பயனற்ற விசயங்கள்

Jesus calls Tax Collector Matthew to follow him

 கருப்பொருள் வசனம்: எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பயனாயிராது. 1கொரிந்தியர் 6:12.

1) திருச்சபை பாவத்தை எதிர்த்து போராட அழைக்கப்படவில்லை என்றால், அப்போஸ்தலர்கள் ஏன் சில காரியங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துகிறார்கள்?
கொரிந்தியர்களுக்கு பவுல் எழுதுகிறார் - 'எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பயனாயிராது.' 1கொரிந்தியர் 6:12 . முதலாவதாக, கடுகளவும் குழப்பமில்லாத என்ன ஒரு துணிகர அறிவிப்பு இது! -- எல்லாவற்றையும் அநுபவிக்க திருச்சபைக்கு அதிகாரமுண்டு! ஆம், நாம் கிறிஸ்துவினால் நியாயபடுத்தப்பட்டு நீதிமான் என்று "கருதப்படுகிறோம்", அதனால் நாம் மாம்சத்தில் செய்யும் பாவத்தை தேவன் கணக்கில் கொள்வதில்லை. அதனால் எல்லாவற்றையும், எதை வேண்டுமானாலும் செய்ய நமக்கு நிச்சயம் அதிகாரம் உண்டு. இந்த உண்மையை புரிந்துகொண்ட கொரிந்தியர்கள் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்தார்கள். எனவே பவுல் அவர்களைக் கடிந்துகொள்கிறார் –
     'உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே. ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே. அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே. இப்படிப்பட்ட காரியத்தினால் துக்கப்படாமல், இறுமாப்படைந்திருக்கிறீர்கள்!' 1கொரிந்தியர் 5:1-2.
சில விசயங்கள் பயனுள்ளதாய் இராது என்று அவர்களை அடுத்து கண்டிக்கிறார். (இதனை 'நன்மை பயக்காது' எனவும் மொழிபெயர்க்கலாம்).

2) ‘எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பயனாயிராது,’ என்கிறார் பவுல். சரி, எந்த நோக்கத்திற்கு பயனாயிராது?
சில விசயங்கள் (விபச்சாரம் போன்றவை) நற்செய்தியை அறிவிப்பதான நம் ஆவிக்குரிய ஓட்டத்திற்கு பயனாயிராது. எனவே அதுபோன்ற காரியங்களில் புதிய ஏற்பாட்டின் அறிவுரைகளை பின்பற்றுவதே நல்லது. நற்செய்தி பணியில் இருந்து நம் கவனத்தை திசைதிருப்புகின்ற எதையுமே நாம் தவிர்க்க வேண்டும் -
     'மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன. இவையாவன: விபச்சாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,   விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய இராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.' கலாத்தியர் 5:19-21.
அத்தகைய காரியங்களில் நாம் மனந்திரும்பாமல் மென்மேலும் தொடர்ந்தோமானால், சுவிசேஷ ஓட்டத்தை ஓடுவதிலிருந்து நம் கவனத்தை இழக்க நேரிட்டு, கிறிஸ்துவின் இராஜ்யத்தை சுதந்தரிக்காமல் போவோம். ஆனால் அத்தகைய பயனற்ற காரியங்களைத் தவிர்ப்பதன் நோக்கம் நம்மை நாமே சுயமாய் நியாயப்படுத்திக் கொள்வதற்கல்ல, ஏனெனில் அத்தகைய சுயநீதியை நியாயப்பிரமாணத்தின் அனைத்து 613 கட்டளைகளையும் கடைப்பிடித்தால் மட்டுமே அடைய முடியும்.
கிறிஸ்துவின்மேல் நாம் வைக்கும் விசுவாசத்தால் மட்டுமே நாம் நீதிமான் என கருதப்படுகிறோம் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. Sola fide! விசுவாசத்தினால் மட்டுமே!

3) ஆனால் நாம் வீழ்ந்துபோன மாம்ச சரீரத்தில் இருக்கிறோம். ஆகையால், நாம் எவ்வளவு முயன்றாலும் அத்தகைய காரியங்களில் சில சமயங்களில் தோல்வியடையத்தான் செய்வோம் அல்லவா?
ஆம், நிச்சயமாக தோல்வி அடையத்தான் செய்வோம். அங்ஙனம் நடக்கும்போதெல்லாம், நாம் மனந்திரும்பி மன்னிப்பு தேடவேண்டும். கொரிந்து சபையில் விபச்சாரம் செய்த அந்த வக்கிரபுத்தி கொண்டவன் கூட மன்னிக்கப்பட்டான்.
பவுல் கொரிந்தியருக்கு எழுதின இரண்டாவது கடிதத்தில் இவ்வாறு எழுதுகிறார்: ‘துக்கமுண்டாக்கினவன் எனக்குமாத்திரமல்ல, ஒருவாறு உங்களெல்லாருக்கும் துக்கமுண்டாக்கினான். நான் உங்கள் எல்லார்மேலும் அதிக பாரஞ்சுமத்தாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன். அப்படிப்பட்டவனுக்கு அநேகரால் உண்டான இந்த தண்டனையே போதும். ஆதலால் அவன் அதிக துக்கத்தில் அமிழ்ந்துபோகாதபடிக்கு, நீங்கள் அவனுக்கு மன்னித்து ஆறுதல்செய்யவேண்டும்.   அந்தப்படி, உங்கள் அன்பை அவனுக்குக் காண்பிக்கும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்’. 2கொரி 2:5-8.

4) அத்தகைய பயனற்ற காரியங்களைத் தவிர்ப்பதே நம் ஆவிக்குரிய ஓட்டம் ஆகுமா?
பவுல் விளக்குகிறார்: 'நம்மை தடுக்கிற யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தையும் தூக்கி எறிந்துவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்.' எபிரெயர் 12:1-2.

  • நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தை தூக்கி எறியுமாறு அவர் நம்மை அறிவுறுத்துகிறார். எதை செய்வதிலிருந்து நம்மை பாவங்கள் சுற்றி நெருக்கிநின்று தடுக்கின்றன? - விசுவாச கிரியைகள் செய்வதிலிருந்து.
  • வேறு எவற்றை நாம் தூக்கி எறிய வேண்டும் என்று அவர் கூறுகிறார்? - தடுக்கிற யாவற்றையும். ஆம், நம் சுவிசேஷ ஓட்டத்தை தடுக்கக்கூடிய (நியாயப்பூர்வமான உலக ஆசைகள் / உறவுகள் உட்பட) எல்லாவற்றையும் நாம் தியாகம் செய்ய வேண்டும்.
  • ஆனால் என்ன நோக்கத்திற்காக? - நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தை ஓடுவதற்காக, அதாவது விசுவாச கிரியைகள் செய்வதற்காக.

தடுக்கிற யாவற்றையும் தூக்கி எறிந்த பிறகு நாம் ஓடுவதற்கென்று ஒரு ஓட்டம் நமக்கு நியமிக்கப்பட்டு இருக்கிறது என்கிறார் பவுல். ஆக, தடையை தூக்கி எறிவது நிச்சயம் அந்த ஓட்டமல்ல. சுவிசேஷத்தை பிரசங்கிப்பதே ஆகும்!

5) பவுல் தொடர்கிறார் – ‘ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் இதயம் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள் பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே' – எபிரெயர் 12:3-4. இது என்ன வினோதம்? இரத்தம் சிந்துமளவு பாவத்தை எதிர்த்து போராடுவதற்கான அழைப்பா இது? இதற்கு என்னதான் அர்த்தம்?

  • இந்த பாவ உலகின் பாவிகள் தனக்கு எதிராக இழைத்த விபரீதங்களால் இயேசு சிலுவையில் இரத்தம் சிந்துமளவு உபத்திரவம் அனுபவித்தார்.
  • பவுல் அதே விசயம் நமக்கும் பொருந்தும் என்கிறார் - எவ்விதமாக பாவமானது, அதாவது பாவம் நிறைந்த உலகத்தாரானவர்கள் இயேசுவுக்கு விரோதமாக எழும்பினார்களோ, அதேபோல நம் சுவிசேஷ ஓட்டத்திற்கு எதிராகவும் அவர்கள் எழுவார்கள். அவர்கள் எதிர்ப்பை நாம் இரத்தம் சிந்தும் நிலை வந்தாலும் எதிர்த்து நிற்க தயங்கிட கூடாது. இயேசுவின் முன்மாதிரியை பவுல் நமக்குக் காண்பித்து நம்மையும் அவ்வாறு செய்யும்படி கேட்கிறார். இங்கு அவர் பாவிகளான உலகத்தாரையே பாவம் என சுருக்கி குறிப்பிடுகிறார்.

நம்முடைய விசுவாச போராட்டமானது சுவிசேஷத்தின் போராட்டமாகும். அப்போஸ்தலர்கள் அதற்காகவே இரத்த சாட்சியாக மரித்தார்கள். பாவம் நிறைந்த உலகம் நம் சுவிசேஷத்திற்கு எதிராக நிச்சயம் போராடும். ஆனால் நாம் இதயம் சோர்ந்து போகாமல், அந்தப் போராட்டத்தில் இரத்தம் சிந்தவும் தயாராக இருக்க வேண்டும்.

6) 1கொரிந்தியர் 9-ல் பவுல் சுய கட்டுப்பாடு பற்றி பேசவில்லையா, என்ன?
அவர் ஏன் என விளக்குகிறார் - 'பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன். நான் எல்லாருக்கும் எல்லாமானேன். சுவிசேஷத்தில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன். பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள். ஆகிலும் ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் கடுமையான பயிற்சியை மேற்கொள்வார்கள். அவர்கள் அழிவுள்ள கீரிடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம். ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன். ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன். மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.' 1 கொரி 9:22-27.
பந்தயத்தில் பங்குப்பெறும் வீரர்கள் யாவரும் சுய கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம் என்பதால் தாமும் தம் சரீரத்தை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பதாக பவுல் கூறுகிறார்.

  • பலர் இப்பகுதியின் கடைசி வசனத்தை மட்டும் வாசித்து விட்டு, சுய கட்டுப்பாட்டை அடைய போராடுவதுதான் நாம் ஓடவேண்டிய ஓட்டம் என்று பிரசங்கிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் பவுல் சொல்வதை முழுவதுமாக படிக்கும்போது, உண்மையில் சுவிசேஷப் பந்தயத்தில் ஒழுங்காக போட்டியிடும் பொருட்டே நம் சரீரத்தை கட்டுப்படுத்த அவர் நம்மை கேட்டுக்கொள்கிறார் என்பதை நாம் எளிதாக புரிந்துகொள்ள முடிகிறதுதானே?
  • வீட்டில் உட்கார்ந்துகொண்டு வெறுமனே சரீரத்தை கட்டுபடுத்த முயலுவதால் எந்த பயனும் இல்லை. நாம் சுவிசேஷ ஓட்டத்தை ஓட வேண்டும்!

7) சுவிசேஷ ஓட்டம் என்னவென்பது வேதாகாமப்பூர்வமாக விளக்கப்படும்பொழுது, அதன்மூலம் பரம அழைப்பு என்னவென்று முழுவதாக புரிந்து கொள்கிறவர்களை அது உற்சாகப்படுத்துகிறது. அதே சமயத்தில், இன்னொரு பக்கம் சிலரை, “நீங்கள் பாவம் செய்வது பரவாயில்லை என்று சொல்லுகிறீர்கள்!” என்று குற்றம் சாற்றி கூக்குரல் இடவும் தூண்டுகிறது. அவர்களுக்கு என்னதான் பதில்?

  • இந்த வேத பாடங்களில், நாம் இயேசுவும் அவரது அப்போஸ்தலர்களும் உரைத்த முக்கிய கருவான வசனங்களை கற்றுள்ளோம். அவர்கள் கூறின அனைத்தும் சத்திய வாக்கு. குறிப்பாக இயேசுவுக்கு அடுத்ததாக, பவுல் தான் மெய் கிறிஸ்தவ விசுவாசத்தின் அஸ்திவாரங்களை தைரியமாக அறிவித்தார் – 'எந்தவொரு மனிதனும் சுய நியாயப்படுதலோ நீதியோ அடைய முடியாது! கிருபை அவசியம். சுவிசேஷத்திற்கு பாடுபடுவதே நம் பரம அழைப்பு,' என பிரசங்கித்தார். உடனே சிலர் அவ்வப்போஸ்தலரை அவரது காலத்திலேயே பழிதூற்றினர். அவர் எழுதுகிறார் - "நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அவர்கள் மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும்." - ரோமர் 3:8. ஆம், அத்தகைய குற்றம் சாட்டும் நபர்கள் அன்றே இருந்தனர்!
  • கிறிஸ்து பாவத்திலுருந்தும், நியாயப்பிரமாணத்திலுருந்தும் நம்மை விடுதலையாக்கிவிட்டார் என்ற விசயத்தை பலரும் மறக்கும்படி செய்கிறான் சாத்தான். விசுவாசம் என்பது சுவிசேஷப்பணியை செய்து காட்டுவதன் மூலம் மட்டுமே நிரூபிக்கப்படும். ஆனால் சாத்தான் மக்களை தம் கவனத்தை விழுந்துபோன மாம்ச சரீரத்தில் பாவத்தை எதிர்த்துப் போராடும் ஒரு தோல்வியின் போராட்டத்திலேயே செலுத்த வைக்கிறான்.

மேலும் படிக்க: ஆவிக்குரியனவும், மாம்சத்திற்குரியனவும்

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.