திருச்சபை நம்பிக்கைகள் - ஒரு வரலாறு

 கருப்பொருள் வசனம்: நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன். (அப்போஸ்தலர் 20:29-30)

இயேசு தனது ஊழியத்தின்போது பிரச்சாரம் செய்த முக்கிய செய்தியானது பூமியில் நிறுவப்படவிருக்கும் பரலோகத்தின் இராஜ்யம் (ஆதாவது பரலோகத்திலிருந்து ஆளப்படுகிற இராஜ்யம்) என்று நாம் காண்கிறோம். இராஜ்யம் பற்றின இறையியல் நம்பிக்கைகள் காலப்போக்கில் எங்ஙனம் மாறிவிட்டன என்பதை தெரிந்துகொள்ள திருச்சபை வரலாற்றை நாம் இப்போது சிறிது படிக்கலாம்.

1) ஆரம்ப கால திருச்சபையின் நம்பிக்கை என்ன?
என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா (Encyclopedia Britannica) இவ்வாறு பதிவு செய்கிறது:
"கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் அருகாமையும், பூமியில் மகிமையின் அரசாட்சியை அவர் ஸ்தாபிக்கவிருப்பதுமே ஆதித்திருச்சபையின் சந்தேகத்திற்கு இடமில்லாத எதிர்பார்ப்பாய் இருந்தது. இரண்டாம் நூற்றாண்டின் மத்திவரை இந்த ஆர்வமிக்க எதிர்பார்ப்புகள் கிறிஸ்தவ விசுவாசத்திலிருந்து பிரித்துப்பார்க்கமுடியாத நம்பிக்கைகளாக இருந்தன."
ஆம், முதல் இரண்டு நூற்றாண்டுகளில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் பூமியில் வரவிருக்கும் தேவனின் இராஜ்யத்தை எதிர்நோக்கியே இருந்தார்கள். அந்த நம்பிக்கைதான் அவர்களது கிறிஸ்துவ விசுவாசத்தின் மையக்கருவாக இருந்தது.

2) அடுத்த நூற்றாண்டுகளில் என்னதான் நடந்தது?
என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா தொடர்கிறது:
"இரண்டாம் நூற்றாண்டின் மத்தியில் ...சபைகளில் பரவதொடங்கிய தத்துவம் பேசும் இறையியல் சிந்தனைகளின் தாக்கம், எதிர்காலம் பற்றின பழைய நம்பிக்கைகளை என்ன செய்ய என்று தெரியாமல் திணறியது, புதிய தலைமுறைகளுக்கு அவை அற்பமாகவும், நம்பமுடியாததாகவும் தோன்றியது. மட்டுமல்லாமல் வரவிருக்கும் மகிமையான கிறிஸ்துவின் இராஜ்யம் பற்றின இத்தகைய கனவுகள் எல்லாம் சபைகள் அறிமுகப்படுத்தி இருந்த அமைப்புகளுக்கு தொந்தரவாக இருந்தன..
முதன்முதலில் அகஸ்டின் (Augustine) என்பவர் கத்தோலிக்க திருச்சபைதான் கிறிஸ்துவின் இராஜ்யம் என்றும், பூமியில் ஆயிரமாண்டு அரசாட்சி கிறிஸ்து தோன்றியவுடனே ஆரம்பித்துவிட்டது என்றும், எனவே அது ஏற்கனவே நிறைவேறிவிட்ட விசயம் என்றும் கற்பிக்கத் தொடங்கினார். அகஸ்டின் கொண்டுவந்த இந்த கோட்பாட்டின் மூலம், வரவிருக்கும் கிறிஸ்துவின் ஆயிரவருட அரசாட்சி பற்றின ஆதி விசுவாசமானது அதிகாரப்பூர்வ இறையியலிலிருந்து நீக்கப்பட்டது."
ஆம், கத்தோலிக்க போப்பாண்டத்துவத்தின் (Papacy) எழுச்சியும் அது உருவாக்கின அரசியல் கட்டமைப்புகளும், வேதவசனப்பூர்வமான இராஜ்ய நம்பிக்கைகளை மெதுவாக அழித்தன.

3) மார்ட்டின் லூதரின் சீர்திருத்தம் (Reformation) போப்பாண்டத்துவம் செய்த சேதத்தை சரிசெய்யவில்லையா, என்ன?
இடைக்காலங்கள் முழுவதும் போப்பாண்டத்துவத்தால் ஒடுக்கப்பட்ட பல வேதாகம கோட்பாடுகளை லூதரின் சீர்திருத்தம் மீட்டெடுக்கவே செய்தது. ஆனால் அதற்குள் சத்தியம் பல நூற்றாண்டுகளாக திரிக்கப்பட்டுப்போயிருந்ததால், அனைத்து வேதப்பூர்வ உண்மைகளும் மீட்டெடுக்கப்படவில்லை. இராஜ்ய உபதேசங்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்ந்து நீடித்தது.
என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா கூறுகிறது: "ஜெர்மானிய மற்றும் சுவிஸ் சீர்திருத்தவாதிகள் ஆயிரவருட அரசாட்சி விசுவாசத்தை தூக்கி எறிந்தனர்.. இந்த விசயம் குறித்து அகஸ்டின் காலத்திலிருந்து ரோம கத்தோலிக்க திருச்சபை ஆக்கிரமித்து இருந்த அதே நிலைப்பாட்டை அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள்."
நவீன கிறிஸ்தவ நாடுகள் தேவனின் இராஜ்யமாகக் கருதப்பட்டன ('கிறிஸ்தவ தேசம்' - கிறிஸ்துவின் இராஜ்யம் 'Christendom’ – Christ’s kingdom).

4) இன்றைய (ப்ராட்டஸ்டண்ட் Protestant) சீர்திருத்த சபைகள் இராஜ்யத்தைப் பற்றி என்ன நம்புகிறார்கள்?
இன்றைய சபைகள் இராஜ்யம் பற்றி பல்வேறு கருத்துக்களை கொண்டுள்ளனர். அவற்றில் சில –

  • நவீனவாதிகள்: இவர்கள் நவீன மனிதன் தானே சுயமாக பூமியில் சமாதனமான இராஜ்யத்தை உருவாக்குவான் என நம்புகின்றனர். இந்த கருத்து மிக பிரபலமாக இருக்கிறது. ஆனால் இதற்கு எந்த வேதவசன ஆதாரமும் இல்லை.
  • அடிப்படைவாதிகள்: இவர்கள் பூமி அக்கினியால் அழிந்துபோகும் என நினைக்கின்றனர். இவர்களில் சிலர் கிறிஸ்து பூமியை ஆயிரம் வருடம் ஆளுவார் என நம்பினாலும், அவ்வாட்சியில் விசுவாசிகள் மட்டுமே இருப்பார்கள் எனவும், அதன்முடிவில் விசுவாசிகளும் பூமிவிட்டு பரலோகம் செல்வர் எனவும் கூறுகின்றனர்.
  • ஆன்மீகவாதிகள்: இவர்கள் இராஜ்யம் என்பது மனிதர்கள் மனதில் இருக்கும் ஒரு ஆன்மிகம் சம்பந்தப்பட்ட இருதயத்தின் இராஜ்யம் மட்டும்தான் என கருதுகின்றனர். பூமியில் நிஜமான ஒரு இராஜ்யம் வரவிருக்கிறது என இவர்கள் நம்புவதில்லை.

மேலும் படிக்க: நவீனத்துவம் - சாத்தியமா?

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.