கிறிஸ்துவின் இரண்டாம் வருகை

தானியேலின் தீர்க்கதரிசனங்கள் உலகம் கட்டியாளும் பேரரசுகளையும், அரசாங்கங்களையும் பற்றி என்ன முன்னறிவிக்கின்றன? கடைசி பேரரசான ரோமாபுரியின் வீழ்ச்சிக்குப் பின் என்ன நடக்கிறது? தேவனிடத்தில் இராஜ்யத்தையும், அரசாங்க உரிமையையும் பெறவிருக்கும் மனுஷகுமாரன் யார்?
மரித்தோர் உயிர்த்தெழுதல்

இயேசு கிறிஸ்து பூமி திரும்பும்பொழுது, மரித்த அனைவரும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்று வேதவாக்கியங்கள் கூறுகின்றன. அப்படியெனில், எல்லா மனிதரும் ஒரே நொடிப்பொழுதில் உயிரோடு எழுவார்களா, என்ன? இரண்டுவித உயிர்த்தெழுதல்கள் உள்ளன என்று வேதாகமம் சொல்கிறது. மேலும் அது, ‘முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவான்’ என்று கூறுவதன் காரணம் என்ன?
மகா மறுசீரமைப்பின் காலம்

“தேவன் எல்லோரின் மீட்பராக இருக்கிறார். அதோடு விசுவாசிகளுக்குச் சிறப்பான முறையில் மீட்பராக இருக்கிறார்.” 1தீமோத்தேயு 4:10. இந்த வசனம் தேவன் எல்லோரையும் மீட்பார் எனவும், இன்றைய விசுவாசிகளை ஒரு சிறப்பான முறையில் மீட்பார் என்றும் உரைக்கிறது. அப்படியெனில், எல்லா மக்களுக்கும் இலவச சொர்க்க அனுமதி சீட்டு என்று அர்த்தமா? இன்றைய விசுவாசிகளுக்குக் காத்திருக்கும் சிறப்பு மீட்புதான் என்ன? அதுபோக, இயேசு சொல்கிறார், “முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேசங்கள் மேல் அதிகாரம் கொடுப்பேன்.” வெளி. 2:26. யார் இந்த தேசங்கள்? கிறிஸ்துவைப் பின்பற்றுவோரால் அவை எதற்காக ஆளப்படவேண்டும்?
யுக மாற்றம்

முதலாம் உயிர்த்தெழுதலுடன் சம்பந்தப்பட்டதாக வேதாகமம் விவரிக்கிற நிகழ்வுகள் யாவை? இரண்டு உயிர்த்தெழுதல்கள் இருப்பது போல, இரண்டு நியாயத்தீர்ப்புகளும் உள்ளன. பேமா ஆசன நியாயத்தீர்ப்பிற்கும், மகா வெண்சிம்மாசன நியாயத்தீர்ப்பிற்கும் என்ன வேறுபாடு? அடுத்த யுகத்தின் ஆரம்பத்தில் சாத்தானுக்கு என்ன நடக்கும்? இரண்டாவது உயிர்த்தெழுதலில் எழுகிறவர்கள் ஒரு நியாயத்தீர்ப்புச்சோதனையை (கிரேக்கம்: ‘க்ரைசீஸ்’) எதிர்கொள்வார்கள் என வேதாகமம் ஏன் சொல்கிறது?
மனுக்குலத்தின் கிரய மீட்பு

ஆதாமின் பாவத்திற்குரிய தண்டனையாக ஆதாமின் இனம் முழுவதும் மரண நித்திரையில் ஆழ்கிறதெனில், கிறிஸ்துவுக்குள் அனைவரும் உயிர்பெறுவர் என்று வேதாகமம் எப்படி வாக்களிக்கக்கூடும்? வேதத்தில் கடவுள் பிரகடனம் செய்கிறார்: “அவர்களை நான் மரணத்திற்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்.” ஓசியா 13:14. இந்த தீர்க்கதரிசனத்தைக் கிறிஸ்து எங்ஙனம் நிறைவேற்றினார் என்று அப்போஸ்தலன் பவுல் 1தீமோத்தேயு 2:4-6 வசனங்களில் விவரிக்கிறார். பவுலின் வார்த்தைகளில் இவற்றின் அர்த்தம்தான் என்ன – ‘எல்லாரையும் மீட்கும் பொருள்’, ‘ஏற்ற கால சாட்சி’, ‘இரட்சிக்கப்பட்டு சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்’?
நியாயத்தீர்ப்பு நாள்

இரண்டாம் உயிர்த்தெழுதலில் எழுபவர்கள் ஒரு நியாயத்தீர்ப்புச்சோதனைக்காக (“க்ரைசீஸ்”) எழுகிறார்கள். ஆம், இது அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு நாளாகும். ஆனால் நியாயத்தீர்ப்பு நாள் என்றால் என்னதான் அர்த்தம்? வேதவாக்கியங்கள் கடவுளுடைய இராஜ்யத்துடன் ஏன் அதனை இணைகின்றன? அது எவ்வளவு காலம் நீடிக்கும்? அது ஒரு 24 மணிநேர நாளா? கடவுளுடைய நியாயத்தீர்ப்புகள் பூமியில் வரும்போது உலகின் குடிமக்கள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள் என்று வேதாகமம் ஏன் சொல்கிறது?
மரண தண்டனை

மனிதர்கள் மரித்துப்போவதேன்? இது இயற்கை நியதியா? மிருகங்கள் போல் மடிந்து போவதுதான் நம் விதியா? ஒருவன் மரிக்கும்போது என்ன நேருகிறது? மரணத்தைப்பற்றி இயேசு என்ன சொன்னார்? மரணநிலை பற்றி வேதாகமம் கூறுவதை அறிவியல் ஏற்றுக்கொள்கிறதா? வேதாகமத்தின்படி ஆத்துமா என்பது என்ன? ஆத்துமா மரித்துப் போகக்கூடுமா? மரணத்திற்குப்பின் ‘ஆவி’ வாழுமா?
மறுசீரமைப்பின் யுகம்

இயேசு பூமி திரும்பும்போது எல்லாம் மறுசீரமைப்பு செய்யும் காலம் வரும் என பேதுரு ஏன் வாக்குறுதி அளிக்கிறார்? பழைய ஏற்பாட்டின் பரிசுத்த தீர்க்கதரிசிகளால் அந்த காலம் விவரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார். இந்த மறுசீரமைப்பின் யுகம் பற்றி வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்குத்தத்தங்கள் யாவை? மனுக்குலத்தின் ஆரோக்கியம், சமூக நீதி, நியாயம், உலக சமாதானம், மற்றும் செழிப்பு பற்றி இந்த இராஜ்ய தீர்க்கதரிசனங்கள் என்னதான் கணிக்கின்றன? மனிதனுக்காக கடவுள் வைத்திருக்கும் எதிர்காலம்தான் என்ன?
எரிநரக கோட்பாடு

பிரசங்க பீடத்திலிருந்து போதகர்கள், “கிறிஸ்துவை உங்கள் மீட்பராய் ஏற்றுக்கொள்ளுங்கள்! இல்லையெனில், உங்கள் பாவங்களுக்காக கண்டனம் செய்யப்படுவீர்கள். இறந்ததும் பற்றியெரிகிற அக்கினியில் நித்தியத்திற்கும் சித்திரவதை செய்யப்பட உயிருடன் நரகத்திற்கு கொண்டு செல்லப்படுவீர்கள்,” என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள். நித்திய ஆக்கினையே அவர்கள் விடுக்கும் பயங்கரமான எச்சரிப்பாகும். இந்த பாதாள உலகினை, நெருப்பு தீண்ட இயலாத சாத்தான் ஆட்சி செய்வதாக பலர் கூறுகிறார்கள். அங்கே தள்ளப்பட்ட மக்களை அவனது பிசாசுகள் சித்திரவதை செய்வதாகவும் சொல்கிறார்கள். எதன் அடிப்படையில் இவ்வாறு போதிக்கப்படுகிறது? பாவத்திற்கென ஆத்துமாவிற்குரிய தண்டனையாக பைபிள் கூறுவது யாது? அது நித்திய வேதனையை போதிக்கிறதா?
மகா வெண்சிம்மாசன நியாயத்தீர்ப்பு

மகா வெண்சிம்மாசன நியாயத்தீர்ப்பு என்றால் என்ன? அதில் இயேசுவுடன் சிம்மாசனத்தில் அமரவிருப்பவர்கள் யார்? சிம்மாசனத்தின் முன் நிற்கும் வெள்ளாடுகளுக்கு, செம்மறியாடுகளும் யாரை சித்தரிக்கின்றன? ஆயிரம் வருடங்கள் ஆட்சி நடக்குமென்றால், அதன் முடிவில் என்ன நடக்கும்? சாத்தானின் கதி என்ன? ‘மரணமும் கல்லறையும் அக்கினி கடலுக்குள் தள்ளப்படும்’ என்று வேதாகமம் ஏன் சொல்கிறது? வரவிருக்கும் யுகங்கள் எப்படி இருக்கும்? அப்போது பூமியில் மனிதனின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? ஆயிரம் வருட ஆட்சிக்குப் பின்னர் இயேசு மற்றும் அவரது திருச்சபையின் பதவி என்னவாக மாறும்?
ஷியோல்/ஹேடீஸ் – மொழிபெயர்ப்பாளர்கள் மோசடி

தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பாளர்கள் மூல வேதாகமத்தில் 65 இடங்களில் காணப்படும் “ஷியோல்” என்னும் ஒரே எபிரேய வார்த்தையை தமிழ் வேதாகமத்தில் 59 தடவை பாதாளம் என்றும், 2 தடவை படுகுழி/ஆழம் என்றும், 4 தடவை நரகம் என்றும் மொழிபெயர்த்துள்ளனர். நல்லவர்கள் இறந்தபோது இந்த “ஷியோல்” இளைப்பாறும் இடத்தை “பாதாளம்/கல்லறை/குழி” என்று மொழிபெயர்த்தவர்கள், கெட்டவர்கள் இறந்தபோது அதே மூல வார்த்தையை “நரகம்” என்று மொழியாக்கம் செய்துள்ளனர். யோபு “ஷியோலில்” தன்னை ஒளித்து வைக்கவேண்டுமென தேவனிடம் வேண்டுகிறான் (யோபு 14:12-13). எபிரேய மொழி வல்லுநர் எவரைக் கேட்டாலும் “ஷியோல்” என்றால் “சவக்குழி” என உறுதி செய்வார்கள். வேதாகமம் உண்மையில் “ஷியோல்” எப்படிப்பட்ட இடம் என்பதை விவரிக்கிறது!
திருச்சபை நம்பிக்கைகள் – ஒரு வரலாறு

ஆதித்திருச்சபை இராஜ்யம் குறித்து என்ன நம்பிக்கை கொண்டிருந்தது? அடுத்த நூற்றாண்டுகளில் என்ன நடந்தது? இயேசு கிறிஸ்துவிற்குப் பின்வந்த இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றில் திருச்சபையின் இராஜ்ய நம்பிக்கைகள் குறித்து என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா என்ன பதிவு செய்கிறது? இன்றைய கிறிஸ்தவர்கள் இராஜ்யத்தைப் பற்றி என்ன நம்புகிறார்கள்? நவீனவாதிகள், அடிப்படைவாதிகள் மற்றும் ஆன்மீகவாதிகள் இடையேயான வேறுபாடுகள் என்ன? அவர்களில் யாராவது வேதாகம சத்தியங்களைக் கடைப்பிடிக்கிறார்களா?
கெஹன்னா- நித்திய அக்கினிக்கடல்

“கெஹன்னா” என்ற கிரேக்க வார்த்தை “நரகம்” என பன்னிரண்டு தடவை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கெஹன்னா நரகத்தை குறிக்கிறது எனில், உண்மையில் நாம் டிக்கெட் எடுத்து விமானம் மூலம் நரகத்திற்கு செல்ல முடியும்! ஆம், இஸ்ரவேல் நாட்டிலே மெய்யாகவே அமைந்துள்ள ஒரு நிஜ இடம் “கெஹன்னா”. அது ஒரு பெயர்ச்சொல். ஒரு நிஜ இடத்தின் பெயர்! ஆகவே தான் ஒய்.எல்.டீ. (YLT) போன்ற ஆங்கில மொழிபெயர்ப்புகள் “நரகம்” என்று சொல்லாமல் எப்படி ஒரு இடப்பெயரை பயன்படுத்துவோமோ, அங்ஙனமே அதை “கெஹன்னா” (Gehenna) என்றே குறிப்பிடுகின்றன. ‘கெஹன்னாவில் உள்ள அக்கினி’ என்று இயேசு சொல்வது எப்படியென்றால், ‘சைதாப்பேட்டையில் எரியும் தீ’ என்று ஒரு சென்னை நகரவாசி சொல்வதை போன்றதே! “கெஹன்னா” என்ற பெயர் கொண்ட ஹின்னோம் பள்ளத்தாக்கு எருசலேம் நகரத்திற்கு சற்று வெளியே அமைந்துள்ளது. இயேசுவின் காலத்தில் அது அந்த நகரத்தின் குப்பையெரிக்கும் பேட்டையாக இருந்தது. குப்பையாக கொட்டப்படும் பொருட்கள் யாவற்றையும் முழுவதாக உட்கொண்டு அழிப்பதற்கென அங்கே தொடர்ந்து நெருப்பு எரியவைக்கப்பட்டுக்கொண்டே (ஒரு நித்திய அக்கினிக்கடல்!) இருக்கும்.
நவீனத்துவம் – சாத்தியமா?

நவீனத்துவ கோட்பாட்டின்படி மனிதனால் பூமியில் அமைதியான நீதி செழிக்கும் இராஜ்யத்தை எவ்வாறு நிறுவ முடியும்? நவீனவாதிகளின் கூற்று உண்மையில் சாத்தியமா? நாம் சமாதானத்தின் இராஜ்யம் நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறோமா? இதற்கு வேதவசன ஆதாரங்கள் உள்ளனவா? வேதம் இதைப்பற்றி என்னதான் சொல்கிறது?
டார்டரூ – வீழ்ந்த தூதர் சிறை

“டார்டரூ” என்ற கிரேக்க வார்த்தை வேதாகமத்தில் ஒரே ஒருமுறைதான் வருகிறது. அது “நரகம்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. “பாவம் செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்தார்” (2பேதுரு 2:4). – இங்கே “நரகத்திலே தள்ளி” என்று முழு சொற்றொடரும் “டார்டரூ” என்ற ஒரே மூல கிரேக்க வார்த்தையின் மொழியாக்கம் ஆகும். சில தேவதூதர்கள் தமது உயர் கண்ணியத்தில் இருந்து வீழ்ந்து தகுதியற்ற அவமான நிலைக்கு ஆளானதையும், அதனால் தேவன் அவர்களை கீழ்நிலைப்படுத்தினதையும் அது குறிக்கிறது. விழுந்துபோன தூதர்களையும், பாவிகளையும் நித்திய காலமாக பிடித்துவைக்க ஒரு பாதாள நரக உலகம் இருக்கிறது என்று பிரசங்கிக்கும் பொருட்டு சிலர் இந்த வசனத்தை தவறாக பயன்படுத்துவது உண்டு. ஆனால், வசனம் நமக்கு என்ன காண்பிக்கிறது?
அடிப்படைவாதம் – பூமி அழியுமோ?

அடிப்படைவாதிகள் பூமி அழிந்துபோகும் என்கிறார்கள். அது வேதாகமப்படி சரியா? பின் இயேசு ஏன் “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்,” என்கிறார்? “பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது”, என்று வசனம் ஏன் உரைக்கிறது? உலகத்தின் முடிவிற்கும் யுகத்தின் முடிவிற்கும் ஏதும் வித்தியாசம் உண்டா? தேவனின் “எரிச்சலின் அக்கினி” பூமியை துவம்சம் செய்தபின் சுவாரஸ்யமான விசயங்கள் பூமியில் நடக்கவிருப்பதை ஏன் வேதாகமம் முன்னறிவிக்கிறது?
அழுகையும் பற்கடிப்பும்

அழுகையும் பற்கடிப்பும் இருக்கும் இடம் பற்றி இயேசு பேசினாரே, அது என்ன? மொத்தம் ஏழு வசனங்களிலே இந்த “அழுகையும், பற்கடிப்பும்” வாசகத்தை காண்கிறோம் – மத்தேயு 8:12; 13:42,50; 22:13; 24:51; 25:30; லூக்கா 13:28. இந்த ஏழு வசனங்களிலுமே இயேசு இந்த சொற்றொடரை உவமைகளிலும், அடையாள கூற்றுகளிலும் மட்டுமே பயன்படுத்துகிறார்; எனவே இது ஒரு அடையாளமே என்பது தெளிவாகிறது. சந்தர்ப்ப சூழலை பொறுத்து அதன் அர்த்தம் மாறுபடுகிறது. எனினும் எல்லா இடங்களிலும் அதன் பொதுவான அர்த்தமானது என்னவெனில் தேவனின் பார்வையில் தவறு செய்த ஒரு மக்கள் கூட்டத்திற்கு வரையறுக்கப்பட்ட காலம்வரை நீடிக்கும் ஒரு குறிப்பிட்ட தண்டனை/சோதனைக்காலம் என்பதே ஆகும்.
ஆன்மீகம்: எல்லாம் மனதில் மட்டும்தானோ?

ஆன்மீகவாதிகள் இராஜ்யம் என்பது ஒரு ஆன்மீக காரியம் மட்டும்தான் என கருதுகின்றனர். வழக்கமாக, லூக்கா 17:21 வசனத்தை மேற்கோள் காட்டி இராஜ்யம் “மக்களுக்குள்” இருப்பதாக கூறுவார்கள். உண்மையிலேயே இயேசு பரிசேயரிடம் இராஜ்யம் அவர்களுக்குள் இருதயத்தில் இருப்பதாக கூறினாரா, என்ன? அவர் சொல்லவந்த விசயம்தான் என்ன? அவருடைய கூற்று பைபிளின் மற்ற பகுதிகளுடன் எவ்வாறு பொருந்துகிறது?
யுகங்களுக்கோர் உவமை – யார் அந்த ஐசுவரியவான்?

சிலர், ஐசுவரியவான் – லாசரு உவமையை நிஜமான சம்பவம் என்று எடுத்துக் கொண்டு, நரக வேதனையை பிரசங்கிக்கிறார்கள். ஆனால் நிஜ நிகழ்வாக அர்த்தப்படுத்திக்கொண்டால் இந்த உவமையானது சில அபத்தங்களை உள்ளடக்கியதாகத் தோன்றுகிறது. — லாசரு ஒரு விசுவாசி என்றோ, நல்லவன் என்றோ உவமையில் கூறப்படவில்லை. மாறாக, அவன் ஆசீர்வதிக்கப்படுவதன் காரணம் வெறுமனே நோயாளியாக, ஏழையாக இருந்ததாலேயே என்ற அர்த்தமாகிறது. அப்படியெனில், நோயாளிகளும், தரித்திரர்களும் மட்டுந்தான் மீட்கப்படுவார்களா? உவமையில் ஐசுவரியவான் செல்லும் “பாதாளம்” ஓர் நிஜ இடம் என்று எடுத்துக்கொண்டால், ஏழை லாசரு செல்லும் “ஆபிரகாமின் மடி”யும் ஒரு நிஜ இடம் என்றுதான் நாம் கருதவேண்டும். அப்படியெனில், கோடிக்கணக்கான ஏழைகள் வாசம் செய்யும் இடமாக ஆபிரகாமின் மடி உள்ளதா? ஆபிரகாம் என்ன ஓர் இராட்சசனா? யூத பரிசேயர்களுக்கு ஓர் உருவகக்கதை பாடமாகவே இயேசு இந்த உவமையை சொன்னார். அவர்களுக்கு அவர் உண்மையில் சொல்லவந்த செய்திதான் என்ன?
வெளி 20:5 – விஷமமாக செருகப்பட்ட தாமதம்

பூமியில் வரவிருக்கும் கிறிஸ்துவின் இராஜ்யத்திற்கு ஒரு குறிப்பிட்ட நோக்கம் இருப்பதாக வேதம் கூறுகிறது. கிறிஸ்துவும் அவருடைய நிரூபிக்கப்பட்ட சீஷர்களும் இராஜ்யத்தின் ஆயிரம் ஆண்டுகளில் உயிர்த்தெழுப்பப்பட்ட மற்ற மனிதர்களை ஆட்சி செய்து, அவர்களுக்கு நீதி கற்பிப்பார்கள். ஆனால் வெளிப்படுத்துதலின் ஒரு வசனம் (20:5) மற்ற எல்லா வேதவசனங்களுக்கும் முரணாக மற்ற மனிதர்கள் அந்த ஆயிர வருஷம் முடியுமளவும் உயிரடைய மாட்டார்கள் என்று சொல்வதாக தெரிகிறது. அதன் கதை என்ன?
நரகம் – ஒரு வரலாறு

அக்கினிமயமான பாதாளம் குறித்த புறஜாதி நம்பிக்கைகள் எகிப்திய நிம்ரோது காலத்திலேயே தோன்றியவை. கிறிஸ்துவுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே, பார்சி சமயத்தை நிறுவின சரத்துஸ்தர் (Zoroaster) பாரசீகர்களுக்கு, மனிதர்களது செயல்களை வரவு (நன்மை), செலவுகளாக (தீமைகள்) பதிவு செய்யும் பூமியடியிலே இருண்ட பகுதிகளில் வாழும் ஓர் “பொய்களின் தேவன்” (Lord of Lies) பற்றி போதித்துள்ளார். மரணத்திற்குப்பின் ஆத்துமாக்கள் நியாயத்தீர்ப்புக்கு செல்லும் எனவும், தீயதாக நியாயந்தீர்க்கப்பட்டால், வேதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் போதனை செய்யப்பட்டது. புறஜாதியாரை எளிதாக கிறிஸ்தவத்திற்கு மதமாற்றம் செய்வதற்காக திருச்சபை இந்தக் கோட்பாடுகளை தத்தெடுத்துக்கொண்டது. அடையாளப்பூர்வ வசனங்களுடன் பார்சிய மத அர்த்தங்கள் சம்பந்தப்படுத்தப்பட ஆரம்பித்தன. இதுபோன்ற திரிப்புகள் (விசுவாச துரோகம்) நிகழும் என அப்போஸ்தலர் பவுல் தீர்க்கதரிசனமாக சொல்லியிருக்கிறார் (அப்போஸ்தலர் 20:29-30, 1தீமோத்தேயு 4:1).
ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும்

“ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே” எபிரெயர் 9:27. பெரும்பாலான மக்கள் இந்த வசனத்தை படிக்கும்போது, ஒவ்வொரு மனிதனின் தற்போதைய வாழ்க்கையும் நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் ஒருவிதமான பரீட்சை என்றும், அதன் முடிவில் நாம் மரித்து நம் வாழ்வில் நாம் புரிந்த செயல்களுக்கு ஏற்ப பரிசோ தண்டனையோ பெற கடவுள்முன் நிற்க நேரிடும் என்று அர்த்தப்படுத்துகிறார்கள். இது வேதப்பூர்வமான அர்த்தமா? வேதவசனங்களின்படி நியாயத்தீர்ப்பு என்றால் என்ன?
ஆதாம் உட்பட கெட்டவரின் கதி

மரித்தவர்கள் தற்போது எங்கேதான் உள்ளனர்? அவர்கள் மறுபடியும் உயிர்பெற வாய்ப்பு உண்டா? முதல் மனிதனான ஆதாம் ஏதேன் தோட்டத்தில் கீழ்ப்படியாமல் வீழ்ச்சியடைந்தபோது அவன் வம்சாவழி வந்த நமது ஆத்துமாக்கள் அனைத்தும் “ஷியோல்/ஹேடீஸ்” என்றொரு பாதாளத்திற்கு கண்டனம் செய்யப்பட்டன. அதுதான் கல்லறை. ஆனாலும் நம் எல்லோருக்கும் எதிர்கால நம்பிக்கை உண்டு! (ஷியோல் என்னும்) கல்லறையின் பிடியிலிருந்து நம்மை மீட்கும் பொருள் (ransom) கொடுத்து மீட்டு விடுவிப்பேன் என்று தேவன் வாக்குத்தத்தம் செய்தார் (ஓசியா 13:14). அவர் இயேசுவை ஆதாமிற்குப் பதிலாக மரிப்பதற்கு அனுப்பிவைத்தார் (யோவான் 3:16). ஆதாமிற்குரிய மீட்பின் கிரயத்தை (விலையை) இயேசு கொடுத்து ஆதாமின் வம்சம் அனைவரையும் (எல்லா மனிதரையும்) உயிர்த்தெழ வைப்பதற்கான வழியை ஏற்படுத்தினார் (ரோமர் 5:12,18). இயேசுவே அனைவருக்குமாகக் கொடுக்கப்பட்ட மீட்கும் பொருள் (1தீமோத்தேயு 2:6). “ஆதாமிற்குள் எல்லாரும் மரிக்கிறது போல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்” (1கொரி 15:22).
நரகத்தின் கட்டுக்கதை!

சிலர், “நித்திய நரக வேதனை என்பது பைபிளில் இல்லாமல் இருக்கலாம்; எனினும் உலக மக்களை தேவனுக்கு கீழ்ப்படிய வைப்பதற்காக அவர்களை பயமுறுத்தும் அச்சுறுத்தலாக எரிநரகத்தைப் பயன்படுத்துவது பரவாயில்லை, தானே?” என்று கேட்கலாம். அது சரிதானா? இல்லை, அது சரி அல்ல. அப்படிப்பட்டவர்களை குறித்து ஏமாற்றம் அடைந்த தேவன் கூறுகிறார்: “அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது” (ஏசாயா 29:13). மிரட்சியாலும், அச்சுறுத்தல்களாலும் தனக்கு கீழ்ப்படிகிற இதயங்களை அவர் நாடவில்லை. மாறாக, தன்மேலும் தனது நீதியின்மேலும் கொண்ட அன்பாலே உந்தப்பட்டு மனமுவந்து கீழ்ப்படிகிற இதயத்தையே அவர் விரும்புகிறார். மேலும், சித்திரவதை பற்றிய எண்ணமே தேவனுக்கு அருவருப்பானது. தனது நியாயப்பிரமாணத்திலே தேவன் சித்திரவதை முறைகளை அனுமதிக்கவில்லை. நம் எதிரிகளிடமும் நாம் அன்பு செலுத்த வேண்டுமென்று கட்டளையிடுகிற தேவன் அவர்களை நித்தியமாக எரிப்பதற்கு விரும்புவாரா, என்ன?
அசல் “நரகங்கள்”

“ஷியோல்”, “ஹேடீஸ்”, “கெஹன்னா”, “டார்டரூ” என்ற நான்கு மூல வார்த்தைகளும் தமிழ் பைபிளில் “நரகம்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. “ஷியோல்” என்ற சொல் பழைய ஏற்பாட்டு எபிரேய பதமாகும். மற்ற மூன்றும் புதிய ஏற்பாட்டு கிரேக்க பதங்களாகும். தமிழ் பைபிள் மொழிபெயர்ப்புகள் கூறுவது போல் இந்த மூல வார்த்தைகள் அனைத்திற்கும் ஒரே அர்த்தம்தானா? அல்லது அச்சொற்கள் ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு அர்த்தங்கள் உண்டா? எபிரேய, கிரேக்க அகராதிகளை எடுத்துப்பார்க்கும்போதும், இந்த வார்த்தைகளைக் குறித்த திருமறையின் சுய விவரிப்புகளையும் கவனித்துப்பார்க்கும்போதும், அச்சொற்களின் அர்த்தங்களைக் குறித்த ஆழமான நுண்ணறிவை நாம் கண்டறிகிறோம். தமிழ் வேதாகமங்களில் மேலோட்டமாக படிக்கும்போது ஒன்றுக்கொன்று முரணாக தோன்றுகிற வசனங்களை பற்றிய தெளிவையும் கண்டடைகிறோம்.
பரலோகத்தின் இராஜ்யம்

பரலோகத்தின் இராஜ்யத்தை பற்றி எந்தவொரு கிறிஸ்தவரும் ஏன் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டும்? தேவனின் சித்தம் பரலோகத்தில் செய்யபடுவதை போல பூமிலேயும் செய்யப்படும் நாட்களான தேவனின் இராஜ்யம் பூமியில் வரவேண்டுமென ஜெபியுங்கள் என இயேசு ஏன் நமக்கு கற்றுக்கொடுத்தார்? பரலோகத்தின் இராஜ்யம் பரலோகத்தில் அல்லவா இருக்கும்? இயேசு பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, இராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். அதனோடு ஒப்பிட்டுப்பார்க்கும்பொழுது, இன்றைய சபைகளில் இராஜ்யத்தைப் பற்றி காணப்படும் பரவலான போதனைதான் என்ன?






