வரலாற்றின் கடவுள் யார்?

1) தானே மெய்யான தேவனென்று உரிமைகோரும் பைபிளின் கடவுள் விடுக்கும் சவால்தான் என்ன?
"பூர்வகாலத்தில் நடந்தவைகளை ஆதிமுதல் அறிவித்தேன், அவைகள் என் வாயிலிருந்து பிறந்தன, அவைகளை வெளிப்படுத்தினேன்.
அவைகளைச் சடிதியாய்ச் செய்தேன், அவைகள் நடந்தன.. ஆகையால்: என் விக்கிரகம் அவைகளைச் செய்ததென்றும், நான் செய்த சுரூபமும், நான் வார்ப்பித்த விக்கிரகமும் அவைகளைக் கட்டளையிட்டதென்றும் நீ சொல்லாதபடிக்கு, நான் அவைகளை முன்னமே உனக்கு அறிவித்து, அவைகள் வராததற்குமுன்னே உனக்கு வெளிப்படுத்தினேன்." ஏசாயா 48:3-5.
சரிதான்.
மனிதனின் எதிர்காலத்தை வடிவமைக்கும் மெய்யான கடவுளால் மட்டுமே மனிதகுல வரலாற்று நிகழ்வுகளை முன்னறிவிக்க முடியும்.

2) எங்கெல்லாம் இந்த தேவன் தனது தீர்க்கதரிசனங்களை முன்னறிவிக்கிறார்?
பைபிளின் கடவுள் தன்னுடைய புத்தகத்திலே பல தீர்க்கதரிசனங்களை அறிவிக்கிறார்.

  • வழக்கமாக மத நூல்களில் சில தெளிவற்ற அறிக்கைகளை தவிர தீர்க்கதரிசன ஒழுங்கமைப்பு எதுவும் இருக்காது.
  • ஆனால் பைபிளில் மூன்றில் ஒரு பங்கிற்குமேல் தீர்க்கதரிசனங்களால் நிரம்பியுள்ளது. அதன் தீர்க்கதரிசிகள் பல நகரங்கள், தேசங்கள், மற்றும் பேரரசுகளின் வருங்காலத்தை முன்கணித்தார்கள். வரவிருக்கும் போர்களின் வெற்றி தோல்விகளையும், மனிதர்களின் தலைவிதியையும், மற்றும் குறிப்பிட்ட நிகழ்வுகளையும், மிக நுணுக்கமாகவும், துல்லியமாகவும், அவை நிறைவேறுவதற்கு தசாப்தங்கள், நூற்றாண்டுகள் முன்னரே பைபிள் முன்னறிவித்தது.

சோதனை எளிமையானது - ஒருவேளை அதன் தீர்க்கதரிசனங்கள் உண்மையிலேயே நிறைவேறுகின்றன  என்றால், பைபிள் நிஜமாகவே மெய்யான தேவனின் - மனித வரலாற்றின் இயக்குனரின் - தெய்வீக தாக்கத்தால் எழுதப்பட்ட வார்த்தை என்று உறுதியாக உரிமைகோர இயலும்.

ஏற்கனவே நிறைவேறிய எண்ணற்ற தீர்க்கதரிசனங்கள்

உலகத்தின் மகா பேரரசுகள்/பேரரசர்கள் பற்றிய தீர்க்கதரிசனங்கள்

3) உலக சாம்ராஜ்யங்கள், பேரரசர்கள் பற்றியும், அவர்களின் செயல்களை குறித்தும் பைபிள் சரியாக முன் கணித்ததா?
எல்லா முக்கிய உலக சாம்ராஜ்யங்களையும் பற்றி பைபிள் முன்னறிவித்தது. சில எடுத்துக்காட்டுகள்:

அட்டவணை: பேரரசுகள் பற்றிய பைபிளின் கணிப்புகள்
முன்னறிவிப்பு கிமு 732
அசீரியா எகிப்தையும் எத்தியோப்பியாவையும் வெல்லும் (ஏசாயா 20:3-5)
நிறைவேறியது கிமு 673-670 அசீரியா அந்த வடகிழக்கு ஆப்பிரிக்க நாடுகளை வெல்கிறது
முன்னறிவிப்பு கிமு 701
பாபிலோனிய பேரரசு இஸ்ரவேல் மக்களை சிறைபிடித்து செல்லும் (ஏசாயா 39)
நிறைவேறியது கிமு 597
கிமு 586
பாபிலோன் இஸ்ரவேலரை சிறைப்பிடித்து எருசலேமை சூறையாடுகிறது.
அது எருசலேமை முற்றிலுமாக அழிக்கிறது.
முன்னறிவிப்பு கிமு 732
மேதிய-பெர்சிய சாம்ராஜ்யம் பாபிலோனை தோற்கடிக்கும் (ஏசாயா 13:17-20). பாபிலோன் யாரும் மீண்டும் ஒருபோதும் குடியேறாத ஒரு தரிசு நிலமாக மாறும்!
நிறைவேறியது கிமு 538
கிமு 275
மேதியர்கள் பாபிலோனைக் கைப்பற்றுகிறார்கள்.
செலியூசிதர்கள் (Seleucids) அனைத்து மக்களையும் கட்டாயமாக வெளியேற்றுகிறார்கள். பாபிலோன் இருந்த இடம் பாக்தாத் நகரத்திலிருந்து 50 மைல் தொலைவில் உள்ளது. அது இன்னும் யாரும் குடியேறாத இடிபாடுகளாகத்தான் உள்ளது! போர்கள் நகரங்களை அழிப்பதுண்டு, ஆனால் அவை மீண்டும் கட்டப்படுவது வழக்கம் (எ.கா. பெர்லின்). ஆனால் பாபிலோன் மறுபடி கட்டப்படவில்லை! பைபிளின் துல்லியமான கணிப்பு.
முன்னறிவிப்பு கிமு 543
ஒரு மகா கிரேக்க இராஜா பெர்சிய சாம்ராஜ்யத்தை கைப்பற்றுவான். ஆனால் அவனது இராஜ்யம் அவன் வாரிசுகளுக்குச் செல்லாது. மாறாக அவன் சாவிற்குப்பின் நான்கு பகுதிகளாய் பிரிந்து போகும் (தானியேல் 8 & 11).
நிறைவேறியது கிமு 330
கிமு 281
மாவீரன் அலெக்சாண்டர் பெர்சியாவை தோற்கடிக்கிறான்.
அலெக்ஸாண்டருக்குப் பின் வந்த கிரேக்க தளபதிகள் பல வருட யுத்தங்களின் பின்னர் அவன் இராஜ்யத்தை நான்கு வழிகளில் பிரித்துக்கொள்ள ஒரு உடன்பாட்டை அடைகிறார்கள். அவன் வாரிசுகளை கொலை செய்கிறார்கள்.

மாநகரங்களின், நாடுகளின் எதிர்காலங்கள்

தீரு மாநகரம்

4) தீரு மாநகரத்தைப் பற்றிய பைபிளின் தீர்க்கதரிசனம் என்னவாக இருந்தது?
எசேக்கியேல் 26:1-14 தீர்க்கதரிசன பகுதியில், பல நூற்றாண்டுகளாக உலகின் வணிக மையமாக திகழ்ந்துவந்த தீரு மாநகரத்தை பற்றிய ஒரு குறிப்பிட்ட முன்கணிப்பு இருந்தது. இந்த மாநகரத்தில் 0.5 மைல் தொலைவில் இருந்த ஒரு தீவும் இருந்தது.
தீர்க்கதரிசனத்தில் ஆறு முக்கிய அம்சங்கள் தனித்து நிற்கின்றன -

  • பல நாடுகள் தீருவை தாக்கும் (எசே 26:3).
  • நேபுகாத்நேச்சார் மாநகரத்தின் பிரதான நிலப்பரப்பை அழிப்பான் (26:7-9).
  • நகரத்தின் இடிபாடுகள் தண்ணீரிலே போடப்படும் (26:12).
  • நகரம் வெறும் பாறையாகும் அளவிற்கு தீருவின் கல்லுகளும், மண்ணும் சுரண்டிப்போடப்பட்டு, கடலின் நடுவிலே போடப்படும் (26: 4,12).
  • அது மீனவர்கள் தங்கள் வலைகளை விரிக்கிற இடமாகிப்போகும் (26:5).
  • தீரு மாநகரம் மீண்டும் கட்டப்பட மாட்டாது (26:14).

5) இந்த பைபிள் தீர்க்கதரிசனம் துல்லியமாக நிறைவேறினதா?

  • தீரு மாநகரத்தின் பிரதான நிலப்பரப்பை நேபுகாத்நேச்சார் கைப்பற்றி எசேக்கியேல் 26-இன் 7-11 வசனங்களை நிறைவேற்றினான். பலர் நகரத்தின் தீவுக்கு தப்பி ஓடினர். தன்னிடம் கடற்படை இல்லாததால், நேபுகாத்நேச்சார் அதனை விட்டுவிட்டு திரும்பிப்போனான்.
  • 200 ஆண்டுகளுக்குப் பிறகு, மாவீரன் அலெக்சாண்டர் தீருவை முற்றுகையிட்டான்.
  • அலெக்சாண்டர் தீருவின் பழைய பிரதான நகரத்தை இடித்துப்போட்டான். அந்த இடிபாடுகளை பயன்படுத்தி, நகரத்தின் தீவுப்பகுதிக்கு ஒரு கடல் பாலத்தை அவன் கட்டினான். கடல்பால சரிவுப்பாதையின் மேற்பரப்பை செம்மைப்படுத்தும் பொருட்டு, அவரது இராணுவம் பழைய நகரத்தின் கற்களையும் மண்ணையும் வெறும் பாறை அளவிற்கு சுரண்ட வேண்டியிருந்தது. அவன் தீருவின் தீவுப்பகுதியை இவ்வாறு கைப்பற்றினான். எவ்வளவு துல்லியமாக 4 மற்றும் 12 வசனங்கள் நிறைவேறின!
  • இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு தீரு நகரம் மீண்டு வந்தது. கி.மு. 314 முதல் கி.பி. 1291-இல் நிகழ்ந்த அதன் முழுமையான அழிவுவரை, பல நாடுகள் தீரு நகரத்தை சூறையாடுவதும், திரும்ப நிலைநிறுத்துவதுமாக நடந்து, 3-ஆம் வசனத்தை நிறைவேற்றின.
  • 14-ஆம் வசனத்தின் நிறைவேற்றமாக, பழைய தீரு நகரமோ ஒருபோதும் மீண்டும் கட்டப்படவில்லை. இன்றும் கூட, அது ‘கடலின் நடுவிலே வலைகளை விரிக்கிற ஸ்தலமாக’த்தான் இருக்கிறது.

இவ்வாறாக, தீரு மாநகரம் பற்றிய பைபிளின் ஆறு முன்கணிப்புகள் ஒவ்வொரு அம்சத்திலும் நிறைவேறி உள்ளன.

சீதோன் மாநகரம்

6) சீதோன் மாநகரத்தைப் பற்றிய வேதாகம தீர்க்கதரிசனம் என்ன? அது எவ்வாறு நிறைவேறினது?
சீதோன் தீருவின் துணை நகரம். எசேக்கியேல் தீர்க்கதரிசி சீதோனைப் பற்றியும் தீர்க்கதரிசனம் உரைத்தார் (எசேக்கியேல் 28:22-23).

  • சீதோன் பற்றிய தீர்க்கதரிசனம் தீருவை பற்றினதை விட வித்தியாசமானது.
  • சீதோனின் வீதிகளில் இரத்தம் பாயும் என்றும், காயம்பட்டவர்கள் பட்டணத்தின் நடுவிலே வெட்டுண்டு விழுவார்கள் என்றும், நகரத்திற்கு விரோதமாய்ச் சுற்றிலும் எல்லாப்புறமும் பட்டயம் வரும் என்றும் முன்னறிவிக்கப்பட்டது.
  • ஆனால் சீதோன் பட்டணம் தீருவைப் போல முற்றிலும் நிர்மூலமாக்கப்படும் என்று கணிக்கப்படவில்லை.
  • ஜார்ஜ் டேவிஸ் ('பத்து இலட்ச உடன்படிக்கை பிரச்சாரம்' The Million Testament Campaign) இவ்வாறு எழுதுகிறார்: ‘ஒரு முறை அல்ல, பல முறை அவள் (சீதோனின்) வீதிகளில் இரத்தம் பாய்ந்துள்ளது, காயம்பட்டவர்கள் அவள் நடுவிலே வெட்டுண்டு விழுந்திருக்கிறார்கள், பட்டயம் அவளை சுற்றிலும் இருந்துவந்துள்ளது'.
  • சீதோன் பல முறை அழிக்கப்பட்டது, ஆனால் எப்போதும் மீண்டு வந்துள்ளது. நகரம் இன்றும்கூட உள்ளது.

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை நிகழ்வுகளில் தீர்க்கதரிசனங்கள்

7) பைபிள் அதன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மேசியா (இரட்சகர் / கிறிஸ்து) பற்றிய தீர்க்கதரிசனங்களுக்கு பெயர் பெற்றது. அவை யாவை?
இயேசுவின் காலத்தின் புதிய ஏற்பாட்டிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பைபிளின் பழைய ஏற்பாடு எழுதப்பட்டது. அதில் 300-க்கும் மேற்பட்ட தீர்க்கதரிசனங்கள் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் நிகழவிருக்கும் விசயங்களை நுண்ணிய விவரங்களுடன் முன்னறிவித்தன.

  • இயேசுவின் பிறப்புக்கு 700 ஆண்டுகளுக்கு முன்னரே, மீகா தீர்க்கதரிசி அவர் எந்த சிற்றூரில் பிறப்பார் என்பதைக்கூட முன்னறிவித்தார் –
    'எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்' (மீகா 5:2)
  • இயேசு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படுவதற்கு 1,000 ஆண்டுகளுக்கு முன்பே, தாவீது அவரது உயிர்த்தெழுதலை முன்னறிவித்தார் -
    ‘என்னை கல்லறையில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்’ (சங்கீதம் 16:10)
அட்டவணை: இயேசுவின் வாழ்க்கை: தீர்க்கதரிசனங்களும், நிறைவேற்றங்களும்
இயேசுவின் வாழ்க்கையின் நிகழ்வுகள் முன்னறிவிப்பு நிறைவேறியது
கன்னிகையிடம் பிறப்பார் ஏசாயா 7:14 மத்தேயு 1:18,24-25
ஆபிரகாமின் சந்ததியாவார் ஆதியாகமம் 22:18 லூக்கா 3:34
உவமைகளால் போதிப்பார் சங்கீதம் 78:2 மத்தேயு 13:34
பிராணசிநேகிதனால் காட்டிக் கொடுக்கப்படுவார் சங்கீதம் 41:9 மத்தேயு 10:4
குற்றஞ்சாட்டுபவர்களுக்கு முன் மௌனம் சாதிப்பார் சங்கீதம் 35:11 மத்தேயு 27:12
காயப்பட்டு நொறுக்கப்படுவார் ஏசாயா 53:5 மத்தேயு 27:26
அடித்து முகத்தில் துப்பப்படுவார் ஏசாயா 50:6 மத்தேயு 26:67
கள்ளர்களோடே சிலுவையில் அறையப்படுவார் ஏசாயா 53:12 மத்தேயு 27:38
ஒரு காரணமின்றி வெறுக்கப்படுவார் சங்கீதம் 69:4 யோவான் 15:25
இகழ்பவர்கள் அவரை பார்த்து தலையைத் துலுக்குவார்கள் சங்கீதம் 109:25 மத்தேயு 27:39
அவர் வஸ்திரங்களை பங்கிட்டு, உடையின்பேரில் சீட்டுப்போடுவார்கள் சங்கீதம் 22:18 யோவான் 19:23-24
தாகம் அனுபவிப்பார் சங்கீதம் 22:15 யோவான் 19:28
கசப்புக்கலந்த காடியை அவருக்கு குடிக்கக்கொடுப்பார்கள் சங்கீதம் 69:21 மத்தேயு 27:34
விலாவில் குத்தப்படுவார் சகரியா 12:10 யோவான் 19:34
தேவன் கையில் தன்னை ஒப்புவிப்பார் சங்கீதம் 31:5 லூக்கா 23:46
அவர் எலும்புகள் முறிக்கப்படுவதில்லை சங்கீதம் 34:20 யோவான் 19:33
ஐசுவரியவானின் கல்லறையில் அடக்கம் பண்ணப்படுவார் ஏசாயா 53:9 மத்தேயு 27:57-60
பூமியில் அந்தகாரம் உண்டாகும் ஆமோஸ் 8:9 மத்தேயு 27:45

ரோம பேரரசு குறித்த தீர்க்கதரிசனங்கள்

8) பைபிளின் புதிய ஏற்பாடு எப்படிப்பட்டது? அதின் தீர்க்கதரிசனங்கள் எதுவும் நிறைவேறியுள்ளனவா?
புதிய ஏற்பாட்டில் ஏராளமான தீர்க்கதரிசனங்கள் உள்ளன. சில எடுத்துக்காட்டுகளை பார்ப்போம் –

அட்டவணை: இயேசுவின் தீர்க்கதரிசனங்களும் அவற்றின் நிறைவும்
தீர்க்கதரிசனங்கள் (கி.பி 30-33) நிறைவேறல்கள் (கி.பி 70 மற்றும் அதற்குப் பின்னர்)
ஏரோது இராஜாவின் காலத்தில் இருந்த தேவாலயமானது ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு இடிக்கப்படும் என்று இயேசு முன்னறிவித்தார் (லூக்கா 21:5-6). கி.பி 70-இல் ரோமாபுரியின் படைகள் ஏரோதின் தேவாலயத்தை இடித்துப்போடுகின்றன.
எருசலேமின் அழிவுக்கு முன்னர் காணப்படப்போகும் எச்சரிக்கை அறிகுறிகளை இயேசு முன்னறிவித்து, அவற்றை கண்டவுடன் என்ன செய்ய வேண்டும் என்று கிறிஸ்தவர்களுக்கு அறிவுறுத்துகிறார்:
'எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும் கடவர்கள்' (லூக்கா 21:20-21).
(மற்ற அனைத்து இஸ்ரேவேல் கோட்டைகளையும் அழித்த பின்னர்) தளபதி வெஸ்பேசியனும் (Vespasian) அவனது ரோமானிய சேனைகளும் எருசலேமைச் சூழும் நேரத்தில், பேரரசன் நீரோ (Nero) ரோமாபுரியில் தற்கொலை செய்து கொள்கிறான். அதனால் வெஸ்பேசியன் தனது சேனைகளை ரோமானிய தலைநகருக்கு திருப்பிச் செல்கிறான்.
எருசலேமின் கிறிஸ்தவர்கள் இயேசுவின் தீர்க்கதரிசன எச்சரிக்கையை நினைவுகூர்ந்து, நகரத்தின் அழிவு சமீபமாகிவிட்டதை உணர்கிறார்கள். அவர்கள் பெட்ரா மலைகளுக்கு ஓடி தப்பிக்கிறார்கள். வெஸ்பேசியன் புதிய பேரரசனாகிறார். அவனது மகன் டைட்டஸ் (Titus) திரும்பி வந்து கி.பி 70-இல் எருசலேமை அழித்துப்போடுகிறான்.
எருசலேம் சூறையாடப்படும் போதும் அதற்குப் பிறகும் இஸ்ரவேலர் அனுபவிக்கவிருக்கும் உபத்திரவங்களை இயேசு முன்னறிவிக்கிறார்:
'எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே.
அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின்மேல் மிகுந்த இடுக்கணும் இந்த ஜனத்தின்மேல் கோபாக்கினையும் உண்டாகும்.
பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்' (லூக்கா 21:22-24).
முன்னறிவிக்கப்பட்ட நீதியைச் சரிக்கட்டும் நாட்களில் ரோமானிய சேனைகள் யூத தேசத்தை அழிக்கின்றன.
அவலமான அந்த நான்கு ஆண்டுகளில் பத்து இலட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகவும் (பட்டயக்கருக்கினாலே விழுந்ததாகவும்), கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் எருசலேமில் இருந்து புறதேசங்களுக்குள்ளே சிறைப்பட்டுப்போனதாகவும் வரலாற்றாசிரியர் ஜோசபஸ் (Josephus) பதிவுசெய்கிறார்.
இஸ்ரவேலர் பல தேசங்களுக்குள்ளாக சிதறடிக்கப்படுகின்றனர். பின்னர் 19 நூற்றாண்டுகளுக்கும் மேலாக எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படுகிறது.

முடிவு - வரலாற்றின் கடவுள் யார்?

9) இந்த வேதாகம தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் எவ்வாறு இவ்வளவு துல்லியமாக இருக்க முடியும்?
2 பேதுரு 1:20-21 பதிலளிக்கிறது - 'வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.'

10) இந்த வேதாகம தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றங்கள் எல்லாம் நமக்கு எதை நிரூபிக்கின்றன?
தம்முடைய மனித படைப்புகள் போலி தேவர்களை கற்பனை செய்து உருவாக்குவார்கள் என கடவுள் எதிர்பார்த்ததை பைபிள் விளக்குகிறது (ரோமர் 1:21-23, ஏசாயா 44:8-20). எனவே, அத்தகைய தவறான கோட்பாடுகளுக்கு எதிராக அறைகூவல் விடும்பொருட்டு, மனிதனின் எதிர்காலத்தை முன்னறிவிக்கக்கூடியவர் தான் மட்டுமே என்று பைபிளின் கடவுள் வலியுறுத்தினார். வரலாற்றின் பக்கங்கள் முழுவதும் அவர் அந்த சவாலை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளார் என்பது நமக்கு தெரிய வருகிறது.

  • ‘முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானமில்லை. அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்’ (ஏசாயா 46:9-10)

11) வரலாற்றை முன்னறிவிப்பதில் பைபிளுக்கு சமமாக வேறு ஏதாவது இருக்கிறதா?
உண்மையில் இல்லை. மத அல்லது மதச்சார்பற்ற வேறு எந்த புத்தகங்களும் அத்தகையதொரு தீர்க்கதரிசன ஏற்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. சில நூல்கள் முன்கணிப்புகளைச் செய்தாலும் கூட, அந்த முன்னறிவிப்புகள் தெளிவற்றதாகவும், குறிப்பிட்ட பிரத்தியேகங்கள் இல்லாததாகவும் இருக்கின்றன. அதேசமயம் பைபிளின் தீர்க்கதரிசனங்கள் நடக்கவிருக்கும் நிகழ்வுகளின் மிக நுண்ணிய விவரங்களை வகுத்துக்கூறுகின்றன. உண்மையில், இந்த அம்சத்தில் பைபிளின் கடவுளுக்கு - அதாவது, வரலாற்றின் கடவுளுக்கு - தீர்க்கதரிசனத்தின் கடவுளுக்கு எதிராக சவால்விட யாருமில்லை.

முடிவு - நம் அனைவரின் கடவுள் யார்?

  • பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பைபிள் சொன்ன பிரபஞ்ச உண்மைக்கூற்றுகளுக்கு சமீப காலங்களில் தான் நவீன விஞ்ஞானம் ஈடுபிடித்து வருவதாகத் தெரிகிறது.
  • மனிதகுல வரலாற்றின் நிகழ்வுகள் பைபிளால் தொடர்ச்சியாகவும் துல்லியமாகவும் முன்கணிக்கப்பட்டுள்ளதை ஆவணப்படுத்தப்பட்ட சரித்திரக் குறிப்புகள் நிரூபிக்கின்றன.

ஆம், 'பிரபஞ்சத்தின் சிற்பியும் நானே, மனிதனின் தலைவிதிமேல் ஆதிக்கம் செலுத்துபவரும் நானே!' என்று உரிமைகோரும் பைபிளின் கடவுளுக்கு ஆதரவாக அறிவியல், வரலாறு இரண்டுமே வலுவாக வழக்காடுவதாக தெரிகிறது.

மேலும் ஆய்வுக்குரிய கேள்விகள்

  • வேதாகமத்தின் கடவுள்தான் உண்மையில் நம்முடைய சிருஷ்டிகர்த்தா என்றால், அவர்தான் மனிதனின் தலைவிதியை நிர்ணயிக்கிறார் என்றால், அவர் எப்படிப்பட்ட கடவுளாக இருக்கிறார்?
  • அவர் நியாயமானவரா, நீதியானவரா?
  • அவர் தனது படைப்புகள்மேல் அக்கறை கொண்டவரா?
  • அவர் மிகவும் சக்திவாய்ந்தவர் என்றால், ஏன் உலகில் இவ்வளவு தீமைகளை அனுமதிக்கிறார்?
  • அவர் ஏன் துன்பத்தையும் மரணத்தையும் நிறுத்தவில்லை?

இந்த கடவுள் மனிதகுலத்திற்காக திட்டமிட்டுள்ள எதிர்காலம்தான் என்ன?

மேலும் படிக்க - உண்மையிலேயே நல்ல செய்தி