மறுசீரமைப்பின் யுகம்
- விவரங்கள்
- பிரிவு: பரலோகத்தின் இராஜ்யம்
கருப்பொருள் வசனம்: இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும், உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்த மகா மறுசீரமைப்பின் காலங்கள் வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ளவேண்டும் (அப்போஸ்தலர் 3:19-20)
இராஜ்யத்தில் எவ்விதமான சீரமைக்கப்பட்ட வாழ்க்கையை மனுக்குலம் திரும்பப்பெரும்?
கருப்பொருள் வசனம் கூறுவதுபோல், கிறிஸ்துவின் இராஜ்யமானது ஒரு மறுசீரமைப்பின் காலமாகும். மேலும் அக்காலம் குறித்து பரிசுத்த தீர்க்கதரிசங்கள் (ஏசாயா, எரேமியா, மீகா, தானியேல் போன்றோர்) எல்லோரும் விளக்கமாய் எடுத்துரைத்திருக்கிறார்கள். ஆம், அது ஒரு மகா மறுசீரமைப்பின் யுகமாக விளங்கும்!
-
பிரிந்தவர்கள் ஒன்றுகூடும் காலம், சமரசங்களின் யுகம்: மனுக்குலம் முழுவதும் மீண்டும் உயிர்த்தெழுந்து, எல்லோரும் தாங்கள் இழந்துபோன அன்புக்குரியவர்களை மீண்டும் சந்திப்பார்கள். உடைந்துபோன உறவுகள் எல்லாம் சமரசம் அடைந்து சீர்செய்யப்படும்.
"மக்களை நான் கல்லறையின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன், அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன், மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே?" ஓசியா 13:14.
பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான். மல்கியா 4:6.
புலன் விசாரணையில் தீர்க்கப்படாத வழக்குகளும், மர்மக்கொலைகளும் சரியாக தீர்க்கப்படும், ஏனெனில் கொலைசெய்யப்பட்டவரும் கொலையாளியும் ஒருவரையொருவர் சந்திக்க நேரிடும். அப்பொழுது இருவரும் வாழ்வில் முன்னேற்றம் காண்பதற்கு மனந்திரும்புதலும், மன்னிப்பும், சமரசமும் இருபக்கமும் தேவைப்படும்.
-
தேவனாகிய கர்த்தரைப் பற்றி பரவலான அறிவு: கிறிஸ்து மற்றும் அவரது திருச்சபை மூலம் கடவுளைப் பற்றி மக்கள் கற்றுக்கொள்வார்கள். மனுக்குலத்தின்மேல் தேவன் செலுத்தும் அன்பானது, உயிர்த்தெழுப்பப்பட்ட மக்களுக்கு நன்கு தெரிந்த ஒரு உண்மையாக இருக்கும். ஏனெனில் தேவன் தமது ஒரே குமாரனை நமக்குப் பதிலாக உயிர்கொடுக்க அனுப்ப தயைபுரிந்த காரணத்தால் மட்டுமே தாங்கள் மீண்டும் உயிர்பெற முடிந்ததை அனைவரும் அறிவார்கள். எனவே அவர்கள் நீதி கற்றுக்கொள்ள சாதகமான மனநிலை கொண்டிருப்பார்கள்.
- மீகா தீர்க்கதரிசி முன்னறிவிப்பு செய்கிறார். அவர் பூவுலக தேசங்களை 'மலைகள்/பர்வதங்களென்றும்' கிறிஸ்துவின் இராஜ்யத்தை 'கர்த்தருடைய ஆலயத்தின் பர்வதமாகவும்' சித்தரிக்கிறார் – “கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா தேசங்களும் அதனிடத்திற்கு ஓடி வருவார்கள்.
திரளான தேசங்கள் புறப்பட்டுவந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போமென்பார்கள்;
ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும். அவர் திரளான ஜனங்களுக்குள் நியாயந்தீர்த்து, தூரத்திலுள்ள பலத்த ஜாதிகளைக் கடிந்துகொள்ளுவார்”. மீகா 4:1-3. - தீர்க்கதரிசியாகிய சகரியா விவரிக்கிறார்: அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு, "தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம். ஆகையால் உங்களோடேகூடப் போவோம்," என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார். சகரியா 8:23.
- அப்போஸ்தலனாகிய பவுல் உறுதிப்படுத்துகிறார்: "எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், தேவன் சித்தமுள்ளவராயிருக்கிறார். தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே. இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கும்." 1தீமோத்தேயு 2:3-6.
- மீகா தீர்க்கதரிசி முன்னறிவிப்பு செய்கிறார். அவர் பூவுலக தேசங்களை 'மலைகள்/பர்வதங்களென்றும்' கிறிஸ்துவின் இராஜ்யத்தை 'கர்த்தருடைய ஆலயத்தின் பர்வதமாகவும்' சித்தரிக்கிறார் – “கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா தேசங்களும் அதனிடத்திற்கு ஓடி வருவார்கள்.
-
துரிதமான, தீர்க்கமான நீதியும், நியாயமும்: பூமியில் நீதி நிலைநாட்டப்படும். துன்மார்க்கருக்கு பதிலாக நீதிமான்கள் துன்பப்படும் அவலம் தொடராது. ஆதியின் ஆதாமிலிருந்து இன்றுவரை நிகழ்ந்துகொண்டிருக்கும் மரபணு வழிமுறையின் விளைவான தகப்பனின் பாவங்களுக்காக பிள்ளைகள் தண்டிக்கப்படும் நிலைமை அன்று இருக்காது.
- நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம். சங்கீதம் 97:2.
- பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும், குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, நீதிமானுடைய நீதி அவன்மேல் தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும். எசேக்கியேல் 18:20.
- “பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள். அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான், எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும்”. எரேமியா 31:29-30.
-
நேர்மை இருக்கும்! சுரண்டலும், ஒடுக்கப்படுதலும், அடிமைத்தனமும் இருக்காது: இந்த புதிய உலகில் நீதி வாசமாயிருக்கும். அப்போஸ்தலனாகிய பேதுரு அத்தகைய ஒரு நியாயமான, நேர்மையான உலகை எதிர்நோக்குமாறு நம்மை கேட்கிறார் - "அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்." 2 பேதுரு 3:13.
அடிமைத்தனம், துஷ்பிரயோகம், சுரண்டல், மோசடி ஆகியவை முற்றிலும் இல்லாத உலகில் மனுக்குலம் வாழும்.
அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான். மீகா 4:4.
- தொடர்ச்சியான அடிப்படையில் நியாயத்தீர்ப்பு: உயிர்த்தெழுப்பப்பட்ட மனுக்குலத்தின் நியாயத்தீர்ப்பானது ஆயிரம் ஆண்டுகளுக்கு தொடர்ந்து நடைபெறும் ஒரு செயல்முறையாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் திருந்துவதற்கு குறைந்தது நூறு ஆண்டுகள் வாய்ப்பும் சோதனையும் கொடுக்கப்படும். நூறு ஆண்டுகளுக்குப் பின்னும் கீழ்ப்படியாதவர்களின் வாழ்வோ முடிந்துபோகும். ஏசாயா தீர்க்கதரிசி இதை இவ்வாறு முன்னுரைக்கிறார் - "அங்கே இனி அற்ப ஆயுசுள்ளபாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள், நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான், நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்." ஏசாயா 65:20.
-
இயற்கை பேரழிவுகளும், பஞ்சங்களும் வராது: இயற்கை பேரழிவுகள் குறித்தோ, பஞ்சம் குறித்தோ எந்தவித பயமும் இல்லாமல் மக்கள் ஒரு சீரான, பசுமையான சுற்றுச்சூழலுள்ள பூமியில் வாழ்வார்கள். ஏசாயா இந்த புதிய உலகம் பற்றி பாடுகிறார் -
"வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும். அது மிகுதியாய்ச் செழித்துப் பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும், லீபனோனின் மகிமையும், கர்மேல்சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்." ஏசாயா 35:1-2.
-
வறுமை இராது: ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பொருளாதார பாதுகாப்பு இருக்கும். வறுமை என்பது அறவே இராது.
அப்பொழுது நீ நிலத்தில் விதைக்கும் உன் விதைக்கு அவர் மழையையும், நிலத்தின் பலனாகிய ஆகாரத்தையும் தருவார், அது கொழுமையும் புஷ்டியுமாய் இருக்கும், அக்காலத்திலே உன் ஆடுமாடுகள் விஸ்தாரமான மேய்ச்சலுள்ள ஸ்தலத்திலே மேயும். ஏசாயா 30:23. வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். ஏசாயா 65:21. அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று. மீகா 4:4.
-
நோய்கள் / ஊனங்கள் இருக்காது: நோய்க்கிருமிகளாலும், வியாதிகளினாலும் மனுக்குலம் வாதிக்கப்படும் அவலம் அன்று இருக்காது. சரீர ஊனங்களோ, மனநலக் குறைபாடுகளோ முற்றிலும் இருக்காது. தீர்க்கதரிசி ஏசாயா இதை மிகவும் விவரமாய் குறிப்பிடுகிறார் -
"வியாதிப்பட்டிருக்கிறேன்," என்று யாரும் சொல்வதில்லை, ஏசாயா 33:24.
அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம்.
அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான், ஊமையன் நாவும் கெம்பீரிக்கும். ஏசாயா 35:5-6.
-
உலக சமாதானம்: தேவன் சார்பாக ஆளும் ஆட்சியாளர்கள் (இயேசுவும் அவர் தெரிந்துகொண்ட திருச்சபையும்) உயிர்த்தெழுப்பப்பட்ட தேசங்களுக்கு இடையே எல்லா சர்ச்சைகளையும் தீர்த்து சமாதானத்தை நிலைப்படுத்துவார்கள். போர்களும், சண்டைகளும் இல்லாத சமாதானத்தின் வாழ்விடமாய் பூமி விளங்கும்.
- இதைப்பற்றி சங்கீதக்காரன் பாடுகிறார் - அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார், வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார், இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார். சங்கீதம் 46:9.
- ஏசாயா முன்னறிவிக்கிறார் - அவருடைய அரசாங்கத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை. ஏசாயா 9:7.
- மீகா தீர்க்கதரிசனம் கூறுகிறார் - அவர் திரளான ஜனங்களுக்குள் நியாயந்தீர்த்து, தூரத்திலுள்ள பலத்த தேசங்களைக் கடிந்துகொள்ளுவார். அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை கதிரறுக்கும் அரிவாள்களாகவும் அடிப்பார்கள். ஒரு தேசத்திற்கு விரோதமாய் மறு தேசம் பட்டயம் எடுப்பதில்லை. இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை. மீகா 4:3.
-
முழுமையான அரசாதிக்கம்: பூமியின் அனைத்து தேசங்கள் மேலும் கிறிஸ்து முழுமையான கட்டுப்பாடும், இறையாண்மை ஆதிக்கமும் செலுத்துவார் - ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கிப் பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் [கிறிஸ்து] அரசாளுவார். ஆம், சகல இராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள், சகல தேசங்களும் அவரைச் சேவிப்பார்கள். சங்கீதம் 72: 8-11.
பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; தேசங்களுடையுய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும். இராஜ்யம் கர்த்தருடையது; அவர் தேசங்களை ஆளுகிறவர். சங்கீதம் 22:27-28.
ஆம், பூமியின் எல்லா தேசங்களும் கிறிஸ்துவின் இராஜ்யத்தின் முழுமையான ஆட்சிக்கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்.