நாங்கள் யார்?

நாங்கள் யார்?

  1. வாழ்க்கை, பிரபஞ்சம் இவை எல்லாவற்றின் அர்த்தம் தேடும் பயணத்தில் சக பயணி நாங்கள். இந்த தேடுதலானது காலத்தின் சோதனைகளைத் தாண்டி நிலைநிற்கும் ஒரே புத்தகமான புனித வேதாகமத்தில் மிகவும் சுவாரஸ்யமாகிறது.
  2. வேதாகமம் தான் கடவுளின் வார்த்தை என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அதுவே தெய்வீக தாக்கம் கொண்ட அறிவிற்கெல்லாம் மூலாதாரம். அதன் நம்பகத்தன்மை காலகாலமாய் விஞ்ஞானம் மூலவும், மனுக்குலத்தின் சரித்திரத்தின் மூலவும் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
  3. "விவாதிப்போம், வாருங்கள்," என்று கர்த்தர் சொல்லுகிறார். (ஏசாயா 1:18) - மனிதனின் பகுத்தறிவை முடக்க முயலும் நிறுவனமயமாக்கப்பட்ட மதங்கள் போல் அல்லாமல், வாசகர்களைப் பகுத்தறிந்து விவாதிக்க அழைக்கும் ஒரே மத நூல் உலகத்திலேயே புனித வேதாகமம் மட்டும்தான்!
    தன்னுடன் விவாதிக்க அழைக்கும் கடவுளின் அழைப்பை (பணிவுடன்) மகிழ்ச்சியுடன் ஏற்று அவரது வார்த்தையைக் கவனமாய்ப் படிக்கிறோம்.
  4. நாங்கள் எந்த சபைப்பிரிவையும் சார்ந்தவர்கள் அல்ல. எங்களில் பெரும்பாலோர் பிரபலமான சபைப்பிரிவுகளில் அங்கமாக இருந்தவர்கள்தான். ஆனால், வேதாகமத்தை படித்தபின் அதெல்லாம் மாறிப்போனது.
    மாறாக, வேதாகமத்தில் உள்ள மெய் நற்செய்தி அறிவிக்கும் மெய்யான கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படவே நாங்கள் விரும்புகிறோம்.
  5. எங்களுக்கு ஒத்த சிந்தனையுள்ள மெய் கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் பரவலாக உலகம் முழுவதும் உண்டு.

நாங்கள் நம்புவது என்ன? ஏன் மெய் கிறிஸ்தவம் என்ற பெயர்?

  • உலகம் மற்றும் மனுக்குலத்தின் இன்றைய நிலைமையின் காரணம் என்னவென்று திருப்திகரமாய் விளக்கும் ஒரே மத நூல் புனித வேதாகமம் மட்டுமே என நம்புகிறோம்.
  • வேதாகமமானது கடவுள் அனைத்து மனுகுலத்திற்கும் வைத்திருக்கும் அற்புதமான திட்டத்தை எடுத்துரைக்கிறது எனவும், ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை அத்திட்டத்தை முழுமையான ஒத்திசைவுடன் விளக்குகிறது எனவும் நம்புகிறோம்.
  • கடவுளை சென்றடைய இயேசு கிறிஸ்துவே ஒரே வழி எனவும், அவரது கிரயப்பலியும், உயிர்த்தெழுதலும் மனுக்குலத்தின் மீட்பிற்கு பிரதான காரணம் எனவும் விசுவாசிக்கிறோம்.
  • 2,000 வருட திருச்சபை வரலாறு படிக்கும்பொழுது, அந்த சரித்திரம் கிறிஸ்து மற்றும் அவரது அப்போஸ்தலர் போதித்து வேதாகமத்தில் எழுதப்பட்ட ஆதி அசல் கிறிஸ்தவமானது நிறுவனமயமாக்கப்பட்ட மதத்தாலும், அரசியல் தாக்கங்களாலும் எவ்வளவு தூரம் மாற்றப்பட்டுள்ளது எனக் காட்டுகிறது.
  • பல நூற்றாண்டுகளாக, மகிமையான மெய் சுவிசேஷம் பலவிதமாய் திரிக்கப்படுதலும், ஆதி விசுவாசத்தை களங்கப்படுத்தும்விதமாய் வசனங்கள் துஷ்பிரயோகம் பண்ணப்படுதலும் நடந்து வருகிறது.
    உண்மையில் இந்த கெடுதல்கள் எல்லாம் அப்போஸ்தலர்களால் முன்னறிவிக்கப்பட்டன (அப்போஸ்தலர் 20:29-30).
  • அந்த நூற்றாண்டுகள் பொழுதிலும், களங்கப்படாத மெய் கிறிஸ்தவ விசுவாசமானது (original Christianity), ஒடுக்குமுறைகள், பாடுகள் மத்தியிலும் வாழ்ந்த மெய் கிறிஸ்தவர்களால் தொடர்ந்து அன்புடன் கடைப்பிடிக்கப்பட்டு வந்து உள்ளது.
    மேலும், இயேசுவானவரே கணித்தது போல, அப்படிப்பட்ட கிறிஸ்தவர்கள் எப்பொழுதுமே எண்ணிக்கையில் சிலராகவே இருந்து வந்துள்ளனர் (மத்தேயு 7:14).
  • மூல வேதாகமத்தில் எழுதி வைக்கப்பட்ட மெய் கிறிஸ்தவமானது, ஆதாமின் இனமான மனுக்குலத்தின் மீட்பைச் சொல்லும் மகத்துவமான நற்செய்தி.
    அந்த மீட்பினை மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த மதமும் வழங்க முடியாது.

நாங்கள் வேதாகமம் படிக்கும் வழிமுறை என்ன?

  • நாங்கள் வேதாகமத்தை தலைப்பு-ரீதியாகவும் மற்றும் நிருப-நிருபமாகவும் படித்து ஆய்வு செய்கிறோம்.
  • வசனங்களை எப்பொழுதும் சூழல் பொருத்தம் (context) பார்த்து படித்துப் புரிதல் அவசியம் என நம்புகிறோம்.
  • ஆசிரியரின் செய்தியை நன்றாக புரிந்துகொள்ள, புதிய ஏற்பாட்டில் உள்ள நிருபங்களை வழக்கமாக கடிதம் (letter) அல்லது மின்னஞ்சல் (e-mail) படிப்பது போல் ஒரே மூச்சில் படிக்குமாறு பரிந்துரைக்கிறோம்.
  • வேதாகமம் ஒருபோதும் ஒன்றுக்கொன்று நேர்மறையான வசனங்களைக் கொண்டு தன்னைத்தானே முரண்படுத்திக் கொள்ளாது என்று உறுதியாக நம்புகிறோம்.
    அப்படி ஏதேனும் ஒரு தலைப்பில் இரண்டு முரண்பட்ட வசனங்கள் வேதாகமத்தில் காணப்படும் என்றால், மூல (original) எபிரேயு / கிரேக்க (Hebrew / Greek) வேதாகமங்களில் அவ்வசனங்களை சரிபார்த்து தமிழ் மொழிபெயர்ப்பில் ஏதேனும் ஒன்றில் தவறு (translation error) நிகழ்ந்துள்ளதா என கண்டுபிடிக்கவேண்டும்.
    மேலும், வேதாகமத்தின் ஆரம்பகால ஆதி மூலப்பிரதிகளில் (earliest manuscripts) அவ்வசனங்கள் இரண்டும் உள்ளனவா என சரிபார்த்து அவற்றின் நம்பகத்தன்மையை (authenticity) உறுதி செய்ய வேண்டும்.
  • நாங்கள் எல்லாவற்றையும் சோதித்துப் பார்க்கும் வழக்கம் கடைப்பிடிக்கிறோம் (1தெசலோனிக்கியர்5:21). எந்த கேள்விகளுக்கும் விடைகள் அருவமாகவோ (abstract), வெறும் அலங்காரச் சொற்றொடர்களாகவோ (hyperbole) இருப்பின் நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
  • ஒவ்வொருவரும் தனிப்பட வேதாகம வசனங்களை படித்து, கடவுளின் வார்த்தையில் வெளியாக்கப்பட்டுள்ள சத்தியத்தைப் பகுத்தறிந்து தனக்கென நிரூபித்துச் சொந்தமாக்கிக் கொள்ளுதல் அவசியம் என வலியுறுத்துகிறோம் (2தீமோத்தேயு 2:15).
  • நாங்கள் கடைப்பிடிக்கும் வேதாகம ஆய்வு நடைமுறைகள் பற்றிய பரிபூரணமான பட்டியலை இங்கே காணலாம்.

எங்கள் குறிக்கோள் என்ன?

  • நம்முடையது முற்றிலும் வணிக நோக்கம் அல்லாத ஓர் முயற்சி.
  • எந்தவித வருவாயோ, இலாபமோ நாங்கள் தேடவில்லை.
  • ஆதாமின் மூலம் வரும் மரணத்தில் இருந்து மனுக்குலத்திற்கு இயேசு கிறிஸ்துவின் மூலம் வரும் மீட்பு பற்றியும், கிறிஸ்துவும் அவரது அப்போஸ்தலரும் பிரசங்கித்த வரவிருக்கும் தேவனின் இராஜ்யம் பற்றியுமான நற்செய்தியினை அனைவருடன் பகிர்ந்து கொள்வதே எமது குறிக்கோள்.
  • கடவுளின் வார்த்தையைப் பகிர்ந்து கொள்ள கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நாங்கள் பெரும் பாக்கியமாகவும், ஆசீர்வாதமாகவும் எண்ணி மகிழ்கிறோம்.

வேத ஆய்வு - சிறந்த நடைமுறைகள்

அடிப்படை விதிகள்

  1. சூழல் (context) முக்கியம்.
  2. வசனம் வசனத்தை விளக்கும்.
    • அப்போஸ்தலர் 17:11, ஏசாயா 28:9-10, 2பேதுரு 1:20
  3. ஒரு கோட்பாட்டை நிறுவிட குறைந்தது இரு சாட்சிகள் தேவை.
    • 2கொரிந்தியர் 13:1, வெளி 11:3
  4. பூரண வேத ஒத்திசைவு தேடு.
    • மத்தேயு 4:4, 2தீமோத்தேயு 3:16-17
  5. எழுதப்பட்டதைத் தாண்டி செல்லாதே.
    • 1கொரிந்தியர் 4:6, வெளி 22:18

விரிவான விதிகள்

  1. மூல வேதம் எபிரேயு (பழைய ஏற்பாடு) / கிரேக்க (புதிய ஏற்பாடு) மொழிகளில் உள்ளது. தமிழில் படிக்கும்பொழுது பல்வேறு வேதாகம மொழிபெயர்ப்புப்பதிப்புகளை படித்துப் பார்க்கவும்:
    எந்த ஒரு குறிப்பிட்ட மொழிபெயர்ப்புப்பதிப்பும் முற்றிலும் சரியானது என சொல்ல முடியாது. அதனால் எந்தவொரு வசனத்தையும் பலவகைப்பட்ட மொழிபெயர்ப்புப் பதிப்புகளில் படித்து ஒப்பிட்டுப் பார்த்து, எந்த மொழிபெயர்ப்பில் அவ்வசனம் வேதாகமத்தின் பிற வசனங்களுடன் ஒத்திசைவாக உள்ளதோ, அதன் மூலம் சரியான அர்த்தம் புரிந்து கொள்ளவும். (அடிப்படை விதி #4 பார்க்கவும்).

    குறிப்பு: தமிழில் பல பொழிபெயர்ப்புப் பதிப்புகள் இருந்தாலும், ஆங்கிலம் அளவு நிறைய வகைகள் இல்லை. அதனால் ஆங்கிலம் தெரியுமெனில், இந்த மூன்று வகையான ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பு வகைகளை கலந்து பார்ப்பது நல்லது:
    • செயல்பாட்டு சமன்பாடு மொழிபெயர்ப்பு - உதாரணம்: NIV New International Version.
    • முறை சமன்பாடு மொழிபெயர்ப்பு - உதாரணம்: NASB New American Standard Bible.
    • கட்டற்ற மொழிபெயர்ப்பு - உதாரணம்: The Message Bible.
  2. முக்கியமான எபிரேய/கிரேக்க வேதாகம வார்த்தைகளை புரிந்து கொள்ளவும்: இடைவரி மொழிபெயர்ப்பு (interlinear) மற்றும் சொற்பிறப்பியல் (etymology) தெரிந்துகொள்ள வைன்'ஸ் (Vine's) மற்றும் ஸ்டராங்'ஸ் (Strong's) குறிப்புகள் பார்த்து, விளக்கவுரை செய்யவும்.
    பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஓர் வார்த்தையின் சரியான விளக்கத்தை வசனங்களே அருளும். (அடிப்படை விதி #2 பார்க்கவும்).
  3. முரண்பாடாகத் தென்படும் வசனங்களை சரிதீர்க்க வேதாகமத்தின் ஆரம்பகால ஆதி மூலப்பிரதிகளில் (earliest manuscripts) சரிபார்க்கவும். (அடிப்படை விதி #4 பார்க்கவும்).
  4. எந்த ஒரு கோட்பாட்டையும் ஒன்றிற்கு மேலான வசனங்களின் ஆதரவுடன் நிறுவவும். (அடிப்படை விதி #3 பார்க்கவும்).
  5. வசனங்களை சூழல் பொருத்தம் (context) பார்த்து படிக்கவும். வசனத்தின் நுண்சூழலும் (micro context), பெருஞ்சூழலும் (macro context) கருத்தில் கொள்ளவும். ஓர் மூல வாக்கியத்தை முறையாக விளக்கவுரை (exegesis) செய்ய, அந்த வாக்கியம், அதன் ஆசிரியர் மற்றும் அவரின் வாசகர்கள் ஆகிய அம்மூன்றின் இலக்கியச் சூழலை மட்டுமல்லாது அவற்றின் சமூக, பொருளாதார, வரலாற்று, அரசியல் மற்றும் கலாச்சார சூழல்களை (context) பற்றி புரிதல் மிக்க அவசியம். (அடிப்படை விதி #1 பார்க்கவும்).
  6. எந்தவொரு விசயத்திலும், நேரடியாக விசயத்தை சொல்லும் (direct statements) வசனங்கள் பொருள் விளக்கவேண்டிய (interpretative) வசனங்களை விட முன்னுரிமை பெறும். (அடிப்படை விதி #5 பார்க்கவும்).
  7. வசனங்களில் உள்ள அடையாளங்களையோ, உவமைகளையோ, உருவகங்களையோ நிஜம் எனத் தப்பாக புரிந்து கொள்ளக்கூடாது. மேலும், வேதத்தில் ஒரு பகுதியினை அடையாள பொருள் எனக் கருதினால், சீராக அப்பகுதியில் உள்ள அனைத்தையும் அடையாளமாக கருத வேண்டும். மாறாக, அப்பகுதியில் பாதி விசயங்களை அடையாளங்களாகவும், பாதி விசயங்களை நிஜங்களாகவும் கருதக்கூடாது. (அடிப்படை விதி #1 பார்க்கவும்).
  8. வேத அடையாளங்கள், உவமைகள், மற்றும் உருவகங்களுக்கு சொந்தமாய் யோசித்து விளக்கம் சொல்லாமல், மற்ற வசனங்களைப் பயன்படுத்தி விளக்கவும். (அடிப்படை விதி #2 பார்க்கவும்).
  9. புதிய ஏற்பாட்டில் உள்ள நிருபங்களை வழக்கமாக கடிதம் (letter) அல்லது மின்னஞ்சல் (e-mail) படிப்பது போல் ஒரே மூச்சில் படிக்க வேண்டும். (அடிப்படை விதி #1 பார்க்கவும்).
  10. எபிரேயர் 6:1-2 வசனங்களில் பட்டியலிடப்பட்டுள்ள கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை மனதில் கொள்ளவும்: "கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய அடிப்படை உபதேசங்கள்... செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரம்." (அடிப்படை விதி #1 பார்க்கவும்).

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.