மகா மறுசீரமைப்பின் காலம்

கருப்பொருள் வசனம்: "தேவன் எல்லோரின் மீட்பராக இருக்கிறார். அதோடு விசுவாசிகளுக்குச் சிறப்பான முறையில் மீட்பராக இருக்கிறார்." 1தீமோத்தேயு 4:10.

1) இயேசு ஆதாமிற்குக் கொடுத்த மீட்கும் கிரயப்பொருளின் பொருட்டு அனைத்து மனுக்குலமும் கிறிஸ்துவின் இராஜ்யத்தில் மரணத்திலிருந்து உயிர்ப்பிக்கப்படுவர் என்றால், இன்றைய நாளில் கிறிஸ்துவை ஏற்று பின்பற்றுவதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது?
நம் கருத்துப்பொருள் வசனம் 1தீமோத்தேயு 4:10 சொல்வது போல், தேவன் எல்லோரையும் மீட்கும் கடவுளாக இருக்கும்போதிலும், இன்றைய விசுவாசிகளை ஒரு சிறப்பான முறையில் மீட்கிறார். இந்த சிறப்பு மீட்புக்கும், வரவிருக்கும் கடவுளின் இராஜ்யத்துக்கும் ஒரு முக்கிய தொடர்பிருக்கிறது.

2) கடவுளின் இராஜ்யம் என்பது என்ன?
மனுக்குலம் அனைத்தும் சத்தியத்தையும் , நீதியையும் கற்றுக் கொள்கிற காலமே கடவுள் இராஜ்ய காலம். இந்த இராஜ்யத்திற்காகத்தான் கிறிஸ்தவர்கள் ஜெபிக்கிறார்கள் –
உம்முடைய இராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக” (மத்தேயு 6:10).
இந்த இராஜ்யத்தைக் குறித்துத்தான் பிரசங்கிக்குமாறு இயேசு தமது சீடர்களிடம் கூறினார். (லூக்கா 9:59-60). ஆம், பூமியில் கடவுள் இராஜ்யம் நிறுவப்படும்; அங்கே அவரது சித்தம் செய்யப்படும்.

3) இவை யாவும் எப்போது நிகழும்? வேதாகமம் இதுபற்றி விரிவாகக் கூறுகிறதா?
ஏதேன் தோட்டத்தில் இழந்த நிறைவை மறுபடி கொண்டுவருவதே இயேசுவின் இரண்டாம் வருகையின் முக்கிய நோக்கம் –
உலகத் தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்க தரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீரும் மகா மறுசீரமைப்பின் காலங்கள் வருமளவும் பரலோகம் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ள வேண்டும்” (அப்போஸ்தலர் 3:19-21).
பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார்” (எபேசியர் 1:9-10).
கடவுள் இராஜ்யமே இழந்த அனைத்தையும் மீட்டுக்கொள்ளும் மகா மறுசீரமைப்பின் காலம். ஏசாயா, ஏரேமியா, மீகா, தானியேல் போன்ற அனைத்துப் பரிசுத்த தீர்க்கதரிசிகளும் இது குறித்து விரிவாகச் சொல்லியுள்ளனர்.

4) அனைவருக்கும் இன்னுமொரு வாய்ப்பு இருக்குமெனில், கிறிஸ்துவை இப்போதே ஏற்றுக் கொள்வதால் பயன் என்ன?

  • இராஜாவாக இயேசு திரும்பி வரும்போது “பிரேதக் குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்”(யோவான் 5:28). இவ்வாறு மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது இரு பகுதியாக நடைபெறும்; அதாவது,நீதிமான்களும், அநீதிமான்களும்" உயிர்த்தெழுந்திருப்பார்கள்.
  • இன்று கிறிஸ்துவை மெய்யாகப் பின்பற்றுவோரே நீதிமான்கள் - அதாவது திருச்சபையார். அநீதிமான்களாகிய அவிசுவாசி ஜனங்களுக்கு முன்னதாகவே நீதிமான்கள் தற்போது சிறப்பான இரட்சிப்பைப் பெற்றுக் கொள்கிறார்கள் (1 தீமோத்தேயு 4:10). திருச்சபையார் முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவர்களாயிருப்பார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் கீழ் அரசாளுவார்கள் (வெளி. 5:10). கிறிஸ்துவுடனேகூடப் பூமியிலுள்ள அவரது இராஜ்யத்தை அரசாளுவார்கள்; அந்த இராஜ்யம் ஆயிரம் வருஷம் நீடிக்கும் (வெளி. 5:10, 20:5-6, 21:2).

ஆம், தற்போது கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு இயேசுவின் கட்டளைகளைப் பின்பற்றி, கிறிஸ்துவின் நற்செய்திக்காகப் பாடனுபவிக்கிற “மெய்யான திருச்சபை”யாருக்கு, கடவுளின் குழந்தைகள் ஆகும் உரிமை கொடுக்கப்பட்டு, பரலோகத்தில் ஓர் இடம் ஒதுக்கப்படும் (யோவான் 1:12, 14:2-3, மத்தேயு 5:11-12).

  • அவரோடேகூட பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்” (2 தீமோத்தேயு 2:12).
  • “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்” (வெளி. 3:21).
  • ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, தேசங்கள் மேல் அதிகாரம் கொடுப்பேன்” (வெளி. 2:26).

இன்றைய மெய் விசுவாசிகளுக்கான சிறப்பு பரலோக மீட்பு இது தான் - கடவுளின் பிள்ளைகளாக அவர் குடும்பத்தில் கிறிஸ்துவுடன் இணைந்து தேசங்களை ஆட்சி செய்வது!

5) சரி, இந்த ஆட்சி செய்யப்படும் தேசங்கள் யார்? அவற்றுக்கும் இரண்டாம் உயிர்த்தெழுதலுக்கும் சம்பந்தம் உண்டோ?

  • ஆம், மனுக்குலத்தின் அவிசுவாசிகள் ("அநீதிமான்கள் ") மாசற்ற (எந்த மரபணு பாவமும் இல்லாத) மாம்ச உடல்களுடன் பூமியில் உயிர்த்தெழுவார்கள். இதுதான் இரண்டாம் உயிர்த்தெழுதல். பல தமிழ் வேதாகமங்கள் யோவான் 5:29-ல் இவர்கள் "ஆக்கினை"யை அடையும்படி உயிர்த்தெழுவர் எனத் தவறாக மொழிபெயர்க்கின்றன. "ஆக்கினை" என்று மொழிபெயர்க்கப்பட்ட மூல கிரேக்க வார்த்தை "krisis". அதன் சரியான மொழிபெயர்ப்பு "விசாரணை" அல்லது "சோதனை" ஆகும். ஆம், அவர்கள் பூமியில் சோதனைக்குட்படுத்தப்படுவர். ஒரு வகையான பரீட்சை. ஆனால் முதலில் பாடம் கற்றுக்கொடுக்கப்படும். அப்புறம் தான் பரீட்சை.
  • இயேசுவும் அவரது திருச்சபையாரும் இந்த உயிர்த்தெழுந்த ஜனங்கள் மீது ஆட்சி செய்து அவர்களை மறுசீரமைப்பு செய்வர். ஆம், வேதம் சொல்கிறபடி பரிசுத்தவான்கள் (தேவனுடைய மனிதர்கள்) உலகத்தை நியாயந்தீர்த்து (1கொரிந்தியர் 6:2), மனந்திரும்புவர்களுக்கு ஜீவதண்ணீரை வழங்குவார்கள் (வெளி. 22:17). இந்த ஆயிர வருஷ காலமே “நியாயத்தீர்ப்பின் நாள்” ( 2பேதுரு 3:7-8). “நியாயத்தீர்ப்பு” என்ற சொல் வெறும் தண்டனையை மட்டுமல்ல, சோதனையையும் உள்ளடக்கியது. ஆகவேதான், அது நீண்டதொரு காலமாகும்.
  • அந்த ஆயிர வருஷமளவும், யாரையும் தவறாக வழி நடத்தாதிருக்க, சாத்தான் கட்டி வைக்கப்படுவான் (வெளி. 20:2). அதனால் பூமியிலே ஓர் ‘பரிசுத்தத்தின் நெடுஞ்சாலை’ இருக்கும் (ஏசாயா 35:8). கடந்த காலக் குற்றத்திற்கிணங்க அநீதிமான்கள் இரக்கமுள்ள நீயாயத்தீர்ப்பின்படியும், தண்டனைப்படியும் நீதியைக் கற்றுக் கொள்வார்கள் (ஏசாயா 26:9; மத்தேயு 16:27; லூக்கா 12:48; மத்தேயு 25:31-46; மீகா 4:1-3).

குறிப்பு: வெளி. 20:5 வசனத்தின் முதல் பகுதி போலி. அது வேதாகமத்தின் மூலப்பிரதிகளில் இல்லை. அதைச் சுட்டிக்காட்ட சில பைபிள்கள் அந்த பகுதியை அடைப்புக்குறிக்குள் காட்டுவதைக் காணலாம் (எடுத்துக்காட்டு: NIV வேதாகமம்).

6) அப்படியெனில், கடவுள் இராஜ்யத்தில் இந்த மக்களுக்கெல்லாம் இலவச அனுமதி என்று அர்த்தமா?
அப்படிச் சொல்வதற்கில்லை. ஆயிரம் வருஷங்களின் இறுதியிலே ஜனங்கள் கடவுளைப் பற்றி முழு அறிவு படைத்தவர்களாக இருப்பார்கள்; சோதிக்கப்படுவதற்குத் தயாராக இருப்பார்கள். அதற்குப்பின்பு “கொஞ்சக்காலம்“ சாத்தான் அவிழ்த்துவிடப்படுவான் (வெளி. 20:3).

  • கடவுளின் நியாயப் பிரமாணத்தைத் தமது இருதயங்களில் எழுதிட மறுப்பவர்கள் சாத்தானின் பக்கமாகத் திரும்புவார்கள்; அவர்களுக்கு இரண்டாம் மரணம்“ தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படும் (ஏரேமியா 31:33-34; வெளி. 21:8).
  • இறுதியில், பிசாசானவன் (சாத்தான்) எரிகிற அக்கினிக் கடலிலே தள்ளப்படுவான் (வெளி. 20:10). 'எரிகிற அக்கினிக் கடல்' இரண்டாம் மரணத்தைக் குறிக்கும் ஓர் உவமைச்சின்னம் என வேதாகமம் தெளிவுபடுத்துகிறது: “அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக் கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்” ( வெளி. 20:14).
  • ஆனால் அதே சமயம், கிறிஸ்துவிற்குக் கீழ்ப்படிவோர் பூமியில் சமாதானத்துடன் முடிவிலா காலமாக வாழ்வார்கள். மனுக்குலம் பின்வருமாறு கடவுளை மகிமைப்படுத்தும்: “இவரே நம்முடைய தேவன்; இவருடைய இரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம்!” (ஏசாயா 25:9).

7) சரி, கடவுள் இராஜ்யம் வருவதற்கு ஏன் நீண்ட நெடுங்காலமாகிறது? கிறிஸ்துவின் முதல் வருகைக்குப்பின் 2000 வருஷங்கள் கடந்துவிட்டனவே?
கடவுள் தற்போதைய பொல்லாங்கான காலத்தை - சாத்தான் கர்ச்சிக்கிற சிங்கம் போல் சுற்றித்திரியும் (1பேதுரு 5:8) காலத்தை - இரட்டை நோக்கத்துடன் அனுமதிக்கிறார்:

  1. ஆதாமின் மனுக்குலம் கடவுளுக்குக் கீழ்ப்படியாது வாழ்வதின் விளைவுகளை இவ்வாழ்க்கையில் கற்றுக்கொள்கின்றனர். அவர்கள் இராஜ்யத்தில் உயிர்த்தெழுந்து திரும்பி வரும் போது அந்த அனுபவங்களை மறக்க மாட்டார்கள். அவை அவர்களுக்கு இராஜ்யத்தில் மேம்பட்ட முடிவுகளை எடுக்க உதவி செய்யும்.
  2. இன்று மோட்சத்திற்குச் செல்லக் குறி வைப்பதற்கு தனிச் சிறப்பானதொரு வாய்ப்புள்ளது!மனிதன் பூமியில் வாழ்வதற்கென சிருஷ்டிக்கப்பட்டான். உயிர்த்தெழுகிற மனுக்குலமும் அங்கேதான் இருக்கப்போகிறது. ஆனால், மெய்யான நற்செய்திக்காகப் பாடனுபவிக்கும்படி கிறிஸ்தவர்களுக்கு இயேசுவின் சிறப்பு அழைப்பு உண்டு (மாற்கு 8:35; லூக்கா 9:60; ரோமர் 10:9-10; அப்போஸ்தலர் 10:42, 20:24; 1பேதுரு 4:13-14). சாத்தான் சிங்கம் போல் கெர்ச்சிக்கிற தற்போதைய தீய சமயங்களில் கிறிஸ்தவர்கள் சோதிக்கப்பட அழைக்கப்படுகிறார்கள்; முதல் உயிர்த்தெழுதலின் ஒரு பகுதியாக மோட்சத்திற்குச் செல்லும் வெகுமதியைப் பெற்று கிறிஸ்துவுடனே கூட மனுக்குலத்தை ஆள்வதற்கு அவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

உலகம் தற்போது நியாயத்தீர்ப்புக் காலத்தில் (நீதி விசாரணையின் கீழ்) இல்லை. கடவுளின் இராஜ்ய காலத்தில்தான் உலக ஜனங்கள் நியாயத் தீர்ப்புக்கு ஆளாவார்கள். ஆனால் கிறிஸ்துவின் மெய் விசுவாசிகள் -- திருச்சபையைக் கட்டுகிறவர்கள் – தற்போதைய வாழ்வுக் காலத்திலேயே நியாயத்தீர்ப்புக்கு உள்ளாகிறார்கள்.
தொடர்ந்து நடைபெறும் திருச்சபைக்கான இந்தத் தேர்வு காரணமாகவே கடவுளின் இராஜ்யம் தள்ளிப் போகிறது. சீடர்களோடு தொடங்கிய இந்தத் தேர்வு இன்றளவில் தொடர்கிறது. மேலும், சாத்தான் ஆளும் இன்றைய உலகில், இந்த மெய்த்திருச்சபையார் (தேர்ந்தெடுக்கப்பட்டோர்) மெய்நற்செய்தியின் பொருட்டு துன்புறுத்தப்படும் ஒரு சிறுபான்மை மக்கள் (சிறு கூட்டம்) ஆகவே இருப்பர். திருச்சபைக்கான விசுவாசிகள் தேர்வு நிறைவுபெற்றதுமே, கடவுளின் இராஜ்யம் தொடங்கிவிடும் (மத்தேயு 24:31).

முடிவுரை

  • “ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல,கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்“. ஆதாமுக்கான மீட்கும் பொருளை இயேசு செலுத்தினார், ஆதாமின் இனம் முழுவதையும் மரணத்தினின்று விடுவித்தார்.அவர்கள் அனைவருக்கும் வாழ்வதற்கு மற்றுமொரு வாய்ப்பை வாங்கித் தந்துள்ளார். இதுவே வேதாகமத்தின் மகிமையான நற்செய்தி!
  • அனைத்துக் குடும்பங்களும் நிச்சயமாக மறுபடியும் தமக்கு அன்பானவர்களைத் தரிசிப்பார்கள். இது ஆறுதலான பெரியதொரு வாக்குறுதி.

“சகல ஜனங்கள் மேலுமுள்ள முக்காட்டையும் சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலையும் இந்த மலையிலே அகற்றிப்போடுவார். அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார். கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து , தமது ஜனத்தின் நிந்தையைப் பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கி விடுவார்“ (ஏசாயா 25:7-8). “இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்து போயின. “(வெளி. 21:4).

 மேலுமான ஆராய்ச்சிக்குரிய கேள்விகள்

இந்த அற்புதமான வேதாகம வசனங்கள் மெய்யெனில் நரகம், அக்கினிக் கடல் என்பதெல்லாம் உண்மையில் என்ன? மேற்சொன்ன நிகழ்வுகளில் அவை எங்கே பொருந்தும்? “அழுகையும், பற்கடிப்பும்“ குறித்து இயேசு பேசினார் அல்லவா? செல்வந்தனையும், லாசருவையும் பற்றிய உவமையில் வேதனை உண்டாக்குகிற இடம் குறித்து விவரிக்கப்படவில்லையா? அது எதைக் குறிக்கிறது? "நரகமும் பாதாளமும் அக்கினிக் கடலிலே தள்ளப்படும்" என்று வேதாகமம் குறிப்பிடும்போது, அதன் அர்த்தம்தான் என்ன ? (வெளி. 20:14).

மேலும் படிக்க: - நரக புராணம்