கிறிஸ்துவின் பாடுகளில் பங்கு

 கருப்பொருள் வசனம்: 'கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.' ரோமர் 8:17.

நாம் சுவிசேஷ ஓட்டத்தை ஓடும்போது, தேவன் மேலுள்ள விசுவாசத்தை நிரூபித்து, பரிசுத்தம் அடைய உதவும் நம் ஆசாரிய கடமையை நிறைவேற்றுகிறோம் என்ற விசயங்களை பார்த்தோம். இவை அனைத்தும் சுவிசேஷ ஓட்டத்தை ஓடும்படி தேவன் நம்மை கேட்கும் நோக்கத்தின் பல பரிமாணங்கள் ஆகும். நற்செய்தியின் ஓட்டத்திற்கான மற்றொரு முக்கியமான குறிக்கோளை இப்போது நாம் பார்க்கலாம்.

பவுல் எழுதுகிறார் – நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே, தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே, கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். ரோமர் 8:17.

இது நியாயமான விசயமாகத்தான் தெரிகிறது. கிறிஸ்துவின் பாடுகளில் நாம் பங்கெடுத்தால் மட்டுமே அவருடைய மகிமையில் பங்கெடுப்போம். இயேசு என்ன விதமான பாடுகளை சந்தித்தார்? இயேசு தனக்குள் இருந்த பாவத்தினால் பாடுபட்டாரா, என்ன? – இல்லவே இல்லை. அவர் ஒரு பரிபூரண சரீரத்தில் இருந்தார். அவர் (நம்மைப்போல) மரபணு மூலம் வரும் வம்சாவழி பாவம் நிறைந்த மாம்சத்திற்கு எதிராக போராடவில்லை.

சரி, வேறு எதற்காக அவர் பாடுபட்டார்? – சத்தியத்திற்காக! இராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்காக (லூக்கா 4:43)! அதற்காகவே அவர் கொல்லவும் பட்டார். எனவே, அதற்காகவே நாமும் பாடுபடும்போது, அவருடைய பாடுகளில் நாம் பங்குகொள்கிறோம்.

  • பவுல் உறுதிப்படுத்துகிறார் – சுவிசேஷத்தின் ஆசீர்வாதங்களில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன். 1கொரிந்தியர் 9:23. இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அநுபவிக்கிறேன். இந்த வார்த்தை உண்மையுள்ளது: என்னவெனில், நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம். அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம். 2தீமோ 2:8-12.
  • பேதுரு பிரகடனம் செய்கிறார் - பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல், கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள். 1பேதுரு 4:12-13.

சுவிசேஷத்திற்காக பாடுபடுவது அப்போஸ்தலர்களான பவுல், பேதுரு போன்றவர்களுக்கு மட்டுமே என்று சிலர் தத்துவம் பேச முயல்கின்றனர். அது சரிதானா?
பவுல் அத்தகைய எவ்வித கோட்பாடுகளையும் தகர்த்துப்போடுகிறார். நமக்கு தெளிவாக கூறுகிறார் –
“ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. நீங்கள் என்னிடத்தில் கண்டதும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு”. பிலிப்பியர் 1:29-30.
ஆம், கிறிஸ்துவும் அவருடைய அப்போஸ்தலர்களும் போலவே சுவிசேஷத்திற்காய் பாடுகள் அனுபவிக்க நமக்கும் அருளப்பட்டிருக்கிறது.

கிறிஸ்துவின் பாடுகளை பகிர்ந்துகொள்வதற்கு மகிமையான வெகுமதிகள் இருந்தால், அவை நம் ஒவ்வொருவருக்கும் எப்படி ஒதுக்கீடு செய்யப்படும்?
இயேசுதான் மிகவும் அதிகமாக பாடுபட்டார். எனவே அவரே - இராஜாதி இராஜாவாக இருக்கும் - மிக உயர்ந்த பரிசு பெறுகிறார். தேவன் நமக்கு கொடுத்த தாலந்துகளை பயன்படுத்தி இந்த வாழ்கையில் நாம் செய்த சுவிசேஷ வேலைகளுக்கு ஏற்ப, நமது பணிக்களத்தின் அளவின்படி, இயேசு கிறிஸ்துவின் கீழ் அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்படும். பவுல் விளக்குகிறார் –
‘தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிற அவர்கள் புத்திமான்களல்ல. நாங்கள் அளவுக்கு மிஞ்சி மேன்மை பாராட்டாமல், உங்களிடம்வரைக்கும் வந்தெட்டத்தக்கதாக, தேவன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவுப்பிரமாணத்தின்படியே மேன்மைபாராட்டுகிறோம். உங்களிடத்தில் வந்தெட்டாதவர்களாய் நாங்கள் அளவுக்கு மிஞ்சிப்போகிறதில்லை. நாங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து உங்களிடம் வரைக்கும் வந்தோமே. எங்கள் அளவைக் கடந்து மற்றவர்களுடைய வேலைக்குட்பட்டு மேன்மை பாராட்டமாட்டோம். ஆகிலும் உங்கள் விசுவாசம் விருத்தியாகும்போது, மற்றவர்களுடைய எல்லைகளுக்குள்ளே செய்யப்பட்டவைகளை நாங்கள் செய்ததாக மேன்மை பாராட்டாமல், உங்களுக்கு அப்புறமான இடங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத்தக்கதாக, எங்கள் அளவின்படி உங்களால் மிகவும் பெருகி விருத்தியடைவோமென்று நம்பிக்கையாயிருக்கிறோம். மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன். தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்’. 2கொரிந்தியர் 10:12-18.

இயேசு இதனை தாலந்துகளின் உவமையில் அழகாக காண்பிக்கிறார். அவர் தன்னை ஒரு பிரபுவுடன் ஒப்பிடுகிறார் –
“பிரபுவாகிய ஒருவன் ஒரு இராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி தூரதேசத்துக்குப் [பரலோகத்திற்கு] போகப் புறப்பட்டான்… அவன் இராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் திரவியம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம்பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்.அப்பொழுது முந்தினவன் வந்து, 'ஆண்டவனே, உம்முடைய தாலந்தினால் பத்து தாலந்து ஆதாயம் கிடைத்தது,' என்றான். எஜமான் அவனை நோக்கி, 'நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு,' என்றான். அப்படியே இரண்டாம் ஊழியக்காரன் வந்து, 'ஆண்டவனே, உம்முடைய தாலந்தினால் ஐந்து தாலந்து ஆதாயம் கிடைத்தது,' என்றான். அவனையும் அவன் நோக்கி, 'நீயும் ஐந்து பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு,' என்றான்”. லூக்கா 19:12-19.

  • ஆம், பரலோகத்திற்கு திரும்புவதற்கு முன், இயேசு நமக்கு சத்தியத்தையும், அந்த சத்தியத்தை பிரசங்கிக்க பயன்படுத்தக்கூடிய தாலந்துகளையும் பரிசாய் கொடுத்திருக்கிறார். அவர் தம்முடைய இராஜ்யத்தில் திரும்பும்போது, தம்மை உண்மையாய் பின்பற்றினோர்க்கு, அவர்கள் அவருக்கென தங்கள் பூலோக வாழ்வில் செய்த சுவிசேஷ வேலைகளின் அளவை அடிப்படையாகக் கொண்டே அதிகாரத்தை பகிர்ந்தளிப்பார்.
  • அதிகாரத்தை ஒப்படைப்பதற்கான அவருடைய வாக்குறுதி தெளிவானதாகவும், துல்லியமானதாகவும் இருக்கிறது – ‘ ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, தேசங்கள்மேல் அதிகாரம் கொடுப்பேன். அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான், அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள் ’. வெளி 2:26-27.

நாம் சுவிசேஷ ஓட்டத்தில் சாதிக்கும் மேலும் பல விசயங்களை இன்னும் ஆழமாக படிக்கலாம். மேலும் படிக்க : உண்மை சொல்லி நன்மை செய்!.

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.