ஆவிக்குரியனவும், மாம்சத்திற்குரியனவும்
- விவரங்கள்
- பிரிவு: திருச்சபை: பரம அழைப்பு
கருப்பொருள் வசனம்: மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனாம். ரோமர் 8:6.
1) “அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள், ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். மாம்சசிந்தை மரணம்: ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்”. ரோமர் 8:5-6. இங்கே ஒன்றுக்கொன்று எதிராயிருக்கும் மாம்சம், ஆவி என்ற இரண்டின் அர்த்தம் என்ன?
மாம்ச சிந்தனை என்பது பாவத்தை குறிக்கிறது என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் பவுல் இங்கு 'பாவ சிந்தனை' என்று சொல்லவில்லை. மாறாக, 'மாம்சம்' என்ற வார்த்தையை அவர் பயன்படுத்துகிறார். மாம்சத்தின் செயல்கள் பாவம் மட்டுந்தானா? இல்லை, நாம் உலக வாழ்வில் செய்யும் அனைத்து விசயங்களுமே மாம்சத்திற்குரியவைதான்.
இயேசு சொல்கிறார், "தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழக்கிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்." மாற்கு 8:35. ஆம், இந்த உலகில் ஒரு நேர்மையான வாழ்க்கை வாழ முயலும் மக்கள் கூட நிச்சயமாக இறந்துதான் போவார்கள்.
‘தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்’ = 'மாம்சசிந்தை மரணம்’
- நாம் உலக மக்களைப்போல் உலகப்பிரகாரமான வாழ்க்கைக்குரிய (வேலை, திருமணம், குடும்பம் போன்ற) விசயங்கள் பற்றிய சிந்தனையோடு வாழ்ந்தால், அது நம்மை மரணத்திற்குத்தான் இட்டுச்செல்லும்.
- யோவான் எச்சரிக்கிறார், ‘உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள். ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை’. 1யோவான் 2:15. ஆம், உலகப்பிரகாரமான விசயங்களை (அவை நியாயப்பூர்வமானதாக இருந்தாலும்) நாட்டம் கொண்டு தேடும் எவரும் கடவுளைப் பிரியப்படுத்த முடியாது.
- இந்த வீழ்ந்து போன உலகில், நம் பார்வையில் ஒழுக்கமாகவும் நேர்மையுமாகவும் தோன்றுகின்ற உலகப்பிரகாரமான வாழ்க்கைகூட அடிப்படையில் தேவனுடைய பார்வையில் பிரியமில்லாத வாழ்க்கையாய் இருக்கிறது என்பதே உண்மை. பவுல் கூறுகிறார் - 'எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை: அது தேவனுக்கு கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள்.' ரோமர் 8:7-8.
2) உலகப்பிரகாரமான (மாம்ச) வாழ்க்கை மரணத்திற்கு இட்டுச்செல்லும் என்றால், பவுலின் அறிவுரையின்படி நாம் என்னதான் செய்ய வேண்டும்?
“பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்திற்கு விரோதமாகவும் இச்சிக்கிறது. நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது. ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல”. கலாத்தியர் 5:16-18.
மறுபடியும் இங்கே பயன்படுத்தப்படும் வார்த்தை 'பாவம்' அல்ல, ‘மாம்சம்’ என்று காண்கிறோம். பவுல் தொடர்கிறார்: “மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன. இவையாவன: விபச்சாரம், வேசித்தனம், அசுத்தம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள்.. முதலானவைகளே.” கலா 5:19-21.
பவுல் சொல்லவரும் கருத்து இதுதான் - நாம் மாம்சத்தின்படி வாழ முயன்றால், அது ஒரு நேர்மையான வாழ்க்கை வாழ்வதற்கான முயற்சியாக இருப்பினும் கூட, நிச்சயமாக இத்தகைய பயனற்ற செயல்களுக்கே - அதாவது நம் சுவிசேஷ ஓட்டத்திற்கு பயனற்ற செயல்களுக்கே - அந்த முயற்சிகள் நம்மை இறுதியில் இட்டுச்செல்லும்.
மாறாக, நாம் ஆவிக்கேற்றபடி நடக்கவேண்டும். நாம் முன்பு படித்தவாறு, சுவிசேஷத்தை அறிவிக்க திருச்சபையை பலப்படுத்துவதற்கே ஆவியின் அபிஷேகம் அளிக்கப்படுகிறது (அப்போஸ்தலர் 1:8, 4:31). ஆக, ஆவிக்கேற்றபடி நடப்பதென்றால் சுவிசேஷத்தை அறிவிக்கும் பணி செய்வதே ஆகும்.
“ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல. மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்”. ரோமர் 8:12-13.
இங்கே 'சரீரத்தின் பாவங்கள்' என்று சொல்லவில்லை. 'சரீரத்தின் செய்கைகள்' என்று சொல்கிறார். அதாவது சரீரத்தில் செய்யும் எல்லா செயல்களுமே. பவுல் இங்கே கூறும் விசயம் இயேசு மாற்கு 8:35 வசனத்தில் சொன்ன கோட்பாட்டுடன் முற்றிலும் ஒத்துப்போகிறது.
“என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழக்கிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்” = “ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள்”.
இதுவே நம் ஞானஸ்நான உடன்படிக்கையுமாகும் – நாம் நம்மை இவ்வுலக வாழ்விற்கு மரித்தவர்களாகவும், கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்காகவே உயிர்வாழ்பவர்களாகவும் எண்ணுகிறோம்.
3) ஒருவர் எவ்வாறு ஆவியின் கனிகளைப் பெறலாம்?
“ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம். கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம்”. கலாத்தியர் 5:22-25.
ஆம், நமது ஞானஸ்நானத்தில், நம் பாவத்தை மட்டுமல்ல, மாம்சத்தின் எல்லா காரியங்களையும் நாம் சிலுவையில் அறைகிறோம். ஞானஸ்நானம் என்பது உலகத்திற்கு மரிப்பதாகும். இறந்துபோன மனிதர்களுக்கு பூமிக்குரிய ஆசபாசங்கள் எதுவும் கிடையாது!
எனவே நாம் சுவிசேஷ வேலைகள் செய்வதில் (ஒரு பொழுதுபோக்காக செய்வதாக இல்லாமல்) நம் முழு வாழ்க்கையையும் கவனம் செலுத்தினால், நாம் ஆவிக்கேற்றபடி நடந்து ஆவியின் கனிகளை வெளிப்படுத்துபவர்களாக திகழ்வோம் – சாந்தமாக சுவிசேஷத்தை பிரசங்கிப்பதன் மூலம் நாம் உலக மக்களை அன்புகூர்ந்து, அவர்களுக்கு உண்மையான நன்மையை அளித்து, சுவிசேஷத்தின் காரணமாக அவர்கள் நம்மை துன்புறுத்தும்போதிலும் நீடியபொறுமையையும் சுயக்கட்டுப்பாட்டையும் காண்பித்து, தேவனுடைய பணியை செய்வதில் சந்தோஷத்தையும், சமாதானத்தையும் அனுபவிப்போம்.
4) நமது ஆவிக்குரிய ஞானஸ்நான உடன்படிக்கையிலிருந்து நம்மைத் திசைதிருப்பக்கூடிய சில மாம்சத்திற்குரிய காரியங்கள் யாவை?
-
திருமணம் – பழைய ஏற்பாட்டில், திருமணம் ஒரு ஆசீர்வாதமாக கருதப்பட்டது. ஆனால் திருச்சபைக்கு அப்படி இல்லை. பவுல் கூறுகிறார்: “அதென்னவெனில், விவாகமில்லாமலிருக்கிறது மனுஷனுக்கு நலமாயிருக்குமென்று எண்ணுகிறேன். நீ மனைவியோடே கட்டப்பட்டிருந்தால், அவிழ்க்கப்பட வகைதேடாதே. நீ மனைவி இல்லாதவனாயிருந்தால், மனைவியைத் தேடாதே. நீ விவாகம்பண்ணினாலும் பாவமல்ல.. ஆகிலும் அப்படிப்பட்டவர்கள் மாம்சத்தின் வாழ்விலே உபத்திரவப்படுவார்கள். அதற்கு நீங்கள் தப்பவேண்டுமென்றிருக்கிறேன். மேலும், சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், இனிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகளில்லாதவர்கள் போலவும், கொள்ளுகிறவர்கள் கொள்ளாதவர்கள்போலவும், இவ்வுலக விசயங்களில் ஈடுபடுபவர்கள் அவற்றிலே ஆழ்ந்துவிடாமல் ஈடுபடுவது போலவும் இருக்கவேண்டும்.
இவ்வுலகத்தின் வேஷம் கடந்துபோகிறதே. நீங்கள் கவலையற்றவர்களாயிருக்க விரும்புகிறேன். விவாகமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். விவாகம்பண்ணினவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். அதுபோல, விவாகமில்லாதவள் கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள். விவாகம்பண்ணினவள் தன் புருஷனுக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள். இதை நான் உங்களைக் கண்ணியில் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாயிருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்தரைப் பற்றிக்கொண்டிருக்கவேண்டுமென்றும், உங்கள் சுயபிரயோஐனத்துக்காகவே சொல்லுகிறேன்”. 1கொரிந்தியர் 7:26-35.
ஆம், சக விசுவாசி ஒருவரை திருமணம் செய்து கொள்ள தடையேதும் இல்லை. ஆனால் தவிர்க்க முடிந்தவர்கள் தவிர்த்துக்கொள்ளலாம். திருமணம் செய்துக்கொண்டவர்கள் கூட செய்யாதவர்கள் போல வாழ வேண்டும்! இவையெல்லாம் சிதறாத முழு ஈடுபாட்டுடன் தேவனை சேவிக்கும் பொருட்டே ஆகும். -
வேலை / செல்வம் - பவுல் ஒரு பெரிய அறிஞர், ஆனால் அவர் தனது சுவிசேஷ பயணங்களுக்கு ஏற்றாற்போல ஒரு கூடாரம் கட்டுபவராக தன்னை மாற்றிக்கொண்டார். நாமும் நம் சுவிசேஷ காரியங்களுக்கு ஏற்றவாறு, தகுந்த வேலை அல்லது தொழிலை தேர்ந்தெடுக்க வேண்டும்.
செல்வமும் திருச்சபைக்கு ஒரு கவனச்சிதறல் ஆகும். இயேசு, “ஐசுவரியவான் தேவனுடைய இராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்,” என்று எச்சரிக்கிறார். மத்தேயு 19:24. -
குடும்பம் – இயேசுவுக்கு தெள்ளத்தெளிவாக பேசுகிறார்: “எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே”. மத்தேயு 10:35-36. நம்முடைய குடும்பம் சத்தியத்தில் இல்லை என்றால், நாம் நற்செய்திப்பணிக்காக ஏதேனும் ஒரு தியாகம் செய்ய வேண்டுமென நினைக்கையில் அவர்கள் நம்மை தடுத்து நிறுத்த முயற்சிப்பார்கள். அவர்களுடைய கவனம் எல்லாம் நம் பூமிக்குரிய நல்வாழ்வில் மட்டுமே இருக்கும்.
ஒரு அன்பான குடும்பத்திலிருந்து வரும் நெருக்குதல்களை கையாள்வது எப்போதுமே எளிதான விசயமல்ல. ஆனால் நாம் அடிபணிந்துபோனால், அது நம் சுவிசேஷ ஓட்டத்தை காயப்படுத்தும். அதனால்தான் இயேசு அவர்களை சத்துருக்கள் என்று அழைக்கிறார்.
ஒரு விதத்தில், நாம் போர்வீரர்களைப் போல இருக்கிறோம். போராடுவதற்கு ஒரு போர் இருக்க பொதுமக்கள் விவகாரங்களில் வீரர்கள் சிக்கிக்கொள்ளலாமா? பவுல் கூறுகிறார்: "நீயும் இயேசு கிறிஸ்துவுக்குள் நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி. தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தனக்கு கட்டளையிடும் தளபதிக்கு [இயேசு கிறிஸ்துவிற்கு] ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான்." 2தீமோ 2:3-4.
மேலும் இயேசு கிறிஸ்து நம்மை பூமியில் வாழ்வதற்குரிய பொதுமக்களுக்குரிய தேவைகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம் எனவும், மாறாக தேவனுடைய இராஜ்யத்தை தேடவும், அதாவது இராஜ்யத்தின் நற்செய்தியை சேவிக்கவும் அறிவுறுத்துகிறார் - “ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள், இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய இராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள், நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்”. மத்தேயு 6:31-34.
5) சுவிசேஷத்திற்காக இவ்வளவு தியாகங்களையும் / சோதனைகளையும் / உபத்திரவங்களையும் நாம் எப்படிதான் சகித்துக்கொள்வது?
நாம் பவுலின் மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும் - “மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகைள நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்." 2கொரிந்தியர் 4:17-18.
இதே மனப்பாங்குதான் இயேசுவையும் செயல்பட செய்தது – “அவர் தமக்குமுன் வைக்கப்பட்டிருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் அமர்ந்தார்." எபிரேயர் 12:2.
இதனை அவரது பாடுகளின் போது நாம் பார்க்கிறோம் – பிரதான ஆசாரியன் அவரை நோக்கி, "நீ ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா?" என்று கேட்டான். அதற்கு இயேசு, "நான் அவர் தான். மனுசகுமாரன் சர்வவல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள்," என்றார். மாற்கு 14:61-62.
இயேசு அவனுக்கு வெறும் 'ஆம், நான்தான்' என்று பதில் அளிக்கவில்லை, மாறாக எதிர்காலத்தில் தனக்கு வரவிருக்கும் மகிமை பற்றி பேசுகிறார். ஏனெனில் அவரது மனதின் கவனமெல்லாம் அதின்மேல்தான் இருந்தது. அந்த மகிழ்ச்சியானது அவருக்கு பாடுகளை சகிக்க உதவியது.
நாமும் அதுபோலவே இயங்க வேண்டும் – “ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்”. ரோமர் 8:18. சரி, நமக்கு முன்னே வைக்கப்பட்டிருக்கும் சந்தோஷங்கள் என்ன?
-
குடும்பம் - நாம் கிறிஸ்துவைப் பின்பற்றுகையில், நமது மாம்சத்திற்குரிய குடும்பத்தினர் நம்மை வெறுக்கலாம், ஆனால் நாம் தேவனுடைய சொந்த குடும்பத்தில் தத்தெடுக்கப்படுகிறோம். இப்பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர்தாமே நமக்கு அன்பான தகப்பன் ஆகிறார் – "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்." யோவான் 1:12.
மேலும், கிறிஸ்துவுக்குள்ளான சகோதர, சகோதரிகள் என ஆவிக்குரிய குடும்பம் ஒன்றை நாம் பெறுகிறோம். அக்குடும்பத்தில் இயேசு தான் நம் மூத்த சகோதரர் - இயேசு பிரதியுத்தரமாக, "என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும், இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்,” என்றார். மாற்கு 10:29-30. - பரலோகம் – இயேசு நமக்கு வாக்களிக்கிறார், “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு, நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்”. யோவான் 14:2-3. ஆம், பரலோகத்தில் ஓர் இடத்தை நாம் பெறப்போகிறோம்!
- அமரத்துவமும், நித்திய ஜீவனும் – ஆம், நாம் அமரர்களாக, அதாவது, அழியாத்தன்மை கொண்டவர்களாக மாறிவிடுவோம் (1கொரி 15:53)! இன்றைய வாழ்க்கையில் நாம் வெறும் 70-80 ஆண்டுகள் மட்டுமே பாடு அனுபவிக்கிறோம், ஆனால் நம்முடைய ஆசீர்வாதமோ கோடானுகோடி ஆண்டுகள் நீடிக்கும். அவற்றில் முதல் கோடி ஆண்டுகள் கழித்து இன்று நாம் படும் துன்பங்களை நினைவு கூட வைத்திருப்போமா, என்ன?
- அரசுரிமை – நாம் கிறிஸ்துவோடு மனிதகுலத்தை ஆளும் ஆட்சியாளர்களாக இருப்போம் (வெளி 2:26-27). என்ன ஒரு மகிமையான சக்தி வாய்ந்த பதவி! மேலும், இதுவே இன்றைய வாழ்வில் நாம் சோதிக்கப்பட வேண்டிய முக்கிய காரணம். வெறும் சாதாரண உலக வேலைகளுக்கு கூட எத்தனை சுற்று நேர்காணல்கள் நடத்தப்படுகின்றன! முறையான பரிசோதனை இல்லாமல் பரலோக பதவிகள் அளிக்கப்பட முடியுமா, என்ன?