உண்மை சொல்லி நன்மை செய்!

 கருப்பொருள் வசனம்: 'சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு.' 2தீமோத்தேயு 4:2.

நாம் சுவிசேஷ ஓட்டத்தை ஓடும்போது, தேவன் மேலுள்ள விசுவாசத்தை நிரூபித்து, பரிசுத்தம் அடைய உதவும் நம் ஆசாரிய கடமையை நிறைவேற்றுகிறோம் என்ற விசயங்களை பார்த்தோம். மேலும் இராஜ்ய நற்செய்தியின் பொருட்டு கிறிஸ்துவிற்கு வரும் பாடுகளில் நாம் பங்கெடுப்பதுதான் அவருடைய இராஜ்யத்தின் மகிமையிலும் அதிகாரத்திலும் நமக்கு ஓர் பங்கை ஏற்படுத்துகிறது என்பதையும் நாம் உணர்ந்தோம். இவை அனைத்தும் சுவிசேஷ ஓட்டத்தை ஓடும்படி தேவன் நம்மை கேட்கும் நோக்கத்தின் பல பரிமாணங்கள் ஆகும். நற்செய்தியின் ஓட்டத்திற்கான மற்றொரு முக்கியமான குறிக்கோளை இப்போது நாம் பார்க்கலாம்.

ஆகையால் தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மைசெய்கிறவர்களாய்த் தங்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள். 1பேதுரு 4:19. நாம் நன்மை செய்ய வேண்டும் என்று பேதுரு கூறுகிறார்.

இவ்வுலகத்தின் நன்மைகள் என அழைக்கப்படுபவை எல்லாம் மாயை, அர்த்தமற்றவை என வேதாகமம் கருதுகிறது (பிரசங்கி 1:14; 2:1). அப்படியிருக்க, நித்திய நன்மையை மனிதனுக்கு அளிக்கும் "நல்ல" செய்தியை கொடுப்பதே நாம் தற்போது ஒருவருக்கு செய்யக்கூடிய ஓர் உண்மையிலேயே நன்மையான செய்கையாகும்.

சிலர் கேட்கலாம் – ஏன் நாம் உலகிற்கு இப்போதே சொல்ல வேண்டும்? எப்படியும் இராஜ்யத்தில் கேட்கத்தானே போகிறார்கள்? பெரும்பாலோர் தற்போது நற்செய்தியை நிராகரிக்கத்தான் செய்கிறார்கள், இல்லையா?

  • பேதுரு மேலும் கூறுகிறார் – “புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில் அவர்களை உங்கள் நற்கிரியைகளைக் கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்”. 1பேதுரு 2:12.
    இது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. அவர் உலகத்தார் நம் நற்கிரியைகளையும் / நல்நடக்கையையும் பார்த்து.. அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசுவார்கள் (!) என்கிறார். ஒரு கணம் யோசிப்போம்! நாம் ஒருவருக்கு உணவு/பணம் கொடுத்து நற்கிரியை செய்தால், நாம் அக்கிரமம் செய்கிறோம் என்று அவர் சொல்வாரா, என்ன? இந்த உலகில் நாம் நல்நடக்கையான வாழ்வு வாழ்ந்தால், அது அக்கிரமம் என்று பழித்துரைக்கப்படுமா, என்ன? நிச்சயம் இல்லை!
    எனவே, எந்தவிதமான கிரியைகள்/நடத்தைகள் தேவனின் பார்வையில் நல்லதாகவும், ஆனால் உலகின் பார்வையில் அக்கிரமமாகவும் தோன்றும்? – சுவிசேஷ வேலையின் கிரியைகள்/நடத்தைகள்!
    நற்செய்தியை பிரசங்கிப்பவர்களை உலகம் எப்போதுமே பழிசொல்லி துன்புறுத்திதான் வந்துள்ளது. ஆம், சுவிசேஷத்திற்காக வாழும் வாழ்க்கையையே பேதுரு நற்கிரியைகள்/நல்நடத்தைகள் என்கிறார்.
    சுவிசேஷத்தின் நற்கிரியைகளை உலகம் இறுதியில் மகிமைப்படுத்தும் என்றும் அவர் கூறுகிறார். ஆனால் எப்போது? - தேவன் சந்திப்பின் நாளிலே! என்ன நாள் இது? – தேவனின் இராஜ்யம்! ஆம், உலகம் அப்போது சத்தியத்தை உணர்ந்து கொள்ளும். அதனால் தமக்கு சுவிசேஷம் அறிவித்து நன்மை செய்தவர்களின் பொருட்டு தேவனை மகிமைப்படுத்தும்.
  • இயேசு பதிலளிக்கிறார்: “உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டைபண்ணுகிறான், ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை, நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது, நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்." லூக்கா 10:16, யோவான் 12:47-48.
    ஆம், அநேகர் இப்போது தேவ வார்த்தையை நிராகரிக்கிறார்கள், ஆனால் அதனை இராஜ்யத்தில் உயிர்த்தெழுப்பப்படுகையில் அவர்கள் நிச்சயம் நினைவு கூருவார்கள். அவர்கள் அப்போது எந்த சாக்குபோக்கும் சொல்ல முடியாது. "ஏன் யாரும் முன்பே எனக்கு சொல்லவில்லை?" என்று பேச முடியாது.
    இன்று நாம் அவர்களுக்கு சொல்லும் அதே தேவ வார்த்தையானது, ஆயிர ஆண்டு இராஜ்யத்தில் (கடைசி நாளில்) அவர்களை சீர்படுத்தி / நியாயந்தீர்க்க உதவும்.

இது ஓர் கடமை!

உலகிற்கு சத்தியத்தை வழங்குவதே நம்முடைய நிகழ்கால கடமை என்று பவுல் கூறுகிறார். அவர்கள் அதை ஏற்ற நேரத்தில் - சிலர் இப்போதும், பெரும்பான்மையினர் இராஜ்யத்தின் போதும் - புரிந்து கொள்வார்கள். எனவே நிகழ்கால விளைவுகளை பொருட்படுத்தாமல், நாம் நம் கடமையை நிறைவேற்றிக்கொண்டே வேண்டும் –

"நான் தேவனுக்கு முன்பாகவும் இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும் கட்டளையிடுகிறதாவது: சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு. ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும். நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று." 2தீமோ 4:1-5.

நாம் நிறைவேற்றும் இந்த கடமையானது மனிதகுலத்திற்கான தேவனின் மகத்தான திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உதவுகிறது – “காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று, தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள திட்டத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார். கிறிஸ்துவின்மேல் முன்னே நம்பிக்கையாயிருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு, தமது திட்டத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்." எபேசியர் 1:9-12.

ஆம், நாம் சுவிசேஷத்தை பிரசங்கிக்கும்போது, மனிக்குலத்திற்கு நன்மை செய்து, உலகிற்கு நமக்குண்டான கடமையை நிறைவேற்றுகிறோம். அது கடவுளுடைய மகத்தான திட்டத்தை முன்னெடுத்து செல்கிறது.

நாம் சுவிசேஷ ஓட்டத்தில் சாதிக்கும் மேலும் பல விசயங்களை இன்னும் ஆழமாக படிக்கலாம். மேலும் படிக்க: அன்பின் பிரதான கட்டளைகள்.

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.