பெந்தெகொஸ்தே இயக்கம்
- விவரங்கள்
- பிரிவு: பரவலான வஞ்சனை
கருப்பொருள் வசனம்: ‘தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம். அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம்.’ 1கொரிந்தியர் 13:8.
1) பெந்தெகொஸ்தே சபைகள் என்றால் என்ன? அவை எப்படி, எப்போது தோன்றின?
பெந்தெகொஸ்தே இயக்கம் சமீபத்தில் தோன்றியதுதான். அதன் சபைகளின் முக்கிய கவனம் அந்நிய பாஷைகளில் பேசுவது போன்ற பரிசுத்த ஆவியின் அதிசய வரங்களை அனுபவிப்பதாகும். ‘வரம்’ என்பதன் கிரேக்க வார்த்தை ‘கரிஷ்மா’ (Charisma) ஆகும். அதனாலேயே இந்த இயக்கத்திற்கு கரிஸ்மாடிக் இயக்கம் (Charismatic Movement) என்ற பெயரும் உண்டு. 19-ஆம் நூற்றாண்டின் முடிவில் சமய ஆர்வத்தில் ஒரு திடீர் எழுச்சி ஏற்பட்டது. பல குழுக்கள் 1900-இல் கிறிஸ்துவின் வருகையை, அதாவது உலக வரலாற்றின் முடிவை எதிர்பார்த்தன. இதில் முக்கிய பங்கு வகித்தது மெத்தடிஸ்ட் (Methodist) சபையின் பரிசுத்தவாத இயக்கம் நடத்திய மறுமலர்ச்சி கூட்டங்கள் ஆகும். அக்கூட்டங்களில் மக்கள் அந்நியபாஷைகளில் பேசுவதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்தன. ஜனவரி, 1900-இல் அமெரிக்காவில் கான்சஸ் மாகாணத்தில் டோபேகா என்ற ஊரில் சார்லஸ் பர்ஹாம் தலைமையில் நடைபெற்ற மறுமலர்ச்சி கூட்டத்தில்தான் பரவலான அந்நிய பாஷை பேசுதல் பற்றின முதல் செய்தி வெளியானது. மேலும் அதுபோன்ற அனுபவங்கள் 1906-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாநகரத்தில் அசூசா தெருவில், வில்லியம் சேமோர் (சார்ல்ஸ் பர்ஹாமின் மாணவர்) தலைமையில் நடந்த மறுமலர்ச்சி கூட்டங்களில் நிகழ்ந்தன. அதன் பின்னர் அந்நிய பாஷை பேசுவதை வலியுறுத்தும் சபைகள் அமெரிக்கா முழுவதும் நிறுவப்பட்டன. இது உலகெங்கும் பரவி, பல நாடுகளில் பிரசித்தி பெற்றது. இன்று, சுமார் 170 கிறிஸ்தவ பிரிவுகள் தங்களை பெந்தெகொஸ்தே என்று அழைக்கின்றன.
2) ஆவியின் அதிசய வரங்கள் என்றால் உண்மையில் என்ன?
‘எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலே குணமாக்கும் வரங்களும், வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.’ 1கொரிந்தியர் 12:8-10.
இந்த ஒன்பது வரங்களையும் எவ்வித மனித முயற்சியும் இல்லாமல் தேவன் இலவசமாய் வழங்கினார். உதாரணமாக, தானியேல் புத்தகத்தில் உள்ள ஞானத்தையும் அறிவையும் (முதல் இரண்டு வரங்களையும்) பெற வேண்டுமென்றால் நாம் இன்று என்ன செய்ய வேண்டும்? அந்த புத்தகத்தை படித்து புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும் அல்லவா? ஆனால் ஆதிகால திருச்சபை மக்களுக்கு அத்தகைய ஞானமும் அறிவும் படிக்காமலேயே அதிசயமாக வரமாக வழங்கப்பட்டது. அந்நிய பாஷை வரமும் அதுபோலவே - ஒரு புதிய பாஷையை கற்றுக்கொள்வதற்கு எந்த சுயமுயற்சியும் தேவையில்லை! சுகமாக்கும் வரமும் அதுபோலவே - மற்றவரை குணப்படுத்த மருத்துவம் கற்க வேண்டிய அவசியமில்லை.. இதுபோன்ற வரங்களை அதிசயமாக பெற்றனர்.
3) இன்று பலர் அந்நிய பாஷை வரம் என்றால் யாருக்கும் புரிய மாட்டாத சொற்களை பேசுவது என்று நினைக்கிறார்கள், ஏனென்றால் இன்றைய பெந்தெகொஸ்தே சபைகளில் மக்கள் அதைத்தான் காண்கிறார்கள். ஆனால் ஆதிகால திருச்சபை இந்த வரத்தை பெற்றபோது என்ன நிகழ்ந்தது?
‘பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவி தங்களுக்கு தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். வானத்தின்கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஐனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள். எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து; இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா? அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி?’ (அப்போஸ்தலர் 2:1-8)
ஆம், அப்போஸ்தலர்கள் அந்நிய பாஷைகளில் பேசியபோது, பல்வேறு நாடுகளிலிருந்து வந்தவர்கள் விதவிதமான தங்கள் சொந்த பாஷைகளில் அவர்கள் பேசியதை கேட்டார்கள். கேட்டது மட்டுமல்லாமல் அவர்கள் சொல்வது என்னவென்றும் புரிந்துகொண்டார்கள்.
4) தேவன் இந்த வரங்களை ஆதிகால திருச்சபைக்கு ஏன் கொடுத்தார்?
அ) ஒருவேளை நீங்கள் ஒரு புதிய மதத்தை வெறும் 12 நபர்களை கொண்டு ஆரம்பிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் மக்களை எப்படி நம்ப வைப்பீர்கள்? நீங்கள் கூறும் செய்தியை நிரூபிக்க சக்திவாய்ந்த அடையாளங்கள் உங்களுக்கு தேவைப்படும் அல்லவா? அதற்காகவே அந்த காலத்தில் ஆவியின் விசேஷித்த அதிசய வரங்களை தேவன் கொடுத்தார்.
- அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து, "ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான்," என்றான். யோவான் 3:2.
- அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூட கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். மாற்கு 16:20. பவுலும் பர்னபாசும் அங்கே அநேகநாள் சஞ்சரித்துக் கர்த்தரை முன்னிட்டு தைரியமுள்ளவர்களாய் போதகம்பண்ணினார்கள். அவர் தமது கிருபையுள்ள வசனத்திற்குச் சாட்சியாக அடையாளங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி அநுக்கிரகம்பண்ணினார். அப்போஸ்தலர் 14:3.
ஆம், இது மிக முக்கியம். சுகமளிக்கும் வரம் போன்ற அதிசய வரங்கள் திருச்சபை விசுவாசிகளை குணமாக்கும் பொருட்டு வழங்கப்படவில்லை, மாறாக அவிசுவாசிகள் மத்தியில் தேவனின் நற்செய்தியை நிரூபிக்க அற்புத அடையாளங்களாக பயன்படுத்தப்படவே அருளப்பட்டன. ஏற்கனவே திருச்சபையுள் இருக்கிறவர்களுக்கு (விசுவாசிகளுக்கு) மேலும் அடையாளங்கள் தேவைப்படவில்லை. இது உண்மையில் நமக்கு பவுலின் நடத்தையை விளக்குகிறது –
- பவுல் அவிசுவாசிகள் மத்தியில் அசாதாரண அதிசய வல்லமையை வெளிப்படுத்தினார். அவர்களை சொஸ்தமாக்கினார் –
‘பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார். அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டு வந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின.’ அப்போஸ்தலர் 19:11-12.
- ஆனால் அதே பவுல் அடிக்கடி நோய்வாய்ப்பட்டுக்கொண்டிருந்த ஒரு விசுவாசியான தீமோத்தேயுவுக்கு இவ்வாறு எழுதுகிறார் –
"நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம் குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சைரசமும் கூட்டிக்கொள்." 1தீமோத்தேயு 5:23.
வேறொரு இடத்தில் பவுல் சொல்கிறார், "துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டு வந்தேன்." 2தீமோத்தேயு 4:20.
மற்றொரு இடத்தில், அவர், "என் சகோதரனாகிய எப்பாப்பிரோதீத்து வியாதிப்பட்டு மரணத்திற்குச் சமீபமாயிருந்தான்," என்கிறார். பிலிப்பியர் 2:25-27.
ஆம், உண்மையில் பவுல் தன்னுடைய சுகமளிக்கும் வரத்தை விசுவாசிகள் மத்தியில் ஒருபோதும் பயன்படுத்தவே இல்லை! மாறாக அவிசுவாசிகள் நடுவில் மட்டுமே அதனை வெளிக்காட்டினார்.
ஆ) இந்த வரங்களெல்லாம் ஆதித்திருச்சபை பக்திவிருத்தி அடைய உதவின. ஆனால் இன்றைய திருச்சபையான நமக்கு அத்தகைய அதிசய தீர்க்கதரிசனங்களோ அற்புத அறிவோ தேவையில்லை, ஏனெனில் இன்று வேதாகமத்தின் புதிய ஏற்பாடு முழுவதும் நம் கையில் இருக்கிறது. ஆனால் ஆதி விசுவாசிகளுக்கு அந்த வசதி இல்லாமல் இருந்தது.
உதாரணமாக, அப்போஸ்தலனாகிய பவுல் வெளிப்படுத்தின விசேஷத்தின் புஸ்தகம் (கி.பி. 95-இல்) எழுதப்படுவதற்கு வெகுகாலம் முன்னரே (கி.பி. 64-இல்) சாவை சந்தித்தார்.
எனவே அவர் வாழ்நாளில் அவர் கையில் வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தில் உள்ள தீர்க்கதரிசனங்கள் இருக்கவில்லை. புதிய ஏற்பாட்டின் மற்ற புத்தகங்களும் கூட கி.பி.150-களில் தான் ஒரே நூலாக தொகுக்கப்பட்டன. அந்த காலகட்டம் வரை, விசுவாசிகளுக்கு தீர்க்கதரிசனம், அற்புத ஞானம், அறிவு மற்றும் ஆவியின் பகுத்தறிதல் போன்ற அதிசய வரங்கள் தேவைப்பட்டன.
‘’நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான். ஒருவன் போதகம்பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம்பண்ணுகிறான். சகோதரரே, சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது." 1கொரிந்தியர் 14:26. ஆம், அறிவு மற்றும் தீர்க்கதரிசனங்களின் அதிசய வரங்களின் மூலம் ஆதித்திருச்சபையினர் நிறைய கற்றுக்கொண்டார்கள். இன்று நாம் ஆவிகளை பகுத்தறிய வேண்டும் என்றால், ஒருவர் சொல்லும் கருத்தை வேதாகமத்தோடு ஒப்பிட்டு சோதித்துப்பார்க்கிறோம். ஆனால் அன்றைய திருச்சபையினர் கையில் வேதாகமம் இல்லாததால், அப்படிப்பட்ட அதிசய வரங்களே அவர்களுக்கு உதவின.
5) ஆவியின் அதிசய வரங்களை ஒருவர்க்கு யாரால் வழங்க முடியும்? அந்த வரங்களை பெற்றுக்கொண்ட ஒருவர் அவற்றை இன்னொருவருக்கு வழங்க முடியுமா?
வேதம் தெளிவாக கூறுகிறது - கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் மட்டுமே மற்றவர்க்கு ஆவியின் அதிசய வரங்களை அருள முடியும்.
- ‘நீங்கள் ஸ்திரப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுக்கும்படி உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறபடியினாலே, எவ்விதத்திலாவது நான் உங்களிடத்தில் வருகிறதற்குத் தேவனுடைய சித்தத்தினாலே எனக்கு நல்ல பிரயாணம் சீக்கிரத்தில் கிடைக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.' ரோமர் 1:10-12.
இங்கே ஆவியின் வரங்களை ரோம திருச்சபை மக்களுக்கு அளிக்க வேண்டுமென்றால் ரோமாபுரிக்கு தான் நேரடியாக பிரயாணம் செய்து வரவேண்டும் என்று பவுல் சொல்கிறார்.
- வேறொரு இடத்தில் அவர் தீமோத்தேயுவிற்கு எழுதுகிறார், ‘இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கைகளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பி விடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன்.’ 2தீமோத்தேயு 1:6.
ஆக, பவுல் தானே நேரடியாக தன் கைகளை தீமோத்தேயு மேல் வைத்தபோதுதான் தீமோத்தேயு ஆவியின் வரங்களை பெற்றுக்கொண்டார் என்பதை நாம் காண்கிறோம்.
- 'அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும், பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள்.' அப்போஸ்தலர் 10:44-46.
இங்கு தேவன் கொர்நேலியுவின் வீட்டார்க்கு ஆவியின் வரங்களை அருள அப்போஸ்தலர் பேதுருவை நேரடியாக கொர்நேலியுவின் வீட்டுக்கே கொண்டு வந்தார் என்பதை பார்க்கிறோம்.
- மற்ற பல வசனங்களும் இதையே நமக்கு உறுதிப்படுத்துகின்றன. உதாரணமாக, அப்போஸ்தலர் நடபடிகள் 8-ஆம் அதிகாரத்தை நாம் படித்தோமானால், சுவிசேஷகனாகிய பிலிப்பு (இவர் அப்போஸ்தலர் பிலிப்பு அல்ல) சமாரியாவில் பல அற்புதங்களைச் செய்து பலரை விசுவாசத்திற்குள் கொண்டுவந்தாலும், புதிதாக ஞானஸ்நானம் பெற்ற விசுவாசிகளுக்கு பரிசுத்த ஆவியின் வரங்களை வழங்கும் பொருட்டு கடைசியில் அப்போஸ்தலர்கள் (பேதுருவும் யோவானும்) தாமே நேரடியாக சமாரியாவிற்கு சென்று புதியவர்கள்மேல் தம் கைகளை வைக்க வேண்டி இருந்தது என்பதை காண்கிறோம்.
ஆகவே, இரண்டு காரியங்களில் வேதவாக்கியங்கள் மிகத்தெளிவாக உள்ளன -
அ) கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களால் மட்டுமே ஆவியின் அதிசய வரங்களை வேறொருவருக்கு அருள முடியும்.
ஆ) ஆனால் அப்போஸ்தலர்களிடம் வரத்தை பெற்றுக்கொண்ட ஒருவரால் மற்றொருவருக்கு அவற்றை வழங்க முடியாது. அவை பரிமாற்றம் செய்யக்கூடிய வரங்கள் அல்ல.
6) சரி, அப்போஸ்தலர்களின் மரணத்திற்கு பின்பு என்ன நடந்தது? மேலும், அதிசய வரங்களை பற்றி வேதாகமம் என்ன தான் முன்னுரைக்கிறது?
- பவுலும் ,பேதுருவும் கி.பி.60-களில் மரித்தார்கள். கடைசியாக இறந்த அப்போஸ்தலர் கி.பி.100-ஐ ஒட்டி மரித்த அப்போஸ்தலர் யோவான். அதன்பிறகு யாருக்கும் வரங்களை வழங்குவதற்கு அப்போஸ்தலர்கள் எவரும் உயிரோடு இல்லை. அப்போஸ்தலர்களிடமிருந்து முன்னர் வரங்களை பெற்றுக்கொண்டவர்களும் மரணமடைய ஆரம்பிக்க, 2-ஆம் நூற்றாண்டிற்குள் அதிசய வரங்கள் யாவும் நின்றுபோயின. இந்த விசயம் மதச்சார்பற்ற சரித்திர ஆவணங்களில் கூட பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்றைய பெந்தெகொஸ்தே இயக்கத்தினர் கூட இந்த வரலாற்று உண்மையை ஒப்புக்கொள்கிறார்கள்.
- வேதாகமமும் இதை முன்னறிவித்தது. வரங்கள் நின்றுபோகும் என்று அப்போஸ்தலர் பவுல் தாமே எழுதினார். கொரிந்து பட்டண சபையில் யாருக்கு பெரிய வரங்கள் உள்ளது என்று சபையார் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள் ('நான் அந்நிய பாஷைகளில் பேசுகிறேன்!', 'அதனால் என்ன? என்னால் மக்களை குணப்படுத்த முடியும்!'). அவர்களை கண்டித்து பவுல் பின்வருமாறு எழுதுகிறார் –
"வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவி ஒன்றே. ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. எப்படியெனில், ஒருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும், வேறொருவனுக்கு அற்புதங்களைச்செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப்பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது.
இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவி நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்துகொடுக்கிறது.. எல்லாரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா? எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா?.. இப்படியிருக்க, மேன்மையான வரங்களை நாடுங்கள்; இன்னும் அதிசிறந்த வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்..
தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம். நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது. நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம். நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.. இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே, அறிந்துகொள்ளுவேன். இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது." 1கொரிந்தியர் 12:4-31; 13.
- இங்கே பவுல் விசயங்களை விளக்குகிறார். அதிசய வரங்கள் அன்று வழங்கப்பட்டதன் நோக்கம் ஆதிகால திருச்சபைக்கு சிறு சிறு பகுதிகளாக முழுமைபெறாத அறிவையும், குறைவான மட்டுப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசனங்களையும் கொடுப்பதற்கே ('நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது') என்கிறார் பவுல். ஆம், அது ஆதிகால புதிய திருச்சபை ('நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன்...'). அதனால் அனைத்து அறிவையும் உள்ளடக்கிய நற்செய்தியும், மற்றும் முழுமையான தீர்க்கதரிசன அமைப்பும் (வெளிப்படுத்தின விசேஷம்!) ஒரே புத்தகமாக வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டில் நிறைவடையும் வரை அவர்களுக்கு அதுபோன்ற அதிசய வரங்கள் தேவைப்பட்டன என்பதே பவுல் உரைக்கும் கூற்று.
- புதிய ஏற்பாட்டு புத்தகம் நிறைவாக முற்றிலும் எழுதப்பட்டு முடித்தபின், அந்த வரங்கள் இனி தேவைப்படாது என்றும் ஆதலால் அவை நின்றுபோகும் என்றும் பவுல் கூறுகிறார் ('நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம்').
- அப்படியே நிகழ்ந்ததாக வரலாறும் பதிவு செய்கிறது. ஆம் அதிசய வரங்கள் யாவும் 2-ஆம் நூற்றாண்டோடு நின்றுபோயின.
- அதன்பின்னர் பவுல் முன்னறிவித்தபடியே, மூன்று வரங்கள் மட்டுமே கிறிஸ்துவின் வருகை வரை நிலைத்திருக்கின்றன – அவை (கிறிஸ்துவின் மேல்) விசுவாசம், (இராஜ்யம் வருமென்ற) நம்பிக்கை மற்றும் (பிதா, குமாரன் மற்றும் சகோதரர்/மனிதர் மேல் காட்டும்) அன்பு ஆகிய மூன்றாகும்.
- கிறிஸ்து மீண்டும் பூமி திரும்பி தன் இராஜ்யத்தை நிலைநாட்டும்போது, விசுவாசமும் நம்பிக்கையும் கூட நின்றுபோகும். ஏனெனில் எல்லாம்தான் கண்முன் நிகழ்ந்துவிடும் அல்லவா? அதன்பின் காணாமல் விசுவாசிக்க வேண்டியதில்லையே! ஆக, அவை இரண்டும் நின்றுபோகும். அன்பு மட்டுமே நித்தியமாக நிலைத்திருக்கும். அதனால்தான் பவுல் அன்பே அவற்றில் எல்லாம் பெரியது என்கிறார்.
7) அதிசய வரங்கள் யாவும் 2-ஆம் நூற்றாண்டோடு நின்றுபோயின என்றால், இன்றைய பெந்தெகொஸ்தே சபைகளில் செய்யப்படும் அற்புதங்கள் எல்லாம் என்ன?
சரி, புறமத கோயில்களில் அற்புதங்கள் நடக்கின்றனவா? – ஆம், நிச்சயமாக. புறமத மந்திரவாதிகளும் இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்களை செய்தார்கள் என்று வேதாகமமே பதிவு செய்துள்ளது –
‘பார்வோன் சாஸ்திரிகளையும் சூனியக்காரரையும் அழைப்பித்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள். அவர்கள் ஒவ்வொருவனாகத் தன் தன் கோலைப் போட்டபோது, அவைகள் சர்ப்பங்களாயின.’ யாத்திராகமம் 7:11-12.
அத்தகைய காரியங்களைச் செய்ய அவர்களுக்கு வல்லமை அளிக்கிறவன் யார்? - சாத்தான் மற்றும் அவனது தூதர்கள் நிச்சயம் இயற்கைக்கு அப்பாற்பட்ட அசாத்திய சக்தி கொண்டவர்கள்தாம்.
8) ஆனால் இந்த சபைகள் இயேசுவின் பெயரில் அற்புதங்கள் செய்கின்றன அல்லவா? சாத்தான் இயேசுவின் நாமத்தில் அற்புதங்கள் செய்வானா, என்ன?
பவுல் கொரிந்தியர்க்கு எச்சரிக்கை விடுக்கிறார்: ‘அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.' 2கொரிந்தியர் 11:14. இது என்ன வினோதம்! சாத்தான் இருளின் தூதன் ஆயிற்றே? ஆனால் அவன் ஒளியின் தூதனாகவும் வேஷம் தரிப்பான் என்கிறாரே பவுல்!
சரி, ஆனால் இந்த சபைகளில் நடக்கும் அற்புதங்கள் ஏன் உண்மையில் இயேசுவின் வல்லமையால் இருக்க முடியாது?
- நாம் முன்பு பார்த்த வண்ணம், தேவன் வழங்கிய ஆவியின் அதிசய வரங்கள் அப்போஸ்தலர்கள் முன்னறிவித்தபடி 2-ஆம் நூற்றாண்டில் நின்றுபோயின.
- அதைவிட மிக முக்கியமான விசயம் என்னவெனில், தம்மை "கிறிஸ்துவின் சபை" என்று சொல்லிக்கொள்ளும் இந்த பெயரளவு கிறிஸ்தவ சபைகளுக்கு, மனுக்குலம் முழுவதையும் மீட்க இயேசு ஆதாமிற்காக கொடுத்த மீட்கும் கிரயத்தைப் பற்றியோ, பூமியில் வரவிருக்கும் மகிமையான தேவனின் இராஜ்யத்தைப் பற்றியோ, ஆக மொத்தத்தில் மெய்யான கிறிஸ்தவ நற்செய்தி பற்றி எதுவும் தெரிவதில்லை.
அச்சபைகள் புறமத கோட்பாடான நரக சித்திரவதையை நம்புகின்றன. அதற்கும் மேலாக, அவர்களுக்கு மெய்யான சர்வ வல்ல தேவன் யார் என்பதுகூட தெரியவில்லை. அவர்கள் திரித்துவ தெய்வத்தை வழிபட்டு, பரிசுத்த ஆவியை ஒரு நபர் என்றும் நம்புகிறார்கள். இப்படி இருக்க அவர்கள் செய்யும் அற்புதங்கள் மெய்யான தேவனின் வல்லமையால் வருவது எப்படி சாத்தியம்?!
வெகுஜனங்களைப் குழப்புவதற்காக உண்மையில் சாத்தான் தான் அச்சபைகள் மூலம் அந்த அற்புதங்களை செய்கிறான். குழப்பம் விளைவிப்பதுதான் (ஒளியின் தூதன் வேடம்!) அவன் தொழில் ஆயிற்றே!
9) இப்படிப்பட்ட அற்புதங்களை தன் பெயரில் செய்வார்கள் என இயேசு முன்னறிவித்தாரா?
இயேசு, "அந்நாளில் அநேகர் என்னை நோக்கி, 'கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா?' என்பார்கள். அப்பொழுது, 'நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்,' என்று அவர்களுக்குச் சொல்லுவேன்," என்றார். மத்தேயு 7:22-23. இயேசுவின் இந்த தீர்க்கதரிசனத்தில் மூன்று விசயங்கள் குறிப்பிடத்தக்க வண்ணம் தனித்து நிற்கின்றன –
- "அந்நாளில்", அதாவது இராஜ்யத்தில் இயேசுவிடம் இங்ஙனம் முறையிடுபவர்கள், தங்கள் வாழ்க்கையில் கிறிஸ்துவின் வல்லமையால்தான் அற்புதங்களை செய்தோம் என்று நினைத்தார்கள். ஆனால் அவர்கள் பரலோகத்தில் அல்லாமல் பூமியில் உயிர்த்தெழுந்துவிட்டார்கள் என்பது தெளிவாகிறது. அதனால்தான் கோபமாக இயேசுவிடம் முறையிடுகிறார்கள்.
கிறிஸ்துவின் பெயரில் ஒருவர் அற்புதங்களை செய்துவிட்டால் உடனே அவரை கிறிஸ்தவ விசுவாசி என்று சொல்லிவிட முடியாது என்பது இதிலிருந்து தெரியும் ஒரு முக்கிய விசயம். - இயேசு அவர்களை தான் "ஒருக்காலும் அறியவில்லை" என்கிறார்! - அதாவது அவர்கள் உண்மையில் கிறிஸ்தவர்களாக இருக்கவில்லை. அவர்கள் அவரை உண்மையாய் பின்பற்றினவர்கள் அல்ல.
- அவர் அவர்களை "அக்கிரமச் செய்கைக்காரர்" என்று அழைக்கிறார்! - நல்ல விசயங்கள் போன்ற அற்புதங்களைத்தானே செய்தார்கள். அவற்றை ஏன் அக்கிரமம் என்று அவர் அழைக்கவேண்டும்? அக்கிரமத்தின் தந்தை யார்? ஆம், அவர்களுடைய அற்புத வல்லமை சாத்தானிடமிருந்துதான் வந்தது! அதனால்தான் இயேசு அவர்களுக்கு "அக்கிரமச் செய்கைக்காரர்" என்ற பட்டம் அளிக்கிறார்.
10) அன்று 2-ஆம் நூற்றாண்டில் நின்றுபோன ஆவியின் அதிசய வரங்கள் திடீரென 20-ஆம் நூற்றாண்டில் மறுபடி தலையெடுப்பது ஏன்?
சாத்தானின் வல்லமையால் பிசாசுகளை விரட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டபோது இயேசு இதனை விளக்குகிறார் – ‘சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி? ஒரு இராஜ்யம் தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த இராஜ்யம் நிலைநிற்கமாட்டாதே. ஒரு வீடு தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த வீடு நிலைநிற்கமாட்டாதே. சாத்தான் தனக்குத்தானே விரோதமாக எழும்பிப் பிரிந்திருந்தால், அவன் நிலைநிற்கமாட்டானே, அவன் முடிவு வந்துவிட்டது." மாற்கு 3:23-26.
- சாத்தான் தனக்குத்தானே விரோதமாக ("ஒளியின் தூதனாக வேஷம் தரித்து") எழும்பிப் பிரிய ஆரம்பித்தால் (தன் சொந்த பிசாசுகளை தானே ஓட்ட ஆரம்பித்தால்) என்ன அர்த்தம் என்று இயேசு விளக்குகிறார். ஆம், சாத்தானின் முடிவு நெருங்கிவிட்டது என்பதுதான் அதன் அர்த்தம் என்கிறார் அவர்!
- ஆம், சாத்தான் 2000 வருடங்களாக தன்னுடைய எல்லாவித தந்திரங்களையும் நடப்பித்து முடித்துவிட்டான். அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி கி.பி.1799-இல் முடிந்துபோனது. மனுக்குலத்தின் அறிவும் பல்மடங்கு முன்னேறிவிட்டது. அதனால் அவன் மனிதரை ஏமாற்ற வழிமுறைகள் இல்லாமல் திணறிப்போய்விட்டான். முன்னறிவிக்கப்பட்டது போலவே, தற்போது இயேசுவின் பெயரில் அற்புதங்கள் செய்து மக்களை தவறாக திசைதிருப்ப ஒரு கடைசி சூழ்ச்சியில் இறங்கியுள்ளான். அவன் முடிவு இப்போது நிச்சயம் வெகு அருகில்தான் உள்ளது.
11) இந்த அற்புதங்கள் உண்மையில் சாத்தானிடமிருந்துதான் வருகின்றன என்பதை தெளிவாக காட்டும் வேறு விசயங்கள் உள்ளனவா?
"சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நியபாஷைகளில் பேசினால் என்னாலே உங்களுக்குப் பிரயோஜனம் என்ன? அதுபோல, நீங்களும் தெளிவான புரியும்படியான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித்தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே.
உலகத்திலே எத்தனையோ விதமானபாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல. சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; 'மறுபாஷைக்காரராலும், மறுஉதடுகளாலும் இந்த ஜனங்களிடத்தில் பேசுவேன்; ஆகிலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்,' என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே. அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது; ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?
யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும். அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன்.
தீர்க்கதரிசிகள் இரண்டுபேராவது மூன்றுபேராவது பேசலாம், மற்றவர்கள் நிதானிக்கக்கடவர்கள். அங்கே உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால், முந்திப் பேசினவன் பேசாமலிருக்கக்கடவன். எல்லாரும் கற்கிறதற்கும் எல்லாரும் தேறுகிறதற்கும், நீங்கள் அனைவரும் ஒவ்வொருவராகத் தீர்க்கதரிசனஞ்சொல்லலாம். தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறதே. தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல், சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார்." 1கொரிந்தியர் 14:6-33.
- உலகெங்கும் சுவிசேஷத்தை பரப்ப உதவுவதற்காகவே - அதாவது, வெவ்வேறு மக்களுக்கு அவரவர் பாஷைகளில் சுவிசேஷத்தின் செய்தியை அளிக்கவே - அந்நாட்களில் அந்நிய பாஷை வரம் கொடுக்கப்பட்டதாக கொரிந்து சபையாருக்கு பவுல் தெளிவுபடுத்துகிறார்.
- அவர் சபைகளில் அர்த்தம் சொல்லுகிறவர் இல்லாவிட்டால் அந்நியபாஷை பேசக்கூடாது என்கிறார். ஏனெனில் அவிசுவாசிகள் யாரேனும் உள்ள நுழைந்து சபையார் அர்த்தமற்ற சொற்களை உளறிக்கொண்டிருப்பதை கண்டால் அவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என நினைத்துவிடுவார்கள் என்கிறார்.
- மேலும் சபைகளில் நிதானமும், ஒழுங்கும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்கிறார். ஏனென்றால் நம் "தேவன் கலகத்திற்கு தேவனாயிரார்." "தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறதே," என்கிறார் பவுல். ஆம், மெய்யான தேவன் அளிக்கும் வரங்களினால் யாரும் சுய கட்டுப்பாட்டை இழப்பதில்லை!
- அவர் சபையில் அனைவரும் ஒவ்வொருவராக தங்கள் முறை வரும்போது பேசவேண்டும் என்றும், எல்லாரும் ஒரே நேரத்தில் கத்திக்கொண்டு இருக்கக்கூடாது என்றும் அறிவுறுத்துகிறார்.
சரி, இன்றைய பெந்தெகொஸ்தே சபைகளில் ஒன்றிற்கு நாம் சென்றோமானால், என்ன காண்கிறோம்? - மக்கள் அந்நிய பாஷை பேசுகிறேன் என்று சொல்லிக்கொண்டு அர்த்தமற்ற சொற்களை உளறுவதையும், ஒரே நேரத்தில் பலர் இரைச்சல் போடுவதையும், சுய கட்டுப்பாடு இல்லாத ஆட்டங்களையும், இவ்வகையான பல கூத்துக்களையும் பார்க்கிறோம். என்னவொரு ஒழுங்கற்ற கலகமான காட்சி!
கலகத்தின் தேவன் யார் என சற்று சிந்தியுங்கள்? ஆம் உண்மையில் அது சாத்தான் தான். இவை எல்லாம் அவனுடைய வல்லமையின் பயன்களே!