இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசம்

 கருப்பொருள் வசனம்: "ஆனால் இப்பொழுது [இயேசுவின் வருகைக்குப்பின்] நியாயப்பிரமாணத்திற்கு அப்பாற்பட்ட தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது. அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே அளிக்கப்படும் தேவநீதியே; விசுவாசிக்கிற யாவருக்கும் அது கொடுக்கப்படும்." ரோமர் 3:21-22

விசுவாசி!

1) நாம் வீழ்ந்துபோன மாம்சத்தில் இருப்பதால் நம்மை நாமே நியாயப்படுத்தி நீதி சம்பாதித்து மீட்டுக்கொள்ள முடியாது என்பதை உணர்ந்து, அத்தகைய மனப்போக்கை மாற்றி (மனந்திரும்பி) அதற்கு மாறாக ஒரு இரட்சகரை எதிர்நோக்கி தேவனிடம் நம் "மனதைத் திருப்ப" வேண்டும் என்று வேதாகமம் கூறுகிறது என்ற விசயத்தை நாம் ஏற்கெனவே படித்தோம். 'இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் என்னைக் காப்பாற்றும் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன்.' (ரோமர் 7:24-25) - இயேசுவை நம்முடைய இரட்சகராக பறைசாற்றும் அப்போஸ்தலர் பவுல், இரட்சிக்கப்பட்ட பிறகும் கூட, நம் மாம்சம் இன்னும் பாவத்திற்கு ஊழியம் செய்வதாகத்தான் உள்ளது என்று சொல்கிறார்! ஆனால்.. இரட்சிப்பிற்கு முன்னேயும் நாம் அதே நிலையில்தான் இருந்தோம் அல்லவா? அப்படியென்றால் இப்போது என்னதான் வித்தியாசம்?
பவுல் அதற்குரிய பதிலைத் தொடர்ந்து கூறுகிறார் - "ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே." ரோமர் 8:1-2.
அதாவது, முன்னர் ஆக்கினைத்தீர்ப்பு இருந்தது - ஏனெனில் மக்கள் தங்கள் பாவங்களின் காரணமாக நியாயமற்றவர்களாக இருந்தார்கள். ஆனால், சிலுவையில் கிறிஸ்து தியாகம் செய்தபின், இயேசு கிறிஸ்துவில் உள்ளவர்கள் பாவம், மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுவிக்கப்பட்டதால், அவர்களுக்கு எந்தவொரு ஆக்கினைத்தீர்ப்பும் இல்லை. அதுதான் வித்தியாசம்!
மாம்சம் இரட்சிப்பிற்குப்பின்னும் பாவத்தில்தான் இருக்கிறது, ஆனால் இயேசுவின் காரணத்தால் இப்போது எந்த ஆக்கினைத்தீர்ப்பும் இல்லை! நாம் நியாயப்படுத்தப்படுகிறோம்!
ஆனால்... இது எப்படி சாத்தியம்?
குறிப்பு: ரோமர் 8:1-இல் சில தமிழ் வேதாகமங்கள், கிங் ஜேம்ஸ் KJV ஆங்கில வேதப்பதிப்பைப் பின்பற்றி, "மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு" என்ற சொற்றொடரை சேர்க்கின்றன. இந்த சொற்றொடர் மூல கிரேக்க வேதாகமத்தில் இல்லை. ஆதாரத்திற்கு நியூ இன்டர்நேஷனல் வெர்ஷன் NIV, நியூ அமெரிக்கன் ஸ்டாண்டர்ட் பைபிள் NASB போன்ற கண்ணியம் மிகுந்த ஆங்கில வேதாகமங்களை பார்க்கவும்.

2) நமது நியாயப்படுத்தலை (நீதிப்படுத்தலை) இயேசு எப்படி சாதித்தார்?
பவுல் விளக்குகிறார்: 'அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.' ரோமர் 8:3-4. ஆம், இயேசு தாம் பூமியில் வாழ்ந்த வாழ்க்கை முழுவதிலும் பாவமற்றவராக இருந்து, நமக்காக தம்மை சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்து, நம் சார்பாக நியாயப்பிரமாணத்தை (நீதியை) நிறைவேற்றினார்.

வித்தியாசமான "எண்ணப்படும்/கருதப்படும்" ஒரு நீதி

3) ஆனால் அவருடைய செயல்களால் நாம் எப்படி நீதி அடைவோம்?Only By Faith
நம்முடைய இரட்சகராக இயேசுவை நாம் விசுவாசிக்கும்பொழுது, அவருடைய நியாயப்பிரமாண நிறைவேற்றம் - அதாவது அவருடைய நீதி - நாம் அவர்மேல் வைக்கும் விசுவாசத்தின்மூலம் நம் கணக்கில் எண்ணப்பட்டு, நமது பாவங்கள் மூடப்பட்டிருக்கின்றன. பவுல் இதை விளக்குகிறார் -
"ஆனால் இப்பொழுது [இயேசுவின் வருகைக்குப்பின்] நியாயப்பிரமாணத்திற்கு அப்பாற்பட்ட தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது. அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே அளிக்கப்படும் தேவநீதியே; விசுவாசிக்கிற யாவருக்கும் அது கொடுக்கப்படும்.
எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; தேவன் கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்." ரோமர் 3:21-26.
'சுவிசேஷத்தினால் விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று வெளிப்படுத்தப்படுகிறது.' ரோமர் 1:17.
ஆம், விசுவாசிகளே நீதிமானாக "கருதப்"படுகிறார்கள். அவர்கள் பாவமில்லாதவர்கள் அல்ல, மாறாக இயேசுமீது விசுவாசம் வைத்திருப்பதால் நீதியிள்ளவர்களாக எண்ணப்படுகிறார்கள். Sola fide! விசுவாசத்தினால் மட்டுமே!

4) ஆனால் நீதிமானாக்கப்படுதல் எப்படி இலவசமாக இருக்கும்? நம்ப முடியாத அளவுக்கு ஆச்சர்யமான விசயமாக இருக்கிறதே.. நாம் நீதியை சம்பாதிக்க வேண்டியது இல்லையா, என்ன?
இல்லை, நாம் எதையும் சம்பாதிப்பதில்லை. இந்த நீதி முற்றிலும் தேவனின் கிருபையால் இலவசமாக நம் கணக்கில் எண்ணப்படுகிறது. Sola Gratia! கிருபையால் மட்டுமே! நாம் பெருமை பேசுவதற்கு எதுவுமே கிடையாது.
உண்மையில், இது நமக்கு வழங்கப்படும் ஒரு இலவச பரிசு!
பவுல் இதை வலியுறுத்துகிறார் - 'இப்படியிருக்க, மேன்மைபாராட்டல் எங்கே? அது நீக்கப்பட்டதே... அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் மாம்சத்தின்படி என்னத்தைக் கண்டடைந்தான் என்று சொல்லுவோம்? ஆபிரகாம் கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டானாகில் மேன்மைபாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு; ஆகிலும் தேவனுக்கு முன்பாக மேன்மைபாராட்ட ஏதுவில்லை. வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? 'ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது,' என்று சொல்லுகிறது.
கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும். ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்.
அந்தப்படி, கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தைக் காண்பிக்கும் பொருட்டு, 'எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள். எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான்,' என்று தாவீது சொல்லியிருக்கிறான். நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும். அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.
இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொள்கிறோம்.' ரோமர் 3:27; 4:1-8, 24-25; 5:1-2.

5) ஆனால், கிறிஸ்துவில் விசுவாசம் வைத்தபின்பும் மாம்சத்தில் நாம் பாவம் செய்துகொண்டுதான் இருப்போமா?
ஆம். சிலர், முதிர்ச்சியும் முதுமையும் நமக்கு பாவமற்ற தன்மை கொண்டுவரும் என்று சொல்கிறார்கள். ஆனால் 80 வயதான யோவான் எழுதுகிறார் -
'நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.' 1யோவான் 1:8-10.
ஆம், யாராவது தாம் பாவமற்றவர்களாக இருப்பதாகக் கூறினால், அவர்கள் உண்மை பேசவில்லை என்றுதான் அர்த்தம்!

இயேசு கற்பித்தபடி - தினமும் பாவமன்னிப்பு கோரவேண்டிய தேவை

6) ஆங்கில கிங் ஜேம்ஸ் KJV மொழிபெயர்ப்பை பின்பற்றும் சில தமிழ் வேதாகமங்களில் 1யோவான் 3:6,9; 5:18 ஆகிய வசனங்கள் நாம் பாவம் செய்வதை நிறுத்த முடியும் என்பதுபோல் கூறுவதாக தெரிகிறதே. அது சரியா?
'அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை. தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.’ 1யோவான் 3:6,9. ‘தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான்.’ 1யோவான் 5:18.
ஒரு கிறிஸ்தவன் பாவம் செய்யமாட்டான் என்கிறாரா யோவான்? யாருமே பாவம் செய்யாமல் இருக்க முடியாது என்று சற்றுமுன்புதான் அதே நிருபத்தில் அதே யோவான் எழுதினார் அல்லவா? சுய-முரண்பாடாக உள்ளதுபோல் தெரிகிறதே? நிச்சயமாக இல்லை. இந்த வசனங்களை சரியாக மொழிபெயர்த்தால் (ஆங்கில NIV, NASB) இங்ஙனம் கூறுகின்றன –
'அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவத்தில் தொடர்ந்துகொண்டே இருப்பதில்லை; பாவத்தில் தொடர்ந்துகொண்டே இருப்பவன் எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை. தேவனால் பிறந்த எவனும் பாவத்தில் தொடர்ந்துகொண்டே இருக்கமாட்டான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் அவனால் பாவத்தில் தொடர்ந்துகொண்டே இருக்க இயலாது.' 1யோவான் 3:6,9. 'தேவனால் பிறந்த எவனும் பாவத்தில் தொடர்ந்துகொண்டே இருப்பதில்லை.' 1யோவான் 5:18.
ஆம், தேவனால் பிறந்த ஒரு மனிதர் பாவ நிலையில் தொடர்ந்து நிலைத்திருக்க மாட்டார், அதாவது பாவமன்னிப்பு கோராமல் தொடர்ந்து பாவஞ்செய்து கொண்டே இருக்கமாட்டார். யோவான் விளக்குகிறபடி, அவர் மன்னிப்பு கேட்டு, இயேசுவின் பலியின் காரணமாக சுத்திகரிக்கப்படுவார் -
'நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.' 1யோவான்1:9.

7) ஆனால் பாவமன்னிப்பு கோருவது என்பது இயேசுவை ஏற்றுக்கொள்கிறபோது ஒரு முறை மட்டுமே செய்யவேண்டிய விசயம் என்று பரவலாக நம்பப்படுகிறது, இல்லையா?
அது வேதாகமப்படி சரி இல்லை! எப்படி ஜெபிக்க வேண்டும் என்று இயேசு சீடர்களுக்குப் போதித்தபொழுது, தினந்தோறும் பாவமன்னிப்பிற்காக ஜெபம் செய்யும்படி கற்பித்தார் -
           'எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.. எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்.' மத்தேயு 6:11-12.
அவர், 'நீங்கள் அந்த நாளில் பாவம் செய்திருந்தால் மட்டுமே அந்த வரியை ஜெபத்தில் சொல்லுங்கள்,' என்று எந்த அடிக்குறிப்பையும் சேர்க்கவில்லை. சிலர், "ஐயா, ஆனால் நான் எந்த பாவமும் இன்று செய்யவில்லை. நான் பொய் சொல்லவில்லை, கொலையோ, விபச்சாரமோ செய்யவில்லை. எனக்கு இன்று பாவமன்னிப்பு தேவையில்லை," என்று கூற முயலலாம். அது சரியாகுமா?

  • பாவம் உண்மையில் என்ன என்பதை விளக்க, இயேசு ஒரு உதாரணம் குறிப்பிடுகிறார்: "விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்று உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று." மத்தேயு 5:27-28. ஆம், நீங்கள் இச்சையோடு ஒரு நபரைப் பார்த்தாலே அவரோடு விபச்சாரம் செய்துவிட்டீர்கள் என்கிறார் இயேசு! வீழ்ந்துபோன நம் மாம்சத்தில் மனதாரகூட அத்தகு இச்சைகள் இல்லாத உயர்தரநிலையில் வாழ்வதாக யாரேனும் கோர முடியுமா, என்ன?
  • மட்டுமின்றி, நியாயப்பிரமாணத்தில் 613 கட்டளைகள் உள்ளன. பாலியஸ்டர் காட்டன் (polyester cotton) சட்டை அணிந்தால் பாவம் அல்ல என்று நாம் நினைக்கலாம். ஆனால் நியாயப்பிரமாணம் அது ஒரு பாவம் என்று கூறுகிறது. பாவம் என்றால் என்ன என வரையறுப்பது நியாயப்பிரமாணம் மட்டுமே! ஆக, அது உண்மையில் ஒரு பாவம்தான்.

ஆம், ஒவ்வொரு நாளும் நியாயப்பிரமாணத்தின் சில கட்டளைகளை நாம் உடைக்கையில் நாம் தினமும் பாவம் செய்கிறோம். அதை நாம் மறந்துவிடக் கூடாது! ஆக, நாம் தினந்தோறும் தேவனிடம் பாவமன்னிப்பை நாடும்போது, அந்த பாவநிலையில் தொடர்ந்து நிலைத்திருப்பதில்லை, மாறாக சுத்திகரிக்கப்படுகிறோம்.

கிறிஸ்து நிஜமாகவே நியாயப்பிரமாணத்தின் முடிவா?

8) கிறிஸ்துவின்மீது வைக்கும் விசுவாசத்தால் மட்டுமே நீதிமானாக எண்ணப்படுகிறோம் என்றால், உண்மையில் நியாயப்பிரமாணம் கிறிஸ்துவிற்குப்பின் முடிவுக்கு வந்துவிட்டதா?
ஆம், கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை ஒழித்தார் என்று பவுல் அறிவிக்கிறார் -
'எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்தார்.' எபேசியர் 2:14-16.
ஆனால் இயேசு சொன்ன ஒரு கூற்று, பவுலின் எழுத்துக்களுக்கு முரணாக இருப்பதுபோல் தெரிகிறது. பவுலுக்கு எதிராக சிலர் அக்கூற்றை மேற்கோள் காட்டுகின்றனர்:
"வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், எல்லாம் நிறைவேறுமளவும், நியாயப்பிரமாணத்தில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்." மத்தேயு 5:18-19.
ஆனால், நியாயப்பிரமாணம் ஒருபோதும் முடிவடையாது என்று இயேசு சொன்னாரா?
           இல்லை, பார்க்கப்போனால் அது முடிவடைய அவர் ஒரு நிபந்தனை விதிக்கிறார் - ஆம், 'எல்லாம் நிறைவேறும் வரை' என்பதுதான் நியாயப்பிரமாணம் முடிவதற்குரிய நிபந்தனை.
எல்லாம் எப்போது நிறைவேற்றப்பட்டது?
           யோவான் விவரிக்கிறார்: 'அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்... இயேசு காடியை வாங்கினபின்பு, "முடிந்தது," என்று சொல்லி, தலையைச்சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.' யோவான் 19:28-30.
ஆம், நாம் முன்னர் ரோமர் 8-ல் பார்த்தபடி, இயேசு நியாயப்பிரமாணத்தை பூர்த்திசெய்து நமக்காக தன்னுயிர் தியாகம் செய்து, நமக்காக எல்லாவற்றையும் நிறைவேற்றி முடித்தார். எனவேதான், பவுல் தெளிவாக அறிவிக்கிறார் -
           'விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.' ரோமர் 10:4.

9) ஆனால், 'இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்' என்று இயேசு சொன்னார்தானே. நாம் நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிக்காமல் கிறிஸ்துவின் மீதான நம் விசுவாசத்தை மட்டும் நம்புவதானால், இயேசு சொன்னதை எப்படி சாதிப்போம்?
பவுல் அழகாக பதில் கூறுகிறார் -
           'அப்டியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.' ரோமர் 3:31.
ஆம், இயேசுவின்மேல் நாம் கொள்ளும் விசுவாசம் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறது, அதை நிலைநிறுத்துகிறது.

  • நியாயப்பிரமாணத்தை பின்பற்ற முயற்சி செய்கிறவர்கள் கூட அதன் அனைத்து கட்டளைகளையும் பின்பற்ற முடியாது.
  • ஆனால் இயேசுவின்மீது விசுவாசம் கொண்ட நாம், அவ்விசுவாசத்தின் மூலம் நியாயப்பிரமாணத்தின் அனைத்து கட்டளைகளையும் நிறைவேற்றுகிறோம், ஏனென்றால் இயேசு நம் சார்பாக முழு நியாயப்பிரமாணத்தையும் நிறைவேற்றிவிட்டார்.

எனவே நாம் மட்டும்தான் - அதாவது விசுவாசிகள் மட்டும்தான் - நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறவர்கள்!

பத்து கட்டளைகளின் நிலை என்ன?

10) சிலர் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை முடித்துவைத்ததை ஒப்புக்கொள்கிறார்கள், ஆனால் பத்து கட்டளைகள் முடிவுக்கு வரவில்லை என்று கூறுகிறார்கள். அது சரிதானா?

  • இல்லை. பத்து கட்டளைகளில் ஒன்றான ஒய்வுநாள் அனுசரித்தலை (Sabbath) கைக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என பவுல் வெளிப்படையாக சொல்கிறார்:
    'ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகைநாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக. அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது.' கொலோசெயர் 2:16-17.
    ஆகவே, பத்து கட்டளைகள் நியாயப்பிரமாணத்தின் மற்ற கட்டளைகளைவிட சிறப்பானவை அல்ல.
  • பத்து கட்டளைகளைக் கடைப்பிடிப்பதாக எண்ணிக்கொள்ளும் கிறிஸ்தவர்கள் கூட ஓய்வுநாளை சரியாக அனுசரிப்பதில்லை. ஏனெனில் அது சனிக்கிழமை (ஏழாம் நாள்) அனுசரிக்க வேண்டிய விசயம், ஞாயிறுகளில் அல்ல.
  • மேலும், ஓய்வுநாளை அனுசரிக்க கடுமையான விதிமுறைகள் வேதாகமத்தில் உள்ளன. சனிக்கிழமைகளில் ஓய்வுநாளை அனுசரிக்கும் கிறிஸ்தவ பிரிவுகளும், அந்த விதிமுறைகளை கைக்கொள்வதில்லை.
  • யாக்கோபு சொன்னபடி, நியாயப்பிரமாணத்தின் 613 கட்டளைகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று சமமாக இருக்கின்றன, எனவே பத்து கட்டளைகளுக்கு எந்த கூடுதல் சிறப்பும் இல்லை.
  • அதுமட்டுமல்ல, நாம் முன்பு பார்த்ததைப் போலவே, இயேசுவானவர், எந்த ஒரு மனிதனும் நியாயப்பிரமாண கட்டளைகளைத் தான் கடைப்பிடிக்கிறேன் என கோர இயலாது என்பதை எடுத்துரைக்க, பத்து கட்டளைகளில் ஒன்றான "விபச்சாரம் செய்யாதிருப்பாயாக" என்பதை மேற்கோளாகக் காட்டி விளக்குகிறார். ஓர் கட்டளையை மீறவேண்டும் என மனதளவில் நினைத்தாலே அக்கட்டளையை உடைத்துவிட்டீர்கள் என்கிறார்.

எனவே யாரேனும் பத்து கட்டளைகளை தாம் கைக்கொள்வதாக கருதிக்கொண்டால், அவர்கள் தங்களைத் தாங்களே முட்டாளாக்கிக் கொள்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

11) பத்து கட்டளைகள் இப்போது வழக்கற்று (முடிந்து) போயின என்று வேதாகமம் எங்காவது நேரடியாக கூறுகிறதா?
கொரிந்தியர்களுக்கு பவுல் எழுதுகிறார் - 'நீங்கள் கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது; அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது. புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியம் மகிமையுள்ளதாயிருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்?' 2கொரிந்தியர் 3:3-8.
ஆம், கற்பலகைகளுக்குப் பதிலாக, அதாவது பத்து கட்டளைகளுக்குப் பதிலாக, புதிய உடன்படிக்கை அமைக்கப்பட்டது என பவுல் அறிவிக்கிறார். நியாயப்பிரமாண உடன்படிக்கை வழக்கற்றுப் போனது, முடிந்துபோனது. நம்முடைய மாம்சம் பாவத்திற்கு அடிமை என்பது நமக்குத் தெரியும், ஆனால் கிறிஸ்துவின் பெயரில் நமக்கு மன்னிப்பு உண்டென்பதால் நாம் தேவன் பார்வையில் நீதிமானாக எண்ணப்படுவது பாதிக்கப்படுவதில்லை என்பதும் நமக்குத் தெரியும் . இயேசு, "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்," என்றார். யோவான் 14:6. ஆமாம், இயேசுவின்மீது விசுவாசம் வைப்பதே ஒரே வழி!

அதிமுக்கிய கேள்வி

திருச்சபையின் பரம அழைப்பு பாவத்திற்கு எதிராக போராடுவது இல்லை என்றால், நமது விசுவாசத்தை நிரூபிக்க நாம் எதுவுமே செய்யவேண்டியதில்லை என்று அர்த்தமா என்ன? கிறிஸ்துவைப் பின்பற்றுவர்களாக விசுவாசிகள் என்னதான் செய்ய வேண்டும்? மேலும் படிக்கவும்.

மேலும் படிக்க: விசுவாசத்தை நிரூபிப்பது எப்படி?

 

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.