அறிவியலின் கடவுள் யார்?
- விவரங்கள்
- பிரிவு: வேதம் ஏன்?
1) அறிவியல் என்றால் என்ன? ஒரு புனித நூல் ஏன் அறிவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்?
அறிவியல் என்பது முறையான ஆய்வு, கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகள் மூலம் திரட்டப்பட்ட பிரபஞ்சத்தின் அறிவு. தொன்மையான புனித நூல்கள் அறிவியல் புத்தகங்கள் அல்ல என்றாலும், அவை அறிவியல் சம்பந்தப்பட்ட கூற்றுகளை சொல்லவே செய்கின்றன. அந்த பகுதிகளை நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் வெளிச்சத்தில் சரிபார்ப்பது ஒரு ஆழ்ந்த உட்பார்வை தரும் பயிற்சி ஆகிறது.
- ஓர் புனித நூல் கூறும் பிரபஞ்சம் குறித்த கூற்றுகள் அது எழுதப்பட்ட காலத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் மூடநம்பிக்கைகளாக இருப்பின், அந்த புத்தகம் சிறந்த அறநெறிகளை கொண்டிருந்தாலும் தனது நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது.
- ஆனால் ஒரு தொன்மையான மத புத்தகம் சொல்லிய பிரபஞ்ச கூற்றுகள் நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு உடன்பட்டால், அந்த நூல் உண்மையிலேயே தெய்வீக உந்துதலில் எழுதப்பட்டது என வாதிட முடியும்!
இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த தேவன்தான் அதன் இயக்கங்களை ஆளும் அறிவியல் சட்டங்களை வடிவமைத்த அறிவியலின் கடவுளும் கூட. அவரால் மட்டுமே பிரபஞ்ச அறிவியல் உண்மைகளை, விஞ்ஞானம் அவற்றை கண்டுபிடிப்பதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தனது புத்தகத்தில் பதிவு செய்திருக்க முடியும்.
குறிப்பு: இந்த ஆய்வு நிச்சயமாக அறிவியலுக்கு எதிரான நோக்கம் கொண்டது அல்ல.
பூமி எங்கே உள்ளது? அதன் வடிவம் என்ன?
2) பூமியைப் பற்றி வேதாகமம் பேசுகிறதா?
- 3,000 ஆண்டுகளுக்கு முன்னரே, பைபிள் இவ்வாறு அறிவித்தது: “அவர் [தேவன்] உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.” (யோபு 26:7)
பூமி வெறுமையான விண்வெளியில் தொங்கவிடப்பட்டிருக்கிறது. ஆதி காலங்களில் என்ன ஒரு அற்புதமான அறிவிப்பு!
3) பூமியின் வடிவத்தைப் பற்றி மக்களின் நம்பிக்கை என்னவாக இருந்தது? மற்றும் மத நூல்கள் அதைப் பற்றி பேசியனவா?
- பல ஆயிரம் ஆண்டுகளாக, மக்கள் பூமி தட்டையாக இருப்பதாக எண்ணினர். நீங்கள் வெகுதூரம் சென்றால், பூமியின் விளிம்பை தாண்டி விழுந்துவிடுவீர்கள் என்று நம்பப்பட்டது.
- ஆனால் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமி ஒரு உருண்டை என்று பைபிள் பதிவு செய்தது.
ஏசாயா தீர்க்கதரிசி "பூமி ஒரு உருண்டை" (ஏசாயா 40:22) என்பதை விவரித்தார்.
மேலும் “தேவன் [விண்வெளியின்] ஆழத்தின் முகத்தில் ஒரு [பூமியின்] வட்டத்தை வரைகையில்..” என்று சாலமன் ராஜா எழுதினார் (நீதிமொழிகள் 8:27).
உலகத்தை சுற்றிய முதல் கப்பல் பயணம் 16ஆம் நூற்றாண்டில் நடைபெற்று, பூமி உருண்டை என்பதை நிருபித்தது. ஆம், அறிவியல் இதனை 500 ஆண்டுகளுக்கு முன்புதான் கண்டுபிடித்தது. ஆனால் பைபிள் 3,000 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்துள்ளது.
4) சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் பற்றி பண்டைய மக்களின் கருத்து என்ன? மூல பைபிள் அவற்றிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
பூர்வ காலங்களில் சூரிய, சந்திர, நட்சத்திரங்களைக் கண்டு மக்கள் பயந்தனர். அவைகள் உயிருள்ள ஜீவிகள் என்று எண்ணினர். பலர் அவற்றை தெய்வங்களாகவும் கூட வணங்கினர்.
ஆனால், 5,000 ஆண்டுகளுக்கு முன்னர், பைபிள் முதல் அதிகாரத்தில் (ஆதியாகமம் 1) கடவுளானவர் சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்களை படைத்தார் என்று சுட்டிக்காட்டியது.
5) விண்வெளி கோள்கள் மற்றும் வானத்தில் தோன்றும் அடையாளங்களான கிரகணம் போன்றவற்றின் கதை என்ன?
- பண்டைய காலங்களில் கிரகணங்கள் மக்களுக்கு திகிலூட்டும் நிகழ்வுகளாக இருந்தன. சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஏதோ பயங்கரம் நேர்ந்துவிட்டது என கலங்கினர்.
- ஆனால் பைபிளின் கடவுள் எரேமியாவிடம் “புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள், வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள்,” என்றார் (எரேமியா 10:2).
- மேலும் அவர் பிரபஞ்சம் தனது கட்டுப்பாட்டில்தான் உள்ளது என்று எரேமியாவிற்கு நினைவூட்டுகிறார்.
சமீபத்தில்தான் வான்கோள்கள் எல்லாம் உயிரினங்கள் அல்லவென்றும் அவற்றிற்கு மனிதர்கள் பயப்பட தேவையில்லை என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அவர்கள் கண்டுபிடிப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பைபிள் இந்த அறிவியல் உண்மையை பதிவு செய்துள்ளது.
கடலின் அடித்தரை
6) சமீபகாலம் வரை கடலின் அடித்தரை பற்றிய அறிவியலின் கருத்து என்னவாக இருந்தது? அதிலிருந்து பைபிள் எவ்வாறு வேறுபட்டது?
- நவீன காலம் வரை, மக்கள் (புவியியல் வல்லுனர்கள் உட்பட) கடலின் அடித்தரையானது (பாலைவனம் போல) வெறும் மணலால் ஆனது என்றும் கோப்பைக்கிண்ண வடிவம் கொண்டதென்றும் கருதினர்.
- ஆனால், 3,000 ஆண்டுகளுக்கு முன்னர் பைபிள், கடலடியில் பள்ளத்தாக்குகளும் பர்வதங்களும் உள்ளதாக பதிவு செய்தது.
தாவீது இராஜா தன்னுடைய சங்கீதத்தில் “கடலின் பள்ளதாக்குகள்” (valleys of the sea) பற்றி எழுதினார் (சங்கீதம் 18:15).
யோபுவிடம் கடவுள் “நீ சமுத்திரத்தின் அடித்தலங்கள்மட்டும் புகுந்து, ஆழத்தின் அடியில் உலாவினதுண்டோ?” என்று கேட்டார் (யோபு 38:16).
மக்கள் யோனா தீர்க்கதரிசியை கப்பலில் இருந்து தள்ளிவிட்டபோது அவர் கடலில் உள்ள "பர்வதங்களின் அடிவாரங்கள் பரியந்தமும் இறங்கினேன்," என்கிறார் (யோனா 2:6).
20-ஆம் நூற்றாண்டில் தான் கடலடியில் ஆழமான பள்ளத்தாக்குகள் இருப்பதை கடல் ஆய்வு நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.
- கடலடியில் மிக ஆழமான பள்ளத்தாக்குகள் “அகழிகள்” என்று அழைக்கப்படுகின்றன. பசிபிக் பெருங்கடலின் “மரியானா அகழி”யானது எவரெஸ்ட் சிகரத்தை தன்னுள் முற்றிலும் அடக்கி அதின்மேல் ஒரு மைல் தூரத்திற்கு தண்ணீர் கொள்ளும் அளவுக்கு ஆழமானது.
- கடல்களுக்கு அடியில் மலைகளும் உள்ளன. அட்லாண்டிக் மகாசமுத்திரத்திற்கு அடியில் 10,000 மைல்கள் நீளும் மலைத்தொடர் ஒன்று உள்ளது.
விஞ்ஞானம் இவற்றை கண்டுபிடிப்பதற்கு 3000 ஆண்டுகளுக்கு முன்பே பைபிள் இந்த மலைகளையும், பள்ளத்தாக்குகளையும் பதிவு செய்துள்ளது.
கடலின் பாதைகள்
7) கடலில் உள்ள நீரோட்டங்களையும் அவற்றின் பயன்களையும் அறிவியல் எப்படி கண்டுபிடித்தது?
19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்க கடற்படை அதிகாரியான மத்தேயு மௌரி, பைபிள் படிக்கும் பழக்கம் கொண்ட ஒரு விசுவாசியாக இருந்தார். ஒருநாள் அவர் சங்கீதம் 8-ஐ வாசித்துக்கொண்டிருந்தார். அதில் 8-ஆம் வசனத்தை அவர் பார்த்தபோது, அவர் ஆச்சர்யமடைந்தார். 'கடலின் பாதைகளில் நீந்தும்' ('that swim in the paths of the sea’) மீன்களையும் உயிரினங்களையும் பற்றி அந்த வசனம் பேசியது.
'கடலின் பாதைகளா'? - என்ன பாதைகள் இவை என்ற கேள்வி அவருக்கு எழுந்தது.
அவரது ஆர்வமும் அதைத்தொடர்ந்த ஆராய்ச்சியும், கடலில் ஆறுகளைப்போல ஓடும் பல பாதைகள், அதாவது நீரோட்டங்கள் இருப்பதை கண்டுபிடிப்பதற்கு அவரை வழிநடத்தியது. கடலியல் பற்றிய முதல் புத்தகத்தை அவர்தான் எழுதினார்.
- தற்போது மௌரி 'கடல்களின் பாதைகள் கண்டறிந்தவர்' (Pathfinder of the Seas) என்றும் 'நவீன கடற்பயணத்தின் தந்தை' (Father of Modern Navigation) என்றும் பிரபலமாக அழைக்கப்படுகிறார்.
- இன்றைய மீன்பிடி படகுகள் கடலின் நீரோட்டங்களை கணித்தே மீன் பிடிக்கின்றன. ஆம், மீனவர்கள் அந்த பாதைகளில் தான் மீன்கள் நீந்துகின்றன என்பதை புரிந்துகொண்டுவிட்டனர்.
இதை 3,000 ஆண்டுகளுக்கு முன்பே பைபிள் எடுத்துரைத்தது. அந்த வேதாகம சங்கீதத்தின் ஆசிரியரான தாவீது இராஜா தனது வாழ்க்கையில் ஒரு முறை கூட பெருங்கடல் ஒன்றை கண்டிருக்க வாய்ப்பு மிகக்குறைவு. அப்படியானால், கடலியல் விஞ்ஞானத்தின் அத்தகைய ஒரு முக்கிய அறிக்கையை எழுத அவருக்கு அருளியது யார்!
மழையும், இடி மின்னலும்
8) இடி மின்னல், மழை பற்றி பைபிள் என்ன கற்பித்தது?
- பண்டைய காலங்களில் இடி மின்னல், மழை குறித்து மூட நம்பிக்கைகள் பரவலாக இருந்தன.
- ஆனால், பண்டையகால புத்தகமான பைபிளோ மழை, மின்னல், புயல்கள் ஆகியவற்றை விவரிக்கும்போது எந்தவித மூட நம்பிக்கையான கோட்பாடுகளை கூறவில்லை.
மாறாக பூமியின் வானிலையானது விதிகள், சுழற்சிகள் மற்றும் முறைகளை பின்பற்றுவதாக பைபிள் கற்பித்தது.
“பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை“ (ஆதியாகமம் 8:22).
யோபு தேவன் “மழைக்கு கட்டளைகளை (decrees) ஏற்படுத்துகிறார்," என்கிறார் (யோபு 28:26).
9) மழைக்காக கடவுள் வகுத்த கட்டளைகள்/சுழற்சிகள் தான் என்ன? பைபிள் அவற்றைக் குறிப்பிடுகிறதா?
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, ஆமோஸ் மற்றும் யோபுவின் புத்தகங்கள் பைபிளில் இவ்வாறு அறிவிக்கின்றன:
- “அவர் [தேவன்] சமுத்திரத் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியினுடைய விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்“ (ஆமோஸ் 9:6).
- “அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறப்பண்ணுகிறார். அவைகள் மேகத்திலிருந்து மழையாய்ச் சொரிகிறது. அதை மேகங்கள் பெய்து, மனுஷர்மேல் மிகுதியாய்ப் பொழிகிறது." (யோபு 36:27-28).
இவையே கடவுள் மழைக்கு வகுத்த கட்டளைகள் அதாவது மழைநீர் சுழற்சியாகும்.
சமீபத்திய நூற்றாண்டுகளில் தான் விஞ்ஞானிகள் இந்த சுழற்சியை கண்டுணர ஆரம்பித்திருக்கிறார்கள் -
- கடலில் இருந்து நீர் ஆவியாகி, மேகமாக உருமாறி மழையை மண்ணில் பெய்கிறது.
ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, பைபிள் இந்த சுழற்சியை துல்லியமாக விவரித்தது.
கார்த்திகை, மிருகசீரீஷம், சுவாதி - நட்சத்திர கூட்டங்கள்
10) “நட்சத்திரங்களை படைத்தவர் தான் பைபிளை எழுதியிருக்க வேண்டும்,” என்று வானியல் நிபுணர் சார்லஸ் பர்க்ஹால்டர் சொல்லக்காரணம் என்ன?
காரணங்கள் ஒன்றல்ல, பல! உதாரணமாக, 3,000 ஆண்டுகளுக்கு முன்னர் கடவுளால் யோபுவிடம் கேட்கப்பட்ட கேள்விகளாக எழுதப்பட்ட பைபிள் வசனங்களை காணலாம்.
"கார்த்திகை நட்சத்திர கூட்டத்தின் சுகிர்த சம்பத்தை நீ இணைக்கக்கூடுமோ?
அல்லது மிருகசீரிஷத்தின் கட்டுகளை அவிழ்ப்பாயோ?
சுவாதி நட்சத்திரத்தையும் அதன் புதல்வர்களையும் வழி நடத்துவாயோ?" (யோபு 38:31-32).
11) 'மிருகசீரிஷத்தின் கட்டுகளை அவிழ்ப்பாயோ?'
புகழ்பெற்ற வானியலாளரான கேரேட் பி. செர்விஸ் “வானின் விநோதங்கள்” (Curiosities of the Sky) என்னும் தன்னுடைய புத்தகத்தில்,
“இப்போது உள்ள கால கட்டத்தில் இந்த மிருகசீரிஷ நட்சத்திர கூட்டம் கிட்டத்தட்ட ஒரு நேர் கோட்டில் சம இடைவெளியில் நட்சத்திரங்கள் கொண்ட படிவரிசையாக உள்ளது. ஆனால் காலப்போக்கில் “மின்டக்கா” மற்றும் “அல்நிலம்” என அழைக்கப்படும் இரண்டு வலதுபக்க நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று அணுகி வெறுங்கண்ணால் பார்ப்பதற்கு இரட்டை நட்சத்திரம் போல் ஆகும். மூன்றாம் நட்சத்திரமான 'அல்நிடக்' கிழக்கு நோக்கி மிதந்து கூட்டம் விட்டுச்செல்லும். ஆக, இந்த கூட்டம் இல்லாமல் போகும்,” என்று கூறியிருக்கிறார்.
ஆம், மிருகசீரிஷ கூட்டத்தின் நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு திசைகளில் சென்றுகொண்டிருக்கின்றன. (விஞ்ஞானம் கண்டுபிடிப்பதற்கு) நீண்ட காலத்திற்கு முன்னரே பைபிளின் தேவன் குறிப்பிட்டபடி, அதன் கட்டுகள் அவிழ்க்கப்பட்டு, கலைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
12) 'கார்த்திகை நட்சத்திர கூட்டத்தின் சுகிர்த சம்பத்தை நீ இணைக்கக்கூடுமோ?'
இது மிருக சீரிஷத்துடன் முற்றிலும் எதிர்மாறான ஒரு விசயம். கார்த்திகை நட்சத்திரங்கள் 250 சூரியன்கள் கொண்ட ஒரு கூட்டம். சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இந்த 250 சூரியன்களும் விண்வெளியில் ஒரே மார்க்கமாக ஒன்றாக சேர்ந்து பயணம் செய்வதை காண்பிக்கின்றன.
அமெரிக்க கடற்படை வான் ஆய்வுக்கூடத்தை (US Naval Observatory) சார்ந்த இசபெல் லூயிஸ் கூறுகிறார்:
“250 நட்சத்திரங்களை வானியல் வல்லுநர்கள் இந்த கூட்டத்தை சார்ந்த அங்கங்களாக அடையாளம் கண்டறிந்துள்ளனர். இவை அனைத்தும் விண்வெளியில் ஒரே மார்க்கமாக ஒரே இயக்கமாக ஒன்றாக சேர்ந்து பயணிக்கின்றன.”
இன்னொரு இடத்தில் லூயிஸ் இந்த நட்சத்திரக் கூட்டத்தைப் பற்றி பேசும்போது “அவை எல்லையில்லா விண்வெளியில் ஒன்றாக சேர்ந்து பயணம் செய்கின்றன," என்று கூறுகிறார்.
டாக்டர். இராபர்ட் டிரம்ப்ளர் [லிக் வான் ஆய்வுக்கூடம் Lick Observatory] பின்வரும் அறிக்கையை சமர்ப்பித்தார்:
“இந்த நட்சத்திரக் கூட்டத்தை தொலைதூர இலக்கை நோக்கி ஒன்றாகச் சேர்ந்து பறந்து செல்லும் ஒரு பறவைக்கூட்டத்துடன் ஒப்பிடலாம்.
இதிலிருந்தே இந்த நட்சத்திரங்கள் ஒரு தற்காலிக அல்லது தற்செயலான திரட்சி அல்ல, மாறாக ஒரு நெருங்கிய உறவால் பிணைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு என்பதில் சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகிறது."
டாக்டர் டிரம்ப்ளர் இதை அறிவித்தபோது, அவர் பைபிளில் உள்ள யோபுவின் புத்தகத்தை குறிப்பிடவில்லை. ஆனால் பைபிளின் கடவுள் இதே விசயத்தைத்தான் துல்லியமாக நீண்ட காலம் முன்னரே அறிவித்தார் - “'கார்த்திகை நட்சத்திர கூட்டத்தின் சுகிர்த சம்பத்தை நீ இணைக்கக்கூடுமோ?” இதை வேறு விதமாக சொல்ல வேண்டுமென்றால், இந்த நட்சத்திர கூட்டத்தை சூரியன்களை ஓர் குடும்பமாக ஒன்றாக இணைப்பவர் தானே தான் என்பதே அவர் சொல்ல வரும் உண்மை.
13) 'சுவாதி நட்சத்திரத்தையும் அதன் புதல்வர்களையும் வழி நடத்துவாயோ?'
கேரேட் பி. செர்விஸ் எழுதுகிறார்: “சுவாதி நட்சத்திரம்.. நம் சூரியனை விட பல்லாயிரம் மடங்கு எடை கொண்டது. கொஞ்சம் யோசியுங்கள்! நம் சூரியன் வினாடிக்கு 12½ மைல் வேகத்தில் பயணிக்கிறது. ஆனால் இந்த சுவாதியோ வினாடிக்கு 257 மைல் வேகத்தில் பயணிக்கிறது. இந்த வேகத்தில் உண்டாகும் வியத்தகு விசை எவ்வளவு இருக்குமென்று யோசித்துப்பாருங்கள்.”
சபாட் வான் ஆய்வு மையத்தின் (Chabot Observatory) சார்லஸ் பர்க்ஹால்டர் கூறுகிறார்:
இந்த அதிவேகம் சுவாதி நட்சத்திரத்தை தான் வைத்ததே சட்டம் என முழங்க வல்லமை வாய்ந்த நட்சத்திர வர்க்கத்தில் சேர்க்கிறது. அவள் ஒரு அந்நியன்.. எல்லைக்குள் அத்துமீறிய வெளியாள். உண்மையை சொல்லப்போனால் சுவாதி ஒரு ஓடுகாலி. கட்டுக்குள் இருக்கும் ஒரு நட்சத்திரத்தின் வேகம் வினாடிக்கு 25 மைல் மேல் இருக்ககூடாது என்று நியூட்டன் கூறுகிறார். ஆனால் சுவாதியோ வினாடிக்கு 257 மைல் போய்க்கொண்டிருக்கிறாள். ஆக, நாமறிந்த எல்லா நட்சத்திரங்களின் ஈர்ப்புவிசைகளை சேர்த்தாலும் இந்த நட்சத்திரத்தை கட்டுப்படுத்துவதோ அல்லது திசை மாற்றுவதோ சாத்தியமே அல்லாத ஓர் காரியம்.
நீண்ட காலம் முன்பு, பைபிளின் கடவுள் மக்களை சுவாதி நட்சத்திரத்தையும் அதன் புதல்வர்களையும் வழிநடத்த முடியுமா என்று சவா ல் விடுத்தார். அந்த சவால் எவ்வளவு உண்மை என்பதை இப்போது அறிவியல் புரிந்து கொண்டுள்ளது! இந்த மகாப்பெரிய அதிவேக நட்சத்திரத்தையும் அதன் கோள்களையும் (புதல்வர்களையும்) வழிநடத்த முயன்றுதான் பாருங்களேன்!
திரு.பர்க்ஹால்டர் அவர்களுக்கு யாரோ ஒருவர் பைபிளின் யோபு புத்தகத்தை பரிந்துரைக்க, அவர் அதை படித்து, சமீபத்திய கண்டுபிடிப்புகளுடன் அதனை ஒப்பிட்டுப் பார்த்தார். அதன்பின் அவர் வெளியிட்ட அறிக்கை சர்வதேச அளவில் கவனிப்பை பெற்றது:
"யோபுவின் புத்தகத்தைப் படித்து அதனை நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் ஓர் ஆய்விற்குப்பின், என்னால் பக்குவமான உறுதிமிகுந்த ஓர் நம்பிக்கைக்கு வரமுடிகின்றது. ஆம், வேதாகமம் மெய்க்கடவுளின் சக்தியால் உந்தப்பட்டு எழுதப்பட்ட புத்தகம் தான். நட்சத்திரங்களைப் படைத்தவரே அதன் ஆசிரியர்!"
ஆதியாகமத்தின் நாட்களையும், வழிகளையும் பற்றின ஒரு குறிப்பு
தேவன் பிரபஞ்சத்தை படைக்க எடுத்துக்கொண்ட காலம் ஆறு 24-மணி நேர நாட்கள் என்று பைபிள் சொல்லவில்லை. பைபிளின் ஆதியாகமம் சூரியன் / சந்திரனை அவர் நான்காம் "நாளில்" தான் படைத்தார் என்கிறது. எனவே அந்த 'நாட்கள்' கண்டிப்பாக 24-மணி நேர நாட்கள் ஆக இருக்க சாத்தியம் இல்லை. மேலும் அது விவரிக்கும் படைப்பின் வழிமுறையானது தாவரங்கள் / விலங்குகளின் பரிணாம வளர்ச்சிக்கு முற்றிலும் எதிரானது அல்ல. ஆனால் மனிதனின் மேலான புலனறிவு (Higher Consciousness) பரிணாம வளர்ச்சி அல்ல. இது தனியாக ஆய்வு செய்ய வேண்டிய ஒரு சுவாரஸ்யமான தலைப்பு.
தொன்மையான பைபிளும், அறிவியலும் பற்றின ஓர் அட்டவணை
தலைப்பு | தொன்மையான பைபிளின் கூற்று | விஞ்ஞான கண்டுப்பிடிப்புகள் |
---|---|---|
பூமி | பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது (ஆதி 1:2) | 20-ஆம் நூற்றாண்டில்தான் ஒழுங்கில்லா விண்வெளி முகிற்படல (nebular) தோற்றம் பற்றி அறியப்பட்டது. |
பூமி ஒரு உருண்டை (ஏசாயா 40:22) | கி.பி.1500-கள் வரை கூட பூமி தட்டையாக இருப்பதாக நம்பப்பட்டது. | |
பூமி அந்தரத்தில் தொங்குகிறது (யோபு 26:7) | கி.பி.1600’கள் வரை விஞ்ஞானம் இதை அறியவில்லை. | |
நட்சத்திரங்கள் | நட்சத்திரங்களை எண்ண முடியாது (எரேமியா 33:22) | சில ஆயிரம் நட்சத்திரங்கள் உள்ளன என அறிவியல் கருதியது. 1900-களில் தான் அவை எண்ண முடியாதவை என்று கண்டுப்பிடிக்கப்பட்டது. |
ஒவ்வொரு நட்சத்திரமும் வித்தியாசம் (1கொரிந்தியர் 15:41) | எல்லா நட்சத்திரமும் ஒரே மாதிரி தான் என்று பல நூற்றாண்டுகளாக நம்பப்பட்டது. | |
அணுக்கள் | காணப்படாதவைகளால் காணப்படுபவைகள் உண்டாயிருக்கின்றன(எபிரெயர் 11:3) | 19-ஆம் நூற்றாண்டு வரை இது பற்றின எந்த அறிவியல் கோட்பாடும் இல்லை. 20-ஆம் நூற்றாண்டில் தான் காணப்படாத அணுக்களால் எல்லா பொருட்களும் உண்டாயிருக்கின்றன என்று நிரூபிக்கப்பட்டது. |
ஒளி | ஒளி பயணிக்கக்கூடியது. ஒளியை பல்வேறு நிறங்களாக பிரிக்க முடியும் (யோபு 38:19-20, 24) | சமீப நூற்றாண்டுகளில் தான் அறிவியல் இதை ஊர்ஜிதம் செய்தது. |
காற்று | காற்றுக்கு எடை உண்டு (யோபு 28:25) | கி.பி.1500’கள் வரையில் காற்றுக்கு எடையில்லை என்று நம்பப்பட்டது. |
காற்று வீச்சு | காற்று வீச்சுக்கு சுழற்சி முறைகள் உண்டு (பிரசங்கி 1:6) | சமீப நூற்றாண்டுகள் வரை இது கண்டுபிடிக்கப்படவில்லை. |
மழை | மழைநீர் உருவாகும் சுழற்சி முறை (யோபு 36:27-28) | கி.பி.1600’கள் வரை கண்டுபிடிக்கப்படவில்லை. |
கடல் | கடலடியில் நீரூற்றுகள் உள்ளன (யோபு 38:16) | கி.பி.1900’களில் கடலடி நீரூற்றுகள் கண்டுபிடிக்கப்படும் வரை மழை மற்றும் ஆறுகளின் மூலம் தான் கடலுக்கு தண்ணீர் கிடைத்ததாக நம்பப்பட்டது. |
கடலின் அடித்தரையில் மலைகளும் பள்ளத்தாக்குகளும் உள்ளன (யோனா 2:6, 2சாமுவேல் 22:16) | 20-ஆம் நூற்றாண்டு வரை புவியியலாளர்கள் கூட கடலின் அடித்தரை வெறும் கிண்ண வடிவில் இருப்பதாக கருதினர். | |
ஆரோக்கியம் | கிருமிகளை அகற்ற ஓடும் நீரில் கைகளை கழுவ வேண்டும் (லேவியராகமம் 15:13) | போன நூற்றாண்டு வரை மருத்துவர்கள் அமர்ந்த நீரில் கை கழுவும் வழக்கத்தால் தேவையற்ற சாவுகளுக்கு காரணமாகினர். |
தொற்று நோய்களை தடுக்க நோயாளியை தனிமைப்படுத்த வேண்டும் (லேவியராகமம் 13) | கி.பி.1600’கள் வரை இந்த உண்மை கண்டறியப்படவில்லை. | |
இரத்தம் | உயிருக்கு இரத்தம் முக்கியம் (லேவியராகமம் 17:11) | கி.பி.1800’கள் வரை மருத்துவர்கள் நோயாளியை சுகமாக்க இரத்தத்தை வெளியேற்றுவது ஒரு வழி என்று சொல்லி உயிர்க்கு அபாயம் விளைவித்தனர். |
முடிவு - அறிவியலின் கடவுள் யார்?
தொன்மையான பைபிளானது அறிவித்த பல அறிவியல் உண்மைகளை விஞ்ஞானம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரே கண்டுபிடித்தது. ஒரு புத்தகம் 3,000 ஆண்டுகளுக்கு முன்பே விஞ்ஞான கண்டுபிடிப்புகளை எப்படி முன்கணிக்க முடியும்? அறிவியலின் அசல் சிற்பியான உண்மையான கடவுள் ஒருவேளை பைபிளின் எழுத்தாளர்களுக்கு அந்த கூற்றுகளை வெளிப்படுத்தியிருக்கலாம், அல்லவா? சொல்லப்போனால், அதன் தீர்க்கதரிசிகள் கடவுளால் ஏவப்பட்டு எழுதியதாக பைபிளே சொல்கிறது (2பேதுரு 1:21). அத்தகைய தெய்வீக பாத்தியதை கோரும் பைபிளின் துணிச்சலை நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகள் முற்றிலும் ஆதரிக்கின்றன.