இயேசு கிறிஸ்து யார்?
- விவரங்கள்
- பிரிவு: எவரை வணங்குகிறோம்?
1) சர்வ வல்ல தேவனாகிய கர்த்தரைப் பற்றிப் படித்தோம். அப்போஸ்தலனாகிய பவுல் "பிதாவாகிய ஒரே தேவன் (கடவுள்) நமக்குண்டு," என்று சொல்லக்கண்டோம். அதே அப்போஸ்தலன் இயேசுவைப் பற்றி என்ன சொன்னார்?
'அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் (ஆண்டவரும்) நமக்குண்டு '(1 கொரிந்தியர் 8:5-6).
பிதாவை நம் தேவனாக (கடவுளாக) உறுதிப்படுத்திய அப்போஸ்தலன், நமக்கு இயேசு கிறிஸ்து என்ற ஒரு கர்த்தரும் (ஆண்டவரும்) உண்டு என்கிறார். நாம் முன்னர் பார்த்தபடி, இந்த கர்த்தர் (Lord) வார்த்தையானது யாவே தேவனைக் குறிக்கும் தடித்த எழுத்து கர்த்தர் (LORD) இல்லை. இந்த வார்த்தை (கிரேக்கம்: Kurios) எஜமான்/ஆண்டவன் என்ற பொருள்படும். ஆக, பவுல் நமக்கு பிதாவாகிய ஒரே தேவனும் (கடவுளும்), இயேசு கிறிஸ்துவாகிய ஒரே எஜமானும் உண்டு என்கிறார்.
2) இயேசு ஏன் நம்முடைய எஜமானராக (ஆண்டவராக) இருக்கிறார்?
இதற்கு பதில் சொல்ல, பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களோடு ஆரம்பிக்கலாம். அத்தீர்க்கதரிசனங்கள் தேவன் ஒரு மேசியா / கிறிஸ்துவை அனுப்புவார் என்று முன்னுரைத்தன:
- மோசே இஸ்ரவேல் ஜனங்களிடம், "உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக."(உபாகமம் 18:15).
- இன்னொரு இடத்தில் தேவன் சொன்னார்: “இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்." (ஏசாயா 42:1).
இயேசுவே வாக்களிக்கப்பட்ட அந்த மேசியா (கிறிஸ்து) - தேவனால் அபிஷேகம் செய்யப்பட்டவர் (மத்தேயு 1:1).
3) இயேசு ஒரு சாதாரண தாசனா?
முற்றிலும் இல்லை! அவர் சாதாரண தூதுவரும் இல்லை. அவர் தேவனின் வல்லமை வாய்ந்த "வார்த்தையானவர்" (லோகாஸ் Logos) ஆக இருந்தவர் (யோவான் 1:1).
அவர் உண்மையில் தேவனுடைய குமாரனாக இருந்தார். புதிய ஏற்பாட்டில் 47 முறை இவ்வாறு குறிப்பிடப்படுகிறார்.
4) இயேசு மனிதனாய் பிறக்கும்முன் இருந்த நிலை என்ன? ஏன் அவர் 'தேவனுடைய ஒரேபேறான குமாரன்' என்று அழைக்கப்படுகிறார் (யோவான் 3:16)?
இயேசு தேவனுடைய படைப்புகள் எல்லாவற்றிலும் முதற்பேறானவராக (முதற்பிறந்தவராக) இருந்தார்:
- கொலோசெயர் 1:15 - சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்
- வெளி 3:14 - சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர்
- நீதிமொழிகள் 8:22 - கர்த்தர் பூர்வகாலத்தில் என்னைத் தமது கிரியைகளின் முதற்பலனாய் படைத்தார். (1 கொரி 1:24 பார்க்கவும்)
ஆம், இயேசுவே தேவனின் முதல் படைப்பு ஆவார். மட்டுமல்ல, அவரே தேவனின் கடைசி (நேரடி) படைப்பும் கூட. அதனால்தான் அவர் 'முந்தினவரும் பிந்தினவரும், அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும்' என்று அழைக்கப்படுகிறார் (வெளி 2:8, 22:13).
ஆமாம், அதனால்தான் அவர் 'தேவனின் ஒரேபேறான குமாரன்' என அழைக்கப்படுகிறார்.
5) பிரபஞ்சத்தின் படைப்பில் இயேசு என்ன பங்காற்றினார்?
தேவன் மற்ற எல்லாவற்றையும் தன் குமாரனை முகவராக (agent) பயன்படுத்தி படைத்தார்.
- கொலோசெயர் 1:16 - அவருக்குள் [இயேசு கிறிஸ்துவிற்குள்] சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.
- நீதிமொழிகள் 8:27-30 அவர் [தேவன்] வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும், பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும், நான் அவர் அருகே செல்லப் பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, திறமையுள்ள வேலைக்காரனாக இருந்தேன். (பார்க்க 1 கொரிந்தியர் 1:24 - கிறிஸ்து தேவனின் ஞானமாயிருக்கிறார்).
- யோவான் 1:3 - சகலமும் அவர் [இயேசு] மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
தேவன் தம் அன்பிற்குரிய குமாரனை நேசிக்கிறார் - பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார் (யோவான் 5:20).
6) ஆதாமின் இனத்தை மீட்பதில் இயேசு என்ன பாத்திரம் வகித்தார்?
ஆதாம் பாவம் செய்தபோது, தேவன் ஆதாமை மீட்க ஒரு மீட்புத் திட்டத்தை அமைத்து (ஆதியாகமம் 3:15) கிறிஸ்துவை அனுப்புவதாக வாக்குறுதியளித்தார். ஆதாமின் மீட்கும்பொருளை செலுத்தி மனித இனத்தை காப்பாற்றுவதற்காக ஆதாமிற்கு பதிலாக உயிர்கொடுக்க தேவன் தனது ஒரேபேறான குமாரனை அனுப்பினார் (யோவான் 3:16). அவர் வல்லமை வாய்ந்த வார்த்தையானவரை (Logos) மரியாளின் கருப்பைக்கு மாற்றி மனிதன் இயேசுவாக (யோவான் 1:14) பிறக்க வைத்தார்.
ஆம், தேவனால் அனுப்பப்பட்ட கிறிஸ்துவாக (அபிஷேகம் செய்யப்பட்டவராக) இருப்பதால் இயேசு இன்னும் சிறப்பு வாய்ந்த அந்தஸ்து கொண்டிருக்கிறார்.
7) ஆதாமின் இனத்தை மீட்டது போக பூமியில் இயேசு வேறு என்ன சாதித்தார்?
- இயேசு தாம் பட்டபாடுகளினாலே தேவனிடம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அதன் பின்பு, தேவனாலே பிரதான ஆசாரியராக நியமிக்கப்பட்டார் (எபிரெயர் 5:8-10).
- இயேசு பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் தேவனிடம் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டார் (எபிரெயர் 5:7).
- அவர் தம்மை நியமித்த தேவனுக்கு உண்மையுள்ளவராயிருந்தார், அதனால் மோசேயைப்பார்க்கிலும் அதிக மகிமைக்குப் பாத்திரவானாய் காணப்பட்டார். (எபி 3:2-4).
8) இயேசு அத்தகைய முழுமையான விசுவாசமுள்ள கீழ்ப்படிதலைக் காட்டியபோது தேவன் என்ன செய்தார்?
இயேசு தம்முடைய கீழ்ப்படிதலையும் விசுவாசத்தையும் நிரூபித்தபோது, தேவன் அவரை அனைத்து படைப்பிற்கும் கர்த்தராக (Lord எஜமானனாக) உயர்த்தினார் (பிலிப்பியர் 2:9-11). 'தேவனே, உம்முடைய தேவனே உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்' (எபிரெயர் 1:9).
தேவன் மனிதகுலத்தின் மீது இயேசுவை இராஜாவாகவும், ஆண்டவராகவும் நியமித்திருக்கிறார். அதனால்தான் இயேசு நம்முடைய எஜமான்!
ஆம், 'தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தர் (எஜமான்) என்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்' (பிலி 2:9-11).