர்கள் போப்பாண்டத்துவத்திற்கு மேலாக வேதாகமத்தை மேற்படுத்தி ஊக்குவித்ததால், பார்வையாளர்களுக்கு அந்த சபைகள் ஆவிக்குரிய உயிருடன் இருப்பதாக தோன்றியது. ஆனால் துரதிருஷ்டவசமாக அவர்கள் முக்கியமான அடிப்படை கோட்பாடுகளை தவறவிட்டனர். மேலும் அவர்கள் வன்முறைப் போர்களை விசுவாச செயல்கள் என்று கருதி நடத்தினர். எனவே இயேசு அந்த கிரியைகளை செத்தவை (பயனற்றவை) என்று நிர்மாணிக்கிறார்.
மேலும் தானியேல் தீர்க்கதரிசி இந்த இயக்கமானது அதிகாரப்பசி கொண்ட மக்களை கவர்ந்திழுக்கும் என்று முன்னறிவித்தார் - "இப்படி அவர்கள் [உண்மையான ஞானவான்களாகிய சீடர்கள், போப்பாண்டத்துவதால் துன்புறுத்தப்பட்டு] விழுகையில் கொஞ்சம் [புராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்கத்தின்] ஒத்தாசையால் சகாயமடைவார்கள்; அப்பொழுது அநேக கபடானவர்கள் அவர்களோடு ஒட்டிக்கொள்வார்கள்" (தானியேல் 11:34). ஆம், உண்மையில் வேதவசன சத்தியங்களை தேடாத பலர், சீர்திருத்த இயக்கத்தின் கொடிபிடிப்பவர்கள் ஆனார்கள். அவர்களது நோக்கங்கள் அரசியல் அதிகாரத்தை பெறுவதும், குருட்டுத்தனமாக உலகப்பிரகாரமான விசுவாசங்களைப் பின்பற்றுவதுமாகவே இருந்தன.
3) வேதாகம தீர்க்கதரிசனங்களின்படி, இன்றைய நாட்களில் நம்பகமான எந்த முக்கிய சபைகளும் உள்ளனவா?
திருச்சபையானது தன் மணவாளனான பரலோக இராஜா கிறிஸ்துவுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் மணவாட்டி ஆகும். ஆனால் இடைக்காலங்களில் (medieval times) ரோம கத்தோலிக்க சபையானது பூமியின் அரசாங்ககளுடனும், இராஜாக்களுடனும் வேசித்தனம் செய்ததால் வேதாகமம் அதனை "பாபிலோன் எனப்படும் மகா வேசி" என்று வெளிப்படுத்துதல் 17 & 18-ஆம் அதிகாரங்களில் சித்தரிக்கிறது. மேலும் ஆர்வத்தை கிளறும் வகையில் அத்திருச்சபையை 'வேசிகளுக்கு தாய்' என்றும் அழைக்கிறது.
"நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் இராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே; அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன்," என்று சொல்லி; ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக் கண்டேன்.
அந்த ஸ்திரீ பொன்னினாலும் இரத்தினங்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள். மேலும், "இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய்" என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது. அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன். வெளி 17:1-6.
- இந்தத் தீர்க்கதரிசனத்தின் ஒரு பகுதியாக அந்த ஸ்திரீயைப் பற்றி இவ்வாறு கூறப்பட்டுள்ளது - "ஞானமுள்ள மனம் இதிலே விளங்கும். அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம்." வெளி 17:9. வரலாற்று ரீதியாகவும், இன்றும் கூட, ரோமாபுரி மாநகரம் 'ஏழு மலைகளின் நகரம்' (City of Seven Hills) என்று அழைக்கப்படுகிறது. இது ரோமாபுரியில் ஆசனம் கொண்டு வீற்றிருக்கும் போப்பாண்டத்துவத்திற்கு நிச்சயமாக பொருந்துகிறது.
ஆனால் "வேசிகளுக்கு தாய்" என்று ஏன் போப்பாண்டத்துவம் அழைக்கப்படுகிறது?
ஏனெனில், பல்வேறு புராட்டஸ்டன்ட் சீர்திருத்த சபை பிரிவுகள் உட்பட போப்பாண்டத்துவதில் இருந்து பிரிந்து வெளிவந்த எல்லா சபைகளும் - வேதாகமத் தீர்க்கதரிசனங்களால் 'வேசிகளாய்' தான் கருதப்படுகின்றன. ஏனெனில், அவைகள் பூமிக்குரிய இராஜ்யங்கள் / அரசாங்கங்களுடன் இணைவதில் தங்கள் தாயான போப்பாண்டத்துவதை போலவே நடந்துகொள்கின்றன. அவள் செய்த அதே அருவருப்பான காரியங்களைச் செய்கின்றன. ஆம், அவைகள் ஒரே தாயின் மகள்கள் தான்! நூலைப் போல் சேலை, தாயைப் போல் பிள்ளை!
எனவே, பைபிள் படி, இன்றைய காலங்களில் நாம் நம்பத்தகுந்த எந்த நிறுவனரீதியான ஜனரஞ்சகமான கிறிஸ்தவ சபைப்பிரிவும் இல்லை.
4) சமீபத்திய காலங்களில் உருவான பல்வேறு பிரபலமான சபை அமைப்புகள் எப்படிப்பட்டவை?
நாம் முன்பு பார்த்ததை போலவே, இந்த நிறுவனங்கள், சபைப்பிரிவுகள் அனைத்திற்கும் ஒரே தாய் (போப்பாண்டத்துவ கத்தோலிக்க சபை) தான். அவை அவளில் இருந்துதான் பிறக்கின்றன. அண்மைய தசாப்தங்களில், பெந்தெகொஸ்தே இயக்கம் வளர்ச்சி பெற்றுள்ளது. மேலும் தம் உறுப்பினர்களுக்கு உலகச்செழிப்பையும், ஆசீர்வாதத்தையும் விற்கும் பிரிவு-சாரா சபைக்கூட்டங்களும் (மெகா-சர்ச்கள்) பெருகி உள்ளன. அவைகளை பற்றியும் நாம் படிக்கலாம்.