விசுவாசமும், புனிதமும்

 கருப்பொருள் வசனம்: ‘வாயினால் அறிக்கைபண்ணினால் இரட்சிக்கப்படுகிறோம்.' ரோமர் 10:10. 'நீங்களோ இராஜரீகமான ஆசாரியக்கூட்டமாய் இருக்கிறீர்கள்.' 1பேதுரு 2:9.

வேதவாக்கியங்களை நாம் வாசிக்கும்போது, இராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிக்கும் சுவிசேஷ ஓட்டத்தில் ஓட நம் வாழ்வை அர்ப்பணிக்கும்படி தேவன் நம்மை கேட்பதற்கு பல பரிமாணங்கள் அடங்கிய நோக்கம் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். அந்த சுவிசேஷ ஓட்டத்தை நாம் ஓடும்போது நாம் சாதிக்கும் முதல் இரண்டு காரியங்களை தற்பொழுது நாம் பார்க்கலாம்.

விசுவாசத்தை நிரூபி!

சுவிசேஷ ஓட்டத்தை நாம் ஓடும்போது நாம் சாதிக்கின்ற அதிமுக்கியமான ஒரு காரியம் என்னவெனில் நம் விசுவாசத்தை நிரூபிக்கிறோம்!

  • பவுல் தெளிவாகக் கூறுகிறார் – ‘கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நாம் இருதயத்திலே விசுவாசித்து நீதிமானாகிறோம், விசுவாசிப்பதை வாயினால் அறிக்கைபண்ணினால் இரட்சிக்கப்படுகிறோம்.' ரோமர் 10:9-10.
  • அவர் சத்தமிடுகிறார் – 'சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ!' 1கொரிந்தியர் 9:16.

ஆம், இதுவே விசுவாசத்தின் சோதனை. மற்றவர்களுக்கு சுவிசேஷத்தை பிரசங்கிப்பது கிறிஸ்துவின் சீடர்களாக நாம் இரட்சிக்கப்பட வேண்டியதற்கான அடிப்படைத் தேவையாகும்!

ஆசாரிய கடமை நிறைவேற்று / பரிசுத்தமாகு / புனிதம் அடை!

வேதாகமப்படி திருச்சபையில் குருமார்கள் / பாமரமக்கள் என எந்த பாகுபாடும் கிடையாது. கிறிஸ்துவை பின்பற்றும் ஒவ்வொருவருமே ஓர் ஆசாரியர் (குருமார்) தான்! சொல்லப்போனால் ஒவ்வொருவரும் இராஜரீக ஆசாரியக்கூட்டத்தில் ஓர் அங்கம்! இந்த ஆசாரியத்துவத்தின் கடமைதான் என்ன என யோசிக்கிறீர்களா?

  • பேதுரு பதில் கூறுகிறார் – நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், இராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த தேசமாயும், அவருக்குச் சொந்தமான ஐனமாயும் இருக்கிறீர்கள். 1பேதுரு 2:9.
  • பவுல் உறுதிப்படுத்துகிறார் – நான் தேவனுடைய சுவிசேஷ ஊழிய கடமையை செய்யும் ஆசாரியனாக எனக்கு கிருபை அளித்தார். ரோமர் 15:15-16.

புனிதம் அடைதல் / பரிசுத்தமாகுதல் என்றால் பாவமில்லாத நிலை அடைவது என பலர் நினைக்கிறார்கள்.
அது சரிதானா? சரியான அர்த்தம்தான் என்ன?

  • இயேசு கூறுகிறார், “அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்”. யோவான் 17:19. இயேசு தன்னைத்தானே பரிசுத்தப்படுத்த விரும்புகிறார்! அவர் பாவத்தை விட்டுத்தொலைக்க முயன்றுகொண்டிருந்த பாவம்மிகுந்த மனிதனா என்ன? இல்லை, அவர் ஏற்கனவே ஒரு பாவமற்ற பரிபூரண மனிதன் என நாம் அறிவோம். எனவே பரிசுத்தமாகுதல் / புனிதம் அடைதல் என்றால் பாவமற்றவர்களாக ஆவது என்று அர்த்தமல்ல!
  • 'பரிசுத்தம்/புனிதம்' என்பதன் கிரேக்க மூலச்சொல் ‘ஹாகியோஸ்’ (hágios) ஆகும். இதற்கு 'பிரித்தெடுக்கப்படுதல்' என்று பொருள். ஆனால் பிரித்தெடுக்கப்படுவது எதற்காக?
    இயேசு பதிலளிக்கிறார் – “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்: உம்முடைய வசனமே சத்தியம்”. யோவான் 17:17. இவ்வசனம் இன்னும் சிறப்பான மொழிபெயர்ப்பில் இவ்வாறு உள்ளது: "உம்முடைய சத்தியத்தினாலே உமது சேவைக்கு அவர்களைத் தயார்படுத்தும். உமது போதனையே சத்தியம்."
    ஆம், நாம் தேவனையும் அவரது சத்தியத்தையும் சேவிப்பதற்கு பிரித்தெடுக்கப்படுகிறோம். இதுவே நம்மை பரிசுத்தமாக்கும் சுவிசேஷ சேவை. இயேசு தொடர்ந்து கூறுகிறார், “நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன்." யோவான் 17:18.
    இயேசு எதற்காக அனுப்பப்பட்டார்? – அவர், "நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய இராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன்," என்றார். லூக்கா 4:43. ஆம், இயேசு தேவனின் இராஜ்ய சுவிசேஷத்தை சேவிப்பதன் மூலமே தன்னை பரிசுத்தப்படுத்தினார். நாமும் அவரைப் போலவே உலகத்தில் அனுப்பப்படுகிறோம்!
  • தேவன்தாமே எல்லோரிலும் பரிசுத்தமாக (பிரித்தெடுக்கப்பட்டவராக) இருக்கிறார் (வெளி 15:4). நாமும் அவரைப் போல பரிசுத்தமாக (பிரித்தெடுக்கப்பட்டவர்களாக) இருக்க விரும்பினால், நாம் அவரது சித்தத்தை செய்ய வேண்டும். இயேசு சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதன் மூலம் அதை செய்தார். அதன் மூலம் அவர் தன்னைத்தானே பரிசுத்தமாக்கிக்கொண்டது மட்டுமல்லாமல் தான் வாக்களித்தது போலவே நாமும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, வழி செய்கிறார் (யோவான் 17:19).
    ஆம், சிலுவையில் அவர் கொடுத்த பலியின் மூலம், பாவிகளான நம்மை அவர் நியாயப்படுத்தினார். அதன் மூலம் நாம் கடவுளுக்கு புனித ஆசாரிய சேவையை செய்யும்பொருட்டு, அவர்மேல் வைக்கும் விசுவாசத்தால் பரிசுத்தர் என கருதப்பட முடிகிறது.
  • பழைய ஏற்பாட்டு காலங்களில், ஆசரிப்பு கூடாரத்தில் பரிசுத்த உபகரணங்களை கையாளுவதன் மூலம் ஆசாரியர்கள் மேலும் பரிசுத்தமாக்கப்பட்டார்கள்.
    ‘அவைகள் மகா பரிசுத்தமாயிருக்கும்படிக்கு, அவைகளைப் பரிசுத்தப்படுத்துவாயாக. அவைகளைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாயிருக்கும்’. யாத்திராகமம் 30:29. நாம் புதிய ஏற்பாட்டு ஆசாரிய வேலையான சுவிசேஷ பணி செய்யும்போது, பரிசுத்த உபகரணமான சத்தியத்தை கையாளுகிறோம்.
    ஆகவே, நாம் சுவிசேஷத்தை பிரசங்கிக்கும் வேலையை மென்மேலும் செய்யச் செய்ய, மிகவும் பரிசுத்தமாக்கப்படுகிறோம்!

கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு அடிமைகளாகி, அதன் மூலம் பரிசுத்தத்தை அடைவது எப்படி என்பதை பவுல் இன்னொரு இடத்தில் விளக்குகிறார் -
“பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று. ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே. பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்? கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா? கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்”. ரோமர் 5:20–6:4.

அவருடைய செய்தி இதுவே - கிறிஸ்து கிருபையினாலே நம்மை விடுதலை செய்த நோக்கம் பாவம் செய்வதில் நம் நேரத்தை செலவிடுவதற்காக அல்ல. மாறாக, ஞானஸ்நானத்திற்கு பிறகு ஒரு புதிய வாழ்வை வாழ்வதற்காகவே ஆகும். ஆம், ஞானஸ்நானம் எடுத்தவர்களுக்கு ஒரு புதிய நோக்கம், ஒரு புதிய வாழ்க்கை உண்டு - அதுதான் சுவிசேஷத்திற்காகவே வாழும் ஒரு வாழ்க்கை. அவர் தொடர்கிறார் – 'நீங்கள் உங்களை பாவத்திற்கு மரித்தவர்களாகவும், இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள். இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம். பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள். தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்." ரோமர் 6:8-22. சரி, "நீதிக்கு அடிமைகள்" என்றால் என்னதான் அர்த்தம்?

நமக்கு சுயமாக நீதி முற்றிலும் இல்லை என்றும், நாம் கிறிஸ்து மேல் வைக்கும் விசுவாசத்தால் மட்டுமே தேவனிடத்திலிருந்து வரும் நீதி நமக்கு நீதியாய் "எண்ணப்படுகிறது" என்றும் நமக்கு நன்கு தெரியும் (ரோமர் 3:21-22; 1:17). அந்த நீதி எதன் மூலம் நமக்கு வருகிறது? – ‘நீதியைக்கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாயிருக்குமே." 2கொரிந்தியர் 3:9. ஆம், கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு நாம் அடிமைகளாக ஆக வேண்டும், அதுவே நமக்கு நீதியை கொடுக்கும், பரிசுத்தத்திற்கு வழிநடத்தும். இது மாற்கு 8:35-ல் இயேசு சொன்ன வார்த்தைகளுடன் பொருந்துகிறது.

“என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்”
=
“தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்”

நாம் சுவிசேஷ ஓட்டத்தில் சாதிக்கும் மேலும் பல விசயங்களை இன்னும் ஆழமாக படிக்கலாம். மேலும் படிக்க: கிறிஸ்துவின் பாடுகளில் பங்கு.

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.