அடிப்படைவாதம் - பூமி அழியுமோ?

கருப்பொருள் வசனம்: "சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்." (மத்தேயு 5:5)

இயேசு தனது ஊழியத்தின்போது பிரச்சாரம் செய்த முக்கிய செய்தியானது பூமியில் நிறுவப்படவிருக்கும் பரலோகத்தின் இராஜ்யம் (ஆதாவது பரலோகத்திலிருந்து ஆளப்படுகிற இராஜ்யம்) என்று நாம் காண்கிறோம். மேலும், அந்த இராஜ்யம் பற்றின இறையியல் நம்பிக்கைகள் காலப்போக்கில் எங்ஙனம் மாறிவிட்டன என்பதை திருச்சபை வரலாறு நமக்கு காண்பிக்கிறது. இராஜ்யத்தைப் பற்றி தற்போது நிலவும் மூன்று பிரதான கோட்பாடுகளில் ஒன்றான நவீனத்துவ கோட்பாட்டிற்கு வேதவசன ஆதாரங்கள் எதுவும் இல்லை. இரண்டாவது கோட்பாட்டான அடிப்படைவாதத்திற்கு ஏதாவது வேதப்பூர்வ சான்றுகள் உள்ளனவா என்று இப்போது பார்க்கலாம்.

1) பூமியைப் பற்றி வேதாகமம் என்ன கூறுகிறது? அடிப்படைவாதிகள் கூறுவது போல பூமி அழிந்துபோகக்கூடுமா?
இல்லை. மனிதன் நித்திய நித்தியமாய் வாழ்வதற்காக பூமியை தேவன் என்றென்றும் நிலைத்திருக்கும்படி நிரந்தரமாய் படைத்திருக்கிறார் என்று வேதாகமம் உரைக்கிறது.
'வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச்செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர்' (ஏசாயா 45:18)
'பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது.' (பிரசங்கி 1:4)
"சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்." (மத்தேயு 5:5)

2) உலகத்தின் முடிவைப் பற்றி மத்தேயு 24:3 கூறவில்லையா?
"உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?" - இங்கே 'ஏயியோன்' (aion) என்ற கிரேக்க வார்த்தையை 'உலகம்' (world) என்று சில தமிழ் வேதாகமங்கள் மொழிபெயர்க்கின்றன. உண்மையில் 'ஏயியோன்' என்றால் 'யுகம், நேரம், அல்லது காலம்' என்று பொருள். எனவே மத்தேயு 24:3-இன் சரியான மொழிபெயர்ப்பு '‘யுகத்தின் முடிவுக்கு அடையாளம் என்ன?’ என்பதாகும். மதிப்பிற்குரிய ஆங்கில வேதாகம மொழிபெயர்ப்புகள் (NIV/NASB) அதனை அவ்வாறே மொழிபெயர்க்கின்றன. இந்த யுகத்தின் முடிவு அடுத்த யுகத்தை (ஆயிரமாண்டு இராஜ்ய யுகத்தை) கொண்டுவரும்.

3) வேறு எந்த வசனங்களாவது இதை ஆதரிக்கின்றனவா?
நோவாவின் ஜலப்பிரளயத்திற்கு முன்பு இருந்த உலகத்தைக் குறிப்பிட்டு பேதுரு இவ்வாறு எழுதுகிறார்: "அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள்." (2 பேதுரு 3:6)
இங்கே கிரேக்க வார்த்தையான 'காஸ்மோஸ்' (kosmos) உலகம் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அம்மூலவார்த்தைக்கு ஒரு 'ஏற்பாடு' என்று பொருள். ஜலப்பிரளயத்தில் பூமி அழிந்து போகவில்லை என்பதை நாம் அறிவோம். அந்த நேரத்தில் இருந்த உலக ஒழுங்கு / ஏற்பாடு மட்டுமே அழிந்துபோனது. இதே பாணியில் தற்போது உள்ள உலக ஏற்பாடு அக்கினியினால் அழிக்கப்பட உள்ளது என்று பேதுரு கூறுகிறார்.

4) இந்த "அக்கினி" என்ன? அதுகொண்டுவரும் அழிவுக்குப் பின் என்ன நடக்கவிருகிறது?
"ஆகையால் நான் கொள்ளையாட எழும்பும் நாள்மட்டும் எனக்குக் காத்திருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். என் சினமாகிய உக்கிர கோபத்தையெல்லாம் அவர்கள்மேல் சொரியும்படி ஜாதிகளைச் சேர்க்கவும், ராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம்பண்ணினேன். பூமியெல்லாம் என் எரிச்சலின் அக்கினியினாலே அழியும்.
அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்."(செப்பனியா 3:8-9).
இது ஒரு சுவாரஸ்யமான விசயம். ஏனெனில் –

  1. பூமியை சுட்டெரிக்கும் அக்கினி என்பது எரிச்சலின் அடையாள அக்கினியாக காண்பிக்கப்படுகிறது.
  2. இந்த அக்கினி பூமியை அழித்த பிறகு, உலக ஜனங்கள் பூமியில் மீண்டும் திரும்பவும் இருக்கிறார்கள்!

இவர்கள் எல்லோரும் உண்மையில் விசுவாசிகள் இல்லை, ஏனென்றால் அவர்களுக்கும் இன்னும் ‘சுத்தமான பாஷை’ தெரியவில்லை.
ஆம், தற்போதைய உலக ஒழுங்குமுறையை அழித்தபின், தேவன் தம்முடைய இராஜ்யத்தை பூமியிலே நிலைநிறுத்தி, உயிர்த்தெழுப்பப்பட்ட மனுக்குலம் அனைவர்க்கும் சத்தியத்தின் 'சுத்தமான பாஷையை' கற்றுக்கொள்வதற்கும் அவரை முழு இருதயத்தொடு ஒருமனப்பட்டு சேவிப்பதற்கும், வாய்ப்பளிக்கவிருக்கிறார்.

மேலும் படிக்க: ஆன்மீகம்: எல்லாம் மனதில் மட்டும்தானோ?