தேர்ந்தெடுக்கப்பட்டோரின் அழைப்பு
- விவரங்கள்
- பிரிவு: பரவலான வஞ்சனை
கருப்பொருள் வசனம்: "என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமல் அவளை விட்டு வெளியே வாருங்கள்." வெளி 18:4.
1) அப்போஸ்தலர்களின் காலத்திற்குப் பிறகு ஜனரஞ்சகமான கிறிஸ்தவ திருச்சபையின் கதைதான் என்ன?
அப்போஸ்தலனாகிய பவுல் முன்னறிவித்ததைப் போல, கிறிஸ்தவர்களுக்குள்ளிருந்தே கொடிதான ஓநாய்கள் எழும்பி, வேதாகம சத்தியங்களை திரித்து, பெரும்பாலான விசுவாசிகளை ஏமாற்றினர். இந்த பரவலான வஞ்சனையானது அந்திக்கிறிஸ்துவின் 1260 வருட போப்பாண்டத்துவ ஆட்சிக்காலம் முழுவதும் நீடித்து, புராட்டஸ்டன்ட் சீர்திருத்த திருச்சபைகளிலும்கூட பல வடிவங்களில் தொடர்ந்து, பல நூற்றாண்டுகளாக நிலைத்து, இன்றும்கூட பரவலாக உள்ளது. அதனால்தான் இன்று காணப்படும் அனைத்து ஜனரஞ்சகமான கிறிஸ்தவ பிரிவுகளும் ஆதியிலிருந்த மெய் கிறிஸ்தவத்தின் அஸ்திபார நம்பிக்கைகளுக்கு எதிராகச் செல்லும் பல்வேறு கோட்பாடுகளைக் கொண்டிருக்கின்றன.
2) இங்ஙனம் பலவகைப்பட்ட பரவலான வஞ்சனைகள் இன்றைய கிறிஸ்தவ உலகில் பிரபலமாக இருக்க, தேவன் தம்மை மெய்யாய் பின்பற்ற விரும்புபவர்களை என்னதான் செய்யச் சொல்கிறார்?
நிறுவனமயமாக்கப்பட்ட இந்த வஞ்சனைகள் தங்களை கிறிஸ்தவம் என்று அழைத்துக் கொண்டாலும் அவை உண்மையில் கிறிஸ்தவம் அல்ல. அவர்கள் எல்லாரும் (பாபிலோன் என்ற மகா வேசியான) ஒரே தாயின் வயிற்று மகள்கள் தான். அவர்களுக்கும் உலகில் உள்ள புறமதங்களுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை. அதனால்தான், கருப்பொருள் வசனம் கூறுவதுபோல், தேவன் தம்மை உண்மையிலேயே பின்பற்ற விரும்புகிறவர்களை இங்ஙனம் அழைக்கிறார் -
“என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமல் அவளைவிட்டு வெளியே வாருங்கள்.” வெளி 18:4.
அதனால்தான் இயேசு தம் சீடர்களை நோக்கி – “நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டேன்,” என்கிறார். யோவான் 15:19. அதுமட்டுமல்லாமல், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வெகுசிலர் மட்டுமே என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் (மத்தேயு 7:14, 22:14).
பக்க குறிப்பு: இயேசு இப்படி வலியுறுத்தியிருக்க, ஒரு கிறிஸ்தவப்பிரிவை இலட்சக்கணக்கானோர் பின்பற்றினால், அது உண்மையில் தேவனிடமிருந்து வந்ததாக இருக்கக்கூடுமா?
3) இந்த கள்ள மத நிறுவனங்களிலிருந்து நம்மை வெளியே வரும்படி தேவன் ஏன் நமக்குக் கட்டளையிடுகிறார்?
பவுல் பதிலளிக்கிறார் – "அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது?
அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்மந்தமேது? நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. ஆனபடியால், 'நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து வெளியே புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள்,' என்று கர்த்தர் சொல்லுகிறார். 'அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்கள்,’ என்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.” 2கொரிந்தியர் 6:14-18.
தெள்ளத்தெளிவாக இருக்கிறது, இல்லையா? அதனால்தான், புதிய ஏற்பாட்டு ஆரம்ப காலங்களில் கூட, கட்டுக்கோப்பான யூத சமுதாயத்தின் அங்கத்தினர்களாக இருந்த இயேசுவின் சீடர்கள் அதை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. வெளியேறியதன் மூலம் அச்சமூகத்தில் தங்களுக்கு கிடைத்த பாதுகாப்பினை விட்டுக்கொடுத்து, கிறிஸ்துவின் சீடர்களாக தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு, அதன்பொருட்டு பாடுகள் அனுபவிக்க வேண்டியிருந்தது.
ஆம், சர்வ வல்ல தேவனின் குமார குமாரத்திகள் ஆவதற்கு நாம் விரும்பினால், சாத்தான் ஆதிக்கம் செலுத்தும் கள்ள மத அமைப்புகளை விட்டுவிடத்தான் வேண்டும்.
தேவன் மெய்யான நற்செய்தியை ஒரு நாத்திகருக்கோ, புறமதம் ஏதேனும் ஒன்றை பின்பற்றும் ஒருவருக்கோ, அல்லது பெயரளவில் "கிறிஸ்தவ" பிரிவு என்று சொல்லப்படுகிற ஒரு சபையை சார்ந்த ஒருவருக்கோ கொடுக்கத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், யாராக இருப்பினும் தேவனின் கட்டளை ஒன்றுதான் – ‘'உங்கள் தவறான விசுவாசத்தையும், வஞ்சனைகள் மிகுந்த கள்ள மத நிறுவனத்தையும் விட்டு வெளியே வாருங்கள்!" என்பதே.
4) அப்படியானால், மெய்யான நற்செய்தியை நாம் புரிந்துகொண்டபின், நாம் என்னதான் செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்?
தேவன் நாம் ஒரு ஞானஸ்நானத்தை (தேவாலயங்களில் பரவலாக போதிக்கப்படும் விசயம் அல்ல) மேற்கொள்ள வேண்டும் என்றும், அதன்பின் அவர் நமக்கென்று நியமித்திருக்கும் ஓர் ஓட்டத்தை ஓடி, கிறிஸ்துவின் மீதான நம் விசுவாசத்தை நிரூபிக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவர் தாம் தேர்ந்தெடுத்துள்ள மக்களுக்கென்று விசேஷ காரியங்களை வைத்துள்ளார். வரவிருக்கும் அவரது மகிமையான இராஜ்யத்தில் நமக்கென்று முக்கிய திட்டங்களை அவர் வகுத்திருக்கிறார்.
ஆனால் அதற்கென்று சில மாற்றங்கள் தேவை. அவையெல்லாம் ஓர் ஞானஸ்நானத்துடன் தொடங்குகின்றன!