கிறிஸ்துவின் இரண்டாம் வருகை

 கருப்பொருள் வசனம்: நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார். அரசாங்கம் அவர் தோளின்மேலிருக்கும் (ஏசாயா 9:6)

இயேசு தனது ஊழியத்தின்போது பிரச்சாரம் செய்த முக்கிய செய்தியானது பூமியில் நிறுவப்படவிருக்கும் பரலோகத்தின் இராஜ்யம் (ஆதாவது பரலோகத்திலிருந்து ஆளப்படுகிற இராஜ்யம்) என்று நாம் காண்கிறோம். மேலும், அந்த இராஜ்யம் பற்றின இறையியல் நம்பிக்கைகள் காலப்போக்கில் எங்ஙனம் மாறிவிட்டன என்பதை திருச்சபை வரலாறு நமக்கு காண்பிக்கிறது. இராஜ்யத்தைப் பற்றி தற்போது நிலவும் பிரதான கோட்பாடுகளான - நவீனத்தும், அடிப்படைவாம், ஆன்மீகவாதம் - ஆகிய மூன்றிற்கும் வேதவசன ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கண்டோம். இப்போது இராஜ்யம் பற்றி வேதாகம வசனங்கள் என்னதான் தீர்க்கதரிசனம் சொல்கின்றன என்பதை சற்று ஆழமாய் நாம் ஆராய்ந்து பார்ப்போம்.

1) தானியேலின் தீர்க்கதரிசனங்கள் உலகம் கட்டியாளும் பேரரசுகளையும், அரசாங்கங்களையும் பற்றி என்ன முன்னறிவிக்கின்றன?
தானியேல் தீர்க்கதரிசி உலகில் ஆதிக்கம் செலுத்தவிருக்கும் நான்கு பேரரசுகளைக் குறித்து முன்னறிவிக்கிறார். அவை பாபிலோன், மேதிய-பெர்சிய, கிரேக்க, மற்றும் ரோம பேரரசுகள் ஆகும். இந்த பேரரசுகள் தானியேல் புத்தகம் 7-ஆம் அதிகாரத்தில் நான்கு பெரிய மிருகங்களாகவும், 2-ஆம் அதிகாரத்தில் ஒரு பெரும் சிலையின் நான்கு பகுதிகளாகவும் சித்தரிக்கப்படுகின்றன.

2) ரோமாபுரியின் வீழ்ச்சிக்குப் பின் என்ன நடக்கிறது?
ரோம சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியின் பிறகு எந்தவொரு தனி நாட்டிற்கும் உலகளாவிய ஆதிக்கத்தை தேவன் வழங்க மாட்டார் என்று தீர்க்கதரிசனங்கள் தெரிவிக்கின்றன. பார்பரிய குல மக்கள் ரோம சாம்ராஜ்யத்தை கைப்பற்றினர். பின்பு அந்த குலத்தினர் ஜெர்மனி (அலெமன்னி குலத்தார்), பிரான்ஸ் (ஃபிராங்க் கோத்திரத்தார்), கிரேட் பிரிட்டன் (ஆங்கிலோ-சாக்சன்ஸ்) மற்றும் இத்தாலி (லாம்பர்ட்ஸ்) போன்ற நவீன ஐரோப்பிய நாடுகளாக வளர்ந்தனர்.

3) இந்த நாடுகளின் காலங்களில் என்ன நடக்கவிருக்கிறது?
ரோம சாம்ராஜ்யத்தின் எச்ச சொச்சங்களான இந்த நாடுகளை தானியேல் ‘அந்த இராஜாக்கள்’ என தனது தீர்க்கதரிசனத்தில் குறிப்பிடுகிறார்:
'அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு இராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்.. அப்படியே அது அந்த இராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.' (தானியேல் 2:44)
'இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார். அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார்.
சகல ஜனங்களும் தேசத்தாரும் பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் அரசாங்க உரிமையும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது. அவருடைய அரசுரிமை நீங்காத நித்திய அரசுரிமையும், அவருடைய இராஜ்யம் அழியாதததுமாயிருக்கும்.' (தானியேல் 7:13-14).

4) தேவனிடத்தில் (நீண்ட ஆயுசுள்ளவரிடத்தில்) இராஜ்யத்தையும், அரசாங்க உரிமையையும் பெறவிருக்கும் இந்த மனுஷகுமாரன் யார்?
இயேசு கிறிஸ்துவே இந்த மனுஷ குமாரன்! ஏசாயா தீர்க்கதரிசி சந்தோஷத்துடன் முழங்குகிறார்: 'நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், அரசாங்கம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் சமாதானப்பிரபு என்னப்படும். அவருடைய அரசாங்கத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை, சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.' (ஏசாயா 9:6-7)
இயேசு எப்போதுமே தம்மை பரலோகம் சென்று பின்னர் தனது இராஜ்யம் நிறுவும்பொருட்டு பூமி திரும்பவிருக்கும் நபராக சித்தரிக்கிறார் (அப்போ 1:3,6,9). தன்னுடைய உவமைகள் ஒன்றில் கூட, தானியேலின் தீர்க்கதரிசன காட்சியை இயேசு சித்தரிக்கிறார்:
   பிரபுவாகிய ஒருவன் ஒரு இராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி தூரதேசத்துக்குப் போகப் புறப்பட்டான்... (லூக்கா 19:11-15).
அவர் திரும்பி வரும்போது நிகழவிருக்கும் முதல் சம்பவம் மரித்தோரின் உயிர்த்தெழுதலாகும் (யோவான் 5:28-29, 1தெச 4:16).

மேலும் படிக்க: மரித்தோரின் உயிர்த்தெழுதல்