திருச்சபை

கருப்பொருள் வசனம்: 'எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.' ரோமர் 8:30

1) இன்றைய தினம், பெரும்பான்மை மக்கள் திருச்சபைகள் என்றால் தேவாலய கட்டடங்கள் என்று நினைக்கின்றனர். உண்மையில் வேதாகமப்படி, திருச்சபை என்றால் என்ன?
புதிய ஏற்பாட்டில் 'திருச்சபை' (Church) என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தினது இயேசுதான். 'திருச்சபை' என்ற வேதாகம கிரேக்க மூலச்சொல்லானது எக்கலீசியா (ekklesia) ஆகும். அதாவது 'தேர்ந்தெடுக்கப்பட்ட / அழைக்கப்பட்ட கூட்டம்' என்று பொருள்.
ஆம், இயேசு தம் சீடர்களிடம், 'நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டேன்' என்று சொன்னார். யோவான் 15:19.
திருச்சபை என்பது கிறிஸ்துவின் மூலம் 'தேர்ந்தெடுக்கப்பட்டு அழைக்கப்பட்டு' உலகிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஒரு கூட்டமாகும்.

2) ஆதி திருச்சபைகளை வேதாகமம் எவ்வாறு விவரிக்கிறது?

  • சீடர்கள் எண்ணிக்கை அதிகரித்தபோது, அவர்கள் வழிபாட்டிற்காகவும் ஐக்கியத்திற்காகவும் ஒன்றுகூடினார்கள். இந்த விசுவாசிகளின் குழுக்கள் ஒவ்வொன்றும் எண்ணிக்கையை பொருட்படுத்தாமல் திருச்சபைகள் என்று அழைக்கப்பட்டன.
  • இந்த குழுக்களுக்கு எந்தவித பிரிவு (denomination) பெயர்களும் இல்லை. எருசலேமில் இருந்த சபை, பிலிப்பியில் இருந்த சபை, ரோமாபுரியில் இருந்த சபை, ஆக்கில்லா மற்றும் பிரிஸ்கில்லாள் வீட்டிலே கூடுகிற சபை - என சபைகள் அவை கூடின இடங்களாலே அடையாளம் காணப்பட்டன.
  • எபேசியர் 1:22-23-ல் பவுல் "எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்" என்று கிறிஸ்துவை சபையின் தலையாக விவரிக்கிறார். அவர் திருச்சபையை கிறிஸ்துவின் 'சரீரம்' என்று சித்தரிக்கிறார்- 'எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார். நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்.' 1கொரிந்தியர் 12:12-13.

3) வேதாகமத்தின்படி இயேசு கிறிஸ்துவின் திருச்சபையில் ஒரு அங்கமாக ஒருவர் எப்படி சேர்வது?
பெந்தெகொஸ்தே நாளன்று, பேதுரு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை யூத மக்களுக்கு அறிவித்து, "நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது," என்றார் (அப்போஸ்தலர் 2:38-39).
அன்று மூன்று ஆயிரம் பேர் அந்த அழைப்பிற்கு செவிகொடுத்து திருச்சபையின் அங்கமாக ஆனார்கள். திருச்சபை தினந்தோறும் வளர்ந்தது - 'இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டுவந்தார்.' (அப்போஸ்தலர் 2:47).
அப்போஸ்தலனாகிய பேதுரு அறிவுறுத்தியபடி-

  1. அவர்கள் மனந்திரும்பினார்கள் - பழைய ஏற்பாட்டிலிருந்து புதிய ஏற்பாட்டிற்கு மனதை திருப்பினார்கள்.
  2. அவர்கள் இயேசுவை மனிதகுலத்தின் இரட்சகராகவும், கடவுள் அனுப்பிய கிறிஸ்துவாகவும் விசுவாசித்து அவர்மேல் நம்பிக்கை வைத்தார்கள்.
  3. அவர்கள் கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டனர் - கிறிஸ்துவிற்காகவும் அவரது இராஜ்யத்தின் சுவிசேஷத்திற்காகவும் தங்கள் வாழ்வை அர்ப்பணிப்பதற்காக.

இவ்வாறு அவர்கள் அவருடைய திருச்சபையின் அங்கமாக ஆனார்கள். வாக்குத்தத்தம் பண்ணப்படியே பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றார்கள்.
இயேசுவின் திருச்சபையில் சேர இன்றும் அதே மூன்று படிகள்தான் உள்ளன.

மேலும் படிக்க: மனந்திரும்புதல் - எதிலிருந்து?

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.