கெஹன்னா- நித்திய அக்கினிக்கடல்
- விவரங்கள்
- பிரிவு: நரக புராணம்
கருப்பொருள் வசனம் – ‘ஆத்துமாவையும் சரீரத்தையும் "கெஹன்னாவிலே" [நரகத்திலே] அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்’ (மத்தேயு 10:28)
1) புதிய ஏற்பாட்டிலே அக்கினி பற்றிய எச்சரிக்கைகள் இருக்கின்றன அல்லவா?
நாம் வேதாகமத்தின் எந்தவொரு பகுதியை வாசிக்கும்போதும் முக்கியமாக எழும் கேள்வி ஒன்றுண்டு - இதை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே அர்த்தப்படுத்திக்கொள்வதா? அல்லது வேறொரு விசயத்தின் அடையாள உவமைமாக இது சொல்லப்பட்டுள்ளதா?
உதாரணமாக மத்தேயு 6:30-இல் "இன்றைக்கு இருந்து நாளைக்கு அக்கினியிலே போடப்படும் காட்டுப்புல்," என்று இயேசு கிறிஸ்து குறிப்பிடுகிறார். அப்படியெனில் புல், தாவரங்களுக்கென்று ஓர் நரகம் உண்டென்று நாம் அர்த்தம் கொள்வதா, என்ன? அல்ல, தாவரங்களின் குறுகிய வாழ்நாளை சுட்டிக்காட்டுகிற ஒரு அடையாள மொழியாகத்தான் அவர் அதனை பயன்படுத்துகிறார். மரணத்தைக் குறிக்கிற ஒரு அடையாளச் சொல்லாகத்தான் திருமறை முழுவதும் அக்கினி பயன்படுத்தப்பட்டுள்ளது - ஆக, நித்திய அழிவை அது குறிக்கிறது. நித்திய சித்திரவதையை அல்ல.
2) "ஷியால்"/"ஹேடீஸ்" பற்றி முன்னர் ஆராய்ந்தோம். வேறெந்த வார்த்தை நரகமென புதிய ஏற்பாட்டில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?
"கெஹன்னா" என்ற வார்த்தை "நரகம்" என பன்னிரண்டு தடவை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கெஹன்னா நரகத்தை குறிக்கிறது எனில், உண்மையில் நாம் டிக்கெட் எடுத்து விமானம் மூலம் நரகத்திற்கு செல்ல முடியும்! குழப்பமாகயிருக்கிறதோ?
ஆம், இஸ்ரவேல் நாட்டிலே மெய்யாகவே அமைந்துள்ள ஒரு நிஜ இடம் "கெஹன்னா". அது ஒரு பெயர்ச்சொல். ஒரு நிஜ இடத்தின் பெயர்! ஆகவே தான் ஒய்.எல்.டீ. (YLT) போன்ற ஆங்கில மொழிபெயர்ப்புகள் "நரகம்" என்று சொல்லாமல் எப்படி ஒரு இடப்பெயரை பயன்படுத்துவோமோ, அங்ஙனமே அதை "கெஹன்னா" (Gehenna) என்றே குறிப்பிடுகின்றன. 'கெஹன்னாவில் உள்ள அக்கினி' என்று இயேசு சொல்வது எப்படியென்றால், 'சைதாப்பேட்டையில் எரியும் தீ' என்று ஒரு சென்னை நகரவாசி சொல்வதை போன்றதே.
3) "கெஹன்னா"வின் முகவரி எங்கே?
கிரேக்கத்தில் "கெஹன்னா" என்ற பெயர் கொண்ட ஹின்னோம் பள்ளத்தாக்கு எருசலேம் நகரத்திற்கு சற்று வெளியே அமைந்துள்ளது. இயேசுவின் காலத்தில் அது அந்த நகரத்தின் குப்பையெரிக்கும் பேட்டையாக இருந்தது. குப்பையாக கொட்டப்படும் பொருட்கள் யாவற்றையும் முழுவதாக உட்கொண்டு அழிப்பதற்கென அங்கே தொடர்ந்து நெருப்பு எரியவைக்கப்பட்டுக்கொண்டே (ஒரு நித்திய அக்கினிக்கடல்!) இருக்கும். சாம்பலாக்கும் இந்த அக்கினிக்கு எரிபொருளாக கந்தகம் சேர்க்கப்படுவது வழக்கம். அது முழுமையான அழிவை உறுதி செய்தது.
4) கெஹன்னாவிலே எந்தவொரு உயிரினத்தையேனும் வீசி எறிய அனுமதி இருந்ததா?
நிச்சயம் இல்லை, ஒருபோதும் இல்லை! தேவன் இஸ்ரவேலுக்கு வழங்கின சட்டமானது உயிருள்ள எந்த ஜீவனையும் சித்திரவதை செய்ய அனுமதித்ததில்லை.
குப்பைகளுக்கு அப்பாற்பட்டு, செத்த நாய்கள் போன்ற பிராணிகளின் பூத உடல்களும், கண்ணியமான அடக்கம் செய்ய மறுக்கப்பட்ட கொடூர குற்றவாளிகளின் பிணங்களும் கெஹன்னாவில் வீசி எறியப்பட்டன.
அங்கே அவை முற்றிலும் எரிந்து அழிந்துபோயின. உயிருள்ளவை எதுவும், எந்தவொரு பிராணியும் கூட, அங்கே சித்திரவதைக்கு ஆளானதில்லை.
5) அப்படியெனில், கெஹன்னா எதை அடையாளப்படுத்துகிறது?
பழைய எருசலேமின் அக்கினிக்கடலான கெஹன்னா இடமானது தேவனுக்கு கீழ்ப்படிந்த மக்களை உருவகப்படுத்தும் எதிர்கால "புதிய எருசலேம்" நகரம் மாசுபடுவதிலிருந்து தடுப்பதற்காக தேவனால் நிச்சயம் நடக்கவிருக்கும் பூமியின் அசுத்த குப்பைப்பொருட்களின் அழிவைத்தான் எடுத்துக்காட்டுகிறது. தீயவற்றை அக்கினிக்கடலில் அடையாளமாக எரிக்கிற இந்த நிகழ்வினை வேத வசனங்கள் இறுதி அழிவான "இரண்டாம் மரணம்" என்று நேரடியாக விளக்குகின்றன (வெளி 20:14). "விரோதிகளைப் பட்சித்தழிக்கும் கோபாக்கினை" என்று அது விவரிக்கப்படுகிறது (எபிரெயர் 10:26-27).
6) "கெஹன்னா" என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதை ஒரு உதாரணத்துடன் பார்க்கலாமா?
'ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே ("கெஹன்னாவிலே") அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்' (மத்தேயு 10:28) - ஆம், எங்ஙனம் எருசலேமின் குற்றவாளிகளது உயிரற்ற பிணங்கள் அழிவுக்கென கெஹன்னா பள்ளத்தாக்கில் வீசி எறியப்பட்டனவோ அதேபோல அழிக்க வல்லவரே.
- சித்திரவதையல்ல. முழுமையான அழிவு மட்டுமே. தன்னுடைய மலைப்பிரசங்கத்தில் இயேசு இதே "கெஹன்னா" இடத்தை பயன்படுத்தினார் (மத்தேயு 5:22). எவ்விடத்திலிருந்து இயேசு இந்த வார்த்தையை மொழிந்தாரோ அவ்விடத்திலிருந்து கெஹன்னா பள்ளத்தாக்கு வெகுதூரத்தில் இல்லை.
- அன்று அவரது வார்த்தையை கேட்டவர்கள் ஒருக்கணம் கூட அவர் தன்னை நிராகரிப்பவர்கள் அனைவரும் நித்தியத்திற்கும் சித்திரவதை செய்யப்படுவார்கள் என்று சொல்வதாக நினைத்திருக்க வாய்ப்பே இல்லை. கிறிஸ்தவத்தில் இருண்ட காலங்களிலே (Dark Ages) புகுந்த திரிக்கப்பட்ட சித்தாந்தங்களே இன்று பலர் அப்படி நினைப்பதற்கு ஏதுவாயின. இல்லையெனில், இன்றுகூட அவ்வார்த்தைகளை வாசிப்பவர்கள் அப்படி நினைப்பதற்கில்லை.
கெஹன்னா பள்ளத்தாக்கு - சாவாத புழுக்களின் விநோதம்
7) "அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலும் இருக்கும்" (மாற்கு 9:47-48) என்று கெஹன்னாவைக் குறித்து இயேசு குறிப்பிடுகிறார். புழுக்கள் அக்கினியிலும் சாகாத ஓர் இடமென்றால் உடனே பலர் அது ஒரு மாய நரக உலகமாகவே இருக்கவேண்டுமென்று நினைத்துக்கொள்கிறார்கள். அப்படியாகுமா?
இயேசு வாழ்ந்த முதலாம் நூற்றாண்டு கெஹன்னா பள்ளத்தாக்கைப் பற்றி தெரிந்தவர்கள் மட்டுமே இந்த சொல்வழக்கின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்வார்கள்.
- இன்றைய காலங்களில் கூட, மாநகரங்களின் குப்பையெரிக்கும் பேட்டைகளில் நெருப்பு தொடர்ந்து அணையாமல் காக்கப்படுகிறது என்பதை அறிவோம். அதுபோலவேதான், அக்காலத்திலும் எருசலேம் மாநகர கெஹன்னா பள்ளத்தாக்கில் அக்கினி (அவியாமல்) எரியவைக்கப்பட்டுக்கொண்டே இருந்தது.
- அதுசரி, ஆனால் புழுக்கள் ஏன் சாவதில்லை? ஏனெனில் கெஹன்னா பள்ளத்தாக்கின் அடிமட்டத்தில் மட்டுமே அக்கினி எரிந்துகொண்டிருக்க, புழுக்களோ பள்ளத்தாக்கின் சரிவுகளில் காணப்பட்ட செடிகொடிகளில்தான் விருத்தியடைந்தன. மேலும், அப்புழுக்கள் சாவதுமில்லை, ஏனெனில் அவை இறுதியில் அந்துப்பூச்சிகளாக உருமாறும் முட்டைப்புழுக்கள் (maggots) ஆகும்!
8) கெஹன்னா பள்ளத்தாக்கைப் பொறுத்தமட்டில் இவை அனைத்தின் மூலமாகவும் இயேசு எதைத்தான் சுட்டிக்காட்டுகிறார்?
கெஹன்னா பள்ளத்தாக்கினுள் வீசி எறியப்பட்ட பிணங்களை கீழே பற்றியெரிந்துகொண்டிருக்கிற அக்கினி அழித்துப்போடும். வீசியெறிகையில் பள்ளத்தாக்கின் சரிவுகளில் சிக்கிக்கொள்ளும் சடலங்களோ புழுக்களால் அரித்துத் தின்னப்படும். ஆக, கெஹன்னாவில் கொட்டப்பட்ட உடல்கள் நிச்சயமாக தவறாமல் ஏதேனும் ஒரு வழியில் அழிந்தே போகும். அதுபோலவே, பாவிகளும் அழிவுக்கு தப்பமுடியாது என்பதே இயேசு சுட்டிக்காட்டும் கருத்து. எந்தக்காலத்திலும் கெஹன்னாவில் உயிருள்ள மனிதர் எவரும் நெருப்பில் எரிக்கப்பட்டதோ, புழுக்களால் தின்னப்பட்டதோ நிச்சயம் இல்லை!
கெஹன்னாவின் “நித்திய” அக்கினி - நித்தியமானது எது?
9) வெளிப்படுத்தின விசேஷம் 20-ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “அக்கினிக்கடல்” என்பதற்கும், மத்தேயு 25:41-இல் சொல்லப்பட்டுள்ள “நித்திய அக்கினி” என்பதற்கும் கெஹன்னாவுடன் சம்பந்தம் உண்டா?
- வாழ்வதற்கு தகுதியில்லை என்று அறியப்பட்டவர்கள் அக்கினிக்கடலிலே தள்ளப்படுவார்கள் என்று வெளிப்படுத்தின விசேஷம் 20:15 உரைக்கிறது. எப்போதும் போல, அழிவின் ஒரு அறிகுறியாகவே அக்கினி பயன்படுத்தப்பட்டுள்ளது. அக்கினிக்கடல் எனும் இந்த அடையாளம் எருசலேம் நகரின் நிஜ கெஹன்னா பள்ளத்தாக்கிலிருந்து எடுத்தாளப்பட்டதே ஆகும். இராஜ்ய நியாயத்தீர்ப்பு யுகத்தில் நடைபெறவிருக்கும் விசாரணை என்பது (இயேசுவுக்கு கீழ்ப்படிகிற) நீதியான செம்மறியாடுகளை (கீழ்ப்படியாத) வெள்ளாடுகளிலிருந்து பிரித்தெடுக்க சோதனைக்கு உட்படுத்தும் ஓர் காலமாகும் (மத்தேயு 25:31-46). இதைக்குறித்து மேலும் படிக்க.
- கீழ்ப்படியாதவர்கள் நித்திய அக்கினியிலே பூரணமான அழிவினைச் சந்திப்பார்கள் (மத்தேயு 25:46). இந்த "நித்திய" அக்கினி என்பது எருசலேமின் கெஹன்னா பள்ளத்தாக்கில் இடைவிடாமல் (நித்தியமாக) எரியும்படி வைக்கப்பட்ட அக்கினியிலிருந்து எடுத்தாளப்பட்டது. "நித்திய" என்ற அடைமொழியானது இடைவிடாமல் எரியும் அந்த அக்கினிக்கு மட்டுமே பொருந்துமே ஒழிய, யாரேனும் நித்தியமாக அதில் எரிந்து கொண்டிருப்பர் என்று அர்த்தமல்ல. எரியும் அக்கினி பொருட்களை அழித்துத்தான் போடும்!
மிருகத்தின் தலைவிதியும், ஒரு "சதாகால" தவறும்
10) ஆனால், வெளிப்படுத்தின விசேஷம் 20:10-ஆம் வசனம் "மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியும் அக்கினியும் கந்தகமுமான கடலிலே சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்," என்று சொல்கிறதே?
முதலில், இது அடையாளங்களால் நிறைந்த ஒரு வசனம் என்பது மிகத்தெளிவாக தெரிகிறது (ஏனெனில் ஒரு மிருகம் உள்ளது!). மேலும், அதற்கு முந்தைய வசனம் சாத்தான் பக்கம் சாய்கிற மனிதர்கள் யாவரும் அக்கினியால் பட்சிக்கப்பட்டு அழிந்துபோகிறதை காட்டுகிறது (வெளி 20:9). எனவே, இந்த வெளி 20:10 வசனம் நிச்சயம் மனிதர்களைக் குறிப்பிடவில்லை. இந்த வசனத்தில் உள்ள "மிருகமானது" அரசாங்கங்கள், அதிகாரிகள் உட்பட உலகத்தின் சக்திவாய்ந்த அனைத்து அரசியல் அமைப்புகளையும் சுட்டுகிறது. வசனத்தில் உள்ள "கள்ளத்தீர்க்கதரிசி" பூமியின் போலியான மத அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
ஆனால், அமைப்புகளும், நிறுவனங்களும் எங்ஙனம் "வாதிக்கப்படக்கூடும்"? தேவனின் போதனைகளுக்கு எதிராக இன்று செயல்படுகிற இந்த உலகப்பிரகாரமான அமைப்பு முறைகள் யாவும் பொருளாதார, சமூக, மதரீதியான சிரமங்களையும், வேதனைகளையும் அனுபவிப்பத்தின் மூலம் அழிக்கப்படும்.
இவ்வசனத்தில் உள்ள "சதாகாலங்களிலும்" என்ற சொல் ஒரு தவறான மொழிபெயர்ப்பாகும். அதற்குரிய மூல கிரேக்க வார்த்தை "இயோனியோன்" (aionion) என்பதன் சரியான அர்த்தம் "யுகத்தின் முடிவு-வரை" என்பதாகும். அதாவது, இந்த அமைப்புகள் யுகத்தின் இறுதிவரை தொடர்ந்து வாதிக்கப்பட்டு முடிவில் (அடையாளமான) அக்கினிக்கடலிலே முற்றிலுமாக அழிக்கப்படும் என்றே இவ்வசனம் அர்த்தப்படுத்துகிறது.
அக்கினிக்கடலிலே தள்ளப்படும் நரகம்!
11) வேதாகமத்தில் அக்கினிக்கடல் பற்றி நேரடியான விளக்கம் எங்கேனும் உண்டா?
சொல்லப்போனால், வெளிப்படுத்தின விசேஷம் அக்கினிக்கடல் என்னவென்று வெளிப்படையாகவே வரையறுக்கிறது. அக்கினிக்கடல் என்பது "இரண்டாம் மரணம்" என்று வெளி 20:14 கூறுகிறது. இது NIV போன்ற ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்புகளில் மிகத்தெளிவாக உள்ளது. ஆம், அக்கினிக்கடல் அடையாளப்படுத்துவது முழுமையான நிரந்தர அழிவான இரண்டாம் மரணத்தையே.
இது எளியதொரு, நேரடியான திருமறை பிரகடனம்.
வெளி 20:14 மேலும், "மரணமும் (ஹேடீஸும்) பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன" என்றும் கூறுகிறது! KJV போன்ற ஆங்கில மொழிபெயர்ப்புகள் "மரணமும், நரகமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன," என்று மொழிபெயர்க்கின்றன. "நரகமும் அக்கினிக்கடலும் ஒன்றுதானே? அதெப்படி நரகத்தை அக்கினிக்கடலில் தள்ளமுடியும்?" என்று பலர் கேட்பது வழக்கம்.
இப்போது நாம் இவ்வார்த்தைகளை சரியாக புரிந்திருக்கிறபடியால், "மரணமும், (ஹேடீஸும்) கல்லறையும் அதன்பின்னர் இராது!" என்பதே அதன் அர்த்தம் என்பதை அறிகிறோம்!
அக்கினிக்கடலிலே தள்ளப்படுவதென்பது மரணம் மற்றும் ஹேடீஸின் (கல்லறையின்) நிரந்தர முடிவையே அடையாளப்படுத்துகிறது.
மேலும் படிக்க: டார்டரூ - வீழ்ந்த தூதரின் இருட்டுச்சிறை