வெளி 20:5 - விஷமமாக செருகப்பட்ட தாமதம்
- விவரங்கள்
- பிரிவு: இரட்சிப்பு
கருப்பொருள் வசனம் – (மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை.) இதுவே முதலாம் உயிர்த்தெழுதல். வெளி 20:5
சிக்கல்
1) வரவிருக்கும் கிறிஸ்துவின் ஆயிர ஆண்டு இராஜ்யத்தைப் பற்றி வேதம் என்ன சொல்கிறது?
- நம் அனைவரையும் மரணத்திலிருந்து மீட்பதற்காக இயேசு ஆதாமின் மீட்பின் கிரயத்தை (“ஜீவனுக்கான ஜீவன்”) சிலுவையில் செலுத்தினார். அதன்மூலம் நம் எல்லோரையும் மரணத்தில் இருந்து மீட்க அனைத்து மனிதருக்கும் உயிர்த்தெழுதல் வரவிருக்கிறது. அந்த உயிர்த்தெழுதலானது கிறிஸ்து பூமி திரும்பும்போது நடக்கும் என்று பைபிள் முன்னறிவிக்கிறது (ஓசியா 13:14, 1தீமோத்தேயு 2:6, 1கொரிந்தியர் 15:21-22).
- மனிதகுலத்தின் உயிர்த்தெழுதலை இரண்டு வகைகளாக பைபிள் வகைப்படுத்துகிறது:
- முதலாம் உயிர்த்தெழுதலின் மக்கள் - இவர்கள் கிறிஸ்துவின் மீதான தங்கள் விசுவாசத்தை சாகும்வரை வெற்றிகரமாக நிரூபிக்கும் கிறிஸ்துவின் சீடர்கள். இவர்கள் ஒரு சிறப்பு வகையான பரலோக உயிர்த்தெழுதலில் எழுவார்கள். இவர்கள் உயிர்த்தெழுப்படும் மற்ற மனிதர்களை (அதாவது இரண்டாவது வகை உயிர்த்தெழுதலின் மக்களை) ஆயிரம் ஆண்டுகளாக கிறிஸ்துவுடன் சேர்ந்து ஆட்சி செய்வார்கள் (வெளி 20:6; 2:26-27; 5:10; 3:21, 2தீமோத்தேயு 2:12, 1கொரிந்தியர் 15:40).
- இரண்டாம் உயிர்த்தெழுதலின் மக்கள் - இவர்கள் பூமியில் புவிசார்ந்த உயிர்த்தெழுதலுக்கு எழுவார்கள். கிறிஸ்து மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களின் (அதாவது முதலாம் உயிர்த்தெழுதலின் மக்களின்) ஆயிர ஆண்டு ஆட்சியின் கீழ் நீதி கற்றுக்கொள்வார்கள். அதன் முடிவில் நியாயந்தீர்க்கப்படுவார்கள் (அப்போஸ்தலர் 3:20 -21, ஏசாயா 26:9, 1கொரிந்தியர் 6:2).
- ஆக, இந்த இரண்டு வகையான உயிர்த்தெழுதலுக்குப் பிறகு தொடங்கும் ஆயிர ஆண்டு ஆட்சிக்கு ஒரு குறிப்பிட்ட நோக்கம் இருக்கும் -
- கிறிஸ்து மற்றும் அவரது வெற்றிகரமான சீடரின் ஆட்சியின் கீழ் உயிர்த்தெழுப்பப்பட்ட மனிதகுலத்தின் மறுசீரமைப்பும், மறுவாழ்வுமே அதன் குறிக்கோளாக இருக்கும்.
- கிறிஸ்துவும் அவருடைய ஆட்சியாளர்களும் உயிர்த்தெழுப்பப்பட்ட மனிதகுலத்திற்கு நீதியைக் கற்பிப்பார்கள்.
- இந்த ஆயிரம் ஆண்டுகளில் சாத்தான் கூட கட்டிவைக்கப்படுவான், இதனால் இராஜ்யத்தின் குடிமக்கள் தங்கள் பரலோக ஆட்சியாளர்களால் நீதி கற்பிக்கப்படுகையில் அவனால் தலையிட முடியாது (வெளி 20:1-2).
2) வெளிப்படுத்துதல் 20:5-இன் உரையால் ஏற்படும் பிரச்சினை என்ன?
கேள்விக்கு உட்பட்ட வசனம் கீழ்க்கண்ட இரு பகுதிகளைக் கொண்டுள்ளது:
5.a - (மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை)
5.b - இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.
இதன் முதல் பகுதி 5.a பைபிளின் மற்ற பகுதிகளுக்கு, குறிப்பாக வரவிருக்கும் ஆயிர ஆண்டுகால இராஜ்யத்தின் நோக்கத்தை விவரிக்கும் அனைத்து வேதவசனங்களுக்கும், முரணாக உள்ளது.
- ஆயிர ஆண்டு ஆட்சி முடியும் வரை மீதமுள்ள மனிதகுலம் உயிரோடு எழாவிட்டால், அந்த ஆட்சிக்கு எந்த நோக்கமோ காரணமோ இருக்காது.
- முதலாம் உயிர்த்தெழுதலின் மக்கள் ஒரு வெற்று கிரகத்தின் மீது எந்தவொரு குறிக்கோளும் இல்லாமல் வெட்டி ஆட்சியாளர்களாக ஆட்சி செய்வார்கள்.
- அந்த ஆட்சியாளர்கள் அந்த குறிப்பிட்ட காலத்தில் பூமியில் உயிருடன் மிஞ்சி இருக்கும் கடைசி மனித தலைமுறையை ஆட்சி செய்வார்கள் என்று சிலர் விளக்க முயற்சிப்பது உண்டு. ஆனால் அப்படியொரு கோட்பாடு வேதவசனப்பூர்வ சாட்சியங்களைக் கொண்டிருக்கவில்லை. மேலும், முந்தைய மனித தலைமுறையினர் அனைவரும் சாத்தானின் கீழ் பரிதாபமாக தத்தளித்த நிலையில், கடைசி தலைமுறை மனிதர்கள் மட்டும் சாத்தான் கட்டிவைக்கப்பட்ட பூமியில் கிறிஸ்து மற்றும் அவரது சீடர்களின் கீழ் நீதி கற்றுக்கொள்ளும் சிறப்பு சிகிச்சைக்கு தகுதியானவர்கள் ஆவது ஏன் என்ற கேள்விக்கும் பதிலில்லை.
ஆகவே, வெளி 20:5a-ஆம் வசனம் வேதாகம ஒத்திசைவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சிக்கலை முன்வைக்கிறது - நிறைய திடமான வசனங்களுடன் முரண்படுவதோடு மட்டுமல்லாமல், பூமியில் வரவிருக்கும் கிறிஸ்துவின் இராஜ்யத்தின் அதிமுக்கிய நோக்கத்தையும் அடிப்படையில் அழித்துப் போடுகிறது.
கர்த்தராகிய இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு, "தேடுங்கள், கண்டடைவீர்கள்" என்று அறிவுறுத்தியது போல, எழுதப்பட்ட வேதவசனங்களில் சத்தியத்தை தேடுவதில் நேரத்தை செலவிடுவது உண்மையில் பயனுள்ளது. வெளிப்படுத்துதல் 20:5-இன் சூழலைப் (Context) பார்க்கும்பொழுதும், வெளிப்படுத்துதல் உரையின் ஆதிகால மூல கைப்பிரதிகளைத் தேடும்போதும், இது சம்பந்தமாக சில சுவாரஸ்யமான விடைகளை நாம் கண்டடைகிறோம்.
1. சூழல்
வெளிப்படுத்துதல் 20:5-ஐச் சுற்றியுள்ள சூழலை வழங்கும் வசனங்கள் பின்வருமாறு உள்ளன.
வெளிப்படுத்துதல் 20
4 - அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.
5.a - (மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை.)
5.b - இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.
6 - முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்;
ஆக, மேற்கண்ட 20:4-6 வசனங்கள் அடிப்படையில் முதலாம் வகை உயிர்த்தெழுதலின் ஒத்திசைவான விளக்கத்தை அளிக்க முயல்வதை காண்கிறோம். இப்போது 5.a பகுதியில் கவனம் செலுத்துவோம்.
2. மூல கையெழுத்துப் பிரதிகள்
வெளி 20:5.a - (ஆயிரம் ஆண்டுகள் முடியும் வரை மீதமுள்ள இறந்தவர்கள் உயிர்ப்பிக்கவில்லை.)
ஆதிகால மூல கையெழுத்துப் பிரதிகளைத் தேடும்போது, பின்வரும் விசயங்களை கண்டுபிடிக்கிறோம்:
- 5.a வசனத்தின் பகுதி சினாய்டிக் (Sinaitic) மற்றும் சிரியாக் (Syriac) உள்ளிட்ட பழமையான நம்பகமான ஆதி மூலப்பிரதிகளில் இல்லை.
- வெளிப்படுத்துதல் புத்தகத்தின் 200 மூல கையெழுத்துப் பிரதிகளில் சுமார் 40% பிரதிகளில் 5.a வசனத்தின் பகுதி காணப்படவில்லை.
- 4 முதல் 13 ஆம் நூற்றாண்டுகளை சார்ந்த 50% கைப்பிரதிகளிலும் இப்பகுதி இல்லை.
- காலப்பிரவாகத்தில் மேலும் பின்சென்றால், வெளிப்படுத்துதலின் மிகப்பழமையான விமர்சன வர்ணனை பெட்டாவுவின் விக்டோரினஸ் (Victorinus of Pettau) உடையதாகும் (கி.பி 300 சார்ந்தது) . அந்த வர்ணனையின் கையெழுத்துப் பிரதிகளிலும் a பகுதி இல்லை.
- 5.a பகுதி காணப்படும் கையெழுத்துப் பிரதிகளில் கூட, அது மிகவும் சீரற்ற வடிவங்களில் இருக்கிறது.
- சில பிரதிகளில் அது உரையின் ஒரு பகுதியாக இல்லாமல், எல்லைக்கோடுகளில் (margins) மட்டுமே உள்ளது
- சில பிரதிகளில் இப்பகுதி ‘ஆனால்’ என்று தொடங்குகிறது, மற்ற சில பிரதிகளிளோ அது ‘மற்றும்’ என தொடங்குகிறது.
- பின்னர் வந்த சில கையெழுத்துப் பிரதிகளில் ‘மீண்டும்’ எழுவார்கள் என்று உள்ளது, மற்ற சில பிரதிகளிலோ அந்த 'மீண்டும்' இல்லை
- 5.a. பகுதிக்கு எதிரான கையெழுத்துப் பிரதிகளின் ஆதாரங்களை ஆங்கர் பைபிள் (The Anchor Bible) விவரிக்கிறது.
ஆக, கையெழுத்துப் பிரதிகளை நாம் சரிபார்க்கும்போது, 'ஆயிரம் ஆண்டுகள் முடியும் வரை மீதமுள்ள இறந்தவர்கள் உயிர்ப்பிக்கவில்லை' என்று சொல்லும் இந்த பகுதி உண்மையில் மூல பைபிளில் இல்லை என்பதை நாம் காண்கிறோம். யாரோ ஒருவர் பிற்கால கையெழுத்துப் பிரதிகளில் ஏதோ உள்நோக்கத்துடன் இந்த பகுதியை செருகியிருக்கிறார்கள் என்ற விசயம் இதன்மூலம் நமக்கு புரிகிறது.
3. செருகப்பட்ட வரலாறு
- பல வேதவசனங்களால் வலியுறுத்தப்பட்டபடி, முதல் நூற்றாண்டிலிருந்து கிறிஸ்தவ விசுவாசிகள் அனைத்து மனித இனத்தின் உயிர்த்தெழுதலையும் எதிர்பார்த்தார்கள். கிறிஸ்து தனது இராஜ்யத்தை நிலைநாட்ட திரும்பும்போது “மரித்தோர் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்” என்பதே அவர்களின் நம்பிக்கை.
- ரோம பேரரசன் கான்ஸ்டன்டைன் ஆட்சிக்கு வந்ததும், கிறிஸ்தவத்தை தனது பேரரசின் அதிகாரப்பூர்வ மதமாக அறிவித்து, கிறிஸ்தவ திருச்சபையை ரோமானிய அரசமைப்புடன் ஒன்றிணைத்தான்.
- வெகுஜனங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, படிப்படியாக ரோமாபுரியின் அரசாங்கம் கிறிஸ்துவின் ஆயிர ஆண்டு இராஜ்யம்/பேரரசு ரோம பேரரசால் அப்பொழுதே நிறுவப்பட்டுவிட்டது என கிறிஸ்துவின் ஆட்சியுரிமைக்கு பாத்தியதை கோரத்தொடங்கினது.
- ஆனால் அந்த உரிமைகோரலில் ஒரு சிக்கல் இருந்தது. அதனை தடுமாற வைத்த மிகப்பெரிய கேள்வி ஒன்று இருந்தது - ரோம பேரரசுதான் உண்மையில் கிறிஸ்துவின் சொந்த இராஜ்யமாக இருந்தால், வாக்குறுதியளிக்கப்பட்ட உயிர்த்தெழுதல் ஏன் அப்பொழுது நடைபெறவில்லை?
- அந்த கேள்விக்கான பதிலானது வெளி 20:5a-ஐ பைபிளுக்குள் செருகப்பட்டதற்கான முதன்மையான நோக்கத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. ரோமானிய பேரரசுதான் உண்மையில் கிறிஸ்துவின் சாம்ராஜ்யம் என்ற உரிமைகோரலை நிரூபிக்க, வெகுஜனங்களின் உயிர்த்தெழுதலை இராஜ்யத்தின் ஆயிர ஆண்டு ஆட்சியின் காலத்திற்குபின் தள்ளி தாமதப்படுத்த வேண்டியிருந்தது.
- ஆகவே, நான்காம் நூற்றாண்டிலோ அல்லது ஐந்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலோ, ரோமானியப் பேரரசின் செல்வாக்கின் கீழ் ஒரு வேதபாரகர், முதன்முதலில் வெளிப்படுத்துதல் கைப்பிரதியின் ஓரத்தில் (margin), 'மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை' என்ற தன சொந்த வர்ணனையை சேர்த்தார்.
- பிற்கால வேதபாரகர் ஒருவர் அதை ஓரத்தில் இருந்து உரைக்கு நகர்த்தினார்.
- அதன் பின்னும் அந்த வரி அதன் சூழலுடன் (context) ஒத்துப்போகவில்லை, எனவே சில வேதபாரகர்கள் தாங்கள் எடுத்த பிரதிகளில் ஒரு 'மற்றும்' முன்னொட்டு போட்டும், வேறு சிலர் தங்களது பிரதிகளில் ஒரு 'ஆனால்' சேர்த்தும் ஒட்டுப்போட முயன்றனர்.
- அதற்கு மிகவும் பின்னர் வந்த வேதபாரகர்கள் 'உயிரடையவில்லை' என்பதற்கு முன்னர் ஒரு 'மீண்டும்' செருகினர்.
- இவ்வாறு 20:5.a பகுதியானது அது இருக்கும் கைப்பிரதிகளில் கூட பல்வேறு சீரற்ற வடிவங்களில் காணப்படுகிறது.
தீர்வு
டி.டி. வேடன் (D.D. Whedon) தனது ‘புதிய ஏற்பாட்டின் வர்ணனை’ (‘Commentary on the New Testament’) புத்தகத்தில் வெளிப்படுத்துதல் 20:5a-ஐ பற்றி பின்வருமாறு எழுதுகிறார்:
"இந்த வாக்கியத்தைக் கொண்ட பிரதிகளில் சந்தேகத்திற்குரிய எண்ணிக்கையிலான வேறுபாடுகள் உள்ளன. கிரேக்க மொழியில் 'ஆனால் மற்றவர்கள்' என்ற சொற்கள் இந்த பிரதிகளில் மூன்றுவித வேறுபாடுகளில் காணப்படுகின்றன; 'உயிரடையவில்லை' என்ற வார்த்தை மூன்றுவித வேறுபாடுகளிலும்; 'அளவும்' என்ற சொல் இரண்டுவித வேறுபாடுகளிலும் காணப்படுகின்றது;... இந்த வாக்கியம், ஒரு இடைச்செருகல் போல, கருத்துநடையின் ஓட்டத்தில் குறுக்கிடுகிறது. இந்த வாக்கியம் தனக்கு அடுத்துவரும் 'இதுவே' என்ற வார்த்தைக்கும், அந்த வார்த்தையின் உறுதிமொழி குறிக்கும் விசயம் காணப்படும் தனக்கு முன்வந்த வரிக்கும் இடையில் புகுந்து கருத்தோட்டத்தை உடைக்கிறது. இந்த வாக்கியமானது உரையில் மிகவும் அலங்கோலமான இடத்தில் செருகப்பட்ட ஏதோ ஒரு நகலெடுப்பாளரின் விளக்கக் குறிப்பைப் போல தோன்றுகிறது… எந்தவொரு விவிலிய அறிஞரும் தற்போது இதனை நம்பத்தகுந்ததாக கருத மாட்டார்கள்..”
உண்மையில், நாம் 5.a-ஐ தவிர்த்துவிட்டு, 4, 5.b மற்றும் 6-ஆம் வசனங்களை படிக்கும்போது, தொடர்ச்சியான ஒத்திசைவான விவரிப்பை பார்க்கிறோம். ஆனால் 5.a பகுதியோ ஓர் இரணமான கட்டைவிரலைப் போல தனித்து நிற்கிறது, கருத்தின் விவரிப்புக்கு இடையூறு செய்கிறது. என்.ஐ.வி (NIV) போன்ற ஆங்கில பைபிள் பதிப்புகள் அந்த பகுதியை அடைப்புக்குறிக்குள் வைக்கின்றன. இவற்றிற்கெல்லாம் ஒரு தெளிவான காரணம் இருக்கிறது. அது ஒரிஜினலில் இல்லை. அது பைபிளில் இல்லை.
ரோமானியப் பேரரசின் பெயரில் கிறிஸ்துவின் பேரரசை தனக்காகக் கையகப்படுத்த சாத்தான் தைரியமாக முயன்றான். அந்த முயற்சியின் பகுதியாக, கிறிஸ்துவுக்கு பல நூற்றாண்டுகள் பின்னர் வந்த வேதபாரகர்கள் தீய நோக்கத்துடன் போலியான முறையில் இதனை பைபிளின் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் செருகினர். அத்தகைய செயல்களைப் பற்றி அந்த புத்தகமே கூறும் கடுமையான எச்சரிக்கைகளை (வெளி 22:18) புறக்கணித்தனர்.
ஒரிஜினல் பைபிளின் படி, வெளிப்படுத்துதல் 20:4-6 வசனங்களை பின்வருமாறு படிக்க வேண்டும்:
4 - அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.
5.b - இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.
6 - முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்.
ஆம், உண்மையில் இரண்டு வகையான உயிர்த்தெழுதல்கள் உள்ளன, ஆனால் அவை ஆயிரம் ஆண்டுகளால் பிரிக்கப்படவில்லை. முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவர்கள் - அதாவது நிரூபிக்கப்பட்ட விசுவாசிகள் - கிறிஸ்துவுடன் சிம்மாசனங்களில் அமர்ந்து, இரண்டாவது உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவர்களுக்கு - அதாவது மனிதகுலத்தின் மற்றவர்களுக்கு - நீதி கற்பிப்பதற்காக அவர்கள் மீது ஆட்சி செய்யும் பாக்கியம் பெறவிருக்கிறார்கள். அதுவே இந்த இரண்டு உயிர்த்தெழுதல்களுக்கும் உள்ள வித்தியாசம்!
கிறிஸ்துவின் ஆயிர ஆண்டுகால இராஜ்யம் ஒரு மகிமையான நோக்கத்தைக் கொண்டிருக்கும். கிறிஸ்து மற்றும் அவரது உயிர்த்தெழுந்த சீடர்களின் பரலோக ஆட்சியின் கீழ் உயிர்த்தெழுப்பப்பட்ட மனிதகுலத்தின் மறுவாழ்வும் மறுசீரமைப்புமே அதன் உன்னத நோக்கம். இயேசுவானவரே அதனை "எல்லாவற்றையும் புதுப்பிக்கும் காலம்" (“Renewal of All Things”) என்றழைத்தார் (மத்தேயு 19:28). பேதுரு அதனை "எல்லாவற்றையும் மறுசீரமைக்கும் காலம்" (“Times of Restitution of All Things”) என்று கருதினார் (அப்போஸ்தலர் 3:20-21 ஆங்கில பைபிள்கள் பார்க்கவும்).
ஆமென், நாம் ஜெபிப்போம் - “உம்முடைய இராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலங்களிலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக!"