உங்கள் பரம அழைப்பு - நீங்கள் செய்ய வேண்டியது
- விவரங்கள்
- பிரிவு: திருச்சபை: பரம அழைப்பு
கருப்பொருள் வசனம்: இயேசு, “என்னைப் பின்பற்றிவா. மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும். நீ போய், தேவனுடைய இராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி,” என்றார். லூக்கா 9:59-60.
இயேசு ஆதாமிற்காக சிலுவையில் செலுத்திய மீட்பின் கிரயம் பற்றின உண்மையான நற்செய்தியை நீங்கள் புரிந்துகொண்டீர்களா? மனுக்குலம் அனைத்தும் மறுபடி பூமியில் உயிரோடு எழும்பி கிறிஸ்துவின் ஆட்சியின்கீழ் நீதி கற்றுக்கொள்ளவிருக்கும் தேவனின் மகிமையான இராஜ்யம் குறித்து நீங்கள் உற்சாகமடைகிறீர்களா? நீங்கள் அப்பொழுது கிறிஸ்துவுடன் ஆட்சி செய்ய விரும்புகிறீர்களா?
மெய் கிறிஸ்தவத்தின் வேதாகம அஸ்திபாரங்களை நீங்கள் தெரிந்துகொண்டீர்களா? நீங்கள் தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பின்பற்ற விரும்புகிறீர்களா? சரி, அப்படியென்றால் நீங்கள் இப்போது செய்ய வேண்டியது என்ன?
- செத்த கிரியைகளில் இருந்து மனந்திரும்புங்கள் - நீங்கள் பாவியாக பிறந்திருக்கிறீர்கள் என்பதையும், உங்கள் சுயமுயற்சிகளால் (செத்த கிரியைகளால்) உங்களை நீங்களே நியாயப்படுத்திக்கொள்ள முடியாது என்பதையும் ஒப்புக்கொண்டு, எனவே தேவனை நோக்கி ஒரு இரட்சகரை வேண்டி மனந்திரும்ப வேண்டும்.
- கிறிஸ்துவை விசுவாசியுங்கள் - உங்களை நியாயப்படுத்தவும் இரட்சிக்கவும், இயேசு கிறிஸ்துவின்மேல் விசுவாசம் வையுங்கள்.
- கிறிஸ்துவிற்குள் ஞானஸ்நானம் பெறுங்கள் - ஆதாமிற்கும் பூமிக்குரிய வாழ்விற்கும் மரித்து, கிறிஸ்துவிற்காகவே வாழ்வதற்காக உயிர்த்தெழும் உங்கள் அர்ப்பணிப்பை வெளிக்காட்டும் முக்கிய அடையாள செயலான முழுக்காட்டுதல் ஞானஸ்நானம் எடுங்கள்.
- பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்று, மனுக்குலத்திற்கு மெய் நற்செய்தியை அறிவிக்க பெலப்படுத்தப்படுங்கள்.
- கிறிஸ்துவிற்குள் உங்கள் சகோதர, சகோதரிகளோடு சேர்ந்து நற்செய்தி அறிவிக்கும் ஆவிக்குரிய சுவிசேஷ ஓட்டத்தை ஓடுங்கள்.
- இறுதி வரை ஆவிக்குரிய ஓட்டத்தில் விசுவாசத்துடன் நிலைத்திருங்கள்.
- கடவுளுடைய சொந்த குடும்பத்தில் தத்தெடுப்பு, சாகாவரம் மற்றும் கிறிஸ்துவின் கீழ் அரசுரிமை ஆகிய பரலோக வெகுமதிகளை வெல்லுங்கள்.
சிந்திக்க வேண்டிய சில விசயங்கள்
இயேசு, “யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து, அஸ்திபாரம் போட்டபின்பு முடிக்கத் திராணியில்லாமற்போனால், பார்க்கிறவர்களெல்லாரும், இந்த மனுஷன் கட்டத்தொடங்கி, முடிக்கத் திராணியில்லாமற்போனான் என்று சொல்லித் தன்னைப் பரியாசம் பண்ணாதபடிக்கு, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் பாராமலிருப்பானோ?
அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்," என்றார். லூக்கா 14:25-33.
இயேசு வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்ற விதமாகத்தான் பேசுகிறார், அல்லவா? தனக்கென்றும் தனது நற்செய்தி வேலைக்கென்றும் தன்னை பின்பற்றுபவர்கள் முழுமையாக அர்ப்பணம் செய்ய வேண்டும் என்று கேட்கிறார். நற்செய்தியின் நிமித்தமாக அவருக்கு வந்த பாடுகளில் அவர்களுக்கென்று ஒரு பங்கை அவர் உறுதியளிக்கிறார்.
நம்முடைய விசுவாசத்தை சோதித்துப் பார்க்கவே அந்த பாடுகள். நமக்கு ஒரு ஆறுதல் என்னவென்றால் தேவன் யாரையும் அவர்களது திராணிக்கு மேலாக சோதிப்பதில்லை என்பதே -
“தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.” 1கொரிந்தியர் 10:13.
பவுல் நமக்கெல்லாம் ஒரு சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார். அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் சுவிசேஷ ஓட்டத்தை ஓடி, மிகக்கடுமையாக சோதிக்கப்பட்டார் –
“நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன். அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரணஅவதியில் அகப்பட்டவன். ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன். மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன்.
அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்; பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும், தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.” 2கொரிந்தியர் 11:23-27.
நற்செய்தி அறிவிப்பதற்காக இத்தகைய எல்லா சோதனைகளையும் அனுபவித்த பவுல் மிகவும் பிரமாதமாக உணர்ந்தார். சொல்லப்போனால் தான் சுவிஷே ஓட்டப்பந்தயத்தில் வென்றுவிட்டதாக பதிவு செய்யும் அளவிற்கு அவரது மகிழ்ச்சி இருந்தது! –
"நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்." 2தீமோத்தேயு 4:7-8.
நீங்கள் ஆயத்தமா?
1) தேவனுடைய குடும்பத்தில் அவரது புத்திரராக நீங்கள் தத்தெடுக்கப்பட விரும்புகிறீர்களா?
அதற்காக ஆதாமின் குடும்பத்துடன் உங்களை பிணைக்கும் உறவுகளை இழக்க நீங்கள் தயாரா?
2) கிறிஸ்து மற்றும் அவரது சீடர்களின் ஆவிக்குரிய சகோதர/சகோதரியாக நீங்கள் விரும்புகிறீர்களா?
அதன்பொருட்டு உங்களுடைய மாம்ச உறவுகளை இழக்க நீங்கள் தயாரா?
3) உங்களுக்கு சாகாவரம் வேண்டுமா?
தேவனைப் போல அழிவில்லாத்தன்மை அடைந்த அவரது குமாரனைப் பற்றி அறிவிப்பதற்காக, உங்களுடைய தற்போதைய சாவிற்குரிய வாழ்க்கையை அர்ப்பணிக்க நீங்கள் தயாரா?
4) இராஜ்யத்தில் மனுக்குலத்தை சீரமைப்பு செய்து மேம்படுத்த கிறிஸ்துவின் கீழ் ஆட்சியாளராக அவர்களை ஆட்சி செய்ய உங்களுக்கு விருப்பம் உண்டா?
கிறிஸ்துவின்கீழ் ஸ்தானாதிபதியாக மனுக்குலத்திற்கு அவருடைய நற்செய்தியை பிரசங்கிக்க உங்கள் இராஜ்ய பிரதிநிதித்துவத்தை இந்த வாழ்க்கையிலேயே ஆரம்பிக்க நீங்கள் தயாரா?
5) நித்திய ஜீவனுக்காக பரலோகத்தில் உங்களுக்கென ஒரு இடத்தை அடைய நீங்கள் விரும்புகிறீர்களா?
உங்களது தற்போதைய பூமிக்குரிய வாழ்க்கையை பரலோகத்தில் இருந்து வந்த நற்செய்தி வேலைக்காக அர்ப்பணிக்க நீங்கள் தயாரா?
நீங்கள் ஞானஸ்நானம் பெற விரும்பினாலோ, அல்லது உங்கள் ஊரில் ஒத்த கருத்துடைய சகோதர, சகோதரிகளோடு ஐக்கியம் கொள்ள வேண்டும் என்றாலோ, அல்லது உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தாலோ, நிச்சயம் எங்களை தொடர்பு கொள்ளலாம்.
குறிப்பு: நாங்கள் உலகெங்கிலும் பரவி உள்ள வேதாகம விசுவாசிகள். சிறு குழுக்களாக இருக்கிறோம். நாங்கள் எந்த நன்கொடையும் சேகரிப்பதில்லை. எங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே வாசிக்கவும்.