நரகம்

  • அசல் "நரகங்கள்"

    "ஷியோல்", "ஹேடீஸ்", "கெஹன்னா", "டார்டரூ" என்ற நான்கு மூல வார்த்தைகளும் தமிழ் பைபிளில் "நரகம்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. "ஷியோல்" என்ற சொல் பழைய ஏற்பாட்டு எபிரேய பதமாகும். மற்ற மூன்றும் புதிய ஏற்பாட்டு கிரேக்க பதங்களாகும். தமிழ் பைபிள் மொழிபெயர்ப்புகள் கூறுவது போல் இந்த மூல வார்த்தைகள் அனைத்திற்கும் ஒரே அர்த்தம்தானா? அல்லது அச்சொற்கள் ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு அர்த்தங்கள் உண்டா? எபிரேய, கிரேக்க அகராதிகளை எடுத்துப்பார்க்கும்போதும், இந்த வார்த்தைகளைக் குறித்த திருமறையின் சுய விவரிப்புகளையும் கவனித்துப்பார்க்கும்போதும், அச்சொற்களின் அர்த்தங்களைக் குறித்த ஆழமான நுண்ணறிவை நாம் கண்டறிகிறோம். தமிழ் வேதாகமங்களில் மேலோட்டமாக படிக்கும்போது ஒன்றுக்கொன்று முரணாக தோன்றுகிற வசனங்களை பற்றிய தெளிவையும் கண்டடைகிறோம்.

  • அழுகையும் பற்கடிப்பும்

    அழுகையும் பற்கடிப்பும் இருக்கும் இடம் பற்றி இயேசு பேசினாரே, அது என்ன? மொத்தம் ஏழு வசனங்களிலே இந்த "அழுகையும், பற்கடிப்பும்" வாசகத்தை காண்கிறோம் - மத்தேயு 8:12; 13:42,50; 22:13; 24:51; 25:30; லூக்கா 13:28. இந்த ஏழு வசனங்களிலுமே இயேசு இந்த சொற்றொடரை உவமைகளிலும், அடையாள கூற்றுகளிலும் மட்டுமே பயன்படுத்துகிறார்; எனவே இது ஒரு அடையாளமே என்பது தெளிவாகிறது. சந்தர்ப்ப சூழலை பொறுத்து அதன் அர்த்தம் மாறுபடுகிறது. எனினும் எல்லா இடங்களிலும் அதன் பொதுவான அர்த்தமானது என்னவெனில் தேவனின் பார்வையில் தவறு செய்த ஒரு மக்கள் கூட்டத்திற்கு வரையறுக்கப்பட்ட காலம்வரை நீடிக்கும் ஒரு குறிப்பிட்ட தண்டனை/சோதனைக்காலம் என்பதே ஆகும்.

  • ஆதாம் உட்பட கெட்டவரின் கதி

    மரித்தவர்கள் தற்போது எங்கேதான் உள்ளனர்? அவர்கள் மறுபடியும் உயிர்பெற வாய்ப்பு உண்டா? முதல் மனிதனான ஆதாம் ஏதேன் தோட்டத்தில் கீழ்ப்படியாமல் வீழ்ச்சியடைந்தபோது அவன் வம்சாவழி வந்த நமது ஆத்துமாக்கள் அனைத்தும் "ஷியோல்/ஹேடீஸ்" என்றொரு பாதாளத்திற்கு கண்டனம் செய்யப்பட்டன. அதுதான் கல்லறை. ஆனாலும் நம் எல்லோருக்கும் எதிர்கால நம்பிக்கை உண்டு! (ஷியோல் என்னும்) கல்லறையின் பிடியிலிருந்து நம்மை மீட்கும் பொருள் (ransom) கொடுத்து மீட்டு விடுவிப்பேன் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்தார் (ஓசியா 13:14). அவர் இயேசுவை ஆதாமிற்குப் பதிலாக மரிப்பதற்கு அனுப்பிவைத்தார் (யோவான் 3:16). ஆதாமிற்குரிய மீட்பின் கிரயத்தை (விலையை) இயேசு கொடுத்து ஆதாமின் வம்சம் அனைவரையும் (எல்லா மனிதரையும்) உயிர்த்தெழ வைப்பதற்கான வழியை ஏற்படுத்தினார் (ரோமர் 5:12,18). இயேசுவே அனைவருக்குமாகக் கொடுக்கப்பட்ட மீட்கும் பொருள் (1தீமோத்தேயு 2:6). "ஆதாமிற்குள் எல்லாரும் மரிக்கிறது போல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்" (1கொரி 15:22).

  • எரிநரக கோட்பாடு

    பிரசங்க பீடத்திலிருந்து போதகர்கள், "கிறிஸ்துவை உங்கள் மீட்பராய் ஏற்றுக்கொள்ளுங்கள்! இல்லையெனில், உங்கள் பாவங்களுக்காக கண்டனம் செய்யப்படுவீர்கள். இறந்ததும் பற்றியெரிகிற அக்கினியில் நித்தியத்திற்கும் சித்திரவதை செய்யப்பட உயிருடன் நரகத்திற்கு கொண்டு செல்லப்படுவீர்கள்," என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள். நித்திய ஆக்கினையே அவர்கள் விடுக்கும் பயங்கரமான எச்சரிப்பாகும். இந்த பாதாள உலகினை, நெருப்பு தீண்ட இயலாத சாத்தான் ஆட்சி செய்வதாக பலர் கூறுகிறார்கள். அங்கே தள்ளப்பட்ட மக்களை அவனது பிசாசுகள் சித்திரவதை செய்வதாகவும் சொல்கிறார்கள். எதன் அடிப்படையில் இவ்வாறு போதிக்கப்படுகிறது? பாவத்திற்கென ஆத்துமாவிற்குரிய தண்டனையாக பைபிள் கூறுவது யாது? அது நித்திய வேதனையை போதிக்கிறதா?

  • கெஹன்னா- நித்திய அக்கினிக்கடல்

    "கெஹன்னா"என்ற கிரேக்க வார்த்தை "நரகம்" என பன்னிரண்டு தடவை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கெஹன்னா நரகத்தை குறிக்கிறது எனில், உண்மையில் நாம் டிக்கெட் எடுத்து விமானம் மூலம் நரகத்திற்கு செல்ல முடியும்! ஆம், இஸ்ரவேல் நாட்டிலே மெய்யாகவே அமைந்துள்ள ஒரு நிஜ இடம் "கெஹன்னா". அது ஒரு பெயர்ச்சொல். ஒரு நிஜ இடத்தின் பெயர்! ஆகவே தான் ஒய்.எல்.டீ. (YLT) போன்ற ஆங்கில மொழிபெயர்ப்புகள் "நரகம்" என்று சொல்லாமல் எப்படி ஒரு இடப்பெயரை பயன்படுத்துவோமோ, அங்ஙனமே அதை "கெஹன்னா" (Gehenna) என்றே குறிப்பிடுகின்றன. 'கெஹன்னாவில் உள்ள அக்கினி' என்று இயேசு சொல்வது எப்படியென்றால், 'சைதாப்பேட்டையில் எரியும் தீ' என்று ஒரு சென்னை நகரவாசி சொல்வதை போன்றதே! "கெஹன்னா" என்ற பெயர் கொண்ட ஹின்னோம் பள்ளத்தாக்கு எருசலேம் நகரத்திற்கு சற்று வெளியே அமைந்துள்ளது. இயேசுவின் காலத்தில் அது அந்த நகரத்தின் குப்பையெரிக்கும் பேட்டையாக இருந்தது. குப்பையாக கொட்டப்படும் பொருட்கள் யாவற்றையும் முழுவதாக உட்கொண்டு அழிப்பதற்கென அங்கே தொடர்ந்து நெருப்பு எரியவைக்கப்பட்டுக்கொண்டே (ஒரு நித்திய அக்கினிக்கடல்!) இருக்கும்.

  • டார்டரூ - வீழ்ந்த தூதர் சிறை

    "டார்டரூ" என்ற கிரேக்க வார்த்தை வேதாகமத்தில் ஒரே ஒருமுறைதான் வருகிறது. அது "நரகம்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. "பாவம் செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்தார்" (2பேதுரு 2:4). –இங்கே "நரகத்திலே தள்ளி" என்று முழு சொற்றொடரும் "டார்டரூ" என்ற ஒரே மூல கிரேக்க வார்த்தையின் மொழியாக்கம் ஆகும். சில தேவதூதர்கள் தமது உயர் கண்ணியத்தில் இருந்து வீழ்ந்து தகுதியற்ற அவமான நிலைக்கு ஆளானதையும், அதனால் தேவன் அவர்களை கீழ்நிலைப்படுத்தினதையும் அது குறிக்கிறது. விழுந்துபோன தூதர்களையும், பாவிகளையும் நித்திய காலமாக பிடித்துவைக்க ஒரு பாதாள நரக உலகம் இருக்கிறது என்று பிரசங்கிக்கும் பொருட்டு சிலர் இந்த வசனத்தை தவறாக பயன்படுத்துவது உண்டு. ஆனால், வசனம் நமக்கு என்ன காண்பிக்கிறது?

  • நரக புராணம்

  • நரகத்தின் கட்டுக்கதை!

    சிலர், "நித்திய நரக வேதனை என்பது பைபிளில் இல்லாமல் இருக்கலாம்; எனினும் உலக மக்களை தேவனுக்கு கீழ்ப்படிய வைப்பதற்காக அவர்களை பயமுறுத்தும் அச்சுறுத்தலாக எரிநரகத்தைப் பயன்படுத்துவது பரவாயில்லை, தானே?" என்று கேட்கலாம். அது சரிதானா? இல்லை, அது சரி அல்ல. அப்படிப்பட்டவர்களை குறித்து ஏமாற்றம் அடைந்த தேவன் கூறுகிறார்: "அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது" (ஏசாயா 29:13). மிரட்சியாலும், அச்சுறுத்தல்களாலும் தனக்கு கீழ்ப்படிகிற இதயங்களை அவர் நாடவில்லை. மாறாக, தன்மேலும் தனது நீதியின்மேலும் கொண்ட அன்பாலே உந்தப்பட்டு மனமுவந்து கீழ்ப்படிகிற இதயத்தையே அவர் விரும்புகிறார். மேலும், சித்திரவதை பற்றிய எண்ணமே தேவனுக்கு அருவருப்பானது. தனது நியாயப்பிரமாணத்திலே தேவன் சித்திரவதை முறைகளை அனுமதிக்கவில்லை. நம் எதிரிகளிடமும் நாம் அன்பு செலுத்த வேண்டுமென்று கட்டளையிடுகிற தேவன் அவர்களை நித்தியமாக எரிப்பதற்கு விரும்புவாரா, என்ன?

  • நரகம் - ஒரு வரலாறு

    அக்கினிமயமான பாதாளம் குறித்த புறஜாதி நம்பிக்கைகள் எகிப்திய நிம்ரோது காலத்திலேயே தோன்றியவை. கிறிஸ்துவுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே, பார்சி சமயத்தை நிறுவின சரத்துஸ்தர் (Zoroaster) பாரசீகர்களுக்கு, மனிதர்களது செயல்களை வரவு (நன்மை), செலவுகளாக (தீமைகள்) பதிவு செய்யும் பூமியடியிலே இருண்ட பகுதிகளில் வாழும் ஓர் "பொய்களின் தேவன்" (Lord of Lies) பற்றி போதித்துள்ளார். மரணத்திற்குப்பின் ஆத்துமாக்கள் நியாயத்தீர்ப்புக்கு செல்லும் எனவும், தீயதாக நியாயந்தீர்க்கப்பட்டால், வேதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் போதனை செய்யப்பட்டது. புறஜாதியாரை எளிதாக கிறிஸ்தவத்திற்கு மதமாற்றம் செய்வதற்காக திருச்சபை இந்தக் கோட்பாடுகளை தத்தெடுத்துக்கொண்டது. அடையாளப்பூர்வ வசனங்களுடன் பார்சிய மத அர்த்தங்கள் சம்பந்தப்படுத்தப்பட ஆரம்பித்தன. இதுபோன்ற திரிப்புகள் (விசுவாச துரோகம்) நிகழும் என அப்போஸ்தலர் பவுல் தீர்க்கதரிசனமாக சொல்லியிருக்கிறார் (அப்போஸ்தலர் 20:29-30, 1தீமோத்தேயு 4:1).

  • மகா விசுவாச துரோகம்

    அப்போஸ்தலர்களின் மரணத்திற்குப்பின் கிறிஸ்தவத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற வேதாகமத்தின் கணிப்பு சுவாரஸ்யமாக இருந்தது. விசுவாசிகளுக்குள்ளிருந்தே கொடிதான ஓநாய்கள் எழும்பி, சீஷர்களை திசைதிருப்பும்படி மாறுபாடானவைகளைப் போதிக்கும் ஒரு மகத்தான விசுவாச துரோகம் நேரும் என்று அப்போஸ்தலர் பவுல் முன்னறிவித்தார். இந்த தீர்க்கதரிசனம் எங்ஙனம் நிறைவேறியது? இந்த விசுவாச துரோகம் கொண்டுவந்த தவறான கோட்பாடுகள் என்ன? அவை கிறிஸ்தவத்தை எப்படி பாதித்தன?

  • யுகங்களுக்கோர் உவமை - யார் அந்த ஐசுவரியவான்?

    சிலர், ஐசுவரியவான் - லாசரு உவமையை நிஜமான சம்பவம் என்று எடுத்துக் கொண்டு, நரக வேதனையை பிரசங்கிக்கிறார்கள். ஆனால் நிஜ நிகழ்வாக அர்த்தப்படுத்திக்கொண்டால் இந்த உவமையானது சில அபத்தங்களை உள்ளடக்கியதாகத் தோன்றுகிறது. -- லாசரு ஒரு விசுவாசி என்றோ, நல்லவன் என்றோ உவமையில் கூறப்படவில்லை. மாறாக, அவன் ஆசீர்வதிக்கப்படுவதன் காரணம் வெறுமனே நோயாளியாக, ஏழையாக இருந்ததாலேயே என்ற அர்த்தமாகிறது. அப்படியெனில், நோயாளிகளும், தரித்திரர்களும் மட்டுந்தான் மீட்கப்படுவார்களா? உவமையில் ஐசுவரியவான் செல்லும் "பாதாளம்" ஓர் நிஜ இடம் என்று எடுத்துக்கொண்டால், ஏழை லாசரு செல்லும் "ஆபிரகாமின் மடி"யும் ஒரு நிஜ இடம் என்றுதான் நாம் கருதவேண்டும். அப்படியெனில், கோடிக்கணக்கான ஏழைகள் வாசம் செய்யும் இடமாக ஆபிரகாமின் மடி உள்ளதா? ஆபிரகாம் என்ன ஓர் இராட்சசனா? யூத பரிசேயர்களுக்கு ஓர் உருவகக்கதை பாடமாகவே இயேசு இந்த உவமையை சொன்னார். அவர்களுக்கு அவர் உண்மையில் சொல்லவந்த செய்திதான் என்ன?

  • ஷியோல்/ஹேடீஸ் - மொழிபெயர்ப்பாளர்கள் மோசடி

    தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பாளர்கள் மூல வேதாகமத்தில் 65 இடங்களில் காணப்படும் "ஷியோல்" என்னும் ஒரே எபிரேய வார்த்தையை தமிழ் வேதாகமத்தில் 59 தடவை பாதாளம் என்றும், 2 தடவை படுகுழி/ஆழம் என்றும், 4 தடவை நரகம் என்றும் மொழிபெயர்த்துள்ளனர். நல்லவர்கள் இறந்தபோது இந்த "ஷியோல்" இளைப்பாறும் இடத்தை "பாதாளம்/கல்லறை/குழி" என்று மொழிபெயர்த்தவர்கள், கெட்டவர்கள் இறந்தபோது அதே மூல வார்த்தையை "நரகம்" என்று மொழியாக்கம் செய்துள்ளனர். யோபு "ஷியோலில்" தன்னை ஒளித்து வைக்கவேண்டுமென தேவனிடம் வேண்டுகிறான் (யோபு 14:12-13). எபிரேய மொழி வல்லுநர் எவரைக் கேட்டாலும் "ஷியோல்" என்றால் "சவக்குழி" என உறுதி செய்வார்கள். வேதாகமம் உண்மையில் "ஷியோல்" எப்படிப்பட்ட இடம் என்பதை விவரிக்கிறது!

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.