திரித்துவம் கிறிஸ்தவத்துள் நுழைந்த கதை

 கருப்பொருள் வசனம்
"மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்கள்." (அப்போஸ்தலர் 20:29-30)

நாம் சர்வ வல்ல தேவன் (கடவுள்) பற்றியும், இயேசு கிறிஸ்து பற்றியும் படித்தோம், மேலும் சரிசமானத்துவம் மற்றும் அநாதித்தன்மை குறித்த கேள்விகளையும் ஆராய்ந்தோம். பரிசுத்த ஆவி பற்றியும் கற்றுக்கொண்டோம். யோவான் 1:1-ன் நேரடியான முரணற்ற அர்த்தத்தையும் நாம் கண்டோம். 'பதினாலுத்துவம்' போன்ற வினோதமான வழக்குகளையும் விசாரித்தோம். இனி நாம் கிறிஸ்தவ நம்பிக்கைகளில் ஒரு திரித்துக் கோட்பாடு எப்போது, எப்படி நுழைந்தது என்பதுபற்றிய வரலாற்றை சிறிது படிக்கலாம்.

1) மறையியல் ஞானமார்க்கத்தாரின் (Gnostics) தவறான பிரச்சாரமும், யோவானின் பதிலும்

  • கிறிஸ்தவம் என்பது புதிய கடவுள்களைக் கொண்டுவந்த ஒரு புது மதம் அல்ல. இயேசு அதை இஸ்ரவேலின் ஆதி கடவுளை வணங்கும் யூத விசுவாசத்தின் நீட்டிப்பாகத்தான் நிறுவினார். உண்மையில், ஆரம்பகால கிறிஸ்தவ திருச்சபைகள் ஒருமைத்தன்மை வாய்ந்த யூத கடவுளான யாவே தேவனையே வணங்கி, இயேசுவை அத்தேவனின் குமாரனாக, அதாவது ஒரு தனிப்பட்ட நபராகத்தான் விசுவாசித்தன.
  • முதலாம் நூற்றாண்டில், மறையியல் ஞானமார்க்கத்தார் (Gnostics) இயேசு ஒரு சாதா மனிதன்தான் எனவும், கிறிஸ்துவின் ஆவி அம்மனிதனை சிலகாலம் மட்டும் ஆட்கொண்டு இருந்ததெனவும், கிறிஸ்து சிலுவையில் இறக்கவில்லை எனவும், ஒரு கோட்பாட்டை பரப்ப தொடங்கினார். இது கிறிஸ்தவத்தின் மைய சத்தியத்திற்கு எதிரானது. அப்போஸ்தலர் யோவான் இந்த தவறான பிரச்சாரங்களுக்கு எதிராக தன் நிருபங்களில் - 1யோவான் 1:2-3, 4:1-3, 2யோவான் 1:7 - பலமான எச்சரிப்புகளுடன் பதிலளித்தார்.
  • யோவானின் நிருபங்களை மறையியல் ஞானமார்க்கத்தாரின் பின்னணியுடன் வாசிக்கும்போது, நமக்கு சரியான அர்த்தம் புரிகிறது. "நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டுப்பார்த்ததுமாயிருக்கிற" அதே இயேசுதான் ஆதியிலே பிதாவுடன் இருந்து அவரது எல்லா படைப்பின் கிரியைகளுக்கும் முகவராயிருந்த ஜீவவார்த்தையானவர் என்பதை யோவான் அழுத்தமாக வலியுறுத்துகிறார் (1யோவான் 1:1). நம்முடைய பாவங்களுக்காக அவர்தாமே சிலுவையில் மரித்தார். யோவான் அதனை நேரில் கண்ட சாட்சி.

2) யோவானின் பதில் திரிக்கப்பட்டு மெதுவாக இயேசுவை கடவுளுக்கு இணையாக்க முயற்சி
யோவான் இறந்த பிறகு, மறையியல் ஞானமார்க்க (Gnostic) குழுக்கள் மேலும் சக்தி பெற்று, கிறிஸ்தவர்களை நெருக்கின. அவர்களுடன் தர்க்கம் செய்ய, கிறிஸ்தவர்கள் தேவகுமாரனாகிய இயேசுவின் பரலோகத்தன்மையை வலியுறுத்த வேண்டியிருந்தது.
நாளுக்கு நாள் அவருடைய பிம்பம் பெரிதுபடுத்தி முன்வைக்கப்பட்டு, வேத வசனங்களில் வரையறுக்கப்பட்டதைத் தாண்டி அவரது அந்தஸ்து ஏற்றப்பட ஆரம்பித்தது.
3-ஆம் நூற்றாண்டில், இயேசு கடவுளுடைய வெளிப்பாடு என்றும், அவர் தனிநபர் அல்ல என்றும் உரைத்த சபிலியஸ் (Sabellius) போன்றோரின் தவறான கருத்துக்கள் முன்மொழியப்பட்டன. இது முதலில் பரவலாக நிராகரிக்கப்பட்டது.

3) ஆதி கிறிஸ்தவ விசுவாசிகளுக்கும், புதிய சரிசமானத்துவ புனைவாளர்களுக்கும் பிளவு
இயேசுவை கடவுளுடன் சமன்படுத்திய புதிய புனைவுகள், அவர் ஒரு கீழ்ப்படியும் குமாரன் என்ற ஆதிகால திருச்சபைத்தந்தைகளின் கோட்பாட்டை நிராகரித்தன.
ஆதி விசுவாசத்தை காத்துக்கொண்டவர்கள் அர்ப்பணிப்புடன் அதனை காக்க முனைந்தனர். மகா ஏரியன் சர்ச்சை (the great Arian controversy) கிளர்ந்தெழுந்தது. கிறிஸ்தவர்களிடையே பிளவு உண்டானது.

4) அரசியல் தலையீடும், அரை-திரித்துவ நைசியா பிரமாணம் (Nicene Creed) உருவாக்கமும்

  • இந்த சமயத்தில், 4-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், கான்ஸ்டன்டைன் (Constantine) ரோம பேரரசனாக ஆனான். அவன் ஆட்சியின் கீழ், ஆயிரக்கணக்கான புறச்சமய மக்கள் கிறிஸ்தவராய் மதம் மாறிக்கொண்டு இருந்தார்கள். தன் சாம்ராஜ்யத்தின் அமைதி காக்க கிறிஸ்தவ சர்ச்சைகளுக்கு ஒரு முடிவுகட்டுவது அவனுக்கு ஒரு அவசர தேவையாக ஆகிப்போனது.
  • கி.பி. 325 ஆம் ஆண்டில், அவன் ஆயர்களை அழைத்து, நைசியாவின் முதல் கவுன்சில் (First Council of Nicea) என வரலாற்றுப்புத்தகங்களில் கூறப்படும் பொதுச்சபையைக் கூட்டினான். இயேசுவும் பிதாவும் சரிசமானம் என்று கோரின புதிய குழுக்களுக்கும், இயேசு கடவுளின் குமாரனே ஒழிய கடவுளுக்கு சமமானவர் அல்ல என்ற ஆதி நம்பிக்கையை தக்கவைத்துக்கொண்டிருந்த ஏரியஸ் (Arius) போன்ற சபைத்தலைவர்களை பின்பற்றின குழுக்களுக்கும் இடையே மாதக்கணக்கில் விவாதங்கள் நடந்தன.
  • இந்த சூடான விவாதங்களைப் பற்றின சில வரலாற்றுப்பதிவுகள் ஏரியஸ் கன்னத்தில் அறையப்பட்டார் என்றுகூட சொல்கின்றன. தேவகுமாரனானவர் எல்லா காலங்களுக்கும் முன்பாக கடவுளின் முதல் படைப்பாக உருவாக்கப்பட்டவர் எனவும், மற்ற எல்லாவற்றையும் கடவுள் குமாரன் மூலமாக படைத்தார் எனவும் ஏரியஸ் வலியுறுத்தினார். ஆகையால், குமாரன் மட்டுமே தேவனால் நேரடியாக உருவாக்கப்பட்டு ஜநிப்பிக்கப்பட்டவர் என்றார் ஏரியஸ்.
  • கான்ஸ்டன்டைன் இறுதியாக சர்ச்சையை தீர்த்து முடிவெடுக்க ஆயர்களை வாக்களிக்க அழைப்பு விடுத்தான். அதன்மூலம் தீர்மானம் போடப்பட்ட நைசியாவின் அரை-திரித்துவ பிரமாணம் (கி.பி. 325 - Semi-Trinitarian Nicene Creed) கிறிஸ்துவைக் குறித்த கோட்பாட்டை 'தேவனின் தேவனாகவும், ஒளியின் ஒளியாககவும்... பிதாவுடனான ஒரே சாரமாகவும்' உறுதி செய்தது. இந்த வார்த்தைகள் எடுக்கப்பட்டது வேதாகமத்திலிருந்து அல்ல, மாறாக புறச்சமய புத்தகங்களிலிருந்து. ஏனெனில் கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவத்தை புறச்சமய மக்கள் சுவைக்கினியதாய் ஆக்க விரும்பினான்.
  • பேரரசனின் வனவாச அச்சுறுத்தலுக்கு பயந்து ஐந்து பேர் தவிர எல்லா ஆயர்களும் பிரமாணத்தில் கையெழுத்திட்டனர் (ஆதாரம்: க்ரீட், நைசீன், மெக்ளிண்டாக் & ஸ்ட்ராங் சைக்ளோபீடியா CREED, NICENE, McClintock & Strong Cyclopedia). ஏரியஸ் மற்றும் அவரது சீடர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டனர், அவருடைய எழுத்துக்கள் தடைசெய்யப்பட்டு எரிக்கப்பட்டன.

5) நைசியா-கான்ஸ்டண்டினோபில் பிரமாணம் - முழுநீள திரித்துவவாதத்திற்கு ஓர் பாலம்

  • இதன்பின் கான்ஸ்டன்டைன் பேரரசனின் கட்டுப்பாட்டின் கீழ் பெரும்பாலான ஆயர்கள் அடங்கினர். திருச்சபை அரசாங்கத்துடன் இணைந்தது. கிளர்ச்சி நிறைந்த ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, எருசலேமின் ஆலோசனை சபை (Synod) ஏரியஸை சகோதரத்துவத்திற்குள் திரும்ப நிறுவியது, ஆனால் அவர் மர்மமான சூழ்நிலையில் இறந்தார். கான்ஸ்டன்டைனுக்குப் பிறகு இரண்டு பேரரசர்கள் ஏரியஸின் ஆதி விசுவாசக்கொள்கைகளுக்கு அனுதாபிகளாக இருந்தனர், ஆனால் முதலாம் தியோடோசியஸ் (Theodosius I) சிம்மாசனம் ஏறினபோது, ஏரியஸ் குழுக்களை அடக்குமுறையால் அழித்துப்போட்டான்.
  • கி.பி. 381-ஆம் ஆண்டில், இரண்டாம் பொதுத்திருச்சபை கவுன்சிலை (Second Ecumenical Council) அவன் கூட்டினான். அது ஏரியஸை மறுபடியும் கண்டித்து, நைசியா பிரமாணத்தை மேலும் விரிவுபடுத்தியது - பரிசுத்த ஆவியை 'ஜீவன் கொடுக்கும் கர்த்தர்' என்று உயர்த்தியது. இந்த நைசியா-கான்ஸ்டண்டினோபில் பிரமாணம் (கி.பி. 381 - Nicaeno-Constantinopolitan Creed) கிறிஸ்தவத்தை அரை திரித்துவதிலிருந்து முழுநீள திரித்துவவாதத்திற்கு இட்டு செல்லும் ஒரு பாலமாக அமைந்தது.

6) முழு திரித்துவத்தின் வருகை - அதனாசியின் பிரமாணம் (Athanasian Creed)

  • 5-ஆம் நூற்றாண்டில், அதனாசியின் பிரமாணம் புனையப்பட்டது. திரித்துவ கோட்பாட்டை நிறைவு செய்யும் பொருட்டு பரிசுத்த ஆவியும் தேவன் என்று அறிவிக்கப்பட்டது.
  • இந்தப் பிரமாணத்தின் ஆசிரியர்களுக்கு ஒரு சிக்கல் இருந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக விசுவாசத்தந்தைகள் காத்துவந்த - 'நம்முடைய தேவனாகிய கர்த்தர், கர்த்தர் ஒருவரே' - என்ற தனித்துவமான நம்பிக்கையை அவர்கள் திருப்திப்படுத்த வேண்டும். எப்படி அவர்கள் தங்கள் மூன்று கடவுள்களை ஆதியின் ஒரே தேவனாக மாற்ற முடியும்?
    அவர்கள் இங்கனம் இட்டுக்கட்டினார்கள் - 'மூன்று அறியக்கூடாத வஸ்துக்களில்லை, மூன்று சிருஷ்டிக்கப்படாத வஸ்துக்களில்லை: சிருஸ்டிக்கப்படாத வஸ்து ஒன்றே, அறியக்கூடாத (incomprehensible) வஸ்து ஒன்றே'. இவ்வாறு ஒரே தேவன் மூன்று நபர்களாய் உள்ளார் எனக் கோரினர்.
    அதை அவர்களே 'அறியக்கூடாத' விசயம் என்று ஒப்புக்கொண்டார்கள்.

7) வரலாற்று உண்மைகளின் ஒரு சுருக்கம்
இரண்டாயிரம் ஆண்டுகளாக எவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்ள, சில சரித்திர உண்மைகளை நாம் பார்க்கலாம்.

  • 'திரித்துவம்' என்ற வார்த்தை வேதாகமத்தில் காணப்படவில்லை. வேத வசனங்களில் 'குமாரனாகிய தேவன்' என்றோ 'பரிசுத்த ஆவியானவராகிய தேவன்' என்றோ எங்கும் இல்லை.
  • ஆதிக்கிறிஸ்தவ விசுவாசத்தந்தைகள் (இக்னேசியஸ், க்ளெமென்ட், மத்தேஷேஸ், பர்னபாஸ், பாலிகார்ப், ஜஸ்டின் மார்டிர், பபையாஸ்) எவரும் அத்தகைய ஒரு கோட்பாட்டை தாங்கள் எழுதிய 1200-பக்கங்களுக்கும் மேலான எழுத்துக்களில் எங்குமே குறிப்பிடவில்லை.
  • மதிப்பிற்குரிய ஆதிகால கிறிஸ்தவ எழுத்தாளர்கள் (அலெக்ஸாண்டிரியாவின் க்ளெமென்ட், அர்னோபியஸ், ஐரெனீயஸ், ஆரிஜென், டெர்டுலியியன், நோவாஷியன், லாஃடான்டியஸ்) அனைவரும் பிதாவே சர்வ வல்ல தேவனாகிய கடவுள் என்றும், இயேசு பிதாவுக்குக் கீழ்ப்பட்டவர் என்றும் ஆணித்தரமாக வலியுறுத்திக்காட்டுகின்றனர்.
  • 'திரித்துவம்' என்ற வார்த்தை கிறிஸ்தவ இலக்கியத்தில் முதன்முதலில் புகுந்தபோது அது முற்றிலும் வேறுபட்ட அர்த்தம் கொண்டதாக இருந்தது. அது தேவன், அவருடைய வார்த்தை, மற்றும் அவர் ஞானம் பற்றின ஒரு கருத்தாக இருந்தது.
  • கிறிஸ்தவ விசுவாசத்தின் ஆரம்பகால முறைசார் கூற்றானது, ஒரு திரித்துவத்தையோ அல்லது அதன் கருத்துக்களையோ முற்றிலும் குறிப்பிடவில்லை. அது 'அப்போஸ்தலர்கள் விசுவாசப்பிரமாணம்' (Apostles' Creed) எனப்படுகிறது, 2-ஆம் மற்றும் 3-ஆம் நூற்றாண்டுகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டது:
    'வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறேன். அவருடைய ஒரேபேறான குமாரனான நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன். அவர் பரிசுத்த ஆவியினால் கன்னிமரியாளிடத்தில் உற்பவித்து பிறந்தார்.'

8) திரித்துவ மொழிமுறை புறச்சமய ஆதாரங்களில் இருந்து களவாடப்பட்டது
திரித்துவ பிரமாணங்களில் விசித்திரமான மாய வாக்கியங்களை நாம் பார்க்கலாம் - 'பிதாவுடனான ஒரே சாரமாக, தேவனின் தேவன், ஒளியின் ஒளி' என்ற இந்த சொற்றொடர்கள் வேதவாக்கியங்களுக்கு மிக அந்நியமானவை. இவை எங்கிருந்து வருகின்றன? இவற்றின் மூலம்தான் என்ன?
இந்த கேள்விகளின் பதில் கிடைக்கும்போது, அது நாம் திடுக்கிட்டு உறையும் வண்ணம் அதிர்ச்சியாக இருக்கிறது.
ஜான் நியூட்டன் ('மும்மூர்த்திகள் மற்றும் திரித்துவங்களின் தோற்றம்' Origin of Triads and Trinities) கூறுகிறார்,
     'மிகவும் பழமையான குடிகள் மத்தியில் ஒரு தனித்துவமான மதம் மற்றும் வழிபாடு பற்றி நமக்கு முதல் பார்வை கிடைக்கும்போது, அவர்கள் தங்கள் தெய்வங்களை மும்மூர்த்திகளாக தொகுப்பதை பார்க்கிறோம்'.
அவர் மேலும் இந்திய திரித்துவத்தை விளக்குகிறார்,
     'பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவா என்ற மூன்று வெளிப்பாடுகள் கொண்ட ஒரே உச்ச ஜீவியைப் பற்றி காளிதாசன் (கி.மு. 55) இங்ஙனம் பாடினார்: 'இந்த மூன்று நபர்களில் ஓர் இறைவன் காட்சி கொடுக்கிறான், ஒவ்வொருவரும் முதலாவதாகவும், ஒவ்வொருவரும் கடைசியாகவும் இருக்க, மாறாக தனியாக இருக்க அல்ல. பாக்கியப்பட்ட மூவரில் பிரம்மா, விஷ்ணு, சிவா, ஒவ்வொருவரும் முதல், இரண்டு, மூன்றாக இருப்பராக..'’
ஆதிகால எகிப்து பற்றி, நியூட்டன், பேராசிரியர் சயீஸ் Professor Sayce ('கிஃப்ஃபோர்ட் லெக்சர்ஸ் & ஹிபெர்ட் விரிவுரை' Gifford Lectures & Hibbert Lectures) எழுதியதை மேற்கோள் காட்டுகிறார்:
     'பண்டைய எகிப்திய சமய மரபிற்கு கிறிஸ்தவ இறையியல் கோட்பாடு கடன்பட்டுள்ள விசயம், திரித்துவத்தின் தத்துவத்தைக் காட்டிலும் வேறெங்கும் தெள்ளத்தெளிவாக இல்லை. கிறிஸ்தவ இறையியலாளர்கள் திரித்துவத்தில் பயன்படுத்திய அதே சொற்கள் எகிப்தின் கல்வெட்டு மற்றும் நாணற்புற்களில் (papyri) நம்மை சந்திக்கின்றன.
நியூட்டன் தொடர்கிறார்:
     'நைசியா மற்றும் அதனாசி பிரமாணங்களில் காணப்படும் 'ஒளியின் ஒளி, தேவனின் தேவன், உண்டாக்கப்பட்டவருமல்ல, ஜெனிப்பிக்கப்பட்டவரே, பிதாவுடனான ஒரு சாரமானவர்' போன்ற விசித்திரமான சொற்றொடர்கள் பல தலைமுறையினரை குழப்பத்தில் ஆழ்த்தியதுண்டு. அன்றியும் இப்போது அவற்றின் அர்த்தங்களை நாம் காண்கிறோம். எப்படியெனில், [பண்டைய எகிப்தில் வணங்கப்பட்ட] சூரிய திரியேக தெய்வத்தின் (Solar Trinity) மொழிமுறையில் மொழிபெயர்க்கப்பட்டால், இவை அனைத்தும் புரிந்து கொள்ளத்தக்கவை ஆகின்றன. ஆனால், அந்த அர்த்தத்தின் துப்புதுலக்கம் இல்லாமல், அவை சுத்த அபத்தமான முரண்பாடுகளாகின்றன... பழைய புறச்சமய உருமாதிரிகளைக் கொண்டு இந்த புது கிறிஸ்தவ பிரமாணங்கள் புனையப்பட்டபோது பண்டைய சூரிய திரித்துவத்தின் எளிமையும், அங்க இலட்சணமும் முற்றிலும் தொலைந்து போயின... [புறச்சமய] திரித்துவங்கள் பரந்துவிரிந்த பழமையும், உலகளாவிய பின்பற்றுதலும் கொண்டு கௌரவம் மிகுந்து புறக்கணிக்க முடியாதவாறு இருந்தன. அதனால் கிறிஸ்தவத்திற்கு மதம்மாறிக்கொண்டு இருந்த புறச்சமயத்தார்கள் திரித்துவ சமரசத்தை ஆவலுடன் ஏற்றுக்கொண்டார்கள். திருச்சபையும் அதனை முழுக்காட்டுதல் செய்தது. இப்போது நாம் அதன் தோற்றத்தின் முழுநீள வரலாற்றை அறிகிறோம்.'
ஆம், வார்த்தைக்கு வார்த்தை, சொற்றொடருக்கு சொற்றொடர், நைசியா மற்றும் அதனாசி பிரமாணங்களின் பகுதிகள் புறச்சமய மத நூல்களிலிருந்து களவாடப்பட்டவை!

மேலும் படிக்க: இது அவ்வளவு முக்கியமா?