சர்வ வல்ல தேவன் யார்?
- விவரங்கள்
- பிரிவு: எவரை வணங்குகிறோம்?
1) வேதாகமத்தில் ஒரு திரித்துவ தெய்வம் குறிப்பிடப்பட்டுள்ளதா?
திரித்துவம், திரியேகம், திரித்துவ தெய்வம் என்ற எந்த வார்த்தைகளும் வேதாகமத்தில் காணப்படவில்லை. சரி, திரித்துவக் கோட்பாடில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிற தலைப்புகளான - 'பிதாவாகிய தேவன்', 'குமாரனாகிய தேவன்', 'பரிசுத்த ஆவியானவராகிய தேவன்' - இவற்றில் ஏதேனும் பைபிளில் உண்டா? நாம் பைபிளில் தேடும்போது, இவற்றில் ஒன்றை மட்டுமே காணலாம் - 'பிதாவாகிய தேவன்'. இது புதிய ஏற்பாட்டில் 18 முறை தோன்றுகிறது. ஆனால், 'குமாரனாகிய தேவன்' மற்றும் 'பரிசுத்த ஆவியானவராகிய தேவன்' என்ற சொற்றொடர்கள் வேதத்தில் எங்கும் காணப்படவில்லை.
2) வேதாகமத்தில் மற்ற தேவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனரா?
வேதாகமத்தில் 'தேவன்' என்ற வார்த்தை 3500+ தரம் நிகழ்கிறது. கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் அவ்வார்த்தை சர்வ வல்லமையுள்ள தேவனை (கடவுளை) குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது.
ஆயினும் சில இடங்களில் 'தேவன்' என்ற வார்த்தை வேறுவிதமாக பயன்படுத்தப்படுவதையும் காண்கிறோம். அதனால்தான் பவுல் கூறுகிறார் - 'வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டு.' (1 கொரிந்தியர் 8:5). அப்படியென்றால், வேதாகமத்தில் வேறே தேவர்களை எங்கு காண்கிறோம்?
வல்ல தேவர்கள் - எலோஹிம் (elohim) மற்றும் தியோஸ் (theos)
பழைய ஏற்பாட்டு எபிரெயு வார்த்தை 'எலோஹிம்' (elohim - தேவன்) எந்த உயர் பிரமுகரையும் (உதாரணமாக ஆபிரகாம், ஆதியாகமம் 23:6) குறிக்க முடியும். ஆங்கில/தமிழ் பைபிள்களில், அவ்வார்த்தை தேவன், மகத்தானவர், வல்லவர் என வெவ்வேறு இடங்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஆக, எலோஹிம் (elohim - தேவன்) என்ற வார்த்தை கடவுளைக் குறிக்க மட்டும் பயன்படுத்தப்படாமல், நீதிபதிகள், தேவதூதர், தேவகுமாரர் மற்றும் தீர்க்கதரிசிகளையும் குறிக்க பயன்படுத்தப்பட்டு உள்ளது.
எலோஹீமின் புதிய ஏற்பாட்டு கிரேக்க இணை வார்த்தை 'தியோஸ்' (theos - தேவன்) ஆகும். புதிய ஏற்பாடு பழைய ஏற்பாட்டை மேற்கோள் சொல்லும்போதெல்லாம், எலோஹிமைக் குறிக்க தியோஸ் பயன்படுத்தப்படுகிறது. ஸ்டராங்'ஸ் அகரவரிசை அட்டவணை (Strong's Concordance) அவ்வார்த்தையை 'ஒரு தேவன்.. உருவகமாக ஒரு நீதிபதி ', என வரையறுக்கிறது.
- யோவான் 10:35-ல் தியோஸ் (theos - தேவன்) கடவுளை வணங்குபவர்களை (குமாரர்களை) குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
- இவ்வார்த்தை இயேசுவை குறிக்க ஆறு முறை பயன்படுத்தப்படுகிறது - யோவான் 1:1,18; 20:28; தீத்து 2:13, எபிரெயர் 1:8, 2 பேதுரு 1:1.
- இதே வார்த்தை சாத்தானை குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது! - 2 கொரிந்தியர் 4:4.
இவற்றில் இருந்து நாம் கற்றுக்கொள்வது என்னவென்றால் வேதாகமத்தில் எந்தவொரு வல்லமை வாய்ந்த ஜீவியும் தேவன் (எலோஹிம் / தியோஸ்) என அழைக்கப்படலாம்.
3) 'எலோஹிம்' / 'தியோஸ்' வார்த்தை மூல வேதாகமத்தில் காணப்படும் இடங்களில் அது ஏதோ ஒரு வல்ல தேவனை குறிக்கிறதா, அல்லது சர்வ வல்ல தேவனை (கடவுளை) குறிக்கிறதா என்பதை நாம் எவ்வாறு அறிய இயலும்?
சர்வ வல்ல தேவனை குறிக்காத இடங்களில் ஆங்கில பைபிள்கள் பெரும்பாலும் அதனை சிறு எழுத்துகளில் ('god') காட்டியுள்ளன. ஆனால் சில இடங்களில் பெரிய எழுத்துகளிலும் ('God') மொழிபெயர்த்துள்ளன (சற்று குழப்பம்தான்!). அத்தகைய சந்தர்ப்பங்களில், கிரேக்க வரையறு சுட்டு வார்த்தையானது (article 'the') சர்வ வல்ல தேவனை வேறுபடுத்திக் காட்ட உதவுகிறது. மேலும் வார்த்தையின் சூழலும் (context) சரியான அர்த்தம் காண பயன்படுகிறது. (யோவான் 1:1 பற்றி பின்னர் படிக்கும்போது இதை பயில்வோம்).
ஒரு சுவாரஸ்யமான ஒரக்குறிப்பு - இந்த வார்த்தைகள் ஒரு தடவை கூட பரிசுத்த ஆவியை குறிக்க உபயோகப்படுத்தப்படவில்லை.
சர்வ வல்ல தேவன் - கர்த்தர் (The LORD)
4) பல தேவர்கள் (வல்லவர்கள்) உண்டென்றால், சர்வ வல்ல தேவன் (கடவுள்) யார்?
வேதப்பூர்வமாக, சர்வ வல்ல தேவன், உன்னதமானவர், கடவுள் என அடையாளம் காணப்படுபவர் யார் என்பதில் எந்த குழப்பமும் இல்லை.
உதாரணமாக, அப்போஸ்தலனாகிய பவுல் அதை தெளிவாக வெளிப்படுத்துகிறார் -
'வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு.' 1 கொரிந்தியர் 8:5-6.
'பிதாவாகிய தேவன்' என்ற சொற்றொடர் வேதாகமத்தில் ஒரு பட்டமாக பயன்படுத்தப்படவில்லை, மாறாக 'பிதா தான் தேவன்' என்ற கருத்து வெளிப்பாடாகவே (expression) உபயோகிக்கப்படுகிறது.
இயேசுவே வெளிப்படையாக பிதா தான் ஒரே மெய்யான சர்வ வல்ல தேவன் (கடவுள்) என்று கூறுகிறார் -
இயேசு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து, "பிதாவே, நீர் உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்," என்றார். யோவான் 17:1-3.
5) உண்மையில் பிதா யார்?
- எபிரெயர் 1:5 கூறுகிறது: 'நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று அவர் தூதர்களில் யாருக்காவது சொன்னதுண்டா?'
- இங்கே பவுல் பழைய ஏற்பாட்டை மேற்கோள் காட்டுகிறார் - 'தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன், ' என்றார். (சங்கீதம் 2:7).
இதன் மூலம், பழைய ஏற்பாட்டின் கர்த்தர் தான் புதிய ஏற்பாட்டில் பிதா என குறிப்பிடப்படுவதை நாம் அறிகிறோம்.
சில வேதாகமங்களில் இந்த கர்த்தர் தடித்த எழுத்துக்களில் (bold letters) காட்டியிருக்க காணலாம். அதற்கு ஒரு காரணம் உண்டு. அதனை பேராசிரியர் சிட்னி சுதந்திரன் 'பரிசுத்த வேதாகமம் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டம்' நூலில் இவ்வாறு விளக்குகிறார் –
"பழைய ஏற்பாட்டில் எபிரேய மொழியில் கடவுளுடைய சொந்தப் பெயர் “யாவே” என்ற சொல்லுக்குப் பதிலாக யூதர்கள் பயன்படுத்திய “அதோனை” என்ற காரணப் பெயரை ஆங்கிலத்தில் லார்டு (LORD) என்று மொழிபெயர்த்துள்ளனர். இது தமிழில் “கர்த்தர்” என்று பப்ரீஷியஸால் மொழிபெயர்க்கப்பட்டுளளது." (பக்கம் 22 முதல் 24).
ஆம், இது மற்ற விவிலியங்களுக்கும் பொருந்தும் உண்மை. என்.ஐ.வி. (NIV) ஆங்கில பைபிளின் அகரவரிசை அட்டவணை கூறுகிறது – “இந்த பைபிளில் 'லார்டு' (LORD எல்லாம் பெரிய எழுத்துக்களில்) என்ற வார்த்தை கடவுளுடைய சொந்த பெயரை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த பெயரின் எபிரெய வார்த்தை யாவே (Yahweh) ஆகும்.”
‘LORD (in all capital letters) is used in this Bible to refer to the personal name of God. The Hebrew word for this name is Yahweh’.
யாவே என்ற கடவுளுடைய பெயர் அடிக்கடி பயன்படுத்த மிகவும் பரிசுத்தமானதாக கருதப்பட்டது. எனவே, மாற்று வார்த்தைகள் (ஆங்கிலத்தில் LORD, தமிழில் கர்த்தர்) பயன்படுத்தப்பட்டன.
முக்கிய குறிப்பு: இந்த தடித்த எழுத்து 'கர்த்தர்' (LORD all capital letters) வார்த்தையையும், சாதாரண எழுத்து 'கர்த்தர்' (Lord) வார்த்தையையும் நாம் குழப்பிக்கொள்ளக்கூடாது.
- தடித்த எழுத்து 'கர்த்தர்' (LORD) யாவே தேவனை மட்டுமே குறிக்கிறது.
- சாதாரண எழுத்து 'கர்த்தர்' (Lord) - சில வேதாகமங்களில் 'ஆண்டவர்' (Lord) என்றும் குறிக்கப்படும் சொல் - என்றால் 'எஜமான்' என்று அர்த்தம் (எபிரெயத்தில் அதோனாய் adonai, கிரேக்கத்தில் க்யூரியோஸ் kurios). சூழலின் அடிப்படையில் எந்த எஜமானையும் குறிக்க முடியும்.
குறிப்பு: துரதிருஷ்டவசமாக சில தமிழ் வேதாகமங்கள் யாவே தேவனின் பெயர் குறிக்கும் கர்த்தர் வார்த்தையை தடித்த எழுத்துகளில் வேறுபடுத்திக் காட்ட தவறுகின்றன. அது போதாததென்று சில தமிழ் வேதாகமங்கள், எஜமான் என்று பொருள்படும் (யாவே LORD தேவனைக் குறிக்காத) சாதாரண கர்த்தர் (Lord) வார்த்தையை தடித்த எழுத்துகளில் போட்டு மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. அதனால், எப்பொழுதும் சூழல் (context) பார்த்து 'கர்த்தர்' வார்த்தையை சரியாக புரிந்து கொள்வது மிக அவசியம். ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஆங்கில பைபிள்களையும் (LORD vs Lord) குறிப்பு பார்த்துக்கொள்ளலாம்.
யாவே என்ற பெயர் 'சுயமாய் இருக்கிறவர்' (Self-Existent), அல்லது 'நித்தியமானவர்' (Eternal One) என்று பொருள்படும் (ஆதாரம் - டாக்டர் ஜேம்ஸ் ஸ்ட்ராங்). வேதாகமத்தில் இந்த பெயர் பிரபஞ்சத்தின் படைப்பாளராகிய சர்வ வல்ல தேவனை குறிக்க மட்டுமே பிரத்தியேகமாக பயன்படுத்தப்படுகிறது. மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், யாவே என்ற பெயர் வேறு எவருக்கும் உபயோகம் செய்யப்படவில்லை.
6) சரி, யாவே தேவனுக்கு ஏதேனும் தனிச்சிறப்பு உண்டா என்ன?
'நம்முடைய தேவனாகிய கர்த்தர், கர்த்தர் ஒருவரே' என்பது பைபிளின் பழைய ஏற்பாட்டின் அடித்தளமான உபதேசம் (உபாகமம் 6:4). இதை இன்னும் சரியாக 'நம்முடைய தேவனாகிய யாவே, அந்த யாவே ஒருவரே!' என படிக்கலாம்.
'நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசியுங்கள். எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை. நான், நானே கர்த்தர் [யாவே]"(ஏசாயா 43: 10-11).
கட்டளைகளில் எல்லாம் பிரதான கட்டளை என்னவென்று கேட்டபோது, இயேசு பிரதியுத்தரமாக, "பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் [யாவே], கர்த்தர் [யாவே] ஒருவரே. உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் [யாவேயினிடத்தில்] உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை," என்றார் (மாற்கு 12: 29-30).
7) 'யாவே ஒருவரே' என்று இயேசு சொல்லும்போது அவர் சுட்டிக்காட்டும் முக்கிய விஷயம் என்ன?
அவர் உபாகமம் 6:4-ஐ மேற்கோள் காட்டுகிறார். யாவே கடவுள் ஒருமைத்தன்மை (singularity) வாய்ந்தவர் என்ற ஆதி இஸ்ரவேல் யூத மூதாதையரின் விசுவாசத்தை இயேசு இங்கு வலியுறுத்துகிறார். யூதர்கள் யாவே தேவனை வணங்கி வந்தனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இஸ்ரவேல் தீர்க்கதரிசிகளால் யாவே தேவனின் ஒருமைத்தன்மை அழுத்தமாக அறிவிக்கப்பட்டு வந்தது.
வேத வசனங்கள் அனைத்தும் சீராக யாவே தேவனை ஒருமைத்தன்மை வாய்ந்தவராக சித்தரித்துக் காட்டின. அதனால்தான் பண்டைய புறச்சமய மதங்கள் பன்மைத்தன்மை வாய்ந்த மும்மூர்த்தி தெய்வங்களையும் திரித்துவ கடவுள்களையும் ஊக்குவித்தபோதிலும், இஸ்ரவேலின் யூத விசுவாசமானது அதன் ஒருமைத்தன்மை வாய்ந்த கடவுள் மீதான தீவிர பற்றுறுதிக்கு பெயர் போனதாக இருந்தது.
யாவே தேவன் ஈடு இணையற்றவர், ஒருமைத்தன்மை வாய்ந்தவர், என்றும் மாறாதவர், அநாதியாய் என்றென்றைக்குமிருக்கிறவர், சுயமாய் நீடித்திருக்கிறவர், உன்னதமானவர் என்று நம்பினார்கள். இயேசுவும் இதையே தம் சீடர்களுக்கு கற்பித்தார். மட்டுமின்றி இதை அவர் பிரதான கட்டளை என அழைத்தார். அவரது போதனைகளில் எவற்றிலுமே திரித்துவ தெய்வம் போன்ற பன்மைத்தன்மை வாய்ந்த கடவுள் காணப்படவில்லை.
8) இப்படியிருக்க பன்மைத்தன்மை வாய்ந்த திரித்துவ தெய்வத்திற்கு ஆதாரமாக மேற்கோள் காட்டப்படும் சில வசனங்கள் பற்றி நாம் என்ன அறிந்து கொள்ள வேண்டும்?
திரித்துவ தெய்வத்தை ஆதரிப்பதற்கு பெரும்பாலும் மேற்கோள் காட்டப்படும் வசனங்களாவன: யோவான் 1:1 (அதனை சிறிது நேரத்தில் படிப்போம்), யோவான் 20:28. (இவை தவிர வேறு சில வசனங்களில் தெளிவு பெற, தயவுசெய்து இந்த ஆய்வை படிக்கவும்).
யோவான் 20:28-ல், உயிர்த்தெழுந்த இயேசுவை பார்த்து, அவர் சீடன் தோமா, "என் ஆண்டவரே! என் தேவனே!" என்றான். இங்கு பயன்படுத்தப்படும் ‘தேவன்’ என்ற வார்த்தை (கிரேக்க தியோஸ் theos - வல்லமை வாய்ந்தவன்), தோமா தன் ‘ஆண்டவனுக்கு’ (Master - எஜமானுக்கு) காட்டும் பிரமிப்பு மிக்க மரியாதைக்குரிய சொற்கூறு ஆகும்.
உண்மையில், அதே அதிகாரத்தில் இயேசு, "நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன்," (யோவான் 20:17) என்று மகதலேனா மரியாளுக்கு விளக்குகிறார்.
இதன் மூலம் இயேசு மிகத்தெளிவாக பிதாவை அனைவரின் தேவனாக அங்கீகரிக்கிறார். மேலும் பிதா தன்னை விட வேறுபட்டு தனித்துவம் வாய்ந்தவர் என்பதையும் அழகாக சித்தரிக்கிறார்.
சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், பவுல் சொன்னபடி, பிதாவே நம் அனைவரின் தேவனாக (கடவுளாக) இருக்கிறார். அவர் நாமம் யாவே (கர்த்தர்), அவரே சர்வ வல்லமையுள்ள தேவன் (ஆதி 17:1, வெளி. 1:8). இயேசுவும் பிதாவையே வழிபட்டு, பிதா தான் ஒரே உண்மையான கடவுள் என்று அறிவித்தார்.