கேட்டின் மகன்

 கருப்பொருள் வசனம் - 'விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, கிறிஸ்துவினுடைய நாள் வராது. அவன் தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.' 2தெசலோனிக்கேயர் 2:2-4.

1) பவுலின் கூற்றுப்படி, அவர் முன்னறிவித்த மகா விசுவாசதுரோகத்தின் முடிவு என்னவாக இருக்கும்?
'விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, கிறிஸ்துவினுடைய நாள் வராது. அவன் தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.' 2தெசலோனிக்கேயர் 2:2-4.
இங்கே பவுல் ஒரு பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனத்தை (தானியேல் 11:31-37) மேற்கோள் காட்டி விவரிக்கிறார். அது இங்ஙனம் தொடங்குகிறது: 'அவனிடத்திலிருந்து புறப்பட்டசேனைகள் எழும்பி, அரணான பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அன்றாடபலியை நீக்கி, பாழாக்கும் அருவருப்பை அங்கே வைப்பார்கள்.'

  • கி.பி.533-இல் ரோமானிய பேரரசன் ஜஸ்டினியன் (Justinian) ரோமாபுரி பேராயரை (Bishop) கிறிஸ்துவத்தின் தலைவராக (போப்பாண்டவராக) நியமித்து ஆணையிட்டான். தளபதி பெலிஸாரியஸ் (Belisarius) தலைமையிலான அவனது சேனைகள் ரோமாபுரி நகரத்தை கி.பி.536-ஆம் ஆண்டில் தாக்கி, போப்பாண்டத்துவத்தை எதிர்த்த ஆஸ்ட்ரோகாத்களை (Ostrogoths) தோற்கடித்தன. கி.பி.539-ஆம் ஆண்டிற்குள், பெலிஸாரியஸ் ஆஸ்ட்ரோகாத்களின் தலைநகரமான ராவன்னாவின் கைப்பற்றி, போப்பாண்டத்துவத்திற்கு எதிரான அனைத்து சவால்களையும் முறியடித்துப் போட்டான்.
  • இந்த போப்பாண்டத்துவ நிறுவனமே (தனிப்பட்ட போப்பாண்டவர்கள் அல்ல, மாறாக அந்த நிறுவனம் தானே) தானியேல் முன்னறிவித்த பாழாக்கும் அருவருப்பாகும்.
  • ஆவிக்குரிய அரணான ஆலயமான திருச்சபையின் ஒரே தலைவராக இருக்க வேண்டியவர் கிறிஸ்து மட்டுமே (1கொரிந்தியர் 3:16, எபேசியர் 2:19-21). ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முன்னறிவிக்கப்பட்டபடி, ரோம சாம்ராஜ்ய சேனைகள் கிறிஸ்துவை அகற்றிவிட்டு, அவருடைய இடத்தில் மெய் விசுவாசத்தைப் பாழாக்கும் அருவருப்பாக போப்பாண்டத்துவத்தை நிறுவின.
  • கேட்டின் மகனாகிய இந்த பாவமனுஷன் தான் “அந்திக்கிறிஸ்து” என்று பிரபலமாக அழைக்கப்படுபவன். கிரேக்க மொழியில் 'அந்தி' (anti) என்றால் 'ஒருவருக்கு பதிலாக' அல்லது 'ஒருவரின் இடத்தில்' என்று பொருள். போப்பாண்டத்துவ பதவிக்கு 'கிறிஸ்துவின் விக்காரர்' (Vicar of Christ), அதாவது கிறிஸ்துவிற்கு பதிலாக கிறிஸ்துவின் இடத்தில் ஆட்சி செய்பவர் என்ற பட்டம் இருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

2) சரி, இதில் என்னதான் தவறு?

  • மெய்யான திருச்சபையானது தன் மணவாளனான இயேசுவானவர் தனது இராஜ்யத்தை அமைப்பதற்காக திரும்புவதை எதிர்நோக்கி காத்திருக்கும் கற்புள்ள கன்னிகை மணவாட்டியுடன் ஒப்பிடப்படுகிறது (2கொரி 11:2, வெளி 22:17). ஆனால் கத்தோலிக்க திருச்சபை அவ்வாறு காத்திருக்க விரும்பவில்லை. மாறாக தனது சொந்த இராஜ்யத்தை நிறுவுவதற்காக பூமியின் இராஜாக்களுடன் தன்னை ஒன்றிணைத்துக்கொள்ள முடிவெடுத்தது. அதனால்தான், பூமியின் இராஜாக்களுடன் வேசித்தனம் செய்த ஒரு மகா வேசியுடன் அது ஒப்பிடப்படுகிறது (வெளி 17:1-2).
  • 'போப்பரசர்... இராஜாக்களின் கழுத்தின் மேல் மிதித்து நடந்தார். ஆட்சியாளர்களை உருவாக்கி, அழித்தார். மாநிலங்களையும், இராஜ்யங்களையும் அநாயசமாக எறிந்தார். பூமியில் சர்வ வல்ல கடவுளின் மகா பிரதிநிதியாக மற்ற ஆட்சியாளர்களின் தலைகளுக்கு மேல் ஆட்சி புரிந்தார்.' - அடால்ப் தியர்ஸ் & எட்வர்ட் ஈ. போவென், 'நெப்போலியனின் படையெடுப்புகள்' (The Campaigns Of Napoleon).
  • மன்னர்கள் கூட போப்பாண்டவரின் பாதத்தின் பெருவிரலை முத்தமிட வேண்டி இருந்தது. ஏனெனில், போப்பாண்டவர் 'தேவன் கோபங்கொள்ளாமல் இருக்கும்படிக்கு, குமாரனை முத்தஞ்செய்யுங்கள்' என்ற சங்கீதம் 2:12 வசனத்தை தனக்கென சொந்தம் கொண்டாடினார்.

3) போப்பாண்டத்துவதால் கிறிஸ்தவத்திற்குள் கொண்டுவரப்பட்ட அருவருப்பான காரியங்கள் யாவை?

  • சுவிசேஷத்தின் எளிய பிரசங்கத்திற்கு பதிலாக சடங்குகளும் ஆச்சாரங்களும் கொண்டுவரப்பட்டன.
  • கிறிஸ்தவத்திற்கு மதம் மாறிக்கொண்டு இருந்த புறமத வெகுஜனங்களுக்கு தேவதை வழிபாட்டில் இன்னும் ஈடுபாடு இருந்தது. கிறிஸ்தவத்தை அவர்களுக்கு ஏற்றவாறு மாற்றும் பொருட்டு மேரி மாதா வழிபாடு ஆரம்பிக்கப்பட்டது.
  • புனித நீர், அருட்தொண்டர் திருப்பண்டங்கள் (saint relics), தாயத்துக்கள், ஜெபமாலைகள் முதலியன - இதுபோன்ற காரியங்கள் கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தை அறிவிப்பதன் மூலம் வரும் இரட்சிப்பின் எளிய நம்பிக்கையை மாற்றியமைத்தன.
  • பவுல், தானியேல் ஆகியோரால் முன்னறிவிக்கப்பட்டபடி, போப்பாண்டத்துவமானது ஆயர்கள் விவாகம் செய்துகொள்வதையும், வெள்ளிக்கிழமைகளில் இறைச்சி பதார்த்தங்களை சாப்பிடுவதையும் தடை செய்தது (தானியேல் 11:37, 1தீமோ 4:2-3).
  • புறமத கோவில்கள் தேவாலயங்களாக மாற்றியமைக்கப்பட்டன. பொல்லாத விக்கிரகங்களும் பழுதுபடாமல் அப்படியே கிறிஸ்தவ அருட்தொண்டர்களாக மறுபெயரிடப்பட்டன.
  • பான்டிஃபெக்ஸ் மேக்சிமஸ் (Pontifex Maximus), அதாவது 'மதத்தின் தலைமை ஆட்சியாளர்' (அனைத்து புறமத ஆசாரியர்களின் தலைவர்) என்பது முன்னர் புறமதத்தானாக இருந்த ரோம பேரரசனின் பட்டங்களில் ஒன்று. அந்த பட்டம் போப்பாண்டவருக்கு வழங்கப்பட்டது.
  • முன்னாள் புறமதத்தார்களான ரோமானிய பேரரசர்கள் அம்மத கடவுள்களான 'ஜானஸ் மற்றும் சைபெலின் சாவிகளை' (Keys of Janus and Cybele) தம் கைவசம் வைத்திருப்பதாக பெருமை பேசிக்கொண்டது வழக்கம். அதைப் பின்பற்றி போப்பாண்டவர்கள் பேதுருவின் சாவி தம் கைவசம் இருப்பதாக சாகசம் பேசினர். முற்றிலும் எந்தவொரு வரலாற்று ஆதாரமும் இல்லாமல், அப்போஸ்தலனாகிய பேதுரு ரோமாபுரியின் முதல் போப்பாண்டவராக இருந்ததாகக் கூற ஆரம்பித்தனர்.

4) கத்தோலிக்க தலைமைக்கு எதிராக தைரியமாக பேசியவர்களை அந்திக்கிறிஸ்து எப்படி நடத்தினான்?
இயேசு கிறிஸ்து (மத்தேயு 5:39) - 'ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு உன் மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு'.
போப்பாண்டவர் இன்னொசண்ட் III (கி.பி.1198) - 'திருச்சபையின் கோட்பாடுகளுக்கு முரண்படும் விதமாக கடவுளைப் பற்றி தனிப்பட்ட விளக்கம் யாரேனும் கூற முயன்றால் அவர்கள் இரக்கமின்றி எரிக்கப்பட வேண்டும்'.

  • திரிபுக் கொள்கை விசாரணைகள் (Inquisition) - 'சமய பேதம் பேசுபவர்களை எதிர்த்துக் களையும் நோக்கம் கொண்ட ரோமன் கத்தோலிக்க திருச்சபை நீதித்துறையில் இருந்த விசாரணை குழுக்கள்' (ஆதாரம்: விக்கிபீடியா).
  • கி.பி.1252-இல் போப்பாண்டவர் இன்னொசண்ட் IV விடுத்த போப்பாண்டத்துவ பிரகடனம் (Ad extirpanda) கத்தோலிக்க திரிபுக் கொள்கை விசாரணையாளர்கள் சமய பேதம் பேசுபவர்களை சித்திரவதை செய்து ஒப்புதல் வாக்குமூலம் பெறலாம் என்று வெளிப்படையாக அதிகாரம் அளித்தது. கி.பி.1256 வருடப்போக்கில் அந்த விசாரணையாளர்கள் சித்திரவதைக்காக கருவிகளை பயன்படுத்தியிருந்தால் கூட குற்ற விடுதலை (மன்னிப்பு) வழங்கப்பட்டது (ஆதாரம்: விக்கிபீடியா).
  • கத்தோலிக்க சபை அதிகாரிகள் நீதிபதிகளாக செயல்பட்ட இந்த விசாரணைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
  • பலர் தங்களது 'சமயபேத' நிலைகளை மறுபரிசீலனை செய்து மறுதலிக்கும் வரை சித்திரவதை செய்யப்பட்டனர். உடலின் தோல் உரித்தல், சரீர பாகங்களை வெட்டிப்போடுதல், கழுமரத்தில் ஏற்றி உயிருடன் எரித்தல், காட்டு விலங்குகளுக்கு இரையாக உயிரோடு வீசுதல் போன்ற பல கொடூர சித்திரவதைகள் அமுல்படுத்தப்பட்டன.

5) அந்திக்கிறிஸ்துவின் ஆட்சி எவ்வளவு காலம் நீடித்தது? வேதாகமம் அந்த கால அளவை முன்னறிவித்ததா?
நெப்போலியன் போனபர்டேவின் பிரெஞ்சு படைகள் கி.பி.1798-ஆம் ஆண்டில் போப்பாண்டவர் பையஸ் VI ஐ சிறையில் அடைத்து ரோமாபுரியில் இருந்து இழுத்துச் சென்றன. கி.பி.1799-ஆம் ஆண்டில் அந்த போப்பாண்டவர் ஒரு பிரெஞ்சு சிறையில் மரணமடைந்தார். அப்போதிலிருந்து, போப்பாண்டவதத்துவ பதவியானது தேசங்கள் மீது நிஜ அதிகாரமும் அரசியல் ஆதிக்கமும் செலுத்தின காலம் திட்டவட்டமாக முடிந்து போனது. நாம் முன்னர் பார்த்தபடி, போப்பாண்டத்துவம் முழுமையான அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிய ஆண்டு கி.பி.539 ஆகும். ஆக, அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியானது மொத்தத்தில் 1,260 ஆண்டுகள் நீடித்தது (கி.பி.539-1799). ஆர்வத்திற்குரிய விஷயம் என்னவென்றால், பல இடங்களில் வேதாகமம் இதை முன்னறிவித்தது:

  • உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்குவான்; அவர்கள் ஒருகாலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள். தானியேல் 7:25.
  • பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; அல்லாமலும், நாற்பத்திரண்டு மாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது. வெளி 13:5.

தானியேல் 7:25-ல் 'ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும்' என்பது ஒரு எபிரேய வழக்க சொற்றொடர். அதன் அர்த்தம் 'ஒரு வருடமும், இரு வருடங்களும், அரை வருடமும்' என்பதாகும் என வேதாகம குறிப்புகள் தெரிவிக்கின்றன (பார்க்கவும் NASB பைபிள் தானியேல் 7:25 அடிக்குறிப்பு footnote). ஆக மொத்தம், அது 3.5 வருடங்கள் ஆகும்.
வேதாகமத்தில் ஒரு மாதம் என்பது 30 நாட்கள் ஆகும் (ஆதி 7:11, 8:3-4); ஆக, ஒரு வேதாகம வருடம் = 360 நாட்கள்; எனவே 3.5 வருடங்கள் = 1,260 நாட்கள். இது வெளி 13:5 வசனத்தின் 42 மாதக்கணக்குடனும் ஒத்துப்போகிறது: 42 x 30 = 1,260 நாட்கள். மேலும், தீர்க்கதரிசன மொழி வழக்கில், ஒரு நாள் ஒரு வருடத்தை குறிக்கும் (எசேக்கியேல் 4:5-6). ஆக, தானியேல் தீர்க்கதரிசி கூறும் இந்த 1,260 நாட்கள், போப்பாண்டவர்கள் அரசியல் ஆட்சி புரிந்த 1,260 வருடங்களை (கி.பி. 539 - 1799) முன்னறிவிக்கின்றது!

6) இந்த நூற்றாண்டுகளில் எந்த சமயத்திலாவது அந்திக்கிறிஸ்து அடையாளம் கண்டுகொள்ளப்பட்டானா?
பதினாறாம் நூற்றாண்டின் புராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்கமானது (Protestant Reformation) போப்பாண்டத்துவம் தான் அப்போஸ்தலர்களால் முன்னறிவிக்கப்பட்ட பாவ மனுஷனாகிய கேட்டின் மகன் "அந்திக்கிறிஸ்து" என ஏகமனதாக அடையாளம் கண்டுகொண்டது.

  • மார்ட்டின் லூதர் (கி.பி. 1483-1546): "உண்மையான நிஜ அந்திக்கிறிஸ்துவின் பீடமானது போப்பாண்டத்துவமே என்பதில் நாங்கள் முற்றிலும் உறுதியுடையவர்களாக இருக்கிறோம்."

  • ஜான் வெஸ்லி 'அந்திக்கிறிஸ்துவும் அவனது பத்து இராஜ்யங்களும்' (கி.பி. 1509-1564): "அவர் [போப்பாண்டவர்] தாமே [பவுல் தெசலோனிக்கியரில் கூறும்] பாவமனுஷன். அவரே கேட்டின் மகன் எனவும் சரியாக அமைகிறார். ஏனெனில் அவர் தனது எதிரிகள் மற்றும் தன்னை பின்தொடர்பவர்கள் உட்பட பெருந்திரளான மக்களின் சாவிற்கு காரணமானவர். தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தேவனுக்கு மட்டுமே சொந்தமான உரிமைகளைக் கோரி, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருக்கிறவர்."

  • ஜான் கால்வின் 'இன்ஸ்டிட்யூட்ஸ் Institutes' (கி.பி.1509-1564): "சிலர் ரோமானிய போப்பரசரை அந்திக்கிறிஸ்து என்று நாம் அழைக்கையில் நாம் மிகவும் கடுமையாக பேசுவதாக நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் பவுலுக்கு விரோதமாகக் அதே குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்கள் என்றுதான் அர்த்தம். ஏனெனில் [2தெசலோனிக்கேயர் 2-ம் அதிகாரத்தில் பவுல் சொன்ன வார்த்தைகள்] போப்பாண்டத்துவத்திற்கு பொருந்துவதைக் காட்டிலும் வேறு எந்த அர்த்தம் இருப்பதற்கு வாய்ப்பேஇல்லை என்று என்னால் நிரூபிக்க முடியும்."

7) அப்படியானால், இன்றைய புராட்டஸ்டன்ட் (சீர்திருத்த) கிறிஸ்தவர்கள் ஏன் ஒரு எதிர்கால அந்திக்கிறிஸ்துவை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்?
போப்பாண்டத்துவத்தை அந்திக்கிறிஸ்து என்று அடையாளம் கண்டுகொண்ட புராட்டஸ்டன்ட் சீர்திருத்த (Reformation) இயக்கத்தின் மக்களை எதிர்த்து மட்டுப்படுத்தும் பொருட்டு கி.பி.1500-களில் வேதாகம தீர்க்கதரிசனங்களுக்கு புதிய விளக்கங்களை உருவாக்கும் பொறுப்புடன் 'இயேசுநாதர் சங்கம் - ஜெசுவிட் குழு' (Jesuits) என்ற குழுவை போப்பாண்டத்துவம் நியமித்தது.

  • ஜெசுவிட் குழு ஆட்கள் சீர்திருத்தத்தை அடக்கும் நோக்கம் கொண்ட "எதிர்ச் சீர்திருத்த இயக்கத்தை" (Counter-Reformation) தலைமை தாங்கி நடத்தினர். அதற்காக சீர்திருத்த இயக்கம் சுட்டிக்காட்டின தீர்க்கதரிசனங்களுக்கு இரண்டுவிதமான எதிர்-விளக்கங்களைப் பயன்படுத்தி, அவை மூலமாக அந்திக்கிறிஸ்துவின் அடையாளத்தை போப்பாண்டத்துவதில் இருந்தும் இடைக்கால யுகத்தில் இருந்தும் நகர்த்த உபாயம் செய்தனர். அந்த இருவகையான எதிர்-விளக்கங்களாவன - எதிர்காலவாதமும் (Futurism), முற்காலவாதமும் (Preterism) ஆகும்.
  • ஆக, 1500-களின் பிற்பகுதியில், ஜெசுவிட் குழு அங்கத்தினர்களான பிரான்சிஸ் ரிபெரா மற்றும் கார்டினல் ராபர்ட் பெல்லார்மைன் இருவரும் எதிர்காலவாதத்தையும் (Futurism - அந்திக்கிறிஸ்து மிகத்தொலைவில் இருக்கும் எதிர்காலத்தில்தான் எழுவான்), அதே ஜெசுவிட் குழு ஆளான லூயிஸ் டி அல்காசர் முற்காலவாதத்தையும் (Preterism - அந்திக்கிறிஸ்து பழங்காலமான கி.பி.70-இல் அரசாண்ட ரோம பேரரசனான நீரோ ஆவான்!) உருவாக்கி பிரகடனப்படுத்தினர்.
  • நீண்ட காலமாக, கத்தோலிக்கர்கள் மட்டுமே இந்த எதிர்-விளக்கங்களை பின்பற்றினர். மற்ற கிறிஸ்தவர்கள் புராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்கத்தின் பொருள்விளக்கமுறையான வரலாற்றுவாதத்தின் (Historicism) அடிப்படையில் போப்பாண்டத்துவம்தான் அந்திக்கிறிஸ்து என்று தொடர்ந்து அறிவித்து வந்தனர்.
  • ஆனால் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக, மற்ற கிறிஸ்தவ பிரிவுகளும் படிப்படியாக கத்தோலிக்க எதிர்காலவாதத்தின் (Futurism) எதிர்-விளக்கத்தை பின்பற்ற தொடங்கிவிட்டன. திருச்சபை வரலாற்றை மக்கள் மறந்துவிட்டார்கள். ஏன் புராட்டஸ்டன்ட் சீர்திருத்தவாத சபைகள் (சி.எஸ்.ஐ, லூத்தரன், பெந்தேகோஸ்தே போன்ற சபைகள்) கத்தோலிக்க திருச்சபையிலிருந்து முதலில் பிரிந்து வந்தன என்ற சரித்திரத்தையே மறந்து போய்விட்டார்கள்.

8) அந்திக்கிறிஸ்துவின் ஆட்சிக்காலங்களில் மெய்யான திருச்சபைக்கு என்ன நேர்ந்தது?

  • மேலோட்டமாக பார்க்கப்போனால், மெய் திருச்சபையானது அந்திக்கிறிஸ்துவின் காலத்தில் சமுதாயத்தில் இருந்து கிட்டத்தட்ட மறைந்து போனதாக தெரிகிறது. ஆனால் வேதாகமத்தில் முன்னறிவிக்கப்பட்டபடி, அது உண்மையில் வனாந்தரத்தில் போஷிக்கப்பட்டு கவனித்துக்கொள்ளப்பட்டது - அதாவது சமூகத்திலிருந்து ஓரம் கட்டப்பட்ட, எளிமையான தற்பெருமையற்ற நிலையில், ஜனரஞ்சகமான வரலாற்று பதிவுகளில் ஆவணப்படுத்தப்படும் அளவிற்கு எப்பொழுதுமே பிரபலமாகாத நிலையில் இருந்து வந்தது.
    'ஸ்திரீயானவள் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள்; அங்கே 1,260 நாளளவும் அவளைப் போஷிப்பதற்காக தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அவளுக்கு உண்டாயிருந்தது.' வெளி 12:6 (மறுபடியும் 1,260 வருடங்கள் இங்கேயும் குறிப்பிடப்படுவதை கவனிக்கவும்).
  • மெய் திருச்சபையானது வேதாகம சத்தியத்தில் போஷிக்கப்பட்டது மட்டுமல்லாமல், மெய்யான சீடர்கள் அந்திக்கிறிஸ்துவின் துன்புறுத்துதல்களை தாங்கிக்கொண்டு அநேகர் மத்தியில் உண்மையான சுவிசேஷத்தை தைரியமாக அறிவித்தார்கள்.
    'ஜனங்களில் அறிவாளிகள் அநேகருக்கு அறிவை உணர்த்துவார்கள்; அநேகநாள்மட்டும் பட்டயத்தினாலும் அக்கினியினாலும் சிறையிருப்பினாலும் கொள்ளையினாலும் விழுவார்கள்' தானியேல் 11:33.

மேலும் பல வேதாகம தீர்க்கதரிசனங்களும் கூட அந்திக்கிறிஸ்துவிற்கு ஆண்டவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்குவதற்கு அதிகாரம் கொடுக்கப்படும் என உறுதிப்படுத்துகின்றன (தானியேல் 7:21-22, வெளி 17:6). அங்ஙனம் முன்னறிவிக்கப்பட்டபடியே, அந்திக்கிறிஸ்துவான போப்பாண்டத்துவம் அவர்களை மரண தண்டனைக்கும், சிறைவாசத்திற்கும் உட்படுத்தியது.

மேலும் படிக்க: பாபிலோன் குமாரத்திகள்

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.