மகா விசுவாச துரோகம்

கருப்பொருள் வசனம்: மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்கள்." (அப்போஸ்தலர் 20:29-30)

1) அப்போஸ்தலர்களின் மரணத்திற்குப்பின் கிறிஸ்தவத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று வேதாகமம் முன்னறிவித்தது?
"நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்." அப்போஸ்தலர் 20:29-30.
ஆம், அப்போஸ்தலருக்குத் தன் பிரிவிற்குப் பின்னர் என்ன நடக்கும் என்பது பற்றி நிச்சயமாகவும் துல்லியமாகவும் தெரிந்திருந்தது. அவர் வேத சத்தியங்கள் திரித்து புரட்டப்படும் என்றும், ஒரு மகா விசுவாச துரோகம் நிகழும் என்றும் (2தெசலோனிக்கேயர் 2:3), அநேக விசுவாசிகள் அதனால் பரவலாக வஞ்சிக்கப்படுவார்கள் என்றும் முன்னறிவித்தார்.

2) இந்த கணிப்பு எவ்வாறு நிறைவேறியது?
முதலாம் நூற்றாண்டு முடிவதற்குள் அனைத்து அப்போஸ்தலர்களும் மரணம் அடைந்தார்கள். அதன் பிறகு கத்தோலிக்க ரோம சாம்ராஜ்யத்தின் எழுச்சியின் போக்கில் வேதாகமத்தைச் சாராத பல போதனைகள் கிறிஸ்தவத்திற்குள் கொண்டுவரப்பட்டன. அவைகளில் சில:

அழிவில்லா ஆத்துமாவில் நம்பிக்கை

இறந்தவர்கள் உண்மையில் இறந்துவிட்டதாக வேதாகமம் கூறுகிறது. வாக்களிக்கப்பட்ட உயிர்த்தெழுதலுக்காக அவர்கள் மரண நித்திரையில் காத்திருக்கிறார்கள் என்கிறது (1இராஜாக்கள் 2:10, அப்போஸ்தலர் 7:60, 1தெச 4:14, மேலும் பல..). கல்லறையில் எந்தவொரு உணர்ச்சிகளோ, வேதனையோ அல்லது விழிப்புணர்வோ இருக்காது என்று உரைக்கிறது (சங்கீதம் 146:4, பிரசங்கி 9:5,10). ஆனால் அழியா ஆத்துமா பற்றின நம்பிக்கைகள் புறமதத்தார் மதமாற்றம் செய்துகொண்டு கிறிஸ்தவர்களாக மாற ஆரம்பித்தபோது படிப்படியாகக் கிறிஸ்தவத்திற்குள் கொண்டுவரப்பட்டன.

நித்திய நரக வேதனை கோட்பாடு

வேதாகமத்தில் பாவத்திற்கான தண்டனை மிகத்தெளிவானது - 'பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்' (எசேக்கியேல் 18:20). கீழ்ப்படியாமையின் பாவத்திற்காக தேவன் முதல் மனிதன் ஆதாமிற்கு மரண தண்டனை விதித்தார். ஆதாமிற்கு ஓர் அழியா ஆத்துமா இருந்ததாகவும் எழுதப்படவில்லை, அது நித்தியத்திற்கும் நரக வேதனை அனுபவிக்கும் என்ற அச்சுறுத்தல் எதுவும் செய்யவும் படவில்லை. ஆதாமின் மரபுவழி மூலம் வரும் பாவத்தினாலும், மரணத்தினாலும் நாம் அனைவரும் மரிக்கிறோம் (ரோமர் 5:12). ஆம், மரணம்தான் நம்மேல் வந்த தண்டனை. ஆனால், நித்திய வேதனையின் பயங்கர அச்சுறுத்தலானது ஒரு சபையை மந்தையைப் போல் பயத்தினால் தக்கவைத்துக்கொள்ள பயன்பட்டது. அதனால் பார்சி சமயத்தின் நரக கோட்பாடுகள் கிறிஸ்தவத்திற்குள் கலக்கப்பட்டன.

ஒரு திரித்துவ கடவுளின் உருவாக்கம்

பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகளோ, புதிய ஏற்பாட்டின் அப்போஸ்தலர்களோ எந்தவொரு திரியேக திரித்துவ கடவுளையும் நம்பவில்லை என்ற வரலாற்று உண்மையை தீவிரமான திரித்துவவாதிகள் கூட வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் அதனை பின்னாட்களில் வந்த ஒரு வெளிப்பாடு என்று கூற முயல்கின்றனர். கத்தோலிக்க அறிஞர் ஜான் எல். மெக்கென்சி எஸ். ஜே. அவர்கள் கத்தோலிக்க திருச்சபை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த ஒரு புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார் - 'கடவுளானவரில் ஒரே இயல்பில் ஜீவிக்கும் மூவர் உண்டு என்ற நம்பிக்கையே கடவுளின் திரித்துவம் என திருச்சபையால் வரையறுக்கப்படுகிறது. அந்த நம்பிக்கையானது 4ஆம், 5ஆம் நூற்றாண்டுகளில் தான் அவ்வாறு வரையறுக்கப்பட்டது. எனவே அது முறையாக, வெளிப்படையாக எடுத்துரைக்கப்பட்ட ஒரு வேதப்பூர்வமான   நம்பிக்கை அல்ல.' -- பைபிளின் அகராதி (Dictionary of the Bible), பக்கம் 899.

பிரபல வரலாற்றாசிரியர் எட்வர்ட் கிபன் Edward Gibbon ('கிறிஸ்தவ சரித்திரத்தின் முகவுரை' Preface to History of Christianity) எழுதுகிறார் - 'புறமதம் (paganism) கிறிஸ்தவ சமயத்தால் வெல்லப்பட்டது என்பது உண்மையென்றால், கிறிஸ்தவமும் புறமதத்தால் கெடுக்கப்பட்டது என்பதும் அதே அளவு உண்மை. ஆதிக்கிறிஸ்தவரின் தூய தெய்வமானது... ரோமாபுரி திருச்சபையால் புரிந்துகொள்ளமுடியாத திரித்துவக்கொள்கையாக மாற்றப்பட்டது. எகிப்தியரால் கண்டுபிடிக்கப்பட்டு, பிளாட்டோவால் மதிப்பிடப்பட்ட அநேக புறமத (pagan) கோட்பாடுகள், நம்பிக்கைக்கு உகந்ததாக எடுத்துக்கொள்ளப்பட்டன.'

வேதாகமத்தின் தவறு நிறைந்த மொழிபெயர்ப்புகள்

எபிரெய/கிரேக்க மூல வேதாகமமானது தமிழ் போன்ற மற்ற மொழிகளிலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டபோது (உதாரணத்திற்கு 1611-ஆம் ஆண்டின் பிரபலமான ஆங்கில கிங் ஜேம்ஸ் பதிப்பு), பல நூற்றாண்டுகளாக வேதாகம சத்தியங்கள் பரவலாய் திரிக்கப்பட்டுவந்த தாக்கத்தின் காரணமாக, மொழிபெயர்ப்பு வேலை செய்தவர்களின் மனப்பான்மை ஏற்கனவே கறைபட்டிருந்தது. அவர்கள் கல்லறை என்ற அர்த்தம் கொண்ட வார்த்தைகளை (ஷியோல் Sheol / ஹேடீஸ் Hades) மட்டுமல்ல, எருசலேமிலிருந்த ஒரு பேட்டைப் பெயரான ஒரு பெயர்ச்சொல் (கெஹன்னா Gehenna) உட்பட பல மூலவார்த்தைகளை நரகம் (Hell) என்று தவறாக மொழிபெயர்த்தார்கள்! 4-ஆம் நூற்றாண்டில் உருவான திரித்துவ கருத்தாக்கத்திற்கு உதவுவதற்காக அவர்கள் பரிசுத்த ஆவியை (கடவுளின் வல்லமையை) குறிக்கும்போது கிரேக்க மொழியின் இலக்கண-பாலினத்தை (grammatical gender) இயற்கை-பாலினமாக (natural gender) தவறாக பயன்படுத்தி, அந்த வல்லமையை/சக்தியை ஒரு நபராக மாற்ற முயன்றனர்.

தேவனின் இராஜ்யத்தை அபகரித்தல்

இயேசு ஆதாமிற்கு செலுத்திய மீட்பின் கிரயபலியால், மனுக்குலம் அனைத்தும் பூமியில் உயிர்த்தெழும் என்றும், கிறிஸ்துவும் அவரை இவ்வாழ்வில் மெய்யாய் பின்பற்றியோரும் சேர்ந்து உயிர்த்தெழுந்த மனித இனத்தை அரசாட்சி செய்யும் தேவனின் இராஜ்யம் பூமியில் வருமென்றும் வேதாகமம் முன்னறிவிக்கிறது. கிறிஸ்துவிற்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு பிறகு, 'வரவிருக்கும் மகிமையான கிறிஸ்துவின் இராஜ்யம் பற்றின கனவுகள் சபைகள் அறிமுகப்படுத்தி இருந்த அமைப்புகளுக்கு தொந்தரவாக இருந்தன.. முதன்முதலில் அகஸ்டின் (Augustine) என்பவர் கத்தோலிக்க திருச்சபைதான் கிறிஸ்துவின் இராஜ்யம் என்று கற்பிக்கத் தொடங்கினார்' (என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா). கி.பி. 413-426 வருடங்களில், அகஸ்டின், ரோம சாம்ராஜ்யத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட கத்தோலிக்க திருச்சபை பூமியிலுள்ள தேவனின் இராஜ்யமாக இருக்கும் என்று கோட்பாட்டை முன்மொழிந்தார். அது ரோம பேரரசர்களை மிகவும் மகிழ்வுற செய்தது.

மேலும் படிக்க: கேட்டின் மகன்

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.