இது அவ்வளவு முக்கியமா?

 கருப்பொருள் வசனம்
'பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.' (1கொரிந்தியர் 8:6)

வேதாகம வசனங்களிலிருந்து, யாவே (Yahweh, பரமபிதா) தான் சர்வ வல்ல தேவன் (கடவுள்) என்பதையும், இயேசு கிறிஸ்து அவரது ஒரேபேறான குமாரன் என்பதையும், அவர் பிதாவை நேசித்து சேவை செய்யும் கீழ்ப்படிதலுள்ள குமாரன் எனவும் நாம் அறிந்தோம். இயேசுவின் வார்த்தைகளே சரிசமானத்துவம் மற்றும் அநாதித்தன்மை போன்ற திரித்துவ கோட்பாடுகளை நிராகரிப்பதை நாம் கண்டோம். பரிசுத்த ஆவி என்பது தேவனின் வல்லமை என்பதையும், அது ஒரு நபர் அல்ல என்பதையும் நாம் படித்தோம். யோவான் 1:1-ன் நேரடியான முரணற்ற அர்த்தத்தையும் நாம் கண்டோம். திரித்துவ சிந்தனைகள் 'பதினாலுத்துவம்' போன்ற வினோதமான வழக்குகளை விளைகின்றன என்பதையும் கவனித்தோம். இறுதியாக, திரித்துவக் கோட்பாடு கிறிஸ்தவ நம்பிக்கைகளில் எப்போது, எப்படி நுழைந்தது என்பது குறித்த வரலாற்றைப் படித்தோம்.

பிரபல வரலாற்றாசிரியர் எட்வர்ட் கிபன் Edward Gibbon ('கிறிஸ்தவ சரித்திரத்தின் முகவுரை' Preface to History of Christianity) கூறுகிறார்,
'புறமதம் (paganism) கிறிஸ்தவ சமயத்தால் வெல்லப்பட்டது என்பது உண்மையென்றால், கிறிஸ்தவமும் புறமதத்தால் கெடுக்கப்பட்டது என்பதும் அதே அளவு உண்மை. ஆதிக்கிறிஸ்தவரின் தூய தெய்வமானது... ரோமாபுரி திருச்சபையால் புரிந்துகொள்ளமுடியாத திரித்துவக்கொள்கையாக மாற்றப்பட்டது.
     எகிப்தியரால் கண்டுபிடிக்கப்பட்டு, பிளாட்டோவால் மதிப்பிடப்பட்ட அநேக புறமத (pagan) கோட்பாடுகள், நம்பிக்கைக்கு உகந்ததாக எடுத்துக்கொள்ளப்பட்டன.'

ஆகையால், பரமபிதா மட்டுமே சர்வ வல்ல தேவன் (கடவுள்) என்பதை ஏற்றுக்கொள்ள நாம் அக்கறையுடன் இருக்க வேண்டும் (யாத்திராகமம் 20:3). அதையேதான் தேவனால் அபிஷேகம் செய்யப்பட்ட மேசியாவும், பிரதான ஆசாரியருமாயும் இருக்கும் நம்முடைய கர்த்தராகிய (எஜமானாகிய) இயேசு நமக்குக் கற்றுக்கொடுத்தார் (மாற்கு 12:29).

ஒருமைத்தன்மை வாய்ந்த (singular) சர்வவல்ல கடவுளை மூன்று நபர்கள் கொண்ட பன்மைத்தன்மையானவராக மாற்றுவது ஒரு அருவருப்பான வெறுக்கத்தக்க சித்தாந்தமாகும். அதற்கு மெய் கிறிஸ்தவத்தில் இடமில்லை.
நம்முடைய கர்த்தராகிய (எஜமானாகிய) இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை (எபேசியர் 1:17) தொழுதுகொண்டு, துதி செலுத்தி, பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தர் (எஜமான்) என்று அறிக்கைபண்ணுவோமாக (பிலிப்பியர் 2:11).