யுகங்களுக்கோர் உவமை - யார் அந்த ஐசுவரியவான்?

கருப்பொருள் வசனம்: "மனுசகுமாரனே, நீ ஒரு விடுகதையை அமைத்து அதை இஸ்ரவேல் வம்சத்தாருக்கு ஓர் உவமையாக சொல்லு" (எசேக்கியேல் 17:2). 'அப்பொழுது அவருடைய சீஷர்கள், இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள். அதற்கு அவர், "அந்த உவமையின் கருத்தாவது.." (லூக்கா 8:9-11)

1) 'ஷியோல்' / 'ஹேடீஸ்', 'கெஹன்னா', 'டார்டரூ' ஆகிய மூல பைபிள் வார்த்தைகள் 'நரகம்' என தமிழ் வேதாகமங்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதையும், அச்சொற்களின் மெய்யான அர்த்தங்களையும் நாம் ஆராய்ந்தோம். ஆனாலும் சிலர், ஐசுவரியவான் - லாசரு உவமையை நிஜமான சம்பவம் என்று எடுத்துக் கொண்டு நரக வேதனையை பிரசங்கிக்கிறார்கள். அது சரிதானா? 
"ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான். லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து, அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று. பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான். பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்" (லூக்கா 16:19-23).

உவமைகள் என்பவை உருவகமான செய்திகளைக் கொண்ட கதைகள் என்பதை நாம் அறிவோம். ஓர் உவமையில் கருத்தை விளக்க சொல்லப்படுகிற எடுத்துக்காட்டு விசயமானது நிஜமான நிகழ்வு கிடையாது (லூக்கா 8:9-11ஐ படிக்கவும்).
புளித்த மாவைக் குறித்த உவமை ரொட்டி சுடுவதற்கான சமையற் குறிப்பா, என்ன? விதைப்பவனைப் பற்றிய உவமையில் இயேசு விவசாயத்தொழில் நுட்பங்களைக் குறித்தா பேசுகிறார்? நிச்சயம் அல்ல. புளித்த மாவும் வெவ்வேறு வகை விதைகளும் எவற்றை அடையாளப்படுத்தின என்பதை அறிவோம். களைகள் குறித்த உவமையில் நல்ல விதை இராஜ்யத்தின் புத்திரரைக் குறிக்கிறது என்றும், களைகள் பொல்லாங்கனுடைய புத்திரரைக் குறிக்கிறது என்றும் இயேசு விளக்கினார்.
இதுபோலவே, வேறுபல உவமைகளிலும் பல்வேறு உருவகங்களையும், எடுத்துக்காட்டுகளையும் அவர் பயன்படுத்தினார்.

2) நிஜ நிகழ்வாக அர்த்தப்படுத்திக்கொண்டால் இந்த ஐசுவரியவான் - லாசரு உவமையானது சில அபத்தங்களை உள்ளடக்கியதாகத் தோன்றுகிறது. அவை என்ன?

  • லாசரு ஒரு விசுவாசி என்றோ, நல்லவன் என்றோ உவமையில் கூறப்படவில்லை. மாறாக, அவன் இறுதியில் ஆசீர்வதிக்கப்படுவதன் காரணம் வெறுமனே நோயாளியாக, ஏழையாக இருந்ததாலேயே என்ற அர்த்தமாகிறது. இது சரியா?
    • இது சரியெனில், நோயாளிகளும், தரித்திரர்களும் மட்டுந்தான் மீட்கப்படுவார்களென நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்!
  • உவமையில் ஐசுவரியவான் செல்லும் "பாதாளம்" ஓர் நிஜ இடம் என்று எடுத்துக்கொண்டால், ஏழை லாசரு செல்லும் "ஆபிரகாமின் மடி"யும் ஒரு நிஜ இடம் என்றுதான் நாம் கருதவேண்டும். அப்படியெனில், கோடிக்கணக்கான ஏழைகள் வாசம் செய்யும் இடமாக ஆபிரகாமின் மடி உள்ளதா? ஆபிரகாம் என்ன ஓர் இராட்சசனா?

3) யூத பரிசேயர்களுக்கு ஓர் உருவகக்கதை பாடமாகவே இயேசு இந்த உவமையை சொன்னார். அவர்களுக்கு அவர் உண்மையில் சொல்லவந்த செய்திதான் என்ன?

  • உவமையின் ஐசுவரியவான் யூத இஸ்ரவேல் தேசத்தை அடையாளப்படுத்துகிறான். ஆம், தேவன் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குத்தத்த ஐசுவரியங்களை (ஆதியாகமம் 22) ஈசாக்கின் மூலமாகவும், யாக்கோபின் மூலமாகவும் இஸ்ரவேல் தேசம் சுதந்தரித்துக் கொண்டது - பன்னிரண்டு இஸ்ரவேல் கோத்திரங்களுக்கும் யாக்கோபுதான் தகப்பன்.
    • இஸ்ரவேலர் 'சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தார்கள்' - எல்லாவிதத்திலும் அவர்கள் 'விசேஷித்த மேன்மையை' அனுபவித்தார்கள் என்று பவுல் குறிப்பிடுகிறார். ஏனெனில், 'எவ்விதத்திலும் மிகுதியாக (நியாயப்பிரமாணம், தீர்க்கதரிசனங்கள் உட்பட) தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது,' என்கிறார் பவுல் (ரோமர் 3:2). ஆம், இஸ்ரவேல் தேசமே 'சம்பிரமமாய் வாழ்ந்த" ஐசுவரியவான்!
    • நியாயப்பிரமாணத்தின்படி அவர்கள் செலுத்தின பலிகள் அவர்களைப் பரிசுத்தமாக்கின. அந்த பரிசுத்தத்தை ஐசுவரியவானின் 'விலையேறப்பெற்ற மெல்லிய வஸ்திரம்' (fine linen) அடையாளப்படுத்துகிறது (வெளி 19:8).
    • இஸ்ரவேல் தேவனின் இராஜரீக (இராஜ்ய அரசாளும் உரிமை பெற்ற) தேசம். ஐசுவரியவானின் 'இரத்தாம்பரம்' ('சிவப்பான மேலங்கி') அதை சித்தரிக்கிறது (மாற்கு 15:17-18).
  • உவமையில் தரித்திரன் லாசரு புறஜாதியாரின் பிரதிநிதி ஆகிறான்.
    • அவ்வமயம், புறஜாதியார் தேவனுக்கு புறம்பானவர்களாக இருந்தார்கள். அவர்கள் அவரது அனுகூலத்தின் கீழோ, நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டோ இருக்கவில்லை.
    • பாவ நோய்வாய்ப்பட்டவராக ('பருக்கள் நிறைந்தவராய்') அவர்கள் நீதி, நியாயத்திற்காக 'பசியோடு' ஏங்கி, 'ஐசுவரியவானுடைய வாசலருகே' கிடந்தார்கள்.
    • அந்நாட்களில், பெரும்பாலான இஸ்ரவேலர்கள், தாங்கள் மட்டுமே மெய்யான தேவனை வழிபடும் பாக்கியம் பெற்றிருந்ததால், அருவருக்கத்தக்க சொரூபங்களை வணங்கிய புறஜாதியாரை அவிசுவாசிகள் / 'நாய்கள்' என்று கருதினார்கள். அவர்களுடன் எவ்வித சம்பந்தமும் வைத்துக்கொள்ளமாட்டார்கள் (கலாத்தியர் 2:15, யோவான் 4:9). ஆம், உவமையில் புறஜாதியாரை சித்தரிக்கும் தரித்தரன் லாசரு ‘நாய்களோடு’தான் கிடந்தான்.
  • இஸ்ரவேலின் செழிப்பான 'மேஜையிலிருந்து விழுந்த' தேவனின் உபகாரங்களான 'துணிக்கைகளை' புறஜாதியார் எங்ஙனம் உண்டு தமது 'பசியை ஆற்றினர்'?
    இயேசுவுக்கும் சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க புறஜாதி ஸ்திரீக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் இதை விளங்கிக்கொள்வதற்கான ஒரு முக்கிய கருவியாகிறது - இயேசு அவளை நோக்கி, "முந்தி பிள்ளைகள் [இஸ்ரவேலர்] திருப்தியடையட்டும், பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்கு [புறஜாதியாருக்கு] போடுகிறது நல்லதல்ல," என்றார்.
    அதற்கு அவள், "மெய்தான் ஆண்டவரே, ஆகிலும், மேஜையின்கீழ் இருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே," என்றாள் (மாற்கு 7:27-28). அவளது குமாரத்தியை குணப்படுத்தி இயேசு அவள் ஆசைப்பட்ட உபகார துணிக்கையை அவளுக்கு கொடுத்தார்.

4) ஐசுவரியவானும், லாசருவும் மரித்தபின்னே நடக்கும் நிகழ்வுகள் குறிப்பதென்ன?

  • இஸ்ரவேலின் பெரும்பாலான தலைவர்கள் தேவன் அனுப்பிய மேசியாவான கிறிஸ்துவை நிராகரித்து அவரை கொல்வதற்கென ரோமர்களிடம் ஒப்புக்கொடுத்தனர். இதையடுத்து இஸ்ரவேல் ஒரு யுக மாற்றத்தை கண்டது. அப்போஸ்தலர்கள் எழுதின பிரகாரம், அதுவரை இஸ்ரவேலரின் தனியுரிமையாக இருந்துவந்த "தேவனுடைய இராஜ்யம் அவர்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்கு", அதாவது, 'திருச்சபைக்கு' - (யூதர்கள் மட்டுமல்லாமல் புறஜாதியாரும் அடங்கின) கிறிஸ்துவை விசுவாசிக்கும் கூட்டத்திற்கு - "ஒரு தனிச்சிறப்பான தேசமான, அவருக்கு சொந்தமான ஜனத்திற்கு" கொடுக்கப்பட்டது (1பேதுரு 2:9, மத்தேயு 21:43). இவ்வாறாக, இஸ்ரவேல் தேசம் என்கிற "ஐசுவரியவான்" தனக்கிருந்த அனைத்து சிறப்புரிமைகளைக்கும் மரித்துப் போகிறான்.
  • தரித்திரன் லாசருவும் மரித்துப் போகிறான் - அதாவது, புறஜாதியார் என்கிற "தரித்திரன்" பெரியதொரு மாற்றத்தை அனுபவித்து, தன் தரித்திரத்திற்கு மரித்துப் போகிறான். இனி அவன் தரித்திரன் அல்ல!
    தேவதூதர்கள் - அதாவது தேவனால் நற்செய்தியின் தூது சொல்ல அனுப்பப்பட்ட அப்போஸ்தலர்கள் - புறஜாதியாரை 'ஆபிரகாமின் மடியிலே கொண்டுபோய் விட்டார்கள்'. ஆம், புறஜாதியாரை அப்போஸ்தலர்கள் ஆபிரகாமிற்கு அளிக்கப்பட்ட வாக்குத்தத்தங்களுக்கு வாரிசுதாரர் ஆக்கினார்கள். அப்போஸ்தலர் பவுல், "நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்திரராயும் இருக்கிறீர்கள்," என்று புறஜாதியாரிடம் பிரகடனம் செய்தார் (கலாத்தியர் 3:29).
  • "பாதாளத்திலே [ஹேடீஸ்/கல்லறை/குழியிலே] ஐசுவரியவான் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்" என்கிறது உவமை - இது இஸ்ரவேலர்கள் அனுபவித்த சித்திரவதைகளைக் குறிக்கிறது. ஈவிரக்கமற்ற ரோம சாம்ராஜ்ய காலத்தில் தொடங்கி, ஒரு தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்து ('குழியிலிருந்து'), அவர்கள் இரக்கத்திற்கு வேண்டுதல் செய்வதை உவமை காட்டுகிறது; முன்னர் தாழ்ந்த நிலையிலிருந்த புறஜாதியார் (தரித்திரன் லாசரு) திசைநோக்கி வேண்டுகிறார்கள்.
    ஆம், கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளாக இஸ்ரவேலர் அடாத வகையில் புற தேசங்களால் துன்புறுத்தப்பட்டு வந்துள்ளனர்.
    இந்நாள் வரைக்கும் அவர்கள் (இஸ்ரவேலர்) இருதயத்தின்மேல் ஒரு கடினப்படுத்தலின் 'முக்காடு' இருந்துகொண்டுதான் இருக்கிறது (2கொரிந்தியர் 3:13-16). ஆனாலும், அந்த முக்காடு எடுபட்டுபோம். பவுல் நமக்கு தருகிற வாக்குறுதியாவது - "[கிறிஸ்துவின் சரீரமான திருச்சபையை உருவாக்கும்] புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும் வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்கு கடினமான மனதுண்டாயிருக்கும். இந்த பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து [பரலோக திருச்சபையிலிருந்து] வந்து, அவபக்தியை யாக்கோபை [பூலோக இஸ்ரவேலை] விட்டு விலக்குவார்" (ரோமர் 11:25-26).

ஆம்! இது உண்மையில் யுகங்களைப்பற்றிய ஒரு உவமையே ஆகும். பழைய ஏற்பாட்டு யுகமானது புதிய ஏற்பாட்டு யுகமாக மாறுவதை விளக்கும் ஓர் உருவகக்கதை! நாம் கண்டவாறு, பல திருமறை வசனங்கள் அதன் தீர்க்கதரிசன நிறைவேற்றத்தை விளக்குகின்றன.

மேலும் படிக்க: நரக வரலாறு