மரித்தோர் உயிர்த்தெழுதல்

 கருப்பொருள் வசனம்: "ஆதாமிற்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்" (1கொரிந்தியர் 15:22)

1) கிறிஸ்து பூமி திரும்பும்பொழுது, மரித்த அனைவரும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்! ஆனால் அப்படிப்பட்ட ஒரு காரியம் உண்மையில் சாத்தியமா, என்ன?
காலாகாலமாக பலர் இதை சந்தேகப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான் அப்போஸ்தலர் அறிவித்தார் –
‘தேவன் மரித்தோதரை எழுப்புகிறது நம்பப்படாத காரியமென்று நீங்கள் எண்ணுகிறதென்ன?’ (அப்போஸ்தலர் 26:8)
ஆம், ஆதாமை மீட்கும் பொருளாக (கிரயமாக) இயேசு தம்மைத்தாமே கொடுத்த தியாகமானது ஆதாமின் சந்ததி அனைத்தையும் (மனுக்குலம் முழுவதையும்) உயிரோடு எழுப்ப உள்ளது (ரோமர் 5:12,18; 1தீமோ 2:6, 1யோவான் 2:2).
‘ஆதாமிற்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்’. (1கொரிந்தியர் 15:22).

2) அப்படியெனில், எல்லா மனிதரும் ஒரே நொடிப்பொழுதில் உயிரோடு எழுவார்களா, என்ன?
இல்லை, இறந்தவர்களின் உயிர்த்தெழுதல் இரு கட்டங்களாக நடக்கும் என வேதாகமம் அறிவிக்கிறது.

  1. முதலாவது உயிர்தெழுபவர்கள் இயேசுவின் உண்மையான விசுவாசிகள். இவர்களே 'முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவர்கள்'.
    "முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான், இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை, இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்." (வெளி 20:6).
  2. அடுத்தது மனுக்குலத்தின் மற்றவர்கள் அனைவரும் உயிர்த்தெழுவார்கள்.
    கிறிஸ்துவுக்குள் அனைவரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். ‘அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான். முதற்பலனானவர் கிறிஸ்து. பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் [மனித இனம்] உயிர்ப்பிக்கப்படுவார்கள்’. 1கொரிந்தியர் 15:22-23.
    இங்கு 'முதற்பலனாவர் கிறிஸ்து' என்பதில் இயேசுவும் (தலையானவரும்), முதலில் உயிர்த்தெழும் (கிறிஸ்துவின் சரீரமாக கருதப்படும்) அவருடைய சபையும் அடங்கும் என்றும் யாக்கோபு 1:18 விளக்குகிறது –
    ‘அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்’. இவ்வசனங்களில் ‘முதற் கனி’ மற்றும் ‘முதலாம் உயிர்த்தெழுதல்’ ஆகிய சொற்றொடர்கள் ‘இரண்டாம் கனிகளும்’, ‘இரண்டாம் உயிர்த்தெழுதலும்’ இருக்கப்போவதை நமக்கு சுட்டிக்காட்டுகின்றன.

3) முதலாம் உயிர்த்தெழுதலுக்கும், இரண்டாம் உயிர்த்தெழுதலுக்கும் என்ன வித்தியாசம்?

  • கிறிஸ்துவின் உண்மையுள்ள விசுவாசிகளுக்கு பரலோக பரிசு நிச்சயம், அதாவது மாம்ச உடலின் இயல்பிலிருந்து ஆவிக்குரிய சரீர இயல்பிற்கு மாறும் மாற்றம்.
  • மனுக்குலத்தின் மற்றவர் அனைவரும் குறைபாடற்ற (பூமிக்குரிய) மாம்ச சரீரங்களுடன் இருப்பார்கள். ஏனெனில் பூமியில் தன் படைப்புகளை குடியிருத்துவதே கடவுளின் நோக்கமாக (ஆதியில் இருந்தே) இருந்து வந்துள்ளது (ஆதியாகமம் 1). இந்த உயிர்த்தெழுதல் ஏதேன் தோட்டத்தில் (முதல் மனிதன் ஆதாமினால்) நாம் இழந்துபோன பரிபூரணத்தை திரும்ப மீட்கும். மனிதன் தனக்குரித்தான வீடான பூமியில் நிலைநிறுத்தப்பட்டு சீரமைக்கப்படுவான். கிறிஸ்து மற்றும் அவரது திருச்சபையின் ஆட்சியின்கீழ் - கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் - பூமியில் என்றென்றும் வாழ்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

அப்போஸ்தலனாகிய பவுல் இந்த இரண்டு உயிர்த்தெழுதல்களையும் விளக்குகிறார்:
“எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல. வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே.. மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும்.
ஜென்ம சரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு. மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் [மண் பூமியில் உயிர்தெழுந்தவர்கள்] அப்படிப்பட்டவர்களே. வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் [வான் பரலோகத்தில் உயிர்தெழுந்தவர்கள்] அப்படிப்பட்டவர்களே”. 1கொரிந்தியர் 15:39-48.

4) இந்த இரண்டுவிதமான உயிர்த்தெழுதல்களும் ஒன்றன்பின் ஒன்றாக உடனுக்குடன் நடக்குமா?
இல்லை, முதலாம் உயிர்த்தெழுதல் இரண்டாம் உயிர்தெழுதலுக்கு சற்று முன்பதாகவே நடக்கிறது. இதன்மூலம் பூமியில் வரப்போகும் பெரும் உபத்திரவத்திலிருந்து கிறிஸ்துவின் உண்மையான விசுவாசிகள் பாதுகாக்கப்படுவார்கள். பூமியில் வந்த பெருவெள்ளத்தின்போது மனுக்குலம் முழுவதும் கஷ்டப்பட்டபோது, நோவாவையும் அவருடைய குடும்பத்தாரையும் மட்டும் தேவன் பாதுகாத்ததை போலவே, பூமியில் பெரும் துயரத்திற்கான நேரம் வருவதற்கு முன்னர் தெரிந்துக்கொள்ளப்பட்ட சிறுகூட்டம் (கிறிஸ்துவின் திருச்சபை] மட்டும் பாதுகாக்கப்படுவர்.
“நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைபோட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள்” (வெளி 7:3)
மேலும், நியாயத்தீர்ப்பு நாளில் அநீதியுள்ளவர்களுடன் கிறிஸ்துவின் திருச்சபையார் நியாயந்தீர்க்கப்பட மாட்டார் என்பது தெளிவான விசயம்.
‘கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்’. 2பேதுரு 2:9.
மற்ற மனிதர் தங்கள் அன்றாட வாழ்க்கையை கவனித்துக் கொண்டிருக்கையில், கிறிஸ்து திரும்பி வந்து முதலாம் உயிர்தெழுதலுக்கு பங்குண்டவர்களை உலகின் கடைமுனைமட்டும் கூட்டிசேர்ப்பார்.
“ஏனெனில், கர்த்தர் தாமே பிரதான தூதனுடைய சத்தத்தோடு வானத்திலிருந்து இறங்கிவருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்”. 1தெச 4:15-17.
“நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும். நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள். அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும். அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள், ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். இரண்டு ஸ்திரீகள் ஏந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள், ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்”. லூக்கா 17:26-27, மத்தேயு 24:39-41.

மேலும் படிக்க: யுக மாற்றம்

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.