அன்பின் பிரதான கட்டளைகள்
- விவரங்கள்
- பிரிவு: சுவிசேஷ ஓட்டம்: என்ன சாதிக்கிறோம்?
கருப்பொருள் வசனம்: "உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக, இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே." மத்தேயு 22:37-39.
நாம் சுவிசேஷ ஓட்டத்தை ஓடும்போது, தேவன் மேலுள்ள விசுவாசத்தை நிரூபித்து, பரிசுத்தம் அடைய உதவும் நம் ஆசாரிய கடமையை நிறைவேற்றுகிறோம் என்ற விசயங்களை பார்த்தோம். மேலும் இராஜ்ய நற்செய்தியின் பொருட்டு கிறிஸ்துவிற்கு வரும் பாடுகளில் நாம் பங்கெடுப்பதுதான் அவருடைய இராஜ்யத்தின் மகிமையிலும் அதிகாரத்திலும் நமக்கு ஓர் பங்கை ஏற்படுத்துகிறது என்பதையும் நாம் உணர்ந்தோம். சுவிசேஷத்திற்காக வாழும் ஓர் வாழ்வே மனுக்குலத்திற்கு உண்மையான நன்மை செய்து வாழ்வதற்கான ஒரே வழி என்பதையும், மேலும் பெரும்பாலோர் தற்போது நற்செய்தியை நிராகரித்தாலும், இராஜ்யத்தில் அவர்கள் உயிர்த்தெழுப்பப்படுகையில் அவர்களது சீரமைப்பை எளிதாக்கும் வகையில் அதை நினைவுகூருவார்கள் என்பதையும் நாம் புரிந்துகொண்டோம். இவை அனைத்தும் சுவிசேஷ ஓட்டத்தை ஓடும்படி தேவன் நம்மை கேட்கும் நோக்கத்தின் பல பரிமாணங்கள் ஆகும். நற்செய்தியின் ஓட்டத்திற்கான மற்றொரு முக்கியமான குறிக்கோளை இப்போது நாம் பார்க்கலாம்.
கட்டளைகளிலேயே பிரதானமான கட்டளை எது என்று கேட்கப்பட்டபோது, இயேசு பதிலளிக்கிறார் – “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்பு (கிரேக்கம்: அகாப்பே “agape”) கூருவாயாக, இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்பு ("அகாப்பே”) கூருவாயாக என்பதே”. மத்தேயு 22:37-39.
- வேதாகமத்தின் புதிய ஏற்பாடு எழுதப்பட்ட கிரேக்க மொழியில் அன்பை குறிக்க பல வார்த்தைகள் உள்ளன. இங்கே மத்தேயு "அகாப்பே" (agape) என்ற கிரேக்க வார்த்தையை பயன்படுத்துகிறார். அதற்கு கொள்கை ரீதியான, தீர்மானத்தின் அடிப்படையிலான அன்பு என்று அர்த்தம்.
- இந்த "அகாப்பே" வார்த்தையானது கிரேக்க மொழியில் அன்பைக் குறிக்கும் இன்னொரு பிரபலமான வார்த்தையான "பீலியோ" (phileo) என்ற சொல்லிலிருந்து மிகவும் மாறுபட்டது. "பீலியோ" என்றால் ஒரு தனிப்பட்ட பாசத்தை குறிக்கும் அன்பு என்று அர்த்தம்.
- "பீலியோ" உணர்வுகளின் இருப்பிடமான இதயத்திலிருந்து சுரக்கிறது. ஆனால் "அகாப்பே" அறிவின் உறைவிடமான மூளையிலிருந்து புறப்படுகிறது.
தேவனும் கிறிஸ்துவும் நம்மேல் கொண்ட அவர்களது "அகாப்பே" அன்பை எப்படி வெளிப்படுத்தினார்கள்? அவர்களின் “அகாப்பே” அன்பின் நோக்கம் என்னவாக இருந்தது?
- தேவன் தன்னுடைய ஒரே குமாரனை நமக்காக தியாகம் செய்ததன் மூலம் தன் “அகாப்பே” அன்பை வெளிப்படுத்தினார் – “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு ("அகாப்பே") கூர்ந்தார்”. யோவான் 3:16.
- கிறிஸ்து தனது "அகாப்பே" அன்பை இவ்வாறு காட்டினார் - "அவர் தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்ததினாலே அன்பு ("அகாப்பே") இன்னதென்று அறிந்திருக்கிறோம்." 1யோவான் 3:16.
ஆம், மனிதனுக்கு நித்திய ஜீவனைக் கொடுப்பதே அவர்களது “அகாப்பே” அன்பின் நோக்கமாக இருந்தது, அதற்காகவே பிதாவும் குமாரனும் தியாகங்கள் செய்தனர். நம்முடைய அன்பும் ("அகாப்பே") அதே நோக்கம் கொண்டதாக இருக்கவேண்டும் அல்லவா?
இயேசு, "ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது, நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது," என்றார். யோவான் 6:63. தேவனின் வார்த்தையை கேட்பதன் மூலம் மட்டுமே மனிதனால் ஜீவன் பெற முடியும். அவ்வார்த்தையை பிரகடனம் செய்வதே நம் அன்பின் நோக்கமாக இருக்கவேண்டும்.
முதலாம் பிரதான கட்டளை – அன்பின் பிரயாசம்
நாம் இராஜ்யத்தின் நற்செய்தியை பெற்றுக்கொள்ளும்போது, தேவன் நம்மை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறார் என்பதை உணர்ந்துகொள்கிறோம். நாம் நம் முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும் அவர்மேல் அன்பில் ("அகாப்பே"யில்) நிரம்பி வழிகிறோம். அந்த அன்பானது, மனுக்குலத்திற்கான அவரது நற்செய்தியை அறிவிப்பதன் வேலையை செய்ய நம்மில் ஒரு ஆழமான உறுதியை உருவாக்குகிறது.
பவுல் இதை அன்பின் பிரயாசம் என்று அழைக்கிறார் –
"தேவனுக்குப் பிரியமான சகோதரரே, உங்கள் விசுவாசத்தின் கிரியையையும், உங்கள் அன்பின் பிரயாசத்தையும், இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும், தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து, நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்று நாங்கள் அறிந்து தேவனை ஸ்தோத்திரிக்கிறோம். எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடேமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழுநிச்சயத்தோடும் வந்தது; நீங்கள் எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி, இவ்விதமாய் விசுவாசிகள் யாவருக்கும் மாதிரிகளானீர்கள். எப்படியெனில், உங்களிடத்திலிருந்து கர்த்தருடைய வசனம் மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் தொனித்ததுமல்லாமல், தேவனைப்பற்றின உங்கள் விசுவாசம் எங்கும் பிரசித்தமாயிற்று." 1தெசலோனிக்கேயர் 1:2-8.
இரண்டாம் பிரதான கட்டளை, 'சத்துருவை சிநேகி!' & பரிபூரணமடைய ஒரு வாய்ப்பு
உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக! நமக்கு நித்திய ஜீவனை கொடுக்கும் நற்செய்தியை நாம் மனுக்குலத்திற்கு கொடுக்க வேண்டும்! அதன்மூலமே நாம் பிறனிடத்தில், ஏன் நம் சத்துருகளிடத்திலும் கூட நாம் காண்பிக்கவேண்டிய அன்பு ("அகாப்பே") என்னும் பிரதான கட்டளையை நிறைவேற்றுகிறோம்!
சொல்லப்போனால், இந்த உலகமே நமக்கு உண்மையில் ஒரு எதிரி (யாக்கோபு 4:4). அதனால்தான் நம் எஜமானர் இவ்வாறு கூறுகிறார் – “ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன், ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்”. மத்தேயு 10:16-18.
- "அகாப்பே" அன்பு என்பது ஒரு உணர்ச்சிப்பூர்வ பாசமாக இல்லாமல், தீர்மானத்தின்பேரிலான கொள்கையின் அடிப்படையில் எழும் அன்பாக இருக்கும் காரணத்தால், தேவனின் சுவிசேஷத்தை பகிர்ந்துகொள்வதன் மூலம் நம் சத்துருக்களுக்கு கூட அன்பு காட்டுவது சாத்தியமாகிறது. நிச்சயமாக அவர்கள் நம்மை துன்புறுத்துவார்கள் / கேலி செய்வார்கள். ஆனால் இயேசு நம்மை மகிழ்ந்து களிகூர சொல்கிறார், ஏனென்றால் நம் சத்துருக்களிடம் அத்தகைய அன்பை நாம் காட்டும்போது, நாம் தேவனின் "அகாப்பே" அன்பை பின்பற்றி, அதன் மூலம் பரிபூரணம் அடைந்து பரலோகத்தில் நித்திய ஜீவனை நோக்கி வெற்றிநடை பயில்கிறோம் –
“என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால், சந்தோஷப்பட்டு களிகூருங்கள். பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களை அன்பு ("அகாப்பே") கூருங்கள். உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்,அவர் தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். உங்களை அன்புகூருபவர்களையே நீங்கள் அன்புகூருவீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படிச் செய்கிறார்கள் அல்லவா? ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பரிபூரணராயிருக்கிறதுபோல, நீங்களும் பரிபூரணராயிருக்கக்கடவீர்கள்”. மத்தேயு 5:11-12, 44-48.
- இயேசுவும் கூட இப்படித்தான் பரிபூரணத்தை அடைந்தார் - "அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, தாம் பரிபூரணராக்கப்பட்ட பின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணரானார்." எபிரெயர் 5: 8-10.
பவுல் அறிவுறுத்துகிறார்: "இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்." 2கொரிந்தியர் 7:1.
நாம் நம்மை சுத்திகரித்துக்கொள்வது எப்படி? - தினந்தோறும் பாவமன்னிப்பு கோருவதன் மூலமே அது முடியும் (1யோவான் 1:9).
மேலும், நாம் பரிசுத்தமாகுதலை பூரணப்படுத்துவது எப்படி? - நாம் முன்னர் படித்தபடி, சுவிசேஷ வேலைகளை இன்னும் அதிகமாய் நாம் செய்ய செய்யத்தான் நமது பரிசுத்தம் அதிகரிக்கிறது!
ஆம், சுவிசேஷ ஓட்டமானது இரண்டு அன்பின் பிரதான கட்டளைகளையும் நாம் நிறைவேற்ற உதவுவது மட்டுமல்லாமல், நம்மை பரிபூரணராகவும் ஆக்குகிறது!
புதிய கட்டளை – கிறிஸ்துவின் சபையின் மீதான "அகாப்பே" அன்பு
இயேசு, “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பு ("அகாப்பே") ஆக இருங்கள். நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்," என்றார். யோவான் 13:34–35.
- உண்மையில், "கிறிஸ்து தம்முடைய ஜீவனை நமக்காக கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம். நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்." 1யோவான் 3:16. ஆனால் என்ன நோக்கத்திற்காக? இயேசு அன்புகூர்ந்ததை போலவே நாமும் அன்புகூர வேண்டும். அவர் நமக்கு நித்திய ஜீவனைக் கொடுப்பதற்காக தம் வாழ்வை தியாகம் செய்யுமளவு நம்மேல் அன்புக்கூர்ந்தார். எனவே நம் சகோதர, சகோதரிகள் மேலான நம்முடைய அன்பும் அந்த நோக்கத்திற்காகவே இருக்க வேண்டும்.
- நம் சுவிசேஷ ஓட்டத்தின் ஒரு பகுதியாக, நாம் சத்தியத்தில் அவர்களை கட்டியெழுப்பும்பொழுது, நம் வாழ்வை அவர்களுக்காக ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து (நம் வாழ்வை அர்ப்பணித்து) அவர்கள் சுவிசேஷ ஓட்டத்தை ஓட உதவுவதன் மூலம், நாம் கிறிஸ்துவின் திருச்சபையின் மேல் காட்டவேண்டிய "அகாப்பே" அன்பின் புதிய கட்டளையை நிறைவேற்றுகிறோம். நாம் நிச்சயம் அவர்களின் உலகப்பிரகாரமான தேவைகளுக்கு உதவினாலும், அவர்களை சத்தியத்தில் பலப்படுத்தி அவர்கள் நித்திய ஜீவனுக்கேற்ற சுவிசேஷ ஓட்டத்தை ஓட உறுதிசெய்வதிலேயே நாம் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.
யோவானும், பவுலும் அதையே வழிமொழிகிறார்கள் – "என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்." 1யோவான் 3:18. ஆகையால் நீங்கள் ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்." 1தெசலோனிக்கேயர் 5:11
ஆம், தேவன் நமக்கு நியமித்த இந்த ஓட்டப்பந்தயத்தில், ஒருவருக்கொருவர் உதவுவதன் மூலம் போட்டியாளர்கள் வெற்றி பெறுவர். உலகப்பிரகாரமான பந்தயங்களில் இருந்து இது எவ்வளவு வித்தியாசமானது!
நாம் சுவிசேஷ ஓட்டத்தில் சாதிக்கும் மேலும் பல விசயங்களை இன்னும் ஆழமாக படிக்கலாம். மேலும் படிக்க: படி, மீன் பிடி, கிறிஸ்து போல் ஆகு!.