ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும்

 கருப்பொருள் வசனம் – "அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே" எபிரெயர் 9:27

சிக்கல்

1) கருப்பொருள் வசனமான எபிரெயர் 9:27 குறித்து சொல்லப்படும் பிரபலமான விளக்கம் என்ன?
பெரும்பாலான மக்கள் இந்த வசனத்தை படிக்கும்போது, ஒவ்வொரு மனிதனின் தற்போதைய வாழ்க்கையும் நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் ஒருவிதமான சோதனை என்றும், அதன் முடிவில் நாம் இறந்து, நம் வாழ்வின் செயல்களுக்கேற்ப வெகுமதியா, தண்டனையா என்ற தீர்ப்பு பெற கடவுளை சந்திப்போம் என்றும் அவ்வசனத்தை அர்த்தப்படுத்துகிறார்கள்.

2) அந்த விளக்கத்தில் ஏதேனும் சிக்கல் உள்ளதா?
இந்த விளக்கத்தை வேதாகம கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, சில அபத்தங்களை நாம் கவனிக்கிறோம். மரணமே நாம் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு ஆக்கினைத்தீர்ப்பாக / தண்டனையாக பைபிள் அறிவிக்கிறது.

ஆகவே, மரணமானது வாழ்விற்கு நேர்மாறாக வகைப்படுத்தப்பட்டு, நம் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட தவிர்க்க முடியாத தண்டனை / ஆக்கினைத்தீர்ப்பாக கருதப்படுகிறது. ஏனென்றால் நம் தந்தை ஆதாமிடமிருந்து நாம் பாவத்தையும் மரணத்தையும் மரபணு ரீதியாகப் பெறுகிறோம்.

ஆமாம், நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காலகட்டத்தில் உயிர்வாழ்வதை நிறுத்திவிடுகிறோம் - அதாவது  இறந்துவிடுகிறோம். வேத வசனங்கள் நாம் மரித்து, உணர்விலா நித்திரையில் ஆழ்ந்து, இல்லாமல் போகிறோம்  என்று கூறுகின்றன (சங்கீதம் 146:4; 1 இராஜா 2:10; 11:43; யோவான் 11:11; அப்போஸ்தலர் 7:60). அதுதான் நம்  தண்டனை.

நாம் மரித்த உடனேயே இன்னொரு நியாயத்தீர்ப்பை எதிர்கொள்ள நேரிடும் என்ற கோட்பாட்டில் இது அபத்தமாக்குகிறது. நாம் அனைவரும்தான் மரண தண்டனைக்கென ஏற்கனவே நியாயந்தீர்க்கப்பட்டோமே? மரணமடைவதே ஒரு நியாயத்தீர்ப்பினால் என்றிருக்கும்பொழுது, மரணத்திற்குப்பின்னர் இன்னுமொரு நியாயத்தீர்ப்பு எதற்கு?

3) இயேசுவை இந்த வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால் வெகுமதியோ அல்லது நிராகரித்தால் தண்டனையோ உண்டல்லவா?
மரண நித்திரையில் உள்ளவர்கள்  அனைவரும் உயிருடன் உயிர்த்தெழுப்பப்பட்டு, அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டார்களா இல்லையா என்பதை அடிப்படையாகக் கொண்டு உடனடியாக சொர்க்கத்திலோ நரகத்திலோ தள்ளப்படுவார்கள் என்று சிலர் கூறுவதுண்டு. இந்த கோட்பாடு வேறுபல சிக்கல்களை முன்வைக்கிறது:

1. வேதாகமத்தின்படி நியாயத்தீர்ப்பு என்றால் என்ன?

எபிரெயர் 9:27 வசனத்தை சரியாக புரிந்துகொள்வதற்கும், முன்னர் நாம் கண்ட அபத்தங்களைத் தீர்ப்பதற்கும், வேதாகம ஆய்வின் பொன்னான விதிகளில் ஒன்றான "“வசனம் வசனத்தை விளக்கும்” என்ற விதியை பயன்படுத்துவோம். நமது குறுகிய பாரபட்சமான விளக்கங்களுக்குப் பதிலாக, அந்த விதியை நாம் கையாண்டு, வேதத்தின் மற்ற வசனங்களே எபிரேயர் 9:27-ஐ நமக்கு விளக்கம் தர செய்தோமானால், முடிவில் ஆழ்ந்த சத்தியங்களைக் கண்டுபிடிப்போம்.

வேதவசனங்களின்படி நியாயத்தீர்ப்பு என்றால் உண்மையில் என்ன என்பதுதான் நாம் கேட்கவேண்டிய முதல் கேள்வி. வழக்கமாக “நியாயத்தீர்ப்பு நாள்” என்றால் நம் மனதில் தோன்றுவது என்ன? மக்கள் நல்லவர்களா, கெட்டவர்களா என்று தீர்ப்பு வழங்கப்பட்டு, அதற்கேற்ப பரிசோ, தண்டனையோ வழங்கப்படும் ஒரு 24 மணி நேர நாளின் காட்சிகள் தான் நியாயத்தீர்ப்பு நாளாக பலர் மனதில் தோன்றுகிறது. ஆனால் அதனை வேதவசனங்கள் அங்ஙனமா சித்தரிக்கின்றன?

வேதாகமப்பூர்வ “நியாயத்தீர்ப்பு” என்றால் என்ன?

ஆக, நியாயத்தீர்ப்பு என்றால் என்ன என்று இன்று நிலவும் புரிதலுக்கு இது முற்றிலும் மாறுபட்டது. ஏசாயா அறிவிப்பதுபோல, கடவுளின் நியாயத்தீர்ப்பு என்பது ஒருவருக்கு தீர்ப்பு வழங்குவது மட்டுமல்ல, மாறாக அது ஒரு கற்பிக்கும் காலமாகும். பொதுவாக அக்காலம் ஆளும் நியாயாதிபதிகளால் நிர்வகிக்கப்படுகிறது. எது சரி, எது தவறு என்று ஒருவருக்கு கற்பிக்கப்படுவதற்கு முன்னர் தண்டனை எதுவும் தீர்ப்பளிக்கப்படுவதில்லை. வேதாகம நியாயத்தீர்ப்பு என்பது முதலில் ஒரு கற்கும் காலத்தையும், அதன்பின்வரும் தீர்ப்பையும் உள்ளடக்கும்.

2. விசுவாசிகளின் மரிப்பும், நியாயத்தீர்ப்பும்

வேதவசனங்களின்படி, விசுவாசிகள்தான் முதலில் "நியாயந்தீர்க்கப்படுகிறார்கள்".

எபிரெயர் 9:27 விசுவாசிகளுக்கு எவ்வாறு பொருந்தும் என்பதை இப்போது ஆராய்வோம். அவ்வசனம் சொல்வது என்ன?

சரி, விசுவாசிகள் எப்போது மரிக்கிறார்கள்? அவர்கள் நீதி கற்கும் நியாயத்தீர்ப்பு காலம் எப்போது? தொடர்ந்து ஆராய்ந்து கண்டுபிடிப்போம்.

1) விசுவாசிகள் “ஒருதரம் மரிப்பது” எப்போது?
புதிய ஏற்பாட்டின்படி ஞானஸ்நான சபதம் எடுத்தால் மட்டுமே ஒரு நபரை உண்மையான விசுவாசி என்று வகைப்படுத்த முடியும். அந்த ஞானஸ்நானத்தின் போது விசுவாசிகள் அடையாளபூர்வமாக மரிக்கிறார்கள் என்று வேத வசனங்கள் வலியுறுத்துகின்றன.

ஆம், ஞானஸ்நானத்தில் ஒரு மரணமும், உயிர்த்தெழுதலும் அடங்கும். விசுவாசிகள் அடையாளபூர்வமாக "ஒருதரம் மரிப்பது" அப்போதுதான்.

2) விசுவாசிகள் “நியாயத்தீர்ப்படைவது” எப்போது?
எபிரெயர் 9:27 கூறுவது போல், விசுவாசிகள் தங்கள் ஞானஸ்நானத்தில் அடையாளப்பூர்வமாக “ஒருதரம் மரித்தபின்” ஒரு அடையாளப்பூர்வ உயிர்த்தெழுதலுக்குப் பிறகு உடன் தொடங்கும் தங்கள் விசுவாச வாழ்க்கையில் ஒரு “நியாயத்தீர்ப்பை” எதிர்கொள்ள வேண்டும். ஆம், பூமியில் அவர்களது தற்போதைய வாழ்நாளில் தான் விசுவாசிகள் நியாயத்தீர்ப்படைகிறார்கள்.

நாம் முன்பே பார்த்தது போல, விசுவாசிகள் தங்களின் தற்போதைய வாழ்நாளில் “ஒரு கற்கும் காலம்” வழியாக செல்ல வேண்டும் என்பதே இதன் பொருள். ஏனென்றால் அதுதான் வேதாகமப்பூர்வ நியாயத்தீர்ப்பு.

இதுவே உண்மையில் விசுவாசிகளின் நியாயத்தீர்ப்பு. கிறிஸ்துவின் நற்செய்திக்காக அவர்கள் அனுபவிக்கும் பாடுகளின் மூலம் தற்போதைய வாழ்க்கையில் சிட்சை செய்யப்பட்டு, தேவனுக்கு கீழ்ப்படிதலைக் கற்பிக்கப்படுகிறார்கள், அதாவது, "நியாயந்தீர்க்கப்படுகிறார்கள்." அவர்களின் தற்போதைய வாழ்க்கையே அவர்களின் “கற்கும் காலம்”, அதாவது நியாயத்தீர்ப்பு.

3) இந்த நியாயத்தீர்ப்பின் கீழ் தேவனுக்குக் கீழ்ப்படிதலைக் கற்றுக் கொண்டு, இறுதிவரை விடாமுயற்சியுடன் இருந்தால், அந்த விசுவாசிகளுக்கு என்ன கிடைக்கும்?
இயேசு அவர்களுக்கு தனித்துவம் வாய்ந்த ஒன்றை வாக்களிக்கிறார்.

ஆம், தங்கள் தற்போதைய வாழ்வின் "கற்கும் காலத்தில்" ('நியாயத்தீர்ப்பில்') தங்களை தகுதியுள்ளவர்களாக நிரூபிக்கும் விசுவாசிகள், உயிர்த்தெழுதலுக்குப் பிறகு கிறிஸ்துவுடன் அவரது இராஜ்யத்தில் ஆட்சி செய்யும் பாக்கியம் பெறுவார்கள்.

3. அவிசுவாசிகளின் மரிப்பும், நியாயத்தீர்ப்பும்

1) அவிசுவாசிகள் “ஒருதரம் மரிப்பது” எப்போது?
அவிசுவாசிகள் வேதாகமப்படி ஞானஸ்நான சபதம் எடுப்பதில்லை. ஆகவே, விசுவாசிகளைப் போல தங்களது தற்போதைய வாழ்வில் நியாயத்தீர்ப்பை எதிர்கொள்ள அவர்கள் அடையாளப்பூர்வமாக மரிப்பதில்லை. மாறாக, அவிசுவாசிகள் தங்கள் வாழ்க்கையின் முடிவில் மட்டுமே "ஒருதரம் மரிக்கிறார்கள்". இதன்மூலம் நாம் புரிந்துகொள்வது என்னவெனில், விசுவாசிகளைப் போலல்லாமல், அவிசுவாசிகள் தங்கள் தற்போதைய வாழ்வில் நியாயத்தீர்ப்பை (“கற்கும் காலத்தை”) எதிர்கொள்வதில்லை என்பதே ஆகும்.

2) அவிசுவாசிகள் “நியாயத்தீர்ப்படைவது” எப்போது, எப்படி?
எபிரெயர் 9:27 கூறுவது போல், அவிசுவாசிகள் தங்கள் வாழ்வின் முடிவில் “ஒருதரம் மரித்தபின்”, ஒரு “நியாயத்தீர்ப்பை” எதிர்கொள்ள வேண்டும். இயேசு பூமி திரும்பும்போது நடக்கவிருக்கும் அவர்களின் உயிர்த்தெழுதலுக்குப் பிறகு இந்த நியாயத்தீர்ப்பு தொடங்கும் என்பது தெளிவாக தெரிகிறது.

இதன்மூலம் நாம் புரிந்துகொள்வது என்னவெனில், உயிர்த்தெழுப்பப்பட்ட அவிசுவாசிகள் உயிர்த்தெழுந்தவுடன் ஒரு “கற்கும் காலம்” வழியாக செல்ல வேண்டும், ஏனென்றால், நாம் முன்னர் பார்த்த வண்ணம் அதுவே வேதாகாமப்பூர்வ நியாயத்தீர்ப்பு.

3) அவர்களது நியாயத்தீர்ப்பின் "கற்கும் காலத்தில்" உயிர்த்தெழுப்பப்பட்ட அவிசுவாசிகளுக்கு நீதியை யார் கற்பிப்பார்கள்?
இயேசுவும் மற்றும் தங்களை தகுதியானவர்களென நிரூபித்த அவரது உயிர்த்தெழுந்த விசுவாசிகளும் உயிர்த்தெழுப்பப்பட்ட அவிசுவாசிகளை ஆயிர வருட இராஜ்யத்தில் ஆண்டு / நியாயத்தீர்ப்பளித்து அவர்களுக்கு நீதியைக் கற்பிப்பார்கள்.

ஆக, உயிர்த்தெழுதலுக்குப் பிறகு பூமியில் தொடங்கவிருக்கும் ஆயிர ஆண்டு ஆட்சிகாலமே, அவிசுவாசிகள் எதிர்கொள்ளும் நியாயத்தீர்ப்பு (“கற்கும் காலம்”) ஆகும். உண்மையில், அதுவே அவர்களின் நியாயத்தீர்ப்பு நாள். பேதுரு சுட்டிக்காட்டியபடி:

ஆம், நியாயத்தீர்ப்பு நாள் என்பது ஒரு 24 மணிநேர நாளாக இருக்காது, மாறாக ஆயிரம் ஆண்டுகள் நீடிக்கும்.

குறிப்பு: வெளிப்படுத்துதல் 20:5-ல் ஒரு செருகப்பட்ட வாக்கியம் உள்ளது. அது "மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை" என்கிறது. இந்த வாக்கியம் பிற்கால நூற்றாண்டுகளில் பைபிளில் செருகப்பட்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.  சில பைபிள் பதிப்புகள் அதை அடைப்புக்குறிக்குள் குறிக்கின்றன (உதாரணம்: ஆங்கில என்.ஐ.வி NIV பைபிள்). இந்த பொருந்தாத வாக்கியம் பைபிளின் ஆதி கைப்பிரதிகளில் காணப்படவில்லை. ஆம், அது பைபிளில் இல்லை.

4) ஆயிரம் ஆண்டு காலத்தில் சாத்தானுக்கு என்ன நடக்கும்?
சாத்தான் உலகை ஆதிக்கம் செலுத்தி மனிதகுலத்தை ஏமாற்றி அவர்கள் நீதி கற்றுக்கொள்வதைத் தடுக்கும் இன்றைய காலங்களைப் போலல்லாமல், ஆயிர ஆண்டு நியாயத்தீர்ப்பின் காலத்தின்போது அவன் சிறையில் அடைக்கப்பட்டு செயலற்றவனாக்கப்படுவான். அதனால் உயிர்த்தெழுந்த மக்கள் தடையின்றி ஒரு “கற்கும் காலம்” பெற முடியும்.

5) இந்த நியாயத்தீர்ப்பின்கீழ் ஆயிரம் ஆண்டுகளின் முடிவில் அவிசுவாசிகள் என்ன எதிர்பார்க்க வேண்டும்?
அந்த ஆயிர ஆண்டுக்காலந்தோறும்  அவர்கள் காண்பிக்கும் முன்னேற்றத்தின் அடிப்படையிலும், இறுதியில் வைக்கப்படும் ஒரு சோதனையின்படியும்,  வாழ்வா, மரணமா என்ற தீர்ப்பு வழங்கப்படும்.

தீர்வு

நியாயத்தீர்ப்பின் வேதாகமப்பூர்வ அர்த்தத்தை நாம் படிக்கும்போது, கடவுளின் நியாயத்தீர்ப்பு பூமியில் எதை சாதிக்கவிருக்கிறது என்ற உண்மையான நற்செய்தியைப் புரிந்துகொள்கிறோம். அது பின்வரும் வேதப்பூர்வ சத்தியங்களுடன் ஒத்துப்போகிறது.

  1. மனிதர்களான நாம் அனைவரும் நம் மூதாதையர் தந்தை ஆதாமின் கீழ்ப்படியாமையையும் அதன் விளைவான மரண தண்டனையையும் வம்சாவழியாக சுதந்தரித்துள்ளோம். அதனால்தான் நாம் அனைவரும் இறக்கிறோம்.
  2. இயேசு ஆதாமின் மீட்கும் கிரயத்தை (“ஜீவனுக்கு ஜீவன்") சிலுவையில் செலுத்தினார். அதன் மூலம் நம் அனைவரையும் மரணத்திலிருந்து மீட்கும் பொருட்டு, மரணத்திற்கும் கல்லறைக்கும் உண்டான சாவியைத் தன் கையகப்படுத்தினார்.
  3. தற்போதைய காலங்களில், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக, தனது பன்னிரண்டு சீடர்களிடமிருந்து தொடங்கி, இயேசு தனக்கென ஒரு விசுவாசிகளின் சிறுமந்தையை (“தெரிந்துகொள்ளப்பட்ட சிலரை”) “தேர்ந்தெடுத்து” வருகிறார்.
    • அவர்களை தங்கள் ஞானஸ்நானத்தில் அடையாளப்பூர்வமாக “ஒருதரம் மரிக்க” வைத்து அவர்களின் தற்போதைய வாழ்க்கையில் இப்போதே நியாயத்தீர்ப்பை (ஒரு "கற்கும் காலத்தை") எதிர்கொள்ளும்படி செய்கிறார்.
    • இதனால் அவர்கள் இவ்வாழ்விலேயே சிட்சை செய்யப்பட்டு / மதிப்பீடு செய்யப்பட்டு / சோதிக்கப்பட்டு / சல்லடை போட்டு புடைக்கப்படுவார்கள்.
    • இறுதிவரை தங்களை தகுதியுள்ளவர்கள் என்று நிரூபிப்பவர்களுக்கு (உயிர்த்தெழுந்த மற்ற மனிதர்களின்மீது ஆட்சி செய்யும் உரிமையுடன் கூடிய) ஒரு சிறப்பு உயிர்த்தெழுதலை இயேசு பரிசளிக்கவிருக்கிறார்.
  4. இயேசு உலகின் மற்ற மனிதர்களை (அவிசுவாசிகளை) தற்போது "நியாயந்தீர்க்கவில்லை".
    • அவர்களுடைய உண்மையான மரணம் ("ஒருதரம் மரிப்பது") மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பிறகுதான் அவர்களை நியாயத்தீர்ப்பை (ஒரு "கற்கும் காலத்தை") எதிர்கொள்ள வைக்கத் திட்டமிட்டுள்ளார்.
    • அதனால்தான் தனது சத்தியங்கள் அவர்களுக்கு தற்போது புரியாத வண்ணம் இருக்க, தானே வேண்டுமென்றே அவர்களிடமிருந்து மறைத்து வைப்பதாகவும் கூறுகிறார் (மத்தேயு 13:10-13).
  5. அவர் பூமி திரும்பும்போது, இரண்டு வகையான உயிர்த்தெழுதல்களில் எல்லா மனிதர்களையும் மரணத்திலிருந்து எழுப்புவார். முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குள்ளவர்கள் - அதாவது, நிரூபிக்கப்பட்ட (ஏற்கனவே "நியாயந்தீர்ப்படைந்த”) விசுவாசிகள் - கிறிஸ்துவுடன் சிம்மாசனங்களில் அமர்ந்து, இரண்டாவது உயிர்த்தெழுதலில் எழும் மக்களுக்கு (அதாவது, அவிசுவாசிகளுக்கு) நீதி கற்பிப்பதற்காக, ஆயிர ஆண்டு நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள்மேல் நியாயத்தீர்ப்பின் ஆட்சிபுரியும் பாக்கியம் பெறுவார்கள்.
  6. ஆக, இரண்டாம் உயிர்த்தெழுதலின் மக்கள், அதாவது அவிசுவாசிகள் தங்கள் உயிர்த்தெழுதலுக்குப் பிறகுதான் நியாயத்தீர்ப்பை (அதாவது, நீதி “கற்கும் காலத்தை”) எதிர்கொள்ள நேரிடும். மேலும், அந்த ஆயிரம் ஆண்டுகளில் சாத்தான் கட்டிவைக்கப்படவிருப்பதால், அந்த வாழ்க்கையில் நீதி கற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு நியாயமான வாய்ப்பு கிடைக்கும்.
  7. நியாயத்தீர்ப்புக் காலத்தின் முடிவில், நீதி கற்ற மக்களை சோதிக்க சாத்தான் ஒரு குறுகிய காலத்திற்கு விடுவிக்கப்படுவான். இயேசுவுக்கு உண்மையுள்ளவராக தங்களை அந்த சோதனையில் நிரூபிப்பவர்கள் பூமியில் நித்தியமாக வாழ்வதற்கான உரிமையை பெற்றுக்கொள்வார்கள். அதே நேரத்தில் சாத்தானின் பின் செல்பவர்களுக்கு, அவனோடு சேர்த்து மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்படும்.

கிறிஸ்துவின் ஆயிர ஆண்டுகால இராஜ்யம் ஒரு மகிமையான நோக்கத்தைக் கொண்டிருக்கும். கிறிஸ்து மற்றும் அவரது உயிர்த்தெழுந்த சீடர்களின் பரலோக ஆட்சியின் கீழ் உயிர்த்தெழுப்பப்பட்ட மனிதகுலத்தின் மறுவாழ்வும் மறுசீரமைப்புமே அதன் உன்னத நோக்கம். இயேசுவானவரே அதனை "எல்லாவற்றையும் புதுப்பிக்கும் காலம்" (“Renewal of All Things”) என்றழைத்தார் (மத்தேயு 19:28). பேதுரு அதனை  "எல்லாவற்றையும் மறுசீரமைக்கும் காலம்" (“Times of Restitution of All Things”) என்று கருதினார் (அப்போஸ்தலர் 3:20-21 ஆங்கில பைபிள்கள் பார்க்கவும்). ஏசாயா வாக்குறுதியளித்தபடி, தேவனின் நியாயத்தீர்ப்புகள் உண்மையில் பூமியில் நீதி, சமாதானம் மற்றும் அன்பைக் கொண்டுவரும்.

ஆமென், நாம் ஜெபிப்போம் - “உம்முடைய இராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலங்களிலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக!"