ஞானஸ்நானம்

 கருப்பொருள் வசனம்: இயேசு அவர்களை நோக்கி, "நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்கே தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஞானஸ்நானத்தை நீங்கள் பெறவும், உங்களால் கூடுமா?" என்றார். (மாற்கு 10:38)

1) வேதாகமத்தின்படி ஞானஸ்நானம் என்பது, கிறிஸ்து கொடுத்த மீட்பின் கிரயம் மற்றும் வரவிருக்கும் அவரது இராஜ்யம் பற்றின நற்செய்தியைப் புரிந்துகொண்டு, வீணான சுயநீதி முயற்சிகளிலிருந்து மனந்திரும்பி, தேவன் அனுப்பின கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் நியாயப்படுதலுக்கு அவரிடம் திரும்பி, அவ்விசுவாசத்தை நிரூபிக்க தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கத் தயாராக இருப்பவர்களுக்கு ஏதுவான காரியமாகும். ஆனால் இன்றைய தேவாலயங்கள் ஞானஸ்நானம் (கிரேக்கம்: முழுக்காட்டுதல்) பற்றி பரவலாக புரிந்துகொள்ளும் அர்த்தம் என்ன?
இரண்டாம் நூற்றாண்டு முதல், தண்ணீர் ஞானஸ்நானம் கடந்தகால பாவங்களை சுத்திகரித்து கடவுளுடன் ஓர் உறவை நிலைநாட்டும் ஒரு சடங்காக பயன்படுத்தப்படு வருகிறது.
நரகத்திலிருந்து தப்புவிக்கும் பொருட்டு, கைக்குழந்தைகளுக்குக்கூட தண்ணீர் தெளிக்கும் ஞானஸ்நானம் கொடுக்கப்படுகிறது!

யோவானின் ஞானஸ்நானம்

2) முதன்முதலில் ஞானஸ்நானம் கொடுக்க ஆரம்பித்த மனிதன் யார்? அவன் கொடுத்த ஸ்நானம்தான் என்ன?

தண்ணீர் சுத்தம் எதுவும் கொடுக்கவில்லை, ஆனால் அது மீட்பிற்காக கிறிஸ்துவை நோக்கி ஒருவர் மனந்திரும்புவதை அடையாளப்படுத்தியது.

கிறிஸ்துவின் ஞானஸ்நானம் - திருச்சபையின் ஞானஸ்நானம்

3) இயேசு தானும் ஞானஸ்நானம் பெறும்படி கேட்டுக்கொண்டார். அவரோ 'பாவமறியாதவர்'. அவர் ஏன் ஞானஸ்நானம் எடுத்தார்?
யோவானும் அதே கேள்வியைக் கேட்டார். இயேசு இவ்வாறு பதிலுரைத்தார்: 'எல்லா நீதியையும் நிறைவேற்றுவது இது ஏற்றதாயிருக்கிறது.' மத்தேயு 3:15. ஆம், தம்முடைய பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற இயேசு தம்முடைய பூமிக்குரிய நலன்களையும், இலட்சியங்களையும், ஆசாபாசங்களையும் துறந்தார்.
இந்த ஞானஸ்நானமானது ஓர் அடையாளமான காரியமாக இருந்தது. ஏனெனில் தனது கடைசி இராப்போஜனத்தின்பொழுது அவர், "நான் முழுகவேண்டிய ஒரு ஞானஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்," என்றார். லூக்கா 12:50. ஆம், அவருடைய ஞானஸ்நானம் மரணத்திற்குண்டான ஞானஸ்நானமாக இருந்தது. 'முடிந்தது!' என்று சொல்லி அவர் சிலுவையில் உயிர்துறந்தபொழுதுதான் அவருடைய ஞானஸ்நானம் நிறைவேறியது.

மரித்து மறுபிறப்பு எடுக்க..

4) கிறிஸ்துவின் ஞானஸ்நானம் மரணத்திற்குண்டான ஞானஸ்நானம் என்றால், அவருடைய திருச்சபையின் ஞானஸ்நானம் எப்படிப்பட்டது? "இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்," (அப்போஸ்தலர் 2:38) என்று பேதுரு ஏன் நம்மை அழைக்கிறார்? இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் (முழுக்காட்டுதல்) பெறுவது எதை அர்த்தப்படுத்துகிறது?

ஆமாம், ஞானஸ்நானத்தில் நம் மரணம் அடங்கும்! 'ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது.' கொலோசெயர் 3:3. இயேசு செய்ததைப் போலவே நம் பூமிக்குரிய மாம்ச வாழ்விற்கு நாமும் மரிக்கிறோம்.

ஆம், கிறிஸ்துவின் ஞானஸ்நானம் என்பது மரித்து, மறுபிறப்பு எடுப்பதாகும். சொல்லப்போனால், அது மிக்க அவசியம்!
           இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக, "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்," என்றார். யோவான் 3:3.

5) நம் பூமிக்குரிய வாழ்க்கையின் எல்லா ஆசாபாசங்களையும் விட்டுக்கொடுக்க நாம் ஏன் தயாராக இருக்க வேண்டும்?
வரவிருக்கும் இராஜ்யத்தின் மகிமையில் யாக்கோபும், யோவானும் தம் பக்கத்து சிம்மாசனங்களில் அமரும்படி கேட்டபோது, இயேசு அவர்களை நோக்கி --
           "நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்கே தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஞானஸ்நானத்தை நீங்கள் பெறவும், உங்களால் கூடுமா?" என்றார்.
அதற்கு அவர்கள், "கூடும்," என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி, "நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்," என்றார். மாற்கு 10:38-39. ஆம், கிறிஸ்துவின் இராஜ்யத்தில் அவருடன் சிம்மாசனத்தில் அமர விரும்பினால், அவரைப் போல நம்முடைய தற்போதைய வாழ்க்கையை அவருடைய நற்செய்திக்காக நாம் அர்ப்பணிக்க வேண்டும். பவுல் நமக்கு சொல்கிறார் –
'அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்.' 2தீமோ 2:12. 'நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.' ரோமர் 8:17.
இயேசு ஆதாமிற்காக கொடுத்த மீட்கும் கிரயத்தினால் அவர் ஆதாமின் சந்ததி அனைவரையும் (மனுக்குலம் முழுவதையும்) உயிரோடு எழுப்பவிருக்கிறார் (ரோமர் 5:12,18; 1தீமோ 2:6; 1யோவான் 2:2; 1கொரி 15:22). அவர் பூமி திரும்பும்பொழுது, மரித்தோர் எல்லோரும் உயிர்த்தெழுவர் - அவருக்கு விசுவாசமாக இருந்த திருச்சபை பரலோக நித்திய ஜீவனைப் பெறும்; அவிசுவாசிகள் பூமியில் ஒரு சோதனைக்கு (கிரேக்க KRISIS க்ரைஸீஸ் வார்த்தை ஆக்கினை என சில வேதாகமங்களில் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, அதன் சரியான அர்த்தம் சோதனை/நியாயத்தீர்ப்பு) எழுவார்கள் (யோவான் 5:28-29). சாத்தான் கட்டப்பட்டு, இயேசு மற்றும் அவரது மகிமைப்படுத்தப்பட்ட திருச்சபையின் ஆட்சியின் கீழ் (வெளி 20:3-4) நீதி கற்றுக்கொள்வதில் மனுக்குலம் ஒரு நியாயமான வாய்ப்பு பெறும் (அப்போஸ்தலர் 3:21, ஏசாயா 26:9, மீகா 4:1-3). அந்த ஆட்சியின் சிம்மாசனத்தைத் தான் யாக்கோபும், யோவானும் விரும்பினார்கள். நாமும் அதையே நாடுகிறோம்.

6) திருச்சபையின் ஞானஸ்நானம் பழைய ஏற்பாட்டு காலங்களில் முன்நிழலாக காட்டப்பட்டதா?
கொரிந்தியருக்கு பவுல் இவ்வாறு விளக்குகிறார்: "நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும் சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள். எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள். எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள். எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே." 1கொரிந்தியர் 10:1-4.
ஆம், (திருச்சபையை சித்தரிக்கும்) இஸ்ரவேல் மக்கள் (உலகத்தை குறிக்கும்) எகிப்து தேசத்தை விட்டு மோசேயைப் பின்பற்றி சென்றனர். அவர்கள் செங்கடலில் பெரும் சோதனைக்கு சந்தித்தபோது, தேவன் அவர்களை மோசேயின் மூலம் காப்பாற்றினார், அவர்கள் எல்லோரும் (கிறிஸ்துவை அடையாளப்படுத்திய) மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

7) 'மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்?' 1கொரி 15:29. இதற்கு என்ன அர்த்தம்?
இடைக்கால காலங்களில், இந்த வசனம் தவறாக அர்த்தம்கொள்ளப்பட்டதால், சில குழுக்கள் இறந்தவர்களை ஞானஸ்நானம் செய்ய ஆரம்பித்தன. ஆனால் மாறாக, இங்கே பவுல் மரித்தோரின் உயிர்த்தெழுதலைப் பற்றி பேசுகிறார். ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் அனைவரும் (இப்போது மரித்தவர்களாக கருதப்படும் - லூக்கா 9:60) அவிசுவாசிகளின் பொருட்டு ஞானஸ்நானம் எடுக்கிறார்கள் என்பதைத்தான் அவர் குறிக்கிறார். ஆம், ஞானஸ்நானம் எடுத்து இராஜ்யத்தில் ஆளுவிருக்கும் திருச்சபையிடமிருந்தே, இராஜ்யத்தில் உயிர்த்தெழவிருக்கும் அந்த அவிசுவாசிகள் நித்திய ஜீவனைக் குறித்த நற்செய்தியை கேட்பார்கள்.

8) அடையாளச் சின்னமான ஞானஸ்நானம் (முழுக்காட்டுதல்) அவசியம்தானா? மற்றும் கைக்குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கலாமா?
சீடர்கள் விசுவாசிகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்ததை வேதாகமம் பதிவுசெய்கிறது –
தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் (சமாரியர்கள்) விசுவாசித்தபோது, ஞானஸ்நானம்பெற்றார்கள். அப்போஸ்தலர் 8:12. பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள், பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானங்கொடுத்தான். அப்போஸ்தலர் 8:35-38. பேதுரு, "இவர்கள் ஞானஸ்நானம் பெறாதாபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா?" என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்போஸ்தலர் 10:44-48. மேலும் கொரிந்தியரின் ஞானஸ்நானம் பற்றியும் (அப்போஸ்தலர் 18:8), தியத்தீரா ஊராளான லீதியாள் (அப்போஸ்தலர் 16:14-15), பிலிப்பிய சிறைச்சாலைக்காரன் (அப்போஸ்தலர் 16:33), மற்றும் ஸ்தேவான் (1கொரி 1:16) ஆகியோரின் ஞானஸ்நானம் பற்றியும் நாம் படிக்கிறோம்.

9) நீங்கள் வேதாகமத்தின் மெய் நற்செய்தியைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்னரே தெளிக்கப்பட்டோ/முழுக்காட்டப்பட்டோ ஞானஸ்நானம் பெற்றிருந்தால், மீண்டும் ஞானஸ்நானம் பெற வேண்டியது அவசியமா?

மேலும் படிக்க: பரிசுத்த ஆவியின் அபிஷேகம்